Saturday, May 7, 2022

தேசத்தின் கோபம் இது

 



*நாளொரு கேள்வி: 04.05.2022*

 

தொடர் எண்: *703*

 

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் * சுவாமிநாதன்*

#######################

 

*தேசத்தின் கோபம் இது*

 

கேள்வி: மல்கோத்ரா குழு அறிக்கை வெளி வந்த நாள் துவங்கி 28 ஆண்டுகளாக ஈடேறாத அரசின் பங்கு விற்பனை ஆசை இன்று 3.5 சதவீத பங்கு விற்பனை மூலம் நிறைவேறுகிறதா? இம் முடிவை தொழிற்சங்க இயக்கம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது

 

*.சுவாமிநாதன்*

 

இன்று நாடு முழுமையும் எல்..சி ஊழியர்கள் இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். மிகுந்த வேதனையோடும், கோபத்தோடும் வீதிகளுக்கு வந்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த இருக்கிறார்கள்

 

*இந்த வேதனையும் கோபமும் ஊழியர்களுக்கு மட்டும் இல்லை. தேசத்தின் அக்கறை கொண்ட, பொருளாதாரம் குறித்த ஞானம் கொண்ட, எல்..சி யின் பங்களிப்பை - நேர்மையான செயல்பாட்டை அறிந்த எல்லோருக்கும் ஏற்படும் வேதனை, கோபமே ஆகும்.* முன்னாள் மத்திய அரசின் செயலாளர் ..எஸ்.சர்மா, முன்னாள் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், மூத்த பத்திரிகையாளர் பிரண்ட் லைன் ஶ்ரீதர், நேற்று இந்து நாளிதழில் கட்டுரை எழுதியுள்ள லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முதுநிலைப் பேராசிரியர் சரத் சந்திரன் என எத்தனை அனுபவமும், ஞானமும் மிக்கவர்கள் எதிர்க்கிறார்கள்! இன்னும் தமிழகம், சட்டிஸ்கர், தெலுங்கானா மாநில முதல்வர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். கேரள சட்ட மன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இவையெல்லாம் தொழிற் சங்க இயக்கம் மக்களிடம் 28 ஆண்டுகளாக நிகழ்த்திய உரையாடல்களின் விளை பொருள். "மக்கள் கருத்து" அரசின் இம்முடிவுக்கு  எதிராக ஒன்று திரண்டிருப்பதன் வெளிப்பாடு. ஜனநாயக உள்ளம் கொண்ட ஆட்சியாளர்கள் எனில் இம்முடிவை நோக்கி நகர மாட்டார்கள். நிச்சயம் மக்கள் இதை மனதில் குறித்துக் கொண்டு எதிர் வினை ஆற்றுவார்கள்.

 

மல்ஹோத்ரா குழுவின் பரிந்துரைகள் ஈடேறுகின்றனவா? என்றும் 28 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னடைவா என்றும் கேட்கப்படுகிறது. *மல்கோத்ரா குழு அறிக்கையை திரும்பி பார்த்தால் இன்னும் அது எவ்வளவு தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை காண முடியும்.* எல்..சியில் உள்ள 50 சதவீத அரசின் பங்குகள் விற்கப்படும் என்பதுதான் மல்கோத்ரா குழு அறிக்கை. ஆனால் 22 ஆண்டுகளாக அவர்களால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. 65 லட்சம் கையெழுத்து இயக்கம் அன்றைய பிரதமர் நரசிம்மராவை தயங்க வைத்தது.  1997 இல் இடதுசாரிகளின் நாடாளுமன்ற பலத்தின் காரணமாக  அன்றைய பிரதமர் குஜ்ரால், நிதியமைச்சர் .சிதம்பரம் ஆகியோரால் எல்..சி பலப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 2008 இல் பங்கு விற்பனைக்கான மசோதா பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் கொண்டு வரப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது. அவர்கள் எல்லாம் *கொள்கை அளவில் விரும்பினாலும் மக்கள் கருத்தின் காரணமாக இறங்கி வந்தார்கள்.* ஆனால் இந்த அரசு மக்கள் கருத்தையும் மீறி பங்கு விற்பனையை நகர்த்த முனைகிறது. ஆனாலும் அவர்கள் ஆசை ஈடேறவில்லை. 3.5 சதவீத பங்கு விற்பனை என்று மட்டுமே இன்று அறிவித்துள்ளார்கள்

 

10 சதவீதம் என்று யோசனைகளை காற்றில் விட்டு, பிறகு 7 சதவீதம், 5 சதவீதம் என்று இறங்கி தற்போது 3.5 சதவீதத்திற்கு சந்தைக்கு கொண்டு வந்துள்ளார்கள். 50 சதவீதம் எங்கே... மூன்றரை சதவீதம் எங்கே... ஆகவே அவர்களின் *ஆசைக்கு அணை* போடப்பட்டுள்ளது. என்றாலும் தனியார்மயம் சிறு அடியை அவர்கள் முன்னெடுத்து வைத்துள்ளார்கள். ஆனாலும் மல்கோத்ரா அறிக்கையின் பயணம் வெகு தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இது பின்னடைவு அல்ல. காயங்களையும் தாங்குகிற நீதிக்கான போராட்டம்

 

இரண்டாவது இந்த 3.5 சதவீதத்திற்கே மூச்சுத் திணற வேண்டி வந்துள்ளது. காரணம் இந்த 28 ஆண்டு காலப் போராட்டம் வணிகத்தையும் பாதுகாத்து இருக்கிறது. கடந்த ஆண்டு கூட 2.94 கோடி புதிய பாலிசிகள் விற்கப்பட்டதில் 2.17 கோடி பாலிசிகளை எல்..சி மட்டுமே விற்பனை செய்துள்ளது. சந்தைப் பங்கு 74 சதவீதத்திற்கும் மேல். புதிய பிரிமியத்தில் 63 சதவீதம். 1994 இல் ஆசைப்பட்டது போல 50 சதவீதம் என ஆசை கூட படவில்லை. இன்று பங்குச் சந்தை 50 சதவீதம் என்றால் தாங்குமா? *வயிறு சுகமாக இருந்தால் கூட இந்த விருந்தை அது தாங்காது என்பதால்தான் 7 சதவீதம், 5 சதவீதம் என்று குறைத்தனர். இப்ப வயிறு வேறு சரியில்லை. உக்ரைன், வெளி நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை எடுத்துக் கொண்டு வெளியேறுதல், பெட்ரோல் டீசல் விலை உயர்வு என பங்கு சந்தை டிஸ்டர்ப் ஆகியுள்ளது. விருந்து எவ்வளவு சுவையானது என்றாலும் வயிறு சரியில்லை என்றால் என்ன செய்வது? ஆகவேதான் 3.5 சதவீதம் என்று இறங்க வேண்டி வந்தது.* ஒரு நிறுவனம் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டி இருப்பதால் அதை வாங்குவதற்கே ஒரு பலம் தேவைப்படுகிறது. இந்த வளர்ச்சி எப்படி சாத்தியம் ஆனது? அரசின் கொள்கையை எதிர்த்த போராட்டம், முகவர்கள் வணிகக் களத்தில் ஆற்றிய அற்புதமான பணி இரண்டும் இணைந்ததால்தான். ஆகவே எந்த போராட்டமும் வீணாகவில்லை.  

 

*ஒரு விசித்திரமான பங்கு விற்பனையை இந்திய பொருளாதார வரலாறு சந்திக்கிறது.* இவ்வளவு காலம் விற்கப்படும் நிறுவனங்களுக்கு ஒப்பனை செய்து சந்தைக்கு தயார் செய்வார்கள். ஆனால் இங்கேயோ சந்தைக்கு ஒப்பனை தேவைப்படுகிறது. எல்..சி யின் உட்செறிவு மதிப்பை (Embedded value - EV) மதிப்பிடுவதற்கான மென் பொருள் இந்தியாவில் இல்லை என உலகம் மூலம் தேடி சிங்கப்பூரில் கண்டு பிடித்தார்கள். உள் நாட்டு சந்தையின் பலம் போதாது என்று வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்தார்கள். டீமேட் கணக்குகள் திறப்பதற்கு விளம்பரத்திற்கு விளம்பரம் செய்து கூவோ கூவோ என்று ஆள் சேர்த்தார்கள். இவ்வளவும் ஏன்? எலியை பிடிக்கிற பொறி யானைக்கு போதாதே! கிரிக்கெட் மேட்ச் போல மணி கண்ட்ரோல் "இணைய தளம்" போன்றவை லைவ் ரிலே செய்கிறார்கள். ஆனால் இவ்வளவு செய்தும் 3.5 சதவீதம்தான் என்றால் அங்குதான் எல்..சி யின் பலம் எல்லாவற்றையும் மீறி வெளிப்படுகிறது. 28 ஆண்டு கால போராட்டம் எவ்வளவு பெரிய அரணை உருவாக்கியுள்ளது என்பதும் வெளிப்படுகிறது.

 

28 ஆண்டு கால போராட்டம் அரசிடம் ஒரு வாக்குறுதியை சட்டத் திருத்தத்தில் "எப்போதும்" (At all times) அரசின் பங்குகள் எல்..சி யில் இருக்கும் என்று போடப்பட்டு உள்ளது. சட்டத்தின் புனிதம் காகிதத்தில் இல்லை என்பது நாம் அறிவோம். *காகிதம் நாளை கிழிக்கப்படலாம். காகிதத்தில் மை உலர்வதற்கு முன்பு மாற்றப்படலாம்.* அரசின் ஆசை வேறு... நிர்ப்பந்தத்தால் தரப்பட்டுள்ள வாக்குறுதி வேறு...

 

மக்கள் கருத்து மட்டுமே இந்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். ஆகவே போராட்டம் தொடரும். அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறோம் என்பதே.

 

அவ்வளவு எளிதாக அரசால் மல்கோத்ரா குழு போட்ட சாலை வரை படத்தில் நகர்ந்து விட முடியாது. அதன் இலக்கை விட்டு மிக தூரத்தில் நிறுத்தி இருக்கிறோம் என்பதுஅரசுக்கும்  பின்னடைவுதான்

 

இரண்டு மணி நேர வெளி நடப்பும் நாங்கள் இன்னும் போராட தயார் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வு ஆகும். நிறைய தக்க வைத்துள்ளோம். அந்த நம்பிக்கையுடன் முன்னேறுவோம்

 

*செவ்வானம்*

2 comments:

  1. Lic_share_holder(Future)May 7, 2022 at 10:11 PM

    அண்ணே, பெர்பாமன்ஸ் பத்தல. இன்னும் நான் உங்க கிட்ட எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete