Wednesday, May 10, 2023

PS 2 – மணியின் செல்வன்

 


ஞாயிறு அன்று காலைக்காட்சியில் பார்த்த படம். பரவாயில்லை. அந்த காலைக்காட்சியிலேயே  சுமார் அறுபது பேர் இருந்திருப்பார்கள். மின் கட்டணத்திற்கான பணம் வசூலாகி இருக்கும்.

குறைந்த பட்சம் எட்டு முறை படித்த நாவல் பொன்னியின் செல்வன். மணிரத்னம் – ஜெயமோகன் கூட்டணி என்பதால் பெரிய எதிர்பார்ப்பு கிடையாது, அதனால் ஏமாற்றம் கிடையாது என்று முதல் பாகம் வெளி வந்த போதே எழுதியிருந்தேன். முதல் பாகம் தந்த அனுபவத்தால்  இரண்டாவது பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பு கிடையாது.

 படத்தில் சிறப்பாக இருந்த சில அம்சங்கள்.

 பாடல்களும் பின்னணி இசையும். சோழர் காலத்தில் இசை எல்லாம் எப்படி இருந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் பலரும் ஒப்பிடுவது அந்த காலத்து வரலாற்று, புராணப்படங்களுக்கு கே.வி.மகாதேவன், மெல்லிசை மன்னர்கள் அளித்த இசைதான். அந்த வகையில் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அற்புதம், “வீரா, தீரா” பாடலை நான்கைந்து முறையாவது யூட்யூபில் பார்த்து கேட்டிருப்பேன்.

 வழக்கமான மணிரத்னத்தின் படங்கள் போல இருட்டிலேயே பாதி படம் நகர்ந்தாலும் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.

 விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஜெயம் ரவி கிஷோர், ஆகியோரின் நடிப்பும் பொருத்தமாக இருந்தது.

 இது படத்தில் உள்ள நல்ல அம்சங்கள்.

 சொதப்பிய விஷயங்களை சொல்ல வேண்டுமல்லவா!

 பொன்னியின் செல்வன் நாவலே வரலாறு கிடையாது எனும் போது நாவலின் விஷயங்களை மாற்றும் அதிகாரம் இயக்குனருக்கு கிடையாதா என்றொரு கேள்வி எழுப்பப்படுகிறது.

 உண்மை, அந்த அதிகாரம் இருக்கிறது என்றே எடுத்துக் கொண்டாலும் நாவலின் மிக அடிப்படையான அம்சங்களை சிதைக்கக் கூடாதல்லவா!

 ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொண்டதாக காண்பிப்பது அந்த பாத்திரத்தின் வீரத்தையே கொச்சைப்படுத்துகிற ஒன்றாகும்.

 நாவலில் பொன்னியின் செல்வனோ, குந்தவையோ ஆதித்த கரிகாலனை ஒரு இடத்தில் கூட சந்திக்க மாட்டார்கள். ஆனால் இங்கே அவசியமே இல்லாமல் ஒரு சந்திப்பு நடக்கிறது. கடம்பூர் மாளிகை சதியையே வந்தியத்தேவன் அறிவது யதேச்சையாக நடக்கும் விஷயமாகும். முதல் பாகத்திலேயே அதை ஆதித்த கரிகாலனே வந்தியத்தேவனிடம் சொல்வது போன்ற சொதப்பல் இது

 மதுராந்தகன், கண்டராதித்தர், செம்பியன்மாதேவிக்கு பிறந்த மகன் அல்ல என்பதற்காகத்தான் அவர் அரசராவதை செம்பியன்மாதேவி கடுமையாக எதிர்ப்பார். உண்மையான மகன் சேந்தன் அமுதனுக்கு கடைசியில் பொன்னியின் செல்வன் மகுடம் சூட்டுவதாக கதை சொல்லும்.

 ஆனால் இங்கேயோ சேந்தன் அமுதன் பாத்திரத்தை டம்மியாக்கி மதுராந்தகனுக்கே மகுடம் சூட்டுகிறார்கள். பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்ற உண்மை தெரிந்து ஆபத்துதவிகளோடு இணைந்து பிற்காலத்தில் அமரபுஜங்க பாண்டியன் என்ற பெயரில் சோழ நாட்டின் மீதே படை எடுத்து வந்த ஒரு பாத்திரத்தை சோழ அரசனாக்குவதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

 இதெல்லாம் காண்பித்தால் நேரமாகாதா என்றொரு கேள்வியும் வந்தது.

 நாவலில் வரவே வராத ராஷ்டிரகூட போர், மதுராந்தகனோடு டீலிங், வானதி போலவே தோற்றமளித்த ராஷ்டிரகூட இளவரசி, பாகுபலி டைப்பில் எடுக்கப்பட்ட கடைசி போர் ஆகியவற்றை தவிர்த்திருந்தால் நாவலுக்கு நியாயம் செய்திருக்கலாம்.

 மணிமேகலை என்ற பாத்திரமே காணவில்லை. அரச குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நான் எந்த விதத்தில் குறைந்தவள் என்று கேள்வி கேட்டு நானும் இளவரசன் ஒருவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முதலில் சொல்லும் பூங்குழலி பிறகு பூக்கட்டும் சேந்தன் அமுதனின் காதலை ஏற்று, அரச குடும்பத்து அரசியல் தேவை இல்லை என்று சொல்லி மணமுடிப்பதாக கல்கி எழுதியிருப்பார். பின்பு அவர் அரசியாவது அவருக்கான நீதி என்றும் எழுதியிருப்பார். ஆனால் படத்திலோ, பூங்குழலியை ஒரு பேராசைக்காரியாகவே காட்டி அந்த பாத்திரத்தின் கம்பீரத்தை அழித்திருப்பார்கள்.

  பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, லால் ஆகியோர் பரிதாபத்துக்கு உரியவர்கள்.

 அப்புறம் வசனம்?

 நாவலில் வந்த வசனங்களை பல இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். மற்றவை ஒன்றும் சுகமில்லை.

 ஆனால் புளிச்ச மாவு ஆஜானின் விஷமம் இருக்கிறது. சோழர்கள் காலத்தில் பாரதம் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. ஆனால் பாரதம் முழுதும் ஆலயங்கள் எழுப்ப வேண்டும், அதன் மூலம் நம் பெருமையை பரப்ப வேண்டும் என்று ஜெயம் ரவியை பேச வைத்து தன் ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தை உள்ளே நுழைத்து விட்டார்.

 மொத்தத்தில் இந்த படம் பொன்னியின் செல்வன் இல்லை, மணியின் செல்வன்.

 பிகு: முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஜெயராம் பேசியது மிகவும் வைரலானது. “மணி, பசிக்குது மணி” என்று பிரபு பசியில் துடித்ததை பிரபுவின் குரலில் பேசி ஜெயராம் கலக்கியிருப்பார். அந்த காட்சியில் பிரபு அரசவையில் உட்கார்ந்திருப்பார். ஒரே ஒரு நொடி மட்டுமே அக்காட்சியில் அவர் திரையில் தோன்றுவார். அந்த ஒரு நொடிக்காக அந்த பெரிய உருவத்தை ஒரு நாள் முழுதும் பட்டினி போட்டதெல்லாம் அடுக்கவே அடுக்காது மணிரத்னம்.

No comments:

Post a Comment