சிவகங்கையில் துவங்கி சிகாகோ வரை வந்துவிட்ட கீழடியே நம் தாய்மடி
சிகாகோ, ஜூலை 7- சிவகங்கையில் துவங்கி சிகாகோ வரையில் வந்திருக்கிற கீழடி எனும் நமது தாய்மடி, பத்தாயிரம் ஆண்டுகள் மனிதன் ஒரே இடத்தில் வாழ்ந்ததற்கான தொடர்ச்சியான தடயங்களையும், அடையாளங்களையும் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது; அதை உலகத் தரம் வாய்ந்த அகழாய்வு அறிஞர்களைக் கொண்டு வெளிக்கொணர வேண்டும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சு.வெங்கடேசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.
வடஅமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து சிகாகோவில் ஜூலை 3 - 7 தேதிகளில் நடத்திய 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், கீழடி நம் தாய்மடி என்ற மையப் பொருளில் நடைபெற்ற மாபெரும் அமர்வினை துவக்கி வைத்து மதுரை மக்களவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவருமான சு.வெங்கடேசன் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதன் முக்கிய சாராம்சம் வருமாறு: கீழடி என்பது தமிழர்களுடைய தொல்லியல் அரசியலின் குறியீட்டுச் சொல் என்று நாம் சொல்லலாம். இப்படி ஒரு தொல்லியல் அரசியல் குறியீட்டுச் சொல்லை உருவாக்கியதற்கு சமகால இந்தியச் சூழல்தான் காரணம். குறிப்பாக வரலாற்றை அகற்றிவிட்டு, வரலாற்றின் இடத்தில் புராணங்களை நிலைநிறுத்துகிற சூழ்நிலை அப்பட்டமாக துவங்கி யிருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் தமிழர்களின் வரலாற்றை தோண்டி எடுத்து இந்திய அறிவுலகின் மையப்புள்ளிக்கு கொண்டுவருவதற்கான மிகப்பெரிய வாய்ப்பினை கீழடி வழங்கியிருக்கிறது. கீழடி அகழாய்வு துவங்கப்பட்டு இது ஐந்தாண்டு. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கீழடி அகழாய்வு என்பது மத்திய அரசாலும், மாநில அரசாலும் வேறு பல நிறுவன அமைப்புகளாலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஒன்றை அடிப்படை யாகச் சொல்ல முடியும். இந்த நான்காண்டுகளாக கீழடி என்பது மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருவதற்கும் அங்கு அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதற்கும், தமிழகத்திலும் உலகம் முழுவதிலும் இருக்கிற தமிழர்கள் இந்த அகழாய்வின் மீது காட்டிய அக்கறையும், அதன் முடிவுகளை தெரிந்துகொள்வதில் இருந்த ஆர்வமும், இந்த அகழாய்வு முடிவுகளின் அடிப்படையில் - முன்பு எழுதப்பட்ட வரலாற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதும், எழுதப்பட்ட வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து எழுப்ப வேண்டிய வினாக்களை தொடர்ந்து எழுப்பியதும்தான் காரணம். அந்த அகழாய்வு தொடர்பாக வினாக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால்தான் அதிலிருந்து விட்டு விலகிச் செல்ல முடியாத ஒரு புறச்சூழல் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்பந்தமாக எழுந்திருக்கிறது.
இந்த புறச்சூழலை உருவாக்கியதற்கு நமது மக்கள்தான் பிரதான காரணம். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி சொல்கிறேன். குறிப்பாக இன்றைக்கு கீழடி என்பது சிவகங்கையில் துவங்கி சிகாகோவிற்கு வந்து சேர்ந்துள்ளது. முதல் மூன்று ஆண்டுகள் மத்திய அரசும், அடுத்த இரண்டு ஆண்டுகள் மாநில அரசும் அகழாய்வில் ஈடுபடு கின்றன. ஆனால் இதுவரை இந்த அகழாய்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ. 2 கோடிக்கும் குறைவானதுதான். ஒரு நான்குவழிச்சாலையில் நான்கு கிலோ மீட்டர் அமைப்பதற்கு ஒதுக்கப்படுகிற நிதியைவிட குறை வான நிதி தான் இது. வெறும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அந்த ஆய்வே இவ்வளவு பெரிய கேள்வியை எழுப்புமானால், இவ்வளவு பெரிய பதற்றத்தை மத்திய ஆட்சியாளர்களுக்கு உருவாக்குமானால் அங்கே புதைந்து கிடக்கும் உண்மை எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை நாம் உணர வேண்டும்.
குறிப்பாக, கீழடி என்று மட்டுமே துவங்கிய இந்த ஆராய்ச்சி கீழடி யோடு நிற்காமல், அதைச் சுற்றியுள்ள கொந்தகை, மண லூர், அல்லிநகரம், அகரம் ஆகிய கிராமங்களுக்கும் விரிகிறது. இந்த ஐந்து கிராமங்களும் சங்ககால வாழ்விட பகுதிகள் நிறைந்து கிடந்த இடங்களாக இன்றைக்கு கண்டறியப்பட்டுள்ளன. எனவே இவற்றை சங்ககால வாழ்விடப் பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஏனென்றால் அவ்வளவு தடயங்கள், அடையாளங்கள் இந்தப் பகுதியிலேயே புதைந்திருக்கின்றன. தொல்லியல் என்பது இன்றைக்கு ஒரு வலிமை மிக்க அரசியல் சொல்லாடாலாக பரிணமித்திருக்கிறது.
இந்தச் சூழலில்தான் தமிழகத்திலும், கீழடி பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. பிரம்மாண்டமான ஒரு அகழாய்வின் மிகச்சிறிய துவக்க நிலையில்தான் இப்போது அங்கே நின்றுகொண்டிருக்கிறோம். இந்த துவக்க நிலை, வருகிற காலங்களில் மிகப்பெரிய வியப்பை, மிகப்பெரிய உண்மையை எடுத்துச் சொல்லும். குறிப்பாக புதிய கற்காலம் துவங்கிய வரலாற்றுக் காலம் வரை - ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டு வரை, தொடர்ச்சியாக ஆதாரங்களும் தடயங்களும் கிடைக்கிற இடமாக கீழடி இருக்கிறது. சுமார் 10 ஆயிரம் ஆண்டுகாலம் மனிதன் ஒரே இடத்தில் வாழ்ந்திருக் கிறான் என்பதற்கு வரிசைப்படி தடயங்களும், ஆதாரங் களும் கிடைக்கிற நிலமாக கீழடி இருக்கிறது. இது மிக மிக அபூர்வமானது. எனவே கீழடியை பாதுகாப்பதும் கீழடி அகழாய்வை தொடர்ந்து நடத்துவதும் கீழடி அகழாய் வில் உலகத்தரமான தொல்லியல் அறிஞர்களை ஈடுபடுத்த வைப்பதும்,
உலக அளவில் நடக்கிற பல அகழாய்வு களில் கீழடி அகழாய்வு முடிவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதும் இன்றைக்கு மிக மிக முக்கியமானவை. சிகாகோவில் நடக்கிற இந்த பெரு விழா, கீழடி நம் தாய்மடி என்று தலைப்பிட்டு நடத்தப்படுவது தமிழுக்கு பெருமை சேர்ப்பதாகும். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.
நன்றி - தீக்கதிர் 08.07.2019
No comments:
Post a Comment