குடியுரிமைச்சட்டம்
அமலானால் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் பிரச்சினை என்ற நினைப்பில் பலர் அலட்சியமாகவும்,
திமிராகவும் இருக்கின்றனர். அப்படியெல்லாம் இல்லை, யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம்
என்பதை கீழேயுள்ள நூலை படித்தால் தெரியும். குறைந்தபட்சம் நூல் அறிமுகத்தையாவது படித்தால்
புரியும்.
குடியுரிமைச்
சட்டம் அமலானால் என்ன நடக்கும் என்பதை அஸ்ஸாம் அனுபவத்திலிருந்து நூல் சொல்கிறது.
இது
வெறும் புனைவுதானே. நாவல்தானே! இதில் சொல்வது போல எல்லாம் நடக்கவா போகிறது என்றெல்லாம்
உங்களில் சிலருக்கு தோன்றலாம். நூல் அறிமுகத்தை படித்து முடியுங்கள். உங்கள் மனதில்
எழுந்துள்ள கேள்விக்கு அதற்குப் பின் விடையும் அளிக்கிறேன்.
ஒரு
வருடத்திற்கு முன்பு எழுதிய நூல் அறிமுகம்தான். சூழலின் தேவை கருதி இப்போது மீண்டும்
. . .
*****************************************************************
நூல்
: முகாம்.
ஆசிரியர்
: அ.கரீம்,
வெளியீடு
: “எதிர்” வெளியீடு,
பொள்ளாச்சி.
விலை
: ரூபாய் 300.00
தாழிடப்படாத கதவுகள், அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி உட்பட மூன்று உள்ளத்தை உருக்கும் சிறுகதைத் தொகுப்புக்களின் ஆசிரியர் தோழர் அ.கரீம் அவர்களின் முதல் நாவல் “முகாம்”
நடந்த கதையா?
நடந்து கொண்டிருக்கும் கதையா?
நடக்கப் போகும் கதையா?
இந்தியாவின் குடிமக்களாக யார் இருக்க வேண்டும் என்று சாவர்க்கரும் பின் கோல்வால்கரும் சொன்னார்களோ, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின் மோசமான விளைவுகளை அஸ்ஸாம் மாநிலம் ஏற்கனவே சந்திக்கத் தொடங்கி விட்டது.
இக்கொடூரச்சட்டம் இந்தியா முழுதும் அமலாகினால் என்ன ஆகும்?
மைமூன் என்ற முதிய பெண்மணி, ஷாகிரா எனும் இளந்தாய் ஆகிய இருவரின் மூலம் கதை எடுத்துச் செல்லப்படுகிறது.
மைமூன் பீவியின் முன்னோர் மருது பாண்டியர் படையில் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டவர். மைமூன் பீவியின் தாத்தா மைதீன் பாஷாவோ இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர்கள் வாழும் கிராமத்தையே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வைத்தவர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை கிராமத்துக்கு கூட்டி வந்ததால் மகாத்மா காந்தியின் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற மைதீன் பாஷா, நிச்சயம் அவரையும் கூட்டிக்கொண்டு வந்து விடுவார் என்று நம்பி இட்லியும் தலைக்கறியும் குடலும் செய்து அன்போடு காத்திருக்கிறார்கள் ஊர் மக்கள்.
மைதீன் பாஷாவின் மறைவுக்குப் பிறகு அவரது பெண் ஷாபியா குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. கோவையில் ஆலைத் தொழிலாளியாய் பணியாற்றுகிற ஷாபியா கடும் நோயில் சிக்க தன் மகள் மைமூனை ஒரு மார்க்கப்பள்ளியில் சேர்க்கிறார். ஆலைத் தொழிலாளிகளின் காவல் அரணாக செங்கொடிச் சங்கமும் தோழர் கே.ரமணி போன்ற தலைவர்களின் பங்களிப்பையும் மிகச் சரியாக பதிவு செய்துள்ளார் நாவலாசிரியர். மார்க்கப்பள்ளியில் வளர்கிற மைமூனுக்கு இப்ராஹீமுடன் திருமணம் செய்து வைக்கிறார்கள். வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால்
??????
வர்த்தகத்தில் வளர்ந்து வரும் முகமது அலி – ஜைதூன் தம்பதியருக்கு குழந்தைப் பேறு இல்லாததால் ஜைதூனின் சகோதரியின் குழந்தையை தத்து எடுக்கிறார்கள். பிறப்புச் சான்றிதழில் தங்கள் பெயர்கள் இல்லாததால் எதிர்காலத்தில் தங்கள் மகள் தங்களை பிரிந்து விட்டால் என்னாவது என்ற அச்சத்தில் வழக்கறிஞர் ஆலோசனைப்படி நீதிமன்றத்தின் மூலமாக ஒரு பிறப்புச் சான்றிதழ் வாங்குகிறார். ஷாகிரா வளர்ந்து எம்.பி.ஏ படித்த பின்பு ரபீக்குடன் திருமணமும் நடைபெறுகிறது. வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போகிறது. மகிழ்ச்சி நிலைத்ததா?
குடியுரிமைச்சட்டம் வருகிறது. பிறப்புச் சான்றித்ழோ அதற்கான ஆவணங்களோ கொடுக்க முடியாதவர்கள் அரசு அமைக்கும் முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் அரசின் காவல்துறையாலும் அரசுக்கு வேண்டப்பட்ட சேவா அமைப்பின் குண்டர்களாலும் எப்படி தாக்கப்படுகிறது என்பதையும் மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போகிறது என்பதையும் நெஞ்சம் பதைக்கும் வண்ணம் ஆசிரியர் விவரிக்கிறார்.
அரசை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களும் செயற்பாட்டாளர்களும் பொய் வழக்கு புனையப்பட்டு சிறைக்குள் தள்ளப்படும் இன்றைய நிகழ்வு நாவலிலும் வருகிறது.
முகாமில் ஷாகிராவுக்கும் மைமூனுக்கும் ஏற்படும் நெருக்கம் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கின்றனர். முகாமின் காட்சிகள், அந்த ஆரோக்கியமற்ற சூழல்கள், பாஸிச இட்லரின் வதை முகாமில் சிக்கி உயிர் தப்பிய எலி வீஸலின் “இரவு” நூலை நினைவு படுத்துகிறது. சேவா அமைப்புக்கு ஒத்து வராத இந்துக்கள் கூட முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
மைமூனின் பிறப்பு பற்றிய உண்மைகளை அறிந்து அந்த ஆவணங்களோடு மகிழ்ச்சியோடும் கொஞ்சம் கர்வத்தோடும் வீடு திரும்புகிறார் இப்ராகிம். அவற்றைக் கொண்டு அவரால் மைமூனை முகாமிலிருந்து வெளியே கொண்டு வர முடிந்ததா?
பெற்றோரை கலவரக்காரர்களின் தாக்குதல்களில் இழந்த ஷாகிராவுக்கு முகாமை விட்டு வெளியேறும் நற்பேறு கிடைத்ததா?
“வாசகர்களை கலங்க வைப்பதே இந்த மனிதனுக்கு வழக்கமாக போச்சு” என்று நூலாசிரியரை கடிந்து கொள்ள ஒரு கணம் மனதில் தோன்றியது. இன்றைய ஆட்சியாளர்களின் பாஸிச நடவடிக்கைகள் தொடர்வதை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நூலில் சொல்லப்பட்டவை நாளை தமிழ்நாடு உட்பட இந்தியா முழுதும் நிகழும் என்று நூல் ஒலிக்கும் எச்சரிக்கை மணியை செவி மடுக்க தவறினால், இந்த ஆட்சியை வீழ்த்தாவிட்டால் நாளை நாமே நம்மை கடிந்து கொள்ள வேண்டியிருக்கும்.
****************************************************************
என்ன
நூல் அறிமுகத்தை படித்து விட்டீர்களா? இந்துக்களுக்கும் எப்படி பிரச்சினை வரும் என்பதை
இப்போது சொல்கிறேன்.
அஸ்ஸாம்
மாநிலத்தில் அனைத்து மக்களுமே தங்களின் குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்களை அளிக்க வேண்டுமென்று
அரசாணை வெளியிடப்பட்டது. கொடுத்த ஆவணங்கள் போதுமானதல்ல என்று நிராகரிக்கப்பட்டவர்களில்
பல்லாயிரம் இந்துக்களும் அடக்கம். ஆம், நிஜம்தான். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு இந்து
ஒருவரின் அனுபவம் அடுத்த பத்தியில்.
கௌஹாத்தியிலேயே
பிறந்து வளர்ந்து படித்து பணியாற்றி ஓய்வு பெற்ற எங்கள் சங்கத்தின் மூத்த தலைவர் ஒருவரின்
மனைவியும் அவர்களில் ஒருவர். அவருமே கூட கௌஹாத்தியிலேயே பிறந்து வளர்ந்து படித்து பணியாற்றி
ஓய்வு பெற்றவர். அவரிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பதால் ஆறு மாத கால அவகாசத்திற்குள்
மாற்று ஆவணங்களை கொடுக்காவிட்டால் முகாமிற்கு போக வேண்டியிருக்கும் என்று சொல்லி விட்டார்கள்.
பிறகு அலைந்து திரிந்து வேறு பல ஆவணங்களை தேடிக் கொடுத்த பின்பே அவரை இந்தியர் என்று
ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அந்த நான்கு மாத காலமும் குடும்பத்தில் உள்ள அனைவரது
நிம்மதியும் உறக்கமும் பறி போனது என்று அவரோடு பேசுகையில் சொன்னார்.
உங்களில்
எத்தனை பேரிடம் பிறப்புச் சான்றிதழ் உள்ளது? அநேகமாக எண்பதுகளுக்கு முன்பு பிறந்த யாரிடமும்
இருக்காது. பள்ளிச் சான்றிதழ் உங்களிடம் இருக்கலாம். அதை சரிபார்க்க அந்த ஆவணங்கள்
பள்ளியில் இருக்குமா? பள்ளிக்கல்வி இல்லாதவர்கள், நிலமோ சொத்துக்களோ இல்லாதவர்கள் நிலை
என்ன ஆகும்? அஸ்ஸாமைப் போல எல்லா மாநிலங்களிலும் ஆவணங்களை கேட்க மாட்டார்கள் என்று யாராவது உறுதியளிக்க முடியுமா? முரட்டுத்தனமும் முட்டாள்தனமும் ஒன்றிணைந்த மோடி எப்போது வேண்டுமானாலும் எதையும் செய்யலாம். தனது நலனுக்காக, எலும்புத்துண்டுகள் வீசும் முதலாளிகளுக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கக்கூடிய ஜென்மம் அது.
குடிமக்கள்
யார் என்று தீர்மானிக்கும் பொறுப்பு ஆர்.எஸ்.எஸ் வசம் சென்றால் என்ன ஆகும்? விபரீதங்கள்
பற்றி சிந்திப்பீர், அரசியல் சாசன விரோத குடியுரிமைச்சட்டத்தை கொண்டு வந்த பாஜகவை தேர்தலில்
வீழ்த்திடுவீர்.
No comments:
Post a Comment