பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் மொழி பெயர்ப்பில் நீதி மறுக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளின் சார்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக்கின் அறிக்கை.
முன்குறிப்பு: பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்காமல் பாதிக்கப்பட்டவர்களையே ஒடுக்குகிறது இந்த பாஜக அரசு. அதனைக் கண்டித்து மல்யுத்த வீராங்கனைகள் வெளியிட்ட அறிக்கையின் 'மொழிபெயர்ப்பு' இது. இதனை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வென்ற சாக்ஷி வெளியிட்டிருக்கிறார்.
"மே 28 ஆம் தேதியன்று என்ன நடந்தது என்பதைப் பார்த்திருப்பீர்கள். காவல்துறை எங்களை நடத்திய விதத்தையும் கொடூரமாகக் கைது செய்ததையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து அமைதியாகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம். எங்கள் போராட்டத்தை ஒடுக்கியதோடு நாங்கள் போராடிய இடத்தையும் நாசமாக்கிவிட்டு, எங்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும்விட்டனர். மறுநாளே மிகக்கடுமையான வழக்குகளையெல்லாம் எங்களுக்கு எதிராகப் பதிவு செய்தார்கள்.
தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளை எதிர்த்து பெண்கள் போராடுவது அவ்வளவு பெரிய குற்றமா என்ன?
காவல்துறையும் இந்த அமைப்புமுறையும் எங்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துகிறார்கள். ஆனால் எங்களுக்குக் கொடுமைகள் இழைத்த குற்றவாளியோ சுதந்திரமாக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மேடையேறி எங்களைக் கேலிசெய்து பேசிக்கொண்டிருக்கிறார். போஸ்கோ சட்டத்தையே திருத்தவேண்டும் என்றெல்லாம் அவர் பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்.
எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியாத அளவிற்கு எங்களுடைய மனது பாதிக்கப்பட்டிருக்கிறது. மல்யுத்த வீராங்கனைகளாகிய எங்களுக்கு இந்த தேசத்தில் எந்த உரிமையுமே இல்லையா? ஒலிம்பிக்கிலும் உலக சாம்பியம் போட்டிகளிலும் நாங்கள் பதக்கங்கள் பெற்ற தருணங்களை எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.
நாங்கள் ஏன் இப்போது வாழ்கிறோம் என்று யோசிக்கிற நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இந்தளவுக்கு மோசமான நிலைக்கு இந்த அமைப்புமுறை எங்களை இழுத்துக்கொண்டுவந்து போட்டிருக்கிறதே. அதனைப் பார்க்கவா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களைக் குற்றவாளியைப்போல வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். நேற்று முழுவதும் பெரும்பாலான மல்யுத்த வீராங்கனைகள் எங்கெங்கோ மறைந்து ஒளிய வேண்டியிருந்தது. ஆனால் எங்களை இந்த நிலைமைக்குத் தள்ளிய உண்மையான குற்றவாளியோ எங்களைக் கேலிசெய்தும், பாதிக்கப்பட்ட பெண்களின்மீதே குற்றம் சுமத்தியும் நிம்மதியாக வலம்வந்துகொண்டிருக்கிறார். எங்களுடைய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்.
எங்களுடைய கழுத்துகளை அலங்கரித்த இந்த பதக்கங்களுக்கெல்லாம் எந்தப் பொருளும் பலனும் இல்லையென்பதுபோலத்தான் இப்போது எங்களுக்குத் தோன்றுகிறது. எங்களுடைய சுயமரியாதையை அடகுவைத்து இந்த பதக்கங்களையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால் அவற்றை திரும்பக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.
ஆனால் அவற்றை யாரிடம் திரும்பக் கொடுப்பது?
நம்முடைய ஜனாதிபதியிடமா? சக பெண்ணாக இருந்தும், எங்களுடைய போராட்டம் நடக்கிற இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாமல் இருந்த அவரிடம் கொடுப்பது வீண் வேலைதானே.
சரி, அப்படியென்றால் பெண்களை இந்த தேசத்தின் மகள்களென்று அழைக்கும் பிரதமரிடம் பதக்கங்களைத் திருப்பிக் கொடுக்கலாமா?
அதற்கு எங்களுடைய மனசு ஒப்புக்கொள்ளவில்லை. மகள்கள் என்று வார்த்தைகளால் சொன்னாரே தவிர, இத்தனை நாட்களாக நாங்கள் நடத்தும் போராட்டங்களை என்னவென்றுகூட அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவிற்கு எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரையே விருந்தாளியாக அழைத்து அழுக்கு நிறைந்த அந்த மனிதரோடு வெள்ளை ஆடையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார். ‘இந்த அமைப்புமுறையே எங்களுடையதுதான். உன்னால் என்ன செய்யமுடியும்’ என்று எங்களைப் பார்த்து கேலிசெய்வதாகத்தான் இது இருக்கிறது.
ஒளிரும் இந்தியாவாக பிரச்சாரம் சொல்லப்படும் இந்த தேசத்தில் எங்களுக்கான இடம் எங்கே?
இந்தியாவின் மகள்களென்று அழைக்கப்படும் நாங்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லையா?
போலி முழக்கங்களாகவும் அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான வாய்வார்த்தைகளாகவும் மட்டுமேதான் எங்களைப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா?
இந்தப் பதக்கங்களெல்லாம் எங்களுக்கு இனியும் தேவையில்லை. எங்களை முகமூடி போல அணிந்துகொண்டு, வெறுமனே பிரச்சாரக் கருவிகளாக மட்டுமே பயன்படுத்தி, எங்களை முழுவதுமாக சுரண்டிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த சுரண்டலுக்கு எதிராகக் குரல் எழுப்பினாலோ, எங்களை சிறையில் அடைக்கத் தயாராகுகிறீர்கள்.
இந்தப் பதக்கங்களையெல்லாம் கங்கை ஆற்றில் வீசப்போகிறோம். கங்கை ஆறுதான் எங்கள் அன்னை. கங்கையை எந்தளவுக்குப் புனிதமாக நாம் கருதுகிறோமோ, கடினமாக உழைத்துப் பெற்ற எங்கள் பதக்கங்களையும் அதே போலத்தான் கருதுகிறோம். எங்களுக்கு மட்டுமல்லாமல், இந்த பதக்கங்களெல்லாம் ஒட்டுமொத்த தேசத்திற்குமே புனிதமானவைதான். அதனால் குற்றவாளியுடன் கைகோர்த்து நின்று எங்களை முகமூடியாகப் பயன்படுத்தும் இந்த அரசிடம் திருப்பிக் கொடுப்பதற்கு பதிலாக, புனித கங்கை அன்னையிடமே எங்களுடைய பதக்கங்களை ஒப்படைப்பதுதான் சரியென்று நினைக்கிறோம்.
இந்தப் பதக்கங்கள்தான் மல்யுத்த வீராங்கனைகளாகிய எங்களுடைய வாழ்க்கையும் உயிரும். கங்கையில் அவற்றை வீசிவிட்டு, அதன்பின்னர் வாழ்ந்தென்ன பயன்? அதனால் கங்கையில் வீசியபின்னர், இந்த தேசத்திற்காக உயிரைவிட்ட தியாகிகளின் நினைவாக எழுப்பப்பட்டிருக்கும் இந்தியா கேட் அருகே சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் துவங்கப்போகிறோம். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும்போது, இந்தியா கேட்டில் இடம்பெற்றிருக்கும் இந்தியப் போர் வீரர்களைப் போன்ற மனநிலையில்தான் நாங்களும் பங்கெடுத்துப் பதக்கங்களை வென்றோம்.
இந்தியாவின் புனிதமற்ற அமைப்புமுறையும் அரசும் அதன் வேலையை செய்கிறது. அதற்கெதிரான போராட்டத்தை நாங்களும் எங்களுடைய வழியில் செய்கிறோம். இந்தியாவின் மகள்களாகிய எங்களுடைய பக்கமா அல்லது அந்த மகள்களைத் துன்புறுத்தும் இந்த அரசு/அமைப்புமுறையின் பக்கமா - இவர்கள் இருவரில் யார் பக்கம் நிற்கப்போகிறார்கள் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்.
இன்று மாலை 6 மணிக்கு நாங்கள் பெற்ற பதக்கங்களையெல்லாம் ஹரித்துவார் அருகே கங்கை ஆற்றில் வீசப்போகிறோம்.
நாங்கள் என்றைக்கும் இந்த நாட்டிற்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்."
இப்படிக்கு,
நீதி மறுக்கப்பட்ட இந்திய தேசிய மல்யுத்த வீராங்கனைகள்
பின் குறிப்பு - என்னுடையது.
பதக்கங்களை டிமோவின் முகத்தில் வீசலாமே என்று ஒரு கணம் எனக்கு தோன்றியது. அது சாக்கடையில் வீசுவதற்கு சமம் என்பதால் கங்கையை தேர்ந்தெடுத்துள்ளனர் போல.
No comments:
Post a Comment