மதம் – நம்பிக்கை,
வெறி, சார்பின்மை, நல்லிணக்கம் பற்றி
இது
மிகவும் அடிப்படையான ஒரு விஷயம்தான். ஆனால் சிலர் அறைகுறையாக புரிந்து கொண்டுள்ளனர்.
சிலர் புரிந்து கொள்ளவே தயாராக இல்லை. சிலர் முற்றிலும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
சிலர் தவறான கருத்துக்களை வம்படியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மத
நம்பிக்கை
இன்று
உலகில் பல மதங்கள் நடைமுறையில் உள்ளன. ஏதோ ஒரு மதத்தை பெரும்பாலான மக்கள் பின்பற்றுவது என்பது எந்த அளவு
உண்மையோ அதை விட பெரிய உண்மை மதம் என்பதும் மனிதன் கண்டுபிடித்த அமைப்புதான் என்பது.
இன்று மதம் நிறுவனமயமாக்கப் பட்டுள்ளது என்ற உண்மையைப் போலவே மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களும் உள்ளார்கள்
என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மை.
தான்
சார்ந்துள்ள மதத்தை பின்பற்றுவதும் அதற்கேற்றார்போல் அந்த மதத்தின் வழிபாட்டை கடைபிடிப்பதும்
அவரவர்களின் உரிமை. தனிப்பட்ட விஷயம். அதை கேள்வி கேட்கவோ, தலையிடவோ யாருக்கும் உரிமை
கிடையாது. வழிபாட்டுச் சுதந்திரத்தை அனைத்து இந்திய மக்களுக்கும் அரசியல் சாசனம் அளித்துள்ளது.
நீங்கள்
இந்த மதத்தைத்தான் பின்பற்ற வேண்டுமென்றோ, அல்லது பின்பற்றக் கூடாது என்றோ கட்டளையிடும்
அதிகாரம் யாருக்கும் இல்லை.
மத
வாதம்
என்
மதம்தான் சிறந்தது, மற்ற மதங்கள் எல்லாம் போலி என்று சொல்வது மத வாதம். இதுவே முற்றிப்
போகிற போது அது மத அடிப்படை வாதமாக மாறுகிறது.
சில
மாதங்கள் முன்பாக முக நூலில் ஒரு நண்பர் ஒரு பதிவிட்டிருந்தார். ஏதோ சில ஆழ்வார் பாசுரங்களை
பதிவிட்டு அதற்கு விளக்கமும் சொல்லி இருந்தார். அதன் சாராம்சம் இதுதான்
“பெருமாளை
கடவுளாக வழிபட்டவன் வேறு எந்த கடவுளையும் மதிக்க மாட்டான். பெருமாள் தவிர வேறு யாரையும்
கடவுளாகவே கருதுவது கிடையாது”
நாத்தீகர்களை
எப்போதும் வசைபாடும் அவரை
“நீங்கள்
பெருமாளைத் தவிர வேறு யாரையும் கடவுளாக கருதுவது கிடையாது. நாத்திகர்கள் பெருமாளையும்
கடவுளாகக் கருதுவது கிடையாது. உங்களுக்கும் நாத்தீகர்களுக்கும் பெருமாளைத் தவிர வேறு
முரண்பாடு இல்லாத போது அவர்களை மட்டும் ஏன் திட்டுகிறீர்கள்?”
என்று
நான் கேள்வி கேட்க, அவர் பதில் சொல்லாமல் நழுவி விட்டார்.
மத
அடிப்படைவாதம் என்பது இதுதான்.
மத
வெறி
மத
அடிப்படைவாதத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிதான் மத வெறி. அடுத்த மதத்தவர் மீது
காழ்ப்புணர்வு கொள்வதும், இழிவு படுத்துவதும் மாற்று மதத்தவரை வம்புக்கு இழுப்பதும்
கொலை, கலவரம் என்ற அளவிற்குச் செல்வதுமாகும். மனிதத் தன்மை என்பது மறந்து போன கட்டம்
இது.
மதச்
சார்பின்மை.
சார்பின்மை
என்ற வார்த்தையே விளக்கம் சொல்லி விடுகிறது. மதச்சார்பின்மை என்பது தனி நபர் சார்ந்தது
கிடையாது என்பதுதான் முதலில் சொல்ல வேண்டிய செய்தி.
எந்த
ஒரு அரசும் மதத்தை சார்ந்திருக்கக் கூடாது என்பதுதான் மதச் சார்பின்மை. மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதுதான்
மதச்சார்பின்மையின் கோட்பாடு.
மதச்
சார்பின்மை என்பது அரசுகளும் அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டிய ஒன்று.
மத
உணர்வுகளைத் தூண்டுவதுதான் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் உத்தி என்பதால் அவர்களுக்கு
மதச்சார்பின்மை என்ற வார்த்தையே பாகற்காயாக கசக்கிறது. மதச்சார்பின்மை கொள்கையை உயர்த்திப்
பிடிக்கிற கட்சிகளை வசை பாடுகிறார்கள். சிறுபான்மை மக்கள் மீது இவர்கள் நிகழ்த்துகிற
தாக்குதல்களை கண்டிப்பவர்களை போலி மதசார்பின்மைவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.
பெரும்பான்மை
அடிப்படைவாதம் தேசியமாக புகழப்படும், சிறுபான்மை அடிப்படைவாதம் தீவிரவாதமாக சித்தரிக்கப்
படும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.
காவிகளின்
தேச பக்தி என்ன என்பதை “தேசத் துரோகி பேசுகிறேன்” பதிவில் விரிவாகவே எழுதியுள்ளதால்
மீண்டும் அந்த விஷயத்திற்குள் செல்லவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இவர்கள்தான் “போலி
தேசியவாதிகள்”
ராமருக்கு
கோயில் கட்டுவது என்பது வெறும் அரசியலுக்காக உணர்வை தூண்டுகிற வேலையைத் தவிர வேறொன்றும்
இல்லை. நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில்
சிவாஜி, குரு கோவிந்த்சிங் உள்ளிட்ட பலரின் படமெல்லாம் இருக்கிறது. ஆனால் ராமரின் படம்
கிடையாது. மகாத்மா காந்தி ஒரு முறை அந்த அலுவலகத்திற்கு சென்ற போது “ராமரின் படத்தை
வைக்கலாமே” என்று கேட்ட போது ராமர் ஒன்றும் முஸ்லீம்களுக்கு எதிராக சண்டை இடவில்லையே
என்று பதில் வந்துள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு
முன்பாக எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு நாக்பூரில் நடைபெற்ற போது இப்போதாவது
ராமர் படம் அங்கே உள்ளதா என்று பார்ப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு எங்களின்
தஞ்சைக் கோட்ட தோழர்கள் இருவர் சென்று வந்துள்ளனர். நாங்களும் ஆர்,எஸ்.எஸ் காரர்கள்தான்
என்று அறிமுகம் செய்து கொண்ட அவர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து சர்சங்சாலக் அறை வரை
முழுதும் சுற்றிக் காட்டி உள்ளார்கள். எங்கேயும் ஒரு போஸ்ட் கார்ட் சைஸ் அளவில் கூட
ராமர் படம் இல்லை.
ஆக
ராமருக்கு கோயில் என்பது பக்தியினால் எழுப்பப்படும் முழக்கம் அல்ல, வெறும் அரசியல்
கோஷம்தான் என்பதை பக்தர்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
மத
நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை
இந்த
இரண்டும் பிரிக்க முடியாத இரட்டையர்.
ஒரு
மதத்தவர் மாற்று மதத்தவரை மரியாதையோடு அணுகுவதும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு
அளிப்பதும் மத நல்லிணக்கமாகும்.
இது
இந்தியாவில் காலம் காலமாக இருக்கத்தான் செய்கிறது. வரலாற்றில் எத்தனையோ உதாரணங்களை
சொல்ல முடியும்.
இந்திய
விடுதலைப் போராட்டத்தின் முதல் குரல் எழுந்த எங்கள் வேலூர் மண் அதற்கான சிறந்த உதாரணமாகும். இந்து முஸ்லீம் சிப்பாய்கள்
ஒன்றிணைந்து வெள்ளையருக்கு எதிராய் போராடியதை சொல்ல முடியும். சபரிமலைக்கு செல்லும்
பக்தர்கள் வாவர் மசூதிக்கு செல்வதும் ஒரு சிறந்த உதாரணம்.
அந்த
நல்லிணக்கம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. ரம்ஜான் பிரியாணியும் தீபாவளி பட்சணங்களும் கிறிஸ்துமஸ் கேக்குகளும் பரிமாறிக்கொள்ளப்படுவதும் பகிர்ந்து கொள்ளப்படுவதும் நடந்து கொண்டுதானே
இருக்கிறது!
உங்கள்
வீட்டில் சாமிக்கு படைக்கப்பட்டதை நாங்கள் தொட மாட்டோம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள். அது மத அடிப்படை வாதத்தின் வெளிப்பாடு, ஆனால் அவர்கள் சதவிதம் குறைவுதான். அப்படிப்பட்ட திரிபு வேலைகள் எப்படி தொடங்கின, அதன் பின்னணியில் இருந்தது யார் என்பதையெல்லாம் சமீபத்தில் படித்து முடித்த ஒரு நூலின் வாயிலாக அறிந்து கொண்டேன். நேரமிருப்பின் இன்றோ, நாளையோ அந்த நூல் விமர்சனம் மூலமாக அந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்
இன்றைய
தேவை என்பது மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாப்பது. அனைத்து மதங்களிலும் உள்ள அடிப்படைவாதிகளின்
சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் பார்த்துக் கொள்வது. மத நம்பிக்கை கொண்டவர்கள்தான் இதை
செய்திட வேண்டும்.
அரசியல்
ஆதாயங்களுக்காக மதத்தை பயன்படுத்துவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு ஒதுக்கி
வைப்பதுதான் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது.
இந்தியாவில்
அதைச் செய்வது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்கள் என்பதை நாங்கள் அனுபவத்தின் அடிப்படையில்
சொல்கிறோம்.
மதத்தின்
பெயரால் மனிதத்தை குலைப்பவர்கள் அவசியம்தானா?
சிந்திப்பீர்,
நிதானமாக சிந்திப்பீர்.
பிரியாணியும்
கேக்கும் கொழுக்கட்டையும் சுற்றி வலம் வரட்டும். நம்பிக்கை மலர்கள் பூக்கட்டும். அமைதி
என்றும் நாட்டில் நிலைக்கட்டும்.