Wednesday, May 11, 2022

50 லிருந்து 3.5



 *நாளொரு கேள்வி: 11.05.2022*


தொடர் எண்: *710*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
#######################

*எல்.ஐ.சி பங்கு விற்பனை: எதிர்காலம் என்ன?*

கேள்வி: எல்.ஐ.சி பங்கு விற்பனை,  எதிர்காலம் பற்றிய பல கேள்விகளை எழுப்பி உள்ளதே? 

*க.சுவாமிநாதன்*

நிறைய கேள்விகள் எழுவதற்கு காரணம், 28 ஆண்டுகளாக இது பற்றி நிறைய மக்கள் மத்தியில் பேசப்பட்டு இருப்பதுதான். *முக்கியமான அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த பிரச்சினைகள் மீது பரந்த விவாதம் நடைபெறுவது ஒரு தேசத்தின் ஜனநாயக பண்பு ஆகும். ஆனால் ஆட்சியாளர்கள் அத்தகைய பண்பை வெளிப்படுத்துவது இல்லை. உண்மையில் அத்தகைய பண்பை உயிர்ப்போடு தக்க வைப்பதாக வீதிகளில் நடைபெறுகிற போராட்டங்களே இருக்கின்றன.* கருத்து பரிமாற்றங்களே ஆளும் வர்க்கங்களின் நவர்வுகளுக்கு தடையாக மாறினால் வடிவங்கள் அமைதியானதாக, பாரம்பரியமானதாக இருந்தாலும் அவை "வன்முறை" போராட்டங்கள் என சித்தரிக்கப்படும். இந்திய இன்சூரன்ஸ் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் - தனியார் அனுமதிக்கு எதிராகவும், பங்கு விற்பனைக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் அமெரிக்க பெரு ஊடகங்களால் இப்படி வர்ணிக்கப்பட்டதுண்டு.

இந்த நீண்ட நெடிய போராட்டம் தொடர்ந்து அரசு முடிவின் ஒவ்வொரு அம்சம் மீதும் ஆழமான கவனம், கேள்விகள் விவாதங்களை உறுதி செய்திருக்கிறது. அதனால் தறி கெட்ட வேகத்தில் அரசால் நகர முடியவில்லை.

*இதன் தாக்கங்களுக்கு என்ன நிரூபணம்?*

ஒன்று, 1994 இல் 50 சதவீத பங்கு விற்பனை என்று பேசியவர்கள் படிப்படியாக இறங்கி *10 %, 5% என்றெல்லாம் கசிய விட்டு 3.5 % என்ற அளவிற்கு* வந்து நிற்கிறார்கள். இதற்கு இன்னொரு காரணம் எல்.ஐ.சி யின் பிரம்மாண்ட வளர்ச்சி. 28 ஆண்டுகள் கழித்தும் 50% என்ற ஆசையில் அவர்களால் 3.5 % என்பதைக் கூட கடக்கவில்லை. 50 % என்றால் அரசு நிறுவனம் என்ற அந்தஸ்தையே எல்.ஐ.சி இழந்து இருக்கும். ஆனால் இன்னும் பல்லாண்டுகள் ஆனாலும் எல்.ஐ.சி யின் அரசு நிறுவனம் என்ற தன்மையை அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது என்ற நம்பிக்கை தக்க வைக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது, மத்திய அரசின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் *சஞ்சய் மல்கோத்ரா* இன்று கூட 

 _"நிறுவனம் வாழ்வதே பாலிசிதாரர்களுக்குதான். அவர்கள் இல்லையெனில் நிறுவனமும் கிடையாது, பங்கு தாரர்களும் கிடையாது"_  (இந்து பிசினஸ் லைன் - 11.05.2022) 

என்று கூறியுள்ளார். காரணம் என்ன? *எல்.ஐ.சி யின் செயல்பாடுகள் "பாலிசிதாரர் நலன்" என்பதில் இருந்து "பங்கு தாரர் நலன்" என்பதை நோக்கி நகர்கிறது என்ற  விமர்சனம்தான்.* அந்த விமர்சனம் சும்மா வைக்கப்படவில்லை. *எல் ஐ சி உபரியில் பாலிசிதாரர்க்கான பங்கு 95 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக பங்கு விற்பனைக்கு பின்னர் குறைந்து  போனசை பாதிக்கும்* என்பதால் எழுந்த விமர்சனமே. எல்.ஐ.சி யின் நிதியே கூட பங்குரிமை பெறும் பாலிசிகள், (Participating policies) பங்குரிமை அற்ற பாலிசிகள் (Non Participating Policies) என்று *இனி இரண்டாக பிரிக்கப்பட்டு இரண்டாம் வகை நிதியில் இருந்து பாலிசிதாரர்களுக்கு உபரியில் ஏதும் கிடைக்காது* என்ற விமர்சனமும் முன் வைக்கப்பட்டதே. ஆனால் இவ்விமர்சனங்களுக்கு  பதில் சொல்லாமல், வெறும் வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டுள்ளார் நிதிச் சேவை செயலாளர்.  
இதுவும் ஒரு கேள்வி மக்களிடம்  சென்று சேர்ந்து இருப்பதால் ஏதோ ஒரு விளக்கம் தர வேண்டிய கட்டாயம் இருப்பதன் வெளிப்பாடே. 

மூன்றாவது, *அரசுக்கு பங்கு விற்பனையால் வருவாய் கிடைத்தால் அது மக்களின் நலனுக்கே பயன்படும்* என்றும் மேற்கூறிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது முனை மழுங்கிய அம்பு. பங்கு விற்பனை தவிர வேறு வருவாய் திரட்டல் வழிகளே இல்லையா? என்ற கேள்விகள் எல்லாம் பதில்கள் இல்லாமல்  *வேதாளம் போல முருங்கை மரத்தில்* தொங்கிக் கொண்டே இருக்கின்றன. மூலதன செலவுகளுக்கு நிதி கிடைக்கும் என்கிறார். *21000 கோடிக்கு இந்த விளக்கம். 22 லட்சம் கோடி முதலீடுகள் மத்திய அரசு, மாநில அரசு பத்திரங்கள் வாயிலாக பங்கு விற்பனைக்கு முன்பே கிடைத்துள்ளதே.* அது நிதிச் சேவை செயலாளருக்கு தெரியாதா? தங்க முட்டைகளுக்கு காத்திருக்க பொறுமை இல்லாதவர் செயலுக்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

ஆகவே போராட்டங்கள் தக்க வைக்கிற கேள்விகள், அரசின் தவறான பாதையில் வேகத் தடைகளாக மாறிக் கொண்டே இருக்கும்.  

*நீடித்த போராட்டம் போட்ட பெரும் தடை, தனியார் மயம் என்ற 50 கி.மீ பயணத்தில் 28 ஆண்டுகள் கழித்தும் 3.5 கி. மீ மட்டுமே நகர முடிந்து இருப்பதே.* ஆகவே பாலிசிதாரர்களுக்கு நம்பிக்கையாக சொல்லலாம். அரசு நிறுவனம் என்ற முத்திரையை அகற்ற அவர்களால் முடியாது. அதனால்தான் சட்டத் திருத்தத்தில் கூட "எல்லா காலங்களிலும்" 51 சதவீதம் இருக்கும் என்ற வார்த்தைகள். 

பாலிசிதாரர் நலன் குறித்த விவாதமும் களத்தில் எழுப்பப்பட்டு உயிர்ப்போடு வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் "அவர்கள் இல்லாமல் எல்.ஐ சி இல்லை" என்று பேச வேண்டி வந்துள்ளது. எதிர்காலத்திலும் இத்தகைய நிர்ப்பந்தங்களை தொடர்ந்த விழிப்பு தக்க வைக்கும். 

எல்.ஐ.சி பங்கு விற்பனை பற்றிய விவாதம், வருவாய் திரட்டலில் அரசு காட்டுகிற அநீதிக்கு எதிரானதாகவும் நீள்கிறது. 

ஆகவே இப்படி விடைகளை சொல்ல வேண்டிய தொடர் நிர்ப்பந்தங்களை மக்கள் விழிப்பு வாயிலாக உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இருக்கும்.

*செவ்வானம்*

No comments:

Post a Comment