Saturday, July 25, 2020

அருங்காட்சியகமா? மசூதியா? தேவாலயமா?


 - அ.அன்வர் உசேன்



துருக்கியில் உள்ள புகழ் பெற்ற ஹேகியா சோஃபியா எனும் அருங்காட்சியகத்தை மசூதியாக மாற்றி அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் சட்டம் பிறப்பித்துள்ளார். இது உலகம் எங்கும் கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த அருங்காட்சியகம் யுனெஸ்கோவின் கீழ் உள்ள வரலாற்றுச் சின்னம்! ஆனால் யுனெஸ்கோவை எர்டோகன் கலந்தாலோசிக்கவில்லை. உலகம் எங்கும் உள்ள கிறித்துவ அமைப்புகள் அதிருப்தியும் வேதனையும் தெரிவித்துள்ளன. பல தேசங்களும் கண்டித்துள்ளன. போப் ஆண்டவர் வேதனையை வெளியிட்டுள்ளார். துருக்கி யில் உள்ளும் வெளியேயும் உள்ள மதச்சார்பின்மை ஆதரவாளர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனினும் இதைப்பற்றியெல்லாம் எர்டோகன் அல்லது துருக்கி இஸ்லாமியவாதிகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஜூலை 15 முதல் ஹேகியா சோஃபியா மசூதியாக செயல் படும் என அறிவிக்கப்பட்டது.
ஏன் இவ்வளவு விமர்சனங்கள்? ஏனெனில் ஹேகியா சோஃபியா எனும் அற்புதமான கட்டிடம் ஒரு சிக்கலான வரலாற்றையும் கொண்டுள்ளது. 900 ஆண்டுகள் தேவா லயமாகவும் 482 ஆண்டுகள் மசூதியாகவும் சுமார் 85 ஆண்டுகள் அருங்காட்சியகமாகவும் இருந்து வந்துள் ளது. உலகின் இரண்டு மிகப்பெரிய மதங்களின் ஒற்று மைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. இப்பொழுது மசூதி யாக மாற்றப்படுவதன் மூலம் அந்த சிறப்பை ஹேகியா சோஃபியா இழப்பது மட்டுமல்ல; பல முரண்பாடுகளுக்கும் காரணமாக அமைந்துவிடுமோ எனும் கவலை எழுந்துள்ளது.

ஹேகியா சோஃபியா தேவாலயத்தின் வரலாறு
புனித அறிவு என பொருள்படும் ஹேகியா சோஃபியா தேவாலயம், பாகன் எனப்படும் ரோமாபுரி சமயத்தை சார்ந்த ஒரு வழிபாட்டுத் தலம் இருந்த இடத்தில்  கி.பி.325ஆம் ஆண்டு பைசனைட் சாம்ராஜ்யத்தின் முதல் கான்ஸ்டன் டைன் மன்னரால் கட்டப்பட்டது. பின்னர் இரண்டு முறை கலகக்காரர்களால் அழிக்கப்பட்ட இந்த தேவாலயம் 532ஆம் ஆண்டு ஜஸ்டினியன் எனும் மன்னரால் பிரம் மாண்டமாக உருவாக்கப்பட்டது. 10,000 ஊழியர்களால் 5 ஆண்டுகள் கட்டப்பட்ட இந்த அற்புத தேவாலயம் 537 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. அப்பொழுது உள்ளே நுழைந்த ஜஸ்டினியன்சாலமன் உன்னை வென்று விட்டேன்என கூறினராம்! ஏனெனில் அதுவரை பெரிய வழிபாட்டுத்தலமாக இருந்தது சாலமன் ஜெருசேலத்தில் கட்டியதுதான்! அதனை மிஞ்சியது ஹேகியா சோஃபியா
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றி பரவியது. ஜெருசேலம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. ஜெரு சேலம் கிறித்துவர்களுக்கு புனிதமான இடம் என்பதால் அதனை மீட்க அப்போதைய போப் ஆண்டவர் மிகப்பெரிய படையை திரட்டினார். இலட்சக்கணக்கான வீரர்களை கொண்ட இந்த படை ரோமிலிருந்து அரேபியாவுக்கு புறப் பட்டது. போரில் ஒரு புறம் இஸ்லாமியர்களும் யூதர்களும்; மறுபுறம் கிறித்துவர்கள். இந்த போர்களே சிலுவைப் போர்கள் என அழைக்கப்பட்டன. குறைந்தபட்சம் அதிகா ரப்பூர்வமாக 4 முதல் 5 சிலுவைப் போர்கள் பல காலகட் டங்களில் நடைபெற்றன. ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. மதங்கள் மனித குலத்தை ஒற்றுமைப்படுத்து வதற்குப் பதிலாக எதிரிகளாக உருவாக்கிய உதாரணங் கள்தான் அதிகம் என குறிப்பிடும் சிங்காரவேலர், சிலுவைப் போர்களை சுட்டிக்காட்டிஇயற்கைச் சீற்றங்களைவிட, சாம்ராஜ்யங்களுக்கான போர்களைவிட மத அடிப்படை யிலான போர்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்என குறிப்பிடுகிறார்.
வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்
சிலுவைப்போர்களின் பொழுது ஜெருசேலம் 45 முறை தாக்குதலுக்கு உள்ளானது. இரண்டு முறை முற்றிலும் அழிந்து போனது. ஏராளமான வழிபாட்டுத்தலங்கள் தாக்கு தலுக்கு உள்ளாயின. கிறித்துவர்கள் வென்ற பொழுது மசூதிகளும் யூத வழிபாட்டுத்தலங்களும் அழிந்தன. இஸ்லாமியர்கள் - யூதர்கள் கூட்டுப்படை வென்ற பொழுது தேவாலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. ஹேகியா சோஃபியாவும் இந்த  தாக்குதலிலிருந்து தப்பவில்லை. குறைந்தபட்சம் 5 முறை ஹேகியா சோஃபியா தேவால யமாகவும் மசூதியாகவும் மாற்றம் அடைந்தது.
ஒரு முறை கிறித்துவர்களாலேயே ஹேகியா சோஃபியா சிதைக்கப்பட்டது. ரோமிலிருந்து வந்த கிறித்துவர்கள் மேற்கத்திய கிறித்துவர்கள் எனவும் பைசனைட் சாம்ராஜ் யம் மற்றும் அதற்கு அருகில் இருந்தவர்கள் கிழக்கத்திய கிறித்துவர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்களி டையே தீரா முரண்பாடும் இருந்தது. 12ஆம் நூற்றாண்டில் நடந்த 4ஆவது சிலுவைப்போரின் பொழுது இந்த முரண் பாடு முற்றியது. ஜெருசேலத்தை கைப்பற்ற வந்த மேற் கத்திய கிறித்துவப்படையின் ஒரு பிரிவு  வழியில் இருந்த கிழக்கத்திய கிறித்துவர்களை மூர்க்கத்தனமாக தாக்கி கொன்று குவித்தது மட்டுமல்ல; ஹேகியா சோஃபியா தேவாலயமும் தாக்கப்பட்டது. இதற்காக பல நூற்றாண்டு களுக்கு பின்னர் போப் ஆண்டவர் மன்னிப்புக் கோரினார்.
1453ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் ஓட்டோமோன் சாம்ராஜ்யம் பைசனைட் சாம்ராஜ்யத்தை தோற்கடித்தது. வெற்றி பெற்ற முஸ்லிம்கள் படையின் தளபதி முகம்மது ஹேகியா சோஃபியாவை மசூதியாக மாற்றியது மட்டு மல்ல; அதனை புனரமைத்து மேலும் அழகை கூட்டினார். 1935ஆம் ஆண்டு வரை சுமார் 482 ஆண்டுகள் ஹேகியா சோஃபியா மசூதியாகவே இருந்தது. எனினும் கிறித்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஹேகியா சோஃபியா குறித்து முரண்பாடுகளும் தொடர்ந்தன. ஐரோப்பாவின் சில இடங்களில் மசூதிகள் தேவாலயங்க ளாக மாற்றும் சம்பவங்களும் நடந்தன.
முதல் உலகப்போரை தொடர்ந்து ஓட்டோமோன் சாம் ராஜ்யம் தோல்வி அடைந்தது. 1930ஆம் ஆண்டு துருக்கி யில் ஆட்சிக்கு வந்த மதச்சார்பின்மை ஆதரவாளர்கள் பல அதிரடி மாற்றங்களை செய்தனர். குறிப்பாக முஸ்தஃபா கமால் நவீன துருக்கியை நிலை நாட்டினார். காலிஃபாட் எனும் அமைப்பை அகற்றினார். (இந்த காலிஃபாட் அமைப்பை தான் .எஸ். பயங்கரவாத அமைப்பு மீண்டும் நிலைநாட்ட முயன்றது.) அப்பொழுது 1930ஆம் ஆண்டு மசூதியாக இருந்த ஹேகியா சோஃபியா மூடப் பட்டது. 1935ஆம் ஆண்டு ஒரு அற்புதமான அருங்காட்சி யகமாக மாற்றி திறக்கப்பட்டது. அன்றிலிருந்து உலகத்தின் முதல் 10 புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஹேகியா சோஃபியா மாறியது.

ஏன் மீண்டும் மசூதி?
ஹேகியா சோஃபியா யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக பதிவு செய்யப்பட்டது. சில இஸ்லா மியவாதிகள் இதனை மசூதியாக மாற்ற வேண்டும் என அவ்வப்பொழுது கோரி வந்தனர். எனினும் அதற்கு அவ்வளவாக ஆதரவு இருக்கவில்லை. 2003ஆம் ஆண்டு பிரதமராகவும் 2014ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவும் எர்டோகன் பொறுப்பேற்றார். எர்டோகன் ஆட்சியில் துருக்கி யின் மதச்சார்பின்மை பெரும் சிதைவுக்கு ஆளானது. தனது சர்வாதிகாரப் பிடிமானத்தை அதிகரிக்க எர்டோகன் மேலும் மேலும் இஸ்லாமிய மத ஆதரவு கொள்கைகளை அமலாக்கினார். துருக்கியின் 8 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர். சமீபத்தில் நடந்த இஸ்தான்புல் மேயர் தேர்தலில் எர்டோகன் கட்சி தோல்வி அடைந்தது. சரியும் தனது செல்வாக்கை மீட்க எர்டோகன் கையில் எடுத்த ஆயுதம்தான் ஹேகியா சோஃபி யாவை மீண்டும் மசூதியாக மாற்றுவது என்பதாகும். எர்டோ கனுக்கு இது செல்வாக்கை மீட்க பயன்படலாம். ஆனால் உலகம் முழுவதும் இரண்டு பெரிய மதங்களுக்கு இடையே இது எவ்வித தாக்கத்தை உருவாக்கும் எனும் கவலை எழுந்துள்ளது.

இந்தியச் சூழல்
ஹேகியா சோஃபியா பிரச்சனை உருவாகிக் கொண்டி ருந்த இதே காலத்தில்தான் இந்திய உச்சநீதிமன்றத்தில் இந்துத்துவா அமைப்புகளால் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் பற்றிய சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதுதான் வழக்கின் கோரிக்கை. இந்த சட்டத்தின்படி 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் உள்ளனவோ அப்படியே தொடரும். எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது. இதற்கு விதிவிலக்கு ராமர் ஜென்மபூமி- பாபர் மசூதி பிரச்சனை மட்டும்தான்! அப்பொழுது வழக்கில் இருந்த பிரச்சனைக்கு இப்பொழுது தீர்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றதாக இருந்தாலும் பிரச்சனைக்கு முடிவு உருவாகும் என ஒரு பிரிவினரால் கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது இந்துத்துவா அமைப்பு கள் காசி மற்றும் மதுராவில் உள்ள மசூதிகளையும் கோருகின்றனர். அந்த மசூதிகளும் இடிக்கப்பட வேண்டும் என குரல் கொடுக்கின்றனர். அதற்காகவே உச்சநீதிமன்றத் தில் வழக்கு!
ஹேகியா சோஃபியா எப்படி முரண்பாடுகளும் ஒற்றுமை யும் கொண்ட ஒரு சிக்கலான வரலாற்றை கொண்டுள்ளதோ அதே போல இந்தியாவிலும் வழிபாட்டுத் தலங்கள் வரலாறு முரண்பாடுகளை மட்டுமல்ல; ஒற்றுமைகளையும் கொண்டுள்ளது. போர்க் காலங்களில் சில சமயங்களில் கோவில்கள் முஸ்லிம் மன்னர்களால் தாக்குதலுக்கு உள்ளாயின என்பது உண்மையே! அதே சமயம் அக்பர் மற்றும் திப்புசுல்தான் போன்ற பல முஸ்லீம் மன்னர்கள் கோவில்களை பாதுகாத்தது  மட்டுமல்ல; புதியதாக கோவில்களை கட்டிய உதாரணங்களும் உண்டு. மறு புறத்தில் மசூதிகளை கட்டிய விஜயநகர மன்னர்கள் மற்றும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை முன்நிறுத்திய சிவாஜி போன்ற இந்து மன்னர்களும் உண்டு. போர்க் காலங்களில் கோவில்களை அழித்த கபி லேந்திரா போன்ற இந்து மன்னர்களும் உண்டு; மசூதிகளை அழித்த கஜனி முகம்மது போன்ற முஸ்லிம் மன்னர்களும் உண்டு.  முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கு முன்பு சைவமும் வைணவமும் மறுமலர்ச்சி அடைந்த பொழுது ஏராளமான பவுத்த,சமண கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. இவை அனைத்தும் உள்ளடக்கியதுதான் இந்திய மத்தியகால வரலாறு.

வரலாற்றின் சாதக அம்சங்களை முன்னெடுப்பதற்குப் பதிலாக பாதக அம்சங்களை முன்னிறுத்தி பிளவுகளை உண்டாக்க முயல்கின்றனர் பாசிச மதவாதிகள்! தமது சொந்த அரசியல் இலாபத்திற்கு தேவாலயம்- மசூதி முரண்பாடை எர்டோகன் போன்றவர்கள் பயன்படுத்து கின்றனர் எனில், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டு தலில் மோடிஅமித் ஷா கூட்டணி கோவில்- மசூதி முரண் பாடை பயன்படுத்துகின்றனர். இத்தகைய பாசிசவாதிகளை தோற்கடிப்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

நன்றி - தீக்கதிர் 24.07.2020



1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete