மூத்த
முற்போக்குப் படைப்பாளியான தோழர் அஸ்வகோஷ் எனும் ராஜேந்திர சோழன் இன்று மறைந்தார்.
நான்
நெய்வேலியில் பணியாற்றிய காலத்தில் அறிமுகமானவர் அவர். நெய்வேலி கிளைச்சங்கத்தின் முக்கியத்
தலைவரும் பின்னாளில் வேலூர் கோட்டத்தின் முது நிலை கோட்ட மேலாளருமான தோழர் ஏ.சுப்பராயனை
பார்க்க அவர் அடிக்கடி வருவார். சி.பி.ஐ(எம்) கட்சியிலிருந்து பிரிந்து எம்.சி.பி.ஐ
என்று உருவான கட்சியைச் சேர்ந்தவர்கள் இருவரும் என்பது பிறகுதான் தெரிந்தது. பிறகு
அக்கட்சியிலிருந்து பிரிந்து தமிழ் தேச பொதுவுடமைக்கட்சியை உருவாக்கினார்கள்.
அதென்னங்க
பெயர் அஸ்வகோஷ், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரா என்று தோழர் சுப்பராயனிடம் கேட்ட போது
ராகுல சாங்கிருத்தியானின் “வோல்கா முதல் கங்கை வரை” நூலைக் கொடுத்து படிக்கச் சொன்னார்.
அவருடைய உண்மையான பெயர் சின்னச்சாமி, அஸ்வகோஷ் என்பதும் ராஜேந்திர சோழன் என்பதும் புனைப்பெயர்
என்று விளக்கினார்.
சில
சமயம் அவர்கள் டீக்கடைக்கு செல்லும் போது அழைத்துச் செல்வார்கள். அன்றைய காலகட்டத்தில்
அவர்கள் பேசும் மொழி, பயன்படுத்தும் வார்த்தைகள் புரியாது. அவருடைய சிறுகதைகள் படித்துள்ளேன்.
சிறகுகள் முளைத்தது என்ற குறு நாவலும் கூட. ஒரு சிறுகதைக்கான பரபரப்பான துவக்கம் அவருடைய
கதைகளில் இருக்கும்.
“கடவுள்
என்பது என்ன? “ என்ற அவரது நூல் என் வாழ்க்கை திசை வழியை மாற்றிய முக்கியமான நூல்.
சனிக்கிழமை தோறும் நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றிக்கொண்டு எள் தீபம் ஏற்றிக் கொண்டிருந்த
என்னை அதிலிருந்தெல்லாம் விலக வைத்த நூல். அவர்களின் கட்சியில் இணைக்க ஒரே ஒரு முறை
பேசினார். பிடி கொடுக்காமல் தப்பித்து விட்டேன். அவருடைய முழுமையான ஆளுமை பற்றி தமுஎகச தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "ஜிந்தாபாத், ஜிந்தாபாத்" நூலின் மூலம்தான் உணர முடிந்தது.
தோழர்
சுப்பராயன் பதவி உயர்வு பெற்று விழுப்புரம் சென்ற பின் அவரது வருகை நின்று போனது.
1989 லோ அல்லது 1990 லோ ஒரு பாரத் பந்த் சமயத்தில் வேலை நிறுத்தத்திற்கு முதல் நாள்
டீக்கடையில் ஒரு சந்திப்பு நடந்தது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்கட்டுமா என்று தோழர்
சுப்பராயன் கேட்ட போது உங்கள் அதிகாரிகள் சங்கம் பங்கேற்காத போது நீங்கள் மட்டும் வேலை
நிறுத்தம் செய்யும் தனி நபர் சாகசம் அவசியமில்லை என்று வழிகாட்ட அவர் விடுப்பில் சென்றார்.
நான்
வேலூருக்கு வந்த பின்பு ஒரு முறை சென்னை சென்ற போது எல்.ஐ.சி கட்டிடம் அருகில் இருந்த
ஒரு உணவு விடுதியில் பார்த்ததுதான் கடைசி. ஒரு தொழிற்தகராறு தொடர்பான பேச்சு வார்த்தைக்கு
வந்ததாக சொன்னார். எழுத்தாளர், நாடக ஆசிரியர், அரசியல்வாதி என்பதைத்தாண்டி தொழிற்சங்கவாதியாகவும்
அவர் இருந்துள்ளார்.
செவ்வணக்கம்
தோழர் அஸ்வகோஷ்.
No comments:
Post a Comment