ஹைதராபாத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கால்நடை மருத்துவர் கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டதையும் அந்த குற்றவாளிகள் அதே இடத்தில் போலீஸால் எண்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதையும் அதை மக்கள் கொண்டாடியதையும் கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
"போலீஸ் கையிலிருந்த பிஸ்டலை பிடுங்கி குற்றவாளிகள் அவர்களை சுட்டார்கள், அதனால் போலீஸ் தற்காப்புக்காக இருவரை சுட்டார்கள். குற்றவாளிகள் சரமாரியாக சுட்டதில்தான் அவர்கள் கூட்டாளிகள் இருவரும் இறந்தார்கள்"
இதுதான் போலீஸின் வாதம்.
அதை உச்ச நீதிமன்றம் நியமித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷன் நிராகரித்து விட்டது.
அனுபவமில்லாத யாரும் அந்த பிஸ்டலை பயன்படுத்த முடியாது. ஆகவே குற்றவாளிகள் பிஸ்டலைப் பறித்து ஒரு நொடிப் பொழுதில் அதனை கற்றுக் கொண்டு சுட்டார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை என்று சொல்லி விட்டது விசாரணைக் கமிஷன்.
அதே போல் மீதமுள்ள இரண்டு பேர் உடலில் இருந்ததும் பிஸ்டலின் தோட்டாக்கள் அல்ல, போலீஸ் பயன்படுத்திய ஏ.கே 47 துப்பாக்கிகளின் தோட்டாக்கள் என்பதும் நிரூபணமாகி விட்டது.
எனவே இந்த போலி எண்கவுண்டர் மரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் அவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்று சொல்லி தெலுங்கானா உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தர இயலாத கையாலாகாதவர்கள் கண்டுபிடித்த குறுக்கு வழிதான் போலி எண்கவுண்டர்கள். அதை கொண்டாடுவது சரியல்ல என்று அன்று எழுதியதை இன்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
அப்போது எழுதிய பதிவு இங்கே மீண்டும் . . .
எண்கவுண்டர்களை கொண்டாடும் முன்பு
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற கொலையாளிகள் இன்று அதே இடத்தில் எண்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் காட்டுமிராண்டிகள், அவர்கள் செய்த குற்றத்திற்கு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப் பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அந்த மரண தண்டனையை அளிக்கும் அதிகாரத்தை காவல்துறையே கையில் எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வியை அவ்வளவு சுலபமாக புறக்கணித்துச் செல்ல முடியாது.
இந்த பதிவை மிகுந்த சிந்தனைக்குப் பிறகே எழுதுகிறேன். அப்படி சிந்திக்க வேண்டிய அவசியத்தை அந்த எண்கவுண்டர் மரணங்களை கொண்டாடுகிற மன நிலையில் பலர் இருப்பதுதான் அளித்தது.
அந்த எண்கவுண்டர் நிஜமானதுதானா அல்லது போலியா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று ஊடகங்கள் அந்த காவல்துறை அதிகாரியை பாராட்டுகிற போதே அது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை உணர்த்துகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அது முறையான வழியில் நீதிமன்ற தீர்ப்பு மூலமே வழங்கப்பட வேண்டும் என்பதையும் இணைத்தே வலியுறுத்துகிறேன்.
இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்து விட்டதே என்று மக்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இந்த எண்கவுண்டர் மூலம் காவல்துறை தன் மீது எழுந்த விமர்சனங்களை அழகாக அடக்கி விட்டு நாயகர்களாக மாறி விட்டது.
காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்?
குற்றவாளிகளை கைது செய்து விட்டார்கள். உடனடியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் முன் அவர்களை நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். விரைவு நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்திருக்கலாம்.
காவல்துறை சட்டரீதியான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு பதிலாக சுலபமான தீர்வை நாடியுள்ளது என்பதுதான் யதார்த்தம். இதன் மூலம் சட்டத்தை மதிக்காத முதல் அமைப்பாகவும் காவல்துறையே திகழ்கிறது.
சட்டத்தின் தண்டனையை வாங்கித் தர முடியாத காவல்துறையின் கையாலாகத தனம் எண்கவுண்டர் என்பதை இப்போது உணர்ச்சிமயப் பட்ட நிலையில் அதை கொண்டாடுபவர்கள் யோசிப்பார்களா என்று தெரியவில்லை.
நீதிமன்றத்தின் அதிகாரத்தை காவல்துறை ஆக்கிரமிப்பதை கொண்டாடுவது எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சூழலை உருவாக்கும் என்பதை கணிப்பதெல்லாம் அவ்வளவு சுலபமல்ல.
இன்று ஹைதராபாத்தில் குற்றவாளிகளை துலைத்த தோட்டாக்கள், உத்திரப்பிரதேசத்தில் பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொலை முயற்சி செய்த பாஜக புள்ளி மீதும்
பொள்ளாச்சி அயோக்கியர்கள் மீதும்
ஆசிபாவை கொன்ற படுபாவிகள் மீதும்
பாயுமா?
தோட்டாக்களுக்கும் வர்க்கமும் அரசியலும் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
மேலே ஒரு பட்டியல் உள்ளது. அரசு இயந்திரம் அவர்களையும் எண்கவுண்டர் செய்ய முன்வருமானால் எண்கவுண்டரை ஆதரிப்பது பற்றி யோசிக்கலாம்.
No comments:
Post a Comment