Thursday, May 4, 2023

துரோகிகள் வீழ்த்திய திப்பு

 

முகநூலில் தோழர் ஃபெரோஸ் பாபு அவர்கள் பகிர்ந்து கொண்ட வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்கள் எழுதிய மிக முக்கியமான கட்டுரை. சற்று நீளம்தான். ஆனாலும் பரவாயில்லை, கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு முழுமையாக படித்து விடுங்கள்.

 வாழும் நாளில் வெள்ளையர்களால், துரோகிகளால் தாக்கப்பட்டார் திப்பு சுல்தான். அவர் இறந்து இரு நூற்றாண்டுகள் ஆன பின்பும் அந்த வெள்ளையர்களுக்கு காவடி தாக்கியவர்கள், துரோகிகளின் வாரிசுகள் இப்போதும் அவரை தாக்குகிறார்கள்.

 துரோகிகளின் நிறம் மாறாது.  அவர்கள் இன்றும் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 


தீரன் திப்பு சுல்தானின் கடைசிநாளில்...

(மே 4 திப்பு சுல்தான் நினைவு தினம்)

 

காவிரியாற்றின் இரு கிளைகளில் உண்டான தீவு ஸ்ரீரங்கப்பட்டிணம், காவிரியின் மேல் முடிவில் அமைந்திருக்கிறது. ஹைதர் அலீ காலத்தில் இது மைசூர் ராஜ்யத்தின் தலைநகரமாயிற்று. இதனைக் கைப்பற்றிட வெள்ளையர் சூழ்ச்சி, துரோகம் செய்து இறுதியில் மாவீரன் திப்பு சுல்தானை வீழ்த்தினர்.

 

14.02.1799ல் ஜெனரல் ஹாரிஸ் தலைமையில் 21,000 வீரர்களைக் கொண்ட பெரும்படை வேலூரில் அணிவகுத்து அன்று இரவே அப்படை மைசூர் எல்லையை நோக்கிப் புறப்பட்டது.

 

20.02.1799ல் ஆம்பூர் அருகே ஹைதராபாத்திலிருந்து வெல்லெஸ்லியின் தலைமையின் கீழ் வந்த 16,000 வீரர்களும் சேர்ந்து கொண்டனர்.

 

6420 வீரர்களைக் கொண்ட பம்பாய் இராணுவம் ஜெனரல் ஸ்டூவர்ட் தலைமையில் கண்ணுர் அருகே அணிவகுத்து தயாரானது.

 

கர்னல் ரீட் (Colonel Read) கர்னல் பிரவுன் தலைமையிலான ஆங்கிலேய படைகள் திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து அணிவகுத்து 5.03.1799ல் மைசூர் எல்லைக்குள் நுழைந்தன.

 

11.03.1799 வரை பெரியபட்டிணத்திலே இருந்து  திப்புசுல்தான் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு வந்தார்.

 

மைசூர் படையின் தளபதிகள் ஆங்கிலேயர்களுடன் திருட்டுத் தொடர்பில் இருந்ததால், வெள்ளையரது முன்னேற்றத்தை தடுத்திடவில்லை. (Muhibbul Hasan khan, History of Tippu sulthan, calcutta, 1951)

 

18.03.1799ல் நடந்த போர் பற்றி ஆர்தர் வெல்லெஸ்லி கூறுகின்றார். “முன்னெப்போதும் இல்லாத அளவில் திப்புசுல்தானின் படை மிக அற்புதமாக இருந்தது. திப்புவின் காலாட்படை மிக முன்னேறியிருந்தது. ஆங்கிலேயரின் 33வது படையை திப்புசுல்தானின் படைகள் துவம்சம் செய்தன. திப்பு சுல்தானின் குதிரைப்படை, ஜெனரல் பெயர்ட்டின் ஐரோப்பிய படையை ஓட ஓட விரட்டியடித்தது.

 

வெள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும் திப்புசுல்தான் படைகள் உடனே போரில் இறங்கியிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை திப்புவிற்கு துரோகம் இழைக்கப்பட்டது. இதனால் வெள்ளையர் முன்னேறினர். போரில் தோல்வி என்பது சுல்தான் நம்பி களம் இறக்கிய தளபதிகள் செய்த துரோகத்தால் விளைந்தது ஆகும். பூரணய்யாவும் அலீ சயீத் சாகிபும் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. அவர்கள் அந்த தருணத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்று தங்களது சக்தியைக் காட்டியிருக்க வேண்டும்.

 

கமர்உத்தீன்கான் தனது குதிரைப்படையுடன் ஆங்கிலேயர் மீது போரில் ஈடுபடும்போது தவறு தலாக மைசூர் படை வீரர்கள் மீது தாக்குதல் விழுந்தது. அது அத்தனையையும் சீர்குலைத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்ச்சியில் திப்புசுல்தானின் தோல்வி தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.

(Husain Ali Khan Kirmani, The History of Hyder Naik, London, 1842. The History of the reign of Tippu Sulthan, London, 1864))

 

போர்க்களக் காட்சிகள் வீரம் செறிந்தவை, துரோகம் மிகுந்தவை.

 

3.05.1799

 

ஸ்ரீரங்கப்பட்டணத்து கோட்டைச் சுவற்றில் முதல் உடைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்று இரவு வெள்ளை அதிகாரிகள் அரண்மனை சரிவுகளில் கடந்து சென்று சுவற்றில் ஏற்பட்டிருந்த பிளவையும், கோட்டைத் தாக்குதல் முறையையும் ஆய்வு செய்தனர்.

 

4.05.1799

3,000 ஐரோப்பியர்கள், 2000 சுதேசி வீரர்கள் என ஐயாயிரம் பேர் வெள்ளையர் சார்பில் தாக்குதலைத் தொடுக்க தயாராக இருந்தனர். குறிப்பிட்ட நேரம் வந்தது. துரோகம் வெளிப்பட்டது. மீர் சாதிக் கோட்டையின் பிளவுப் பகுதியில் காவலுக்கு இருந்த தனது (திப்பு சுல்தானின்) படை வீரர்களை சம்பளம் போடப்படுகிறது என்று சாக்குச் சொல்லி அங்கிருந்து அனுப்பிவிட்டான்.

 

ஸ்ரீரங்கப்பட்டிணக் கோட்டையின் வடக்குப்பகுதியில் இரண்டு மதிற் சுவர்கள் இருந்தன. அதேபோல கிழக்கு மேற்குப்பகுதிக்கு எதிரிகளால் நெருங்க முடியாதபடி இரண்டு பெரிய நீண்ட ஆழமான அகழிகள் சுவர்களின் இரு மருங்குகளிலும் இருந்தது. தென் மேற்குப்பகுதியில் ஒரு பெரிய உயர்ந்த சுற்று வட்டமான சுவர் இருந்தது. கோட்டையின் உட்பகுதியிலும் தெற்கு சுற்றுச் சுவர்களின் உச்சியில் அதாவது மேல் தளங்களிலும் மறைந்திருந்து தாக்குவதற்குரிய முறையில் அமைந்து இருந்தது.

 

கோட்டைச் சுவர் 30 முதல் 35 அடி வரை உறுதியாகவும், கனமாகவும் இருந்தது. நீண்ட சதுரமான பாறைகளே உபயோகிக்கப்பட்டிருந்தன. பாறைகளை ஒன்று சேர்க்க பக்கவாட்டுகளில் கிளிஞ்சல்  சுண்ணாம்பும் காறையும் கொண்டு பூசப்பட்டிருந்தது

 

கோட்டைக்கு நான்கு வாயில்கள் நான்கு திசையிலும் இருந்தன

 

இந்தக் கோட்டையில் ஒரு சுவரில்தான் விரிசல் ஏற்படுத்தினர். பூர்ணய்யா, மீர் சாதிக், குலாம் உத்தீன் கான் ஆகிய மூவரும் வெள்ளையருடன் சேர்ந்து துரோகம் செய்தனர்.

 

மீர் சாதிக், திப்புவின் படைத்தளபதியில் ஒருவரான நாதிம் என்பவனை அழைத்து கோட்டைக் காவல் பட்டாளத்திற்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படுவதால், சம்பளம் பெற்றுப் போகும்படி அறிவிப்பு செய்தான். உள்கோட்டை காவல் வீரர்கள் நாதிம் கூற்றுப்படி நகருக்குள் சம்பளத்திற்காக காத்துக் கிடக்கும் வேளையில் கும்பினிப் படைகள் கோட்டைக்குள் நுழைய ஆரம்பித்தன.

(Mark Wilks, Historical sketches of the south of india in an attempt to trace the history of Mysore, Volume II, First Edition, 1810).

 

தீரன் திப்பு சுல்தானின் வீரமிக்க விசுவாசம் நிறைந்த தளபதி சயீத் கஃபார் பறங்கியரின் பீரங்கித் தாக்குதலுக்குப் பலியானார். சயீத் கஃபார் வீரமரணம் அடைந்ததும் கோட்டைக்குள் இருந்த துரோகிகள் எதிரிகளுக்கு சமிக்கை காட்டினர்.

 

கோட்டைக்குள் இருந்து வெள்ளை நிறக் கைக்குட்டையை அசைத்து அகழிக்குள் தயாராய்க் காத்து நின்ற கும்பினிப் படைகளுக்கு சமிக்கை செய்யப்பட்டது.

 

(பிரெஞ்சுக்காரர்களும் திப்பு சுல்தானுக்கு துரோகம் செய்தனர். 1798 ஏப்ரல் மாதத்தில் திப்பு சுல்தான் பிரெஞ்சுப் படையினர் 40,000 பேர் தனக்கு உதவிக்கு தேவையென்று கேட்டிருந்தார். ஆனால், பிரெஞ்சுப்படையினர் வெறும் நூறு மட்டுமே திப்புசுல்தானுக்கு உதவிக்கு அனுப்பப்பட்டனர்.

 

திப்புசுல்தான் ரிப்பார்ட் (Ripard) என்ற பிரெஞ்சுத் தளபதியின் உதவியாளரிடம் கப்பல் வாங்கக் கொடுத்த பணத்துடன் அவன் காணாமல் போனதும் துரோகம்தான்.) 

 

திப்பு சுல்தானிடம் பணிபுரிந்த பிரெஞ்சு தேசத்து டியூபெக்கிடம் 4.05.1799 மதியம் 1 மணியளவில் மீர்சாதிக் சமிக்கை செய்தான்.

 

அதன்பின் கும்பினிப்படை தாக்குதலை தொடுத்தது. அன்று மதியம் 1.30 மணியளவில் மீர்சாதிக் வெள்ளைத் துருப்புகளுக்கு சமிக்கை செய்தான்.

 

ஹைதராபாத் நிஜாமுக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே என்றுமே நேச உறவு இருந்ததில்லை. மராட்டியப் படைகள் ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கைக்குப் பின் திரும்பிச் சென்றபோது எப்படி கொள்ளையிட்டு சென்றனவோ அவ்வாறே நிஜாம் படைகளும் அப்போது எதிரில் அகப்பட்ட பொருளைச் சூறையாடியதுடன் பயிர்களையும் அழித்து நாசம் செய்தன.

 

கர்னூல் ஜில்லா முழுவதையும் நிஜாம் வைத்துக் கொள்ள முயன்றதை திப்பு சுல்தான் ஏற்கவில்லை. இருவருக்கும் இடையே கசப்பு நிலையே இருந்தது. எனவே, நிஜாமும் திப்பு சுல்தானுக்கு எதிராகவே துரோகம் செய்தான்.

 

3.05.1799ல் ஸ்ரீரங்கப்பட்டிணத்து கோட்டைச் சுவரில் வடமேற்கு மூலையில் சுவர் மூச்சுவிட்டு நின்று கொண்டிருந்ததைப் பார்த்த திப்பு சுல்தான் அவைகளைப் பலப்படுத்திட உத்தரவிட்டார். ஆளுநர் மீர் சாதிக் ஒப்புக்கு சில பூச்சுகளை செய்து தனது துரோகத்தை வெளிப்படுத்தினான். ஆங்கிலேயர் குறி பார்த்து பீரங்கி கொண்டு தாக்கவும் சுவரில் பெரிய பாதை விழுந்தது

 

4.5.1799 அன்று திப்பு சுல்தான் சத்திரத்திற்கு வந்தார். உணவை கொண்டு வர சொன்னார். சாப்பிடத் தொடங்க ஆரம்பித்தபோது சையத் கமரின் மரணச் செய்தியும் வந்தது. எழுந்து சென்ற திப்புசுல்தான் தன் எதிரே அரசாங்க ஊழியர்கள் கண்ணில் படாததால் தனது மெய்க்காப்பாளர் ராஜாக்கான் மற்றும் வேலைக்காரர்கள் இருபது பேருடன் சுவர் இடிந்த திசைக்கு ஓடினார். திப்பு அங்கு வருவதற்கு முன்பே வெள்ளையர் அப்பகுதியில் அவர்களது கொடியினை ஏற்றி இருந்தனர். பாதுகாப்பு அரண்களைக் கைப்பற்றவும் முன்னேறினர்.

 

கடும் போர் திப்பு சுல்தான் தரை இறங்கி சாதாரண போர் வீரனைப் போல போர்க்களத்தில் நின்று தனது வீர வாளைச் சுழற்றினார். திப்புவின் துருப்புகள் சிதறியிருந்தன. தனது குதிரையில் ஏறி தண்ணீர் வழிந்தோடிய மதகு அருகில் இருக்கும் சிறு வழியை நோக்கிச் சென்றார்.

 

திப்பு சுல்தான் தப்பிச் செல்ல நினைத்திருந்தால் அது அவருக்கு எளிதான ஒன்றாகவே இருந்திருக்கும். திப்பு சுல்தானுக்கு மிக அருகில் மதகு இருந்தது.

 

கோட்டையில் இடிந்த சுவர்ப் பக்கம் 600 அடி தூரத்தில் உயரமான சுவர் ஒன்று இருந்தது.

 

அந்தச் சுவரில் ஒரு சிறு கதவு. அதன் வழியாகத்தான் வீரர்களுடன் குதிரையை செலுத்திக் கொண்டு வந்தார் திப்பு சுல்தான்.

 

மீர் சாதிக் தந்திரமாக கோட்டைக் கதவின் உட்புறமாக நின்று கொண்டதோடு நில்லாமல் திப்பு சுல்தானும் அவருடன் வந்தவர்களும் போர்க்களம் சென்றபோது கதவைப் பலமாக மூடி தாள் போட்டு விட்டவன். மீர்சாதிக் உடனிருந்த மீர் நாயிம் தளத்தின் மீது ஏறி வேறு யாரும் கதவைத் திறந்து விடாதபடி இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டான்.

 

கதவு மூடப்பட்டதை அறியாத தீரன் திப்பு களத்தில் எதிரில் வந்த ஆங்கிலேயர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்.

 

திப்புவின் காலில் காயம்பட்டது. குதிரையுடன் கோட்டைக்குள் செல்லலாமே என்றால் அந்தப் பக்கத்து கோட்டைக் கதவு மூடிக் கிடந்தது. மீர் நாயிம் குள்ள நரி போல மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். கதவைத் திறக்கவில்லை

 

இப்போது தீரன் திப்புவிடம் அவரது மெய்க்காப்பாளர் ராஜாகான், “மன்னரே, தாங்கள் இன்னார் என்று தெரிவித்தால் உடனே கதவைத் திறப்பார்கள்என்று ஆலோசனை சொன்னான். திப்பு சுல்தான் அதற்கு உடன்படவில்லை.

 

வாசல் அருகே வந்த திப்பு சுல்தான் இரண்டாவதாகவும் காயம்பட்டார். வெள்ளையர் படை துப்பாக்கியால் சுட்டும் தீவைத்து அழித்துக் கொண்டே வந்தது. திப்புவின் மீது மூன்றாவது காயம் ஏற்பட்டது. அவரது நெஞ்சின் இடதுபுறம் குண்டுகள் துளைத்தன. உடனிருந்தவர்கள் திப்புவை தூக்கிச் செல்ல முயன்றனர். முடியவில்லை

 

திப்புவின் குதிரையும் கொல்லப்பட்டது. எங்கும் மரணம் அடைந்தவர்களின் சடலங்கள், கூக்குரல்கள். கீழே விழுந்து கிடந்த திப்பு சுல்தானின் இடுப்பில் ஒரு அழகிய விலையுயர்ந்த தங்கப்பட்டை. அதில் உடைவாள் சொருகப்பட்டிருந்தது. மினு மினுக்கும் தங்க கச்சையைக் கண்டதும் கும்பினி சிப்பாய் ஒருவன் திப்புவின் இடுப்பில் இருந்து எடுக்க எத்தனித்தான்.

 

இடது மார்பில் ஒரு குண்டும் மற்றொரு குண்டு நெற்றிப் பொட்டிலும் மூன்றாவது குண்டு வலது காதுக்கு மேலாகப்பாய்ந்து தாடை வரை சென்று தைத்து விழுந்து கிடந்த நிலையிலும் தசை இடுப்புக் கச்சையை எடுக்க குனிந்த ஆங்கிலேய சிப்பாயை தன்னந்தனியாக, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தன் வீர வாளுக்கு இரையாக்கியவர் தீரன் திப்பு. அப்போது வீரனின் துப்பாக்கி திப்பு மீது குண்டுகளைப் பொழிந்தது. இப்போதும் திப்பு இன்னொரு பிரிட்டீஷ் வீரனை தாக்கிச் சாய்த்தார்

(A. Allan, An account ot the campaign in mysore (1799), calcutta, 1912).

 

ஆங்கிலேயப் படைகள் அரண்மனைக்குள் புகுந்தன. சல்லடை போட்டுத் தேடின. திப்பு சுல்தானின் உடலைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. போரின் போது காயம்பட்ட திப்பு சுல்தான் கோட்டையின் வடக்கு வாசல் அருகே வீழ்ந்து கிடப்பதை அங்கிருந்து வந்த படைத்தலைவர் சொன்னான்

 

மேஜர் பெயர்டு மற்றும் சில சதிகாரர்கள் திப்பு வீழ்ந்து கிடந்த இடத்திற்கு விரைந்தனர். திப்புவின் பல்லக்கு கண்டுபிடிக்கப்பட்டது. மெய்க்காப்பாளர் ராஜாகான் மரணத் தருவாயில் போராடிக் கொண்டிருந்தார்.

 

மேஜர் பெயர்டுக்கு, ராஜாகான் திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரத்தழும்புகளுடன் வீழ்ந்து கிடந்த இடத்தை அடையாளம் காட்டினார்

 

சிறந்த வெள்ளை நிறத்தில் ஆன மேற்சட்டை, பூ வண்ணம் கொண்ட தொள தொளவென்ற கால் சட்டை, இடையில் பட்டினாலும் பருத்தியினாலும் ஆன துணியைக் கட்டியிருந்தார் திப்பு. இடுப்பில் பச்சை நிற பெல்ட் அதில் சிவப்பு நிற பை. காயம்பட்டு வீழ்ந்ததால் தலைப்பாகை தலையில் இல்லை. தோளில் ஆபரணம் போன்ற பட்டை அணிந்திருந்தார். கம்பீரமான தோற்றத்தில் அசாதாரணமான வீரராகத் திகழ்ந்தார்.

(செ. திவான், வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள், பக்கம் 104)

 

கண் கண்ட சாட்சியான மேஜர் ஆலன், இப்போரில் தான் கண்ட காட்சியை தனது நூலில் எழுதினார்.

 

வாசல் கதவின் வழியாக திப்பு சுல்தானின் உடல் கொண்டு வரப்பட்டபோது அவரது கண்கள் திறந்திருந்தன. அவரது உடல் இளஞ் சூடாக இருந்தது. அப்போது நானும் திரு. வெல்லெஸ்லியும் திப்பு உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியாமல் இருந்தோம்

 

அவரது நாடித் துடிப்பையும் இதயத் துடிப்பையும் அறிந்த பின்புதான் இந்த சந்தேகம் எங்களை விட்டு அகன்றது. அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்டோம்

 

4.5.1799 இரவு ஸ்ரீரங்கப்பட்டிண நகரில் அத்தனை வீடுகளும் ஆங்கிலேயத் துருப்புகளால் கொள்ளையடிக்கப்பட்டன.

 

அந்த இரவில் எல்லாமே நடந்தது என்கிறான் ஆர்தர் வெல்லெஸ்ஸி. முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள், வீடுகள் சூறையாடப்பட்டு கொள்ளையிடப்பட்டன.பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாயினர். சயித் சாகிப், கமர் உத்தீன்கான் குடும்பப் பெண்கள் மிகவும் அவலத்திற்கு ஆளாயினர்

 

கும்பினிப் படைகளிடம் அளவுக்கு அதிகமான கொள்ளைப் பொருட்கள் இருந்தன. தங்கம், வெள்ளி கட்டிக் கட்டியாக அவர்களிடம் இருந்தது. ஒரு நகைச் சிமிழ் மட்டும் 4,50,000 மதிப்புள்ளது. (அக்கால மதிப்புப்படி) திப்பு புஜத்தில் சுற்றி அணியும் வைரங்கள் பூட்டிய காப்பு ஒன்றை சிப்பாய் ஒருவன் 1500 பவுண்டுகளுக்கு விற்றான். அதை வாங்கிய கும்பினி மருத்துவர் அதனை 2000 பவுண்டுகளுக்கு விற்றவர்.

 

6.05.1799 ஸ்ரீரங்கப்பட்டிணம் வெல்லெஸ்லியின் பொறுப்பிற்கு அதிகாரப் பூர்வமாக வரும் வரை அங்கு கொள்ளைகளும் கொலைகளும் தொடர்ந்தன.

 

கொள்ளையோ கொள்ளை திப்பு சுல்தானிடமிருந்தும் ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்தும் ஆங்கிலேயர் அன்று அடித்த கொள்ளை மூன்று கோடி. (அப்போதைய மதிப்பு) ஜெனரல் ஹாரிசிற்கு 21,43,530 ரூபாய் கிடைத்தது, மீர் ஆலத்திற்கு ஒரு லட்சம் வராகன் கிடைத்தது

 

4.05.1799 அன்று இரவெல்லாம் கொள்ளை, கொலை, குலைநடுக்கம், குழப்பம் நீடித்தது. கோரம் நிறைந்தது. அன்றிரவு நடந்ததுபோல் என்றுமே எங்குமே கொடுமை நடந்தது கிடையாது என்று வெல்லெஸ்லியே ஒப்புக் கொள்கிறார். (தீரன் திப்பு சுல்தான், பக்கம் 247)

 

மே திங்களின் 4ம் நாள் பகலும் இரவும் மட்டும் இறந்துவிட்ட திப்புவின் வீரர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்திற்கும் மேலிருக்கும். இறந்து கிடந்த உடல்களில் பெண்களின் உடல்களும், பச்சிளம் குழந்தைகளின் உடல்களும் பல ஆயிரம் இருந்தன. (சுஜாவுதீன் சர்க்கார், திப்புவின் அரசியல், பக்கம் 262)

 

1799 மே 4 இந்திய வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாள். ஊரெங்கிலும் 12,000 மனித உடல்கள் மண்டிக் கிடைந்தன. அவற்றை அடக்கம் செய்வதே பெரும் பிரயத்திமையாயிற்று. (மாவீரன் திப்பு சுல்தான், ஜி. ஆளவந்தார், பக்கம் 200)

 

05.05.1799 திப்பு சுல்தானின் இறுதி நிகழ்வு முழு இராணுவ மரியாதையுடன் நடந்தது. சந்தூக்கை அந்தரங்கச் சேவகர்கள் நால்வர் தூக்கிச் செல்ல, ஐரோப்பிய படைகள் அணிவகுத்துச் செல்ல ஊர்வலம் நடந்தது

 

திப்பு சுல்தானின் இரண்டாவது மகன் அப்துல் காலிக் குதிரை மீது ஏறி பின்னால் சென்றான். தெருவெல்லாம் மக்கள் வெள்ளம்

 

கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கஞ்சத்தில் உள்ள கும்பாள் என்ற லால்பாக்கிற்கு தீரனின் உடல் கொண்டு வரப்பட்டது

 

வழியில் ஏழை எளியவர்களுக்கு 5,000 ரூபாய் தானமாக வழங்கப்பட்டது.

 

மண் அழுதது, வான் அழுதது, மழை ஓவொன்று கொட்டியது. இடி, மின்னல் பலமாக ஒலித்தது, ஒளித்தது

 

மின்னலின் கோரம் காவிரியின் வடகரையில் இருந்த பிரிட்டீஷாரின் பம்பாய் சேனையின் பாசறை மீது பாய்ந்தது. கூடாரங்கள் எரிந்தன. லெப்டினென்ட் பார்க்ளே, லெப்டினன்ட் கிராண்ட்  என்ற இரண்டு ஆங்கிலேய அதிகாரிகள் பலியாயினர்.

 

மற்றும் சிலரும் முகாமில் இடி மின்னல் தாக்குதலால் இறந்து போயினர் என்று வில்க்ஸ் தனது நூலில் பக்கம் 751ல் தெரிவித்துள்ளார்

 

தீரன் திப்பு சுல்தானின் உடல் அடக்கம் ஆகும் வேளையிலும் பல ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்

 

நாட்டின் விடுதலைக்காக திப்பு தன் உயிரைத் தியாகம் செய்தார். பேராசை கொண்ட பிரித்தானியருக்கு எதிராகப் போரிட்டார். திப்பு உயிர் வீழ்ந்தபோதுஇனி இந்தியா எமதேஎன்று வெள்ளையர்கள் எக்காளமிட்டனர்.

 

மைசூர் போரில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் பிரிட்டீஷாரால் பாராட்டப்பட்டனர். பிரிட்டீஷ் பாராளுமன்றம் வெல்லெஸ்லிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

 

திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதி நான்கு வகையாக பிரிக்கப்பட்டது. மைசூர் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளை மைசூர் அரசாக விட்டுவிட்டு, ஸ்ரீரங்கப்பட்டிணம் உள்ளிட்ட மீதிப்பகுதியை பிரிட்டீஷார் தாங்களே வைத்துக் கொண்டனர்

 

குர்ரம், கொண்டா, கூட்டி, சித்தன துர்க்கம் முதல் கோலார் வரை உள்ள பகுதிகள் நிஜாமின் பங்காகச் சென்றது. குர்ரம் குண்டா கமருதீன் கானுக்கு கொடுக்கப்பட்டது.

 

இவன் கும்பினிப் படையை பின்தொடர்ந்து சென்று அவர்களுக்கு வரும் தபால் தொடர்புகளைத் துண்டிக்கவும், பண்டக உதவி வருவதை தடுத்தி நிறுத்திடவும் வேண்டியவன். தீரன் திப்புவின் குதிரைப்படையின் பெரும் பகுதி இவன் பொறுப்பில்தான் இருந்தது. இந்த துரோகியும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பறங்கியருக்கு பக்கபலமாக இருந்து படுபாதகம் புரிந்தான் அந்தத் துரோகி. மைசூரின் புதிய அரசின் திவானாக பூர்ணய்யா நியமிக்கப்பட்டார்

 

துரோகிகள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை

 

இரு நூறு ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச் சிறந்ததுஎன்று சூளுரைத்த பரிசுத்தப் பெருவீரன் தியாகச் சுடர் திப்பு சுல்தான்.

 

வணிகக் கொடிப்பிடித்து வஞ்சக வலை விரித்து உளமார்ந்த திருநாட்டை வளைத்துக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு வந்தான். சிம்மாசனத்தில் அமர வேண்டுமெனச் சபதமெடுத்து மண்ணின் மானம் காத்து, தன் மானம் காக்க இறுதி மூச்சு உள்ளவரை போராடிய இந்தியாவின் பெரு வீரன் இமலாயப் புகழ் திப்பு சுல்தானின் இறுதி நாளைக் கொஞ்சம் சொன்னேன். இதயத்தில் கொஞ்சம் நீங்களும் நினைத்துப் போற்றுங்களேன்.

 

வரலாற்று ஆய்வாளர் செ. திவான்

புதிய விடியல், மே 1-15, 2023

No comments:

Post a Comment