Sunday, July 7, 2019

வேலூர் மெட்ரோவைக் காணோம் மேடம்



"நீங்கள் வசதியாக பயணம் செய்வதற்காக நான் மெட்ரோ ரயில்கள் அமைத்துத் தருவேன். ஆனாலும் நான் என்னுடைய காரில் நான் மட்டும்தான் பயணிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தால் பெட்ரோல் விலை உயர்வையும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும்"

நிர்மலா அம்மையாரின் இந்த பேட்டியை காலையில் ஹிந்து நாளிதழில் படித்தவுடன் காபி கூட குடிக்காமல் வேலூர் நகரம் முழுதும் சுற்றிப் பார்த்தேன், காட்பாடியில் வழக்கமான ரயில்கள் கூட ஓடிக் கொண்டிருந்ததே தவிர மெட்ரோ ரயிலைக் காணவே இல்லை.

ஆகவே முதல் வேலையாக வேலூரில் காணாமல் போன மெட்ரோ ரயிலை உடனடியாக கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா முழுதும் இதுவரை கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய மாநகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்கள்  ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த நகரங்களில் அவற்றில் பயணிக்காமல் ஒத்தை ஆளாக காரில் செல்பவர்களுக்கு மட்டும்தான் பெட்ரோல் விலை உயர்வு என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது போல ஆணவமாக பேசுகிறார் அம்மையார்.

இந்தியா முழுதும் கிராமங்களிலும் நகரங்களிலும்  சாதாரண இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை பல கோடி. அவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்.

அதை அப்படியே மறைத்து விட்டு ஏதோ பெரு நகரங்களில் கார்களில் பயணிப்பவர்களுக்குத்தான் பாதிப்பு, அவர்கள் கூடுதல் விலை கொடுக்கட்டுமே என்ற ரீதியில் திமிராகப் பேசுவதுதான் பாஜக ஆணவம். நிர்மலா அம்மையார் வெளிப்படுத்துவது அந்த ஆணவத்தைத்தான்.


No comments:

Post a Comment