மத்திய
பட்ஜெட் 2019 : எதிர்பார்ப்பில்லை, ஏமாற்றமில்லை
மத்திய
நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்த மத்திய பட்ஜெட் மக்களுக்கு சாதகமாக
இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால்
எந்த வித ஏமாற்றமும் அளிக்கவில்லை. தாங்கள் வெற்றி பெற தேர்தல் பத்திரங்கள்
மூலம் ஸ்பான்ஸர் செய்த பெரும் நிறுவனங்களுக்கு நன்றி சொல்லும் விதத்திலேயே மத்திய பட்ஜெட்
அமைந்திருந்தது.
வருமான
வரியில் மாற்றமில்லை : 2014 ல் ஆட்சிக்கு வர ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு
அளிக்கப்படும் என்ற வாக்குறுதி ஒரு முக்கியக் காரணம். கருத்துக்களை உருவாக்குபவர்களாக
திகழ்கிற மத்தியதர வர்க்கம் இந்த வாக்குறுதியை நம்பியே பாஜகவிற்கு வாக்களித்தது. கடந்த
ஐந்து ஆண்டுகளில் எப்படி இந்த வாக்குறுதி அமலாக்கப்படவில்லையோ, அது போல இந்த ஆண்டு
பட்ஜெட்டிலும் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமுமில்லை.
ஐந்து
கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சர்சார்ஜ் உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள்
என்று கணக்கு காண்பிப்பவர்கள் வெறும் 6381 பேர் மட்டுமே என்றுள்ள நிலையில் இந்த சர்சார்ஜ்
உயர்வு வெறும் கவனத்தை திசை திருப்பும் முயற்சி மட்டுமே.
ஆனால்
அதே நேரம் கார்ப்பரேட் வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றம் கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய போனஸ்.
250 கோடி ரூபாய் வரை 25 % கார்ப்பரேட் வரி விதிக்கப்படும் என்பது நானூறு
கோடி ரூபாய் என்று மாற்றப்பட்டு விட்டது. இதன் மூலம் ஒற்றை வார்த்தையில் 99.3 % கார்ப்பரேட்
நிறுவனங்கள் பத்து சதவிகித வரிச் சலுகையை அனுபவிக்கப்போகிறது. அவர்கள் ஏய்த்து வரும்
வாராக்கடனை வசூலிப்பதற்கான எந்த நடவடிக்கையும்
இல்லை.
71,000
கோடி ரூபாய் வரை கடந்த ஆன்டு வரி வசூலிக்கப்படவில்லை என்று பட்ஜெட் சொல்கிறது. அப்படி
வரி ஏய்ப்பு செய்தவர்களுக்குத்தான் அரசு மீண்டும் வாரி வழங்குகிறது. என்னத்தான் வரிச்சலுகை
அளித்தாலும் அவர்கள் நேர்மையாக நடந்து கொள்வார்களா என்பது சந்தேகமே. பெரும் நிறுவனங்கள்
செலுத்த வேண்டிய வரியை கறாராக வசூலிப்பதற்கான எந்த ஏற்பாடும் பட்ஜெட்டில் இல்லவே இல்லை.
கல்வி,
சுகாதாரம் ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில்
பல மாநிலங்களில் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனைகள் துவக்குவதற்காக அடிக்கல் நாட்டு விழாக்கள்
நடைபெற்றது. ஆனால் எந்த ஒரு மருத்துவமனையையும் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு என்பது
இந்த பட்ஜெட்டில் இல்லை. அதில் மதுரையில் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்ட ஏ.ஐ.ஐ.எம்.எஸ்
மருத்துவமனையும் அடங்கும். பிரதமரின் பாசத்துக்குரிய “ஸ்வச்ச பாரத்” திற்குக் கூட ஒதுக்கீடு
குறைக்கப்பட்டு விட்டது.
இந்தியாவின்
முதல் பெண் நிதியமைச்சர் என்று பலரும் பெருமிதம் பேசும் வேலையில் பெண்களின் பாதுகாப்புக்கான
நிர்பயா நிதி ஆயிரம் கோடி வெட்டப்பட்டுள்ளது என்பது ஒரு முரண்நகை.
ராணுவத்திற்கான
ஒதுக்கீடு கூட போதுமானதல்ல என்பதால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட தளவாடங்களை வாங்குவதில்
சிக்கல் வரும் என்று முப்படைகளிலிருந்தும் புலம்பல் ஓசை கேட்கிறது. இந்திய விமானப்படை
ஹெச்.ஏ.எல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 20,000 கோடி ரூபாய் பாக்கித் தொகைக பாதிக்கப்படும்
அபாயம் உள்ளது.
நாற்பத்தி
ஐந்து ஆண்டு காலத்தில் சென்ற ஐந்தாண்டுகளில்தான் வேலையின்மை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது
என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ள அரசு, அதனை சரி செய்ய, வேலை வாய்ப்புக்களை உருவாக்க
எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விவசாய
நெருக்கடியை நீக்க எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் பட்ஜெட்டில் கிடையாது. சொல்லப்பட்ட
சில அறிவிப்புக்கள் கார்ப்பரேட் விவசாய நிறுவனங்களுக்கு மட்டுமே பலனளிக்கும். விளை
பொருட்களின் ஆதார விலையை உயர்த்துவது, உர விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது, விவசாயக்
கடனை ரத்து செய்வது ஆகியவை பற்றி பட்ஜெட் வாய் திறக்கவே இல்லை.
விவசாயத்துறை
சிக்கலில் உள்ள நிலையில் மகாத்மா காந்தி வேலை உறுதிச் சட்டத்தின் படி ‘வேலை நாட்களை
அதிகரிக்க வேண்டும், கூலியை உயர்த்த வேண்டும்´ என்ற கோரிக்கைகள் வலுப்பெரும் சூழலில்
மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதியை உயர்த்துவதற்குப் பதிலாக பத்தாயிரம் கோடி ரூபாயை
குறைத்துள்ளது.
அனைத்து
துறைகளிலும் அன்னிய நேரடி முதலீட்டை நூறு சதவிகிதத்திற்கு கொண்டு வருவதற்கான ஒத்திகை
பார்ப்பதாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இன்சூரன்ஸ் இடைத்தரகு நிறுவனங்களில் நூறு சதவிகித
அன்னிய மூலதனத்திற்கு இந்த பட்ஜெட்டில் அனுமதி அளித்துள்ளது நாளை இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும்
நூறு சதவிகித அன்னிய மூலதனத்திற்கு அனுமதி அளிக்கும் முடிவின் வெள்ளோட்டமாகவே பார்க்க
வேண்டும்.
ஆயுள்
இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி அகற்றப் பட வேண்டும், ஆயுள்
இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு பிரத்யேக வருமான வரி விலக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை
கண்டுகொள்ளப்படவே இல்லை. அதே நேரம் பாலிசிகள் முதிர்ச்சியுறுகையில் பிடித்தம் செய்யப்படும்
வரி 1 % லிருந்து 5 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேசத்தின் கட்டமைப்புத் தேவைகளுக்கான
நிதியை வாரி வழங்கும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை இம்முடிவுகள் பாதிக்கும் என்று யோசித்துக்
கூட பார்க்க முடியாதவராக நிதியமைச்சர் உள்ளது துயரமே.
பொதுத்துறை
நிறுவனங்களின் பங்குகளை விற்பது மூலமாக ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் திரட்டுவதாக
பட்ஜெட் இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து தனது
கட்டுப்பாட்டை, மேலாண்மையை, லாபப்பங்கை, வேலை வாய்ப்பை உருவாக்கும் பொறுப்பை, சமூக
நீதியை, அரசு விலக்கிக் கொள்ளப் போகிறது என்பது அதன் அர்த்தம். பரம்பரைச் சொத்துக்களை
விற்றுச் சாப்பிடும் ஊதாரிகளாக ஆட்சியாளர்கள் தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெட்ரோல்,
டீசல் விலை உயர்வு மத்திய பட்ஜெட் மக்களுக்கு அளித்துள்ள இன்னொரு பரிசு. ஒட்டு மொத்த
உற்பத்தி உயர்ந்துள்ளது என்று எவ்வாறு புள்ளி விபர மோசடிகள் செய்து வருகின்றனரோ அது
போல சில மாயாஜால வேலைகள் மூலமாக இந்தியா ஐந்து ட்ரில்லியன் பொருளாதார நாடாகி விட்டது
என்று கதை விடலாம். ஆனால் சாதாரண, ஏழை எளிய மக்களுக்கு பலனிக்கவில்லையென்றால் பத்து
ட்ரில்லியன் பொருளாதார நாடாக மாறினாலும் அது நம்மைப் பொறுத்தவரை வெற்று ஜம்பமே. ஆனால்
அப்படிப்பட்ட வெற்று ஜம்பங்களில்தான் அடுத்த ஐந்தாண்டுகளும் செல்லப் போகிறது என்பதையே
மத்திய பட்ஜெட் உணர்த்துகிறது.
புற
நூனூற்றுக் கவிதையும் பெட்டிக்கு பதிலான சிவப்புத்துணிப் பையும் வழக்கமான பட்ஜெட்டிலிருந்து
மாறு பட்டு இருக்கலாம். முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமான பட்ஜெட் என்ற வழக்கமான அம்சத்திலிருந்து
கொஞ்சமும் மாறவில்லை என்பதுதான் யதார்த்தம். இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு
ஏமாற்றமில்லை. நல்லது செய்யும் என்று வழக்கமாக நம்பியவர்கள் வழக்கம் போல ஏமாந்து நிற்கின்றனர்.
இந்த
பட்ஜெட்டை சுலபமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பாண்டியராஜனின் “கன்னி ராசி” படத்தின்
ஒரு பிரபலமான காட்சியை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
பிரபுவின்
இலையில் சோற்றுக்குள் முட்டைகளை ஒளித்து வைத்து விட்டு கவுண்டமணிக்கு அரை முட்டை மட்டும்
வைப்பார்கள். மாம்பழத் துண்டுகளை பிரபுவின் இலையில் போட்டு விட்டு கவுண்ட மணிக்கு மாங்கொட்டை
மட்டும் வைப்பார் ரேவதி.
பிரபுவின்
இடத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் கவுண்டமணி இடத்தில் வாக்களித்த மக்களையும்
வைத்துப் பாருங்கள். படத்தில் கவுண்டமணிக்கு
மாங்கொட்டையும் அரை முட்டையுமாவது கிடைக்கும். நிஜத்தில் நிர்மலா அம்மையார் சமர்ப்பித்த
பட்ஜெட்டில் அந்த மாங்கொட்டை கூட வாக்களித்த மக்களுக்கு கிடைக்கவில்லை.
Share that movie scene
ReplyDeleteநாளை
Delete