Thursday, July 30, 2020

சாதனையும் சலுகையும் இதுதானா அம்மையாரே?


அம்மையார் சலுகை என்றது இதைத்தான் . . .



வங்கிக் கடன் இ.எம்.ஐ யை  திருப்பித் தருவதில் சலுகை அளிக்கிறோம் என்று நிர்மலா அம்மையார் சொன்ன போதே அது கடன் வாங்கியவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது, மாறாக சுமையை அதிகரிக்கும் சூழ்ச்சி என்றுதான் சொன்னோம்.

இப்போது அது ஆதாரபூர்வமாக நிரூபணமாகி விட்டது.

எப்படி?

கீழே உள்ள பதிவைப் படியுங்கள்.


*நாளொரு கேள்வி- 28.07.2020*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் *.சுவாமிநாதன்*
***********************************

*கடன் தவணை தள்ளி வைப்பை தள்ளி வைத்த வாடிக்கையாளர்கள்*

*கேள்வி*

வங்கி கடன் வாடிக்கையாளர்களுக்கு அரசு அறிவித்த கடன் தவணை தள்ளி வைப்பு எந்த அளவிற்கு நெருக்கடி காலத்தில் உதவியுள்ளது? முதல் காலாண்டின் அனுபவம் என்ன?

*.சுவாமிநாதன்*

கொரொனா நிவாரணங்களில் ஒன்றாக கடன் தவணை தள்ளி வைப்பு அறிவிக்கப்பட்டது. அது முதலில் பெரும் பரபரப்பை, வரவேற்பை ஏற்படுத்தியது. *பலர் நிம்மதி பெருமூச்சு கூட விட்டார்கள். அந்த மூச்சை இழுத்து விடுவது வரை கூட அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை.*

கடன் தவணை தள்ளி வைக்கப்படும் காலத்திற்கு வட்டி தள்ளுபடி கிடையாது என்ற உண்மை தெரிய வந்தவுடன் *மகிழ்ச்சி பலூன்* வெடித்து சிதறிவிட்டது. *பாரத ஸ்டேட் வங்கி* தனது இணைய தளத்தில் விடுத்த அறிவிப்பை மீண்டும் இங்கு நினைவு கூர்வோம்
அது வங்கி கடன் தள்ளி வைப்பு பற்றிய ஓர் கணக்கு

* வாகன கடன் ரூ 6 லட்சமாகவும், நிலுவை தவணைகள் 54 மாதங்கள் ஆகவும் இருப்பின் இந்த 3 மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக இறுதியில் ரூ 19000 கட்ட வேண்டி வரும். *இது ஒன்றரை கூடுதல் . எம். தவணைகளுக்கு சமம்.* 

* வீட்டுக் கடன் 30 லட்சமாகவும், நிலுவை ஆண்டுகள் 15 ஆகவும் இருக்கிற பட்சத்தில் இந்த 3 மாதம் தவணை செலுத்துதல் தள்ளி வைக்கப்படுவதால் கூடுதலாக 2.34 லட்சம் கட்ட வேண்டி வரும்.  *இது கூடுதல் 8 .எம். களுக்கு சமம்.* 

இதில் நிவாரணம் ஏதுமில்லை. *நிவாரண காலத்திற்கு வட்டி போடுவது என்ன நியாயம்* என்ற குரல்கள் எழுந்தும் அரசு செவி சாய்க்கவில்லை. ஆனால் கடன் தள்ளி வைப்பு காலம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. காலம் நீட்டிக்கப்பட்டால், கடன் தள்ளி வைப்பைக் கோருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அல்லவா! ஆனால் தலை கீழாக உள்ளது நிலவரம்

இப்போது முதல் காலாண்டு விவரங்கள் வெளி வந்துள்ளன. *இந்து பிசினஸ் லைன்* இது குறித்து 23.07.2020 வெளியிட்டுள்ள செய்தியின் தலைப்பே *" As Cost bites, Customers exit loan moratorium*. அதாவது, "வட்டிச் சுமை காரணமாக வங்கி கடன் தள்ளி வைப்பிலிருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்" என்பதே. என்ன அர்த்தம்... *தண்ணீர் என்று நினைத்த விரலை விட்டவர்கள் வெந்நீர் சுட்டவுடன் சட் என்று இழுத்துக் கொள்வது போல...*

முதல் காலாண்டின் துவக்கத்தில் (அதாவது முந்தைய காலாண்டின் இறுதியில்) *ஆக்சிஸ் வங்கியின்* மொத்தக் கடன்களில் 25 முதல் 28 சதவீதம் வரை தள்ளி வைப்பிற்கான வாடிக்கையாளர் தெரிவுக்கு உட்பட்டவையாக இருந்தன. ஆனால் முதல் காலாண்டின் இறுதியில் இந்த சதவீதம் 9.7 சதவீதத்திற்கு வீழ்ந்து விட்டது. *பஜாஜ் ஃபைனான்ஸ்நிறுவனத்தில் இவ் விகிதம் ஏபரல் 30 ல் 27.1 % ஆக இருந்து ஜூன் 30 ல் 15.7 % க்கு வீழ்ந்துள்ளது. *எஸ்.பி. கார்டு* நிறுவனத்தில் கடன் தள்ளி வைப்பிற்கு தெரிவு தந்திருந்த கணக்குகள் மே மாதம் 12.5 லட்சம். ஆனால் ஜூன் மாதம் இந்த கணக்குகள் 1.5 என்ற அள்விற்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்து விட்டன.  

இன்னும் அரசு நிறுவனங்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் நிறைய வாடிக்கையாளர்கள் - 50% வரை கூட- கடன் தள்ளி வைப்பு தெரிவை விட்டு வெளியேறி இருப்பார்கள் என்பதே மதிப்பீடு

இப்படி வெளியே வந்திருப்பவர்கள் எல்லாம் கையில் தயாராய் கட்டுவதற்கு பணம் வைத்திருப்பவர்கள் என்று சொல்ல முடியுமா? மற்ற செலவினங்களை குறைத்து விட்டோ, தள்ளி வைத்து விட்டோ இதற்கு கட்டுபவர்களே அதிகம். கட்டவே வழி இல்லாதவர்கள் நினைத்தாலும் வெளியே வர முடியாது. நிவாரண காலத்திற்கும் வட்டியை அழுது வைப்போம் என்று கட்டாமல் இருக்கிறார்கள். *"சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்?"* என்று வயிற்றுப் பாட்டை இசைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

*செவ்வானம்*

No comments:

Post a Comment