Sunday, March 10, 2024

விஜிடபிள் அவல் பிரியாணி

 






“நானெல்லாம் சிக்கன் பிரியாணியையே பிரியாணி என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன், என்னிடம் போய் சைவ பிரியாணி சாப்பிடுகிறாயா என்று கேட்கிறார்கள்” என்றொரு பதிவை சில நாட்கள் முன்பாக முகநூலில் படித்தேன். ஆகவே வீர அசைவர்கள் இப்பதிவை கண்டு கொள்ளாமல் தாவி விடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பொடியாக வெட்டிய தோல் சீவப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் கேரட், காலிஃபளவர், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை தனியாக தண்ணீரில் போட்டு நன்றாக பொங்கி வரும் வரை கொதிக்க வைக்கவும். பின்பு அதனை மூடி வைக்கவும். வெங்காயம், தக்காளி, குட மிளகாய் ஆகியவற்றையும் தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பொறித்தவுடன் கடலைப் பருப்பைப் போட்டு அது சிவந்ததும் கறுப்பதற்கு முன்பாக வெங்காயத்தை போட்டு வதக்கவும், பின் தக்காளி, குடமிளகாய் என்ற வரிசைப்படி வதக்கி இப்போது மிளகாய்ப் பொடி, உப்பு போட்டு பின்பு கொதிக்க வைத்திருந்த உருளை, கேரட், காலி ஃபளவர், பச்சை பட்டாணியை தண்ணீரை வடி கட்டிய பின்பு போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். கரம் மசாலா பொடியை தூவி இறக்கவும். எண்ணெய் கொஞ்சம் அதிகமாக இருப்பது போல தோன்றினால் கொஞ்சம் கடலை மாவை போட்டு கிளறவும்.

கொஞ்சம் களைத்துப் போனது போலவோ, போரடித்தாலோ இத்தோடு கூட நிறுத்தி விடலாம். இந்த மசாலாவை பூரி, சப்பாத்திக்கு இணை உணவாக எடுத்துக் கொள்ளலாம். மசால் தோசைக்குக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். எங்கள் வீட்டில் அதை அப்படித்தான் பயன்படுத்தினார்கள்.

அதெப்படி பிரியாணி செய்யாமல் இருப்பது என்று தோன்றினால் தொடருங்கள்.

 கெட்டி அவல் ஒரு டம்ப்ளர் எடுத்து தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வையுங்கள்.

 வாட்ஸப், முகநூல் போன்ற முக்கியமான வேலைகளை இந்த பத்து நிமிடங்களில் முடித்து விடுங்கள்.

 ஊற வைத்த அவலை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். கொஞ்சமே கொஞ்சம் எண்ணெய் அடுப்பில் வைத்து அது காய்ந்து விட்டதா என்று அறிய நான்கு கடுகுகளை வெடிக்க வைத்து தயார் செய்து வைத்த மசாலாவில் பாதியை எடுத்து (மீதி பாதி இரவு சப்பாத்திக்கு இணை உணவுக்காக எடுத்து வைத்தாகி விட்டது) வாணலியில் போட்டு அவலையும் சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால் விஜிடபிள் அவல் பிரியாணி தயார்.

 மசாலாவை விட அவல் அதிகமாகி விட்டது போல தோன்றினால் ? (அட ஆமாங்க, அப்படித்தான் ஆனது.) கவலை வேண்டாம். இன்னொரு வாணலியில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விடவு. இந்த கம்பி பத ரிஸ்க்கான விளையாட்டெல்லாம் தேவையே இல்லை, கொதிக்கும் பாகில் தேங்காயை போட்டு கிளறி அவலையும் சேர்த்து கிளறி, ஏலக்காய் பொடி தூவி இறக்கி வைத்தால் இனிப்பு அவல் தயார்.

No comments:

Post a Comment