Saturday, July 6, 2019

அவர் இருந்திருந்தால்



கீழே உள்ள கட்டுரை மறைந்த எங்கள் தோழர் இ.எம்.ஜோசப் எழுதியது. அவர் எழுதிய இறுதிக்கட்டுரையும் இதுதான். அவர் மறைந்த 30.06.2019 அன்று தீக்கதிர் இதழில் பிரசுரமானது. அதை அன்று காலை பகிர்ந்து கொண்ட பலருக்கும் இன்னும் சில நிமிடங்களில் அவர் அனைவரை விட்டும் பிரிந்து விடுவார் என்று தெரியாது. 

நேற்று பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. பட்ஜெட்டைப் பற்றிய அவரது ஆய்வு இன்று வந்திருக்கும்.  அந்த வருத்தத்துடன் அவரது இறுதிக் கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அமெரிக்க சீனப் பொருளாதாரம் - ஓர் ஒப்பீடு!



உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா இன்று சீனாவுடன் வர்த்தகப் போரினைத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்க மக்களின் துயரங்களுக்கு அமெரிக்கப் பொருளாதார அமைப்பு தான் காரணமேயொழிய, சீனா அல்ல. இந்தப் பின்னணியில் இதனை விளக்கி, அமெரிக்காவின் முன்னாள் தொழிலுறவு அமைச்சர் ராபர்ட் ரீச், ‘தி கார்டியன்’  ஏட்டில் (23,ஜூன், 2019) எழுதிய கட்டுரையின் சுருக்கம் இங்கு தொகுத்து தரப்படுகிறது.
அமெரிக்க அமைப்பு!

அமெரிக்கப் பொருளாதார அமைப்பு என்பது, அடிப்படையில், அமெரிக்காவில் தலைமையகம் கொண்ட அதனுடைய 500 பகாசுரக் கம்பெனிகளை மையமாகக் கொண்டது தான். உலக முழுவதும் அவர்கள் உற்பத்தி செய்வது, வாங்குவது, விற்பது ஆகியவற்றிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதே. அதுவே அதனுடைய அடிப்படைக் கடமை.  அமெரிக்கக் கம்பெனிகளின் ஊழியர்களில் 50 சதவீதத்தினர் அமெரிக்கர் அல்லாதவர்களே. இவர்கள் அமெரிக்காவிற்கு வெளியே இருக் கின்றனர். அதே போன்று, இந்தக் கம்பெனிகளின் மூன்றில் ஒரு பங்குதாரர்கள் அமெரிக்கர் அல்லாதவர்களே.  இந்தக் கம்பெனிகள் அமெரிக்க நாட்டிற்கோ மக்களுக்கோ குறிப்பிட்ட அளவு விசுவாசம் எதுவும் கொண்டவர்கள் இல்லை. தங்களது பங்குதாரர்களுக்கு மட்டுமே இவர்கள் கடமைப் பட்டவர்கள், விசுவாசம் உள்ளவர்கள். 

இவர்களது பங்குகளின் விலைகளை எவ்வளவு உயர்த்த வேண்டுமோ அவ்வளவு உயர்த்துவதற்காக, இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.  ஊழியர்களின் ஊதியங்களை குறைப்பது, தொழிற்சங்கங்களை உடைத்தெறிவது, ஊழியர்களில் ஒரு பகுதியினரையே  “காண்டிராக்டர்கள்” என்று மறு வரையறை செய்வது, உலகில் உழைப்பு மிக மலிவாகக் கிடைக்கும் நாடுகளுக்கு உற்பத்தியினை இடம் மாற்றிக் கொள்வது, வரிகள் மிகக் குறைவாக இருக்கும் நாடுகளுக்கு தங்களது லாபங்களை இடம் மாற்றிக் கொள்வது, தங்களது முதன்மை அதிகாரிகளுக்கு (CEOs) மிக அதிகமான ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்குவது என அனைத்து வித்தைகளும் அதில் அடங்கும்.

சீனப் பொருளாதாரம்!

மறுபுறத்தில் சீனப் பொருளாதாரத்தை பாருங்கள்! அது சீனாவை விரிவாக்குவதிலேயே குறியாய் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அது ஒரு பின் தங்கிய வேளாண் பொரு ளாதாரம் தான். ஆனால், இன்று அது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருமாறி யிருக்கிறது. மோட்டார் உற்பத்தித் தொழிலில்  முதல் இடம். மிக உயர்ந்த தொழில்நுட்ப கம்பெனி களின் தாயகம். கடந்த நாற்பது ஆண்டுகளில், பல கோடி சீன மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.  அதில் பொதுத்துறைக் கம்பெனிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்தக் கம்பெனிகள் அரசு வங்கிகளிலிருந்து (செயற்கையாகக் குறைக்கப்பட்ட) மிகவும் சொற்ப வட்டியில் கடன் பெறுகின்றன. சீனப் பொருளாதாரத்தில் உருவா கும் ஏற்றத்தாழ்வுகளை இந்த பொதுத்துறைக் கம்பெனிகளே சமனப்படுத்துகின்றன. தனியார் கம்பெனிகள் அதிகம் செலவு செய்யத் தயங்கும் போது, இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் தான் அந்த வெற்றிடங்களை இட்டு நிரப்புகின்றன.  சீன நாடு சுபிட்சப் பாதையில் செல்வதற்கும், உயர் தொழில் நுட்பங்களில் ஈடுபடுவதற்கும், தேவைப்படுகிற முதலீடுகளை இந்த பொதுத் துறைக் கம்பெனிகள் செய்வதால், அவையே பொருளாதாரத்தினை இழுத்துச் செல்லும் உந்து விசையாகச் செயல்படுகின்றன.  சீன மக்களின் நல்வாழ்வினை மேம்படுத்து வதற்கு தேவைப்படும் அனைத்தையும் செய்வ தற்கும், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பொருளா தாரமாக சீனாவை மாற்றுவதற்கும், சீன அரசின் திட்டமிடலும், பொதுத்துறைக் கம்பெனிகளுமே அடிப்படையாக இருந்து வருகின்றன.  1978லிருந்து இன்று வரை சராசரியாக 9 சதவீத வளர்ச்சியினைப் பெற்று வருகிறது. அண்மையில் அதன் வளர்ச்சி விகிதம் குறைந்தி ருக்கிறது. அமெரிக்க வர்த்தகப் போர் அதனை 6 அல்லது 7 சதவீதமாகக் குறைக்கக் கூடும். எப்படி இருப்பினும், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டுப் பொருளாதாரத்தையும் விட, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிகமானதாகவே இருக்கும்.

கார்ப்பரேட் சுயநலம்!

அமெரிக்க மக்களின் நலன்களை முன்னெடுக்கும் நோக்கில், வரிகள், மானியங்கள், ஒழுங்காற்றல் முறைகள் போன்ற வற்றின் மீதே அமெரிக்கப் பொருளாதார அமைப்பு அதிகம் நம்பிக்கை வைக்கிறது. ஆனால், இதில் கிடைக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி, பங்குதாரர்களின் லாபத்தைப் பெருக்கிக் கொள்வதிலேயே, கம்பெனிகள் கண்ணும் கருத்துமாய் இருக்கின்றன.  எடுத்துக்காட்டாக, கடந்த வாரத்தில், உலகின் மிகப் பெரும் கம்பெனியான வால் மார்ட், 570 ஊழியர்களை லே ஆஃப் செய்தது. டிரம்ப் வழங்கிய கார்ப்பரேட் வரிச்சலுகைகள் மூலம் 2 பில்லியன் (200 கோடி) டாலர் கூடுதல் லாபம் ஈட்டிய பின்னரும் இது நடந்திருக்கிறது. இதே கம்பெனி சென்ற ஆண்டு சாம்ஸ் கிளப் ஸ்டோர்களை மூடி, ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை இழக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து 20 பில்லியன் (2000 கோடி) மதிப்புள்ள தனது கம்பெனியின் பங்குகளை, பங்குச் சந்தையிலிருந்து மீண்டும் விலைக்கு (Buy back) வாங்கிக் கொண்டது. இதன் பயனாக வால் மார்ட் அதிகாரிகளின் ஊதியம் உச்சிக்கு சென்றது. பங்குதாரர்களின் லாப ஈவு (டிவிடெண்ட்) ஊதிப் பெருத்தது.

லஞ்சத்திலும் உச்சம்!

வால் மார்ட் ஒரு உலகளாவிய கம்பெனி என்பதனையும், வெளி நாடுகளின் அரசு அதிகாரிகளுக்கு தாராளமாக லஞ்சம் கொடுக்கும் கம்பெனி என்பதனையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். அத்தகையதொரு குற்றச் சாட்டின் பின்னணியில், சென்ற வியாழக்கிழமை வெளி நாடுகளுக்கு நஷ்ட ஈடாக 282 மில்லியன் (28.2 கோடி) டாலர் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது. பிரேசிலில் இடைத்தரகராக பணியாற்றிய பெண் ஒருவருக்கு கிடைத்த தொகை மட்டும் 5 லட்சம் டாலர். எந்தக் கட்டிடத்தை எங்கு, எப்படிக் கட்டினாலும் அரசு அதிகாரிகளிடமிருந்து எந்த ஆட்சேபணையும் வராமல் பார்த்துக் கொள்ளும் இந்தப் பெண்ணை “பெண் மந்திரவாதி” (Sorceress) என்று அழைக்கிறார்களாம்.  

வேலைகளுக்கு அல்ல! 

மொத்தத்தில் டிரம்ப் வழங்கிய வரிச் சலுகைகள் அமெரிக்காவில் வேலைகளை உருவாக்கவில்லை, தொழிலாளர்களின் ஊதியத்தையும் உயர்த்தவில்லை. மாறாக, கார்ப்பரேட் உயர் அதிகாரிகள் ஊதிய உயர்வு போன்ற வற்றிற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் சேமிப்புக்களை மறு முதலீடு செய்வதற்குப் பதிலாக, சந்தையில் விற்றிருந்த தங்களது பங்குகளை மீண்டும் வாங்கி தங்கள் பங்கு களை அதிகரித்திருக்கின்றனர் என ஐ.எம்.எப் அறிக்கை கூறுகிறது.

ஜனநாயகம் உண்டா?

கொஞ்சம் பொறுங்கள்! அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு, சீனா ஒரு சர்வாதிகார நாடு என்று தானே சொல்கிறோம்? ஆனால், அமெரிக்க அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் அமெரிக்க மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? இது தான் பேராசிரியர்களான மார்ட்டின் கிலன்ஸ் (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்), பெஞ்சமின் பேஜ் (நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகம்) ஆகியோரின் ஆய்வறிக்கை முடிவு.  மாறாக, அமெரிக்காவின் பெரும் செல் வந்தர்கள் (அநேகமாக, கார்ப்பரேட் எக்சிக்யூட்டிவ்கள், வால் ஸ்ட்ரீட் முதலாளிகள்) சொல்வதைத் தான், அமெரிக்காவில் சட்டமியற்றுபவர்கள் கேட்பார்கள். அமெரிக்க கார்ப்பரேட்டுக்களை குற்றம் சொல்வதில் பொருள் இல்லை.  அமெரிக்க மக்களின் நலன்கள், புதிய வேலைகள், அமெரிக்கப் போட்டித்தன்மையினை மேம்படுத்தல் ஆகியனவெல்லாம் முதலாளிகளின் வேலை அல்ல. அப்படியானால், சீனப் பொருளாதார அமைப்பு முறைக்கு மாறி விட வேண்டும் என நான் சொல்லவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் குறித்து அதீத திருப்தி அடைந்து விட வேண்டாம் என்பது தான் நான் சொல்வது.  

சீனா தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்வதைக் காட்டிலும், அமெரிக்கக் கார்ப்பரேட்டுக்கள் அமெரிக்கக் கொள்கைகள் மீது ஆதிக்கம் செலுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நான் கூறும் யோசனை.    இப்போது சொல்லுங்கள்! கடந்த நாற்பது ஆண்டுகளாக அமெரிக்க மக்களில் அரைப் பங்கினருக்கு வருமான உயர்வு எதுவும் இல்லாததற்கு சீனாவா காரணம்?

தொகுப்பு : இ.எம்.ஜோசப் 
 நன்றி : “தி கார்டியன்” (23.06.019)

2 comments:

  1. அப்போ சொந்த சரக்கு கிடையாதா?

    ReplyDelete
    Replies
    1. ஆசான் இல்லாவிட்டாலும் அவர் கற்றுக் கொடுத்த பாடம் இருக்கிறது. வாட்ஸப் பார்வர்டுகளை மட்டுமே நம்பி தொழில் செய்பவர்களுக்குத்தான் பிரச்சினை

      Delete