*இரண்டு சொற்கள்... இரண்டு வகை தாக்குதல்கள்*
*கேள்வி:*
இன்று நாடு முழுவதும் தொழிலாளர் போராட்ட களத்தில் உள்ளனர். மூலதனத்தின் மூர்க்கத்தனமான தாக்குதல் உலக மய காலத்தில் அதிகரித்துள்ளது என்கிறோமே!. இந்த மதிப்பீடை எப்படி விவரிப்பது?
பதில்
*க.சுவாமிநாதன்*
துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு
அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று போராட்ட களத்தில் இருக்கிற நேரம். தொழிலாளிகள் கோரிக்கையின் பின் புல அரசியலை புரிந்து முன்னேற வேண்டிய அவசியமும் உள்ளது.
இரண்டு வார்த்தைகள் குறித்து இங்கு விவாதிக்க உள்ளோம்.
ஒன்று Appropriation.
இரண்டாவது Expropriation.
இந்த இரு சொற்களும் மூலதனத்தின் இரு வகையான தாக்குதலை விளக்குபவை. இன்று தொழிலாளர் முன் வைத்துள்ள கோரிக்கைகளுக்கும் நமது பேசு பொருளுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.
*"ஏகாதிபத்தியம்: பின் பனிப்போர் காலத்தில் அதன் செயல்பாடு"* என்ற சிறு நூலில் *சீதாராம் யெச்சூரி* இது குறித்து விவரிப்பது கீழே...
*"முதலாளித்துவ வரலாறு நெடுகிலும் மூலதனக் குவிப்பு இரண்டு வழிகளில் நடைபெற்று வந்துள்ளன.*
*ஒன்று, மூலதனக் குவிப்பு தனது வழமையான விரிவாக்க வழிமுறை, அதாவது அதன் உற்பத்தி விரிவாக்கம், மூலம் நடந்தேறுவது. (ஆங்கிலத்தில் இதற்கு பெயர் APPROPRIATION- Accumulation through Expansion).*
*இரண்டாவது, மார்க்சின் வார்த்தைகளில் ஆதி மூலதன திரட்சி என்கிற வகையிலானது. கொடூரம், மிரட்டல், நிர்ப்பந்தம் வாயிலாக நடந்தேறுவது. அபகரிப்பு என இதைச் சொல்லலாம். (ஆங்கிலத்தில் இதற்கு பெயர் EXPROPRIATION -Accumulation through Coercion)."*
இந்த Appropriation & Expropriation ஆகிய இரண்டு வார்த்தைகளுமே மூலதனக் குவிப்பைக் குறிப்பவையே. *இரண்டுமே சுரண்டலின் வழிமுறைகள்தான்.* ஆனால் பிந்தையது மிகத் தீவிரமான தாக்குதலை தொடுப்பதாக உள்ளது. வரலாறு நெடுகிலும் இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்தே இருந்து வந்துள்ளன.
இரண்டாம் வகையிலான ஆதி மூலதன திரட்சி பன்முக வடிவங்களை எடுத்து வந்துள்ளது. *நேரடி காலனி ஆதிக்கமும் அதில் ஒன்று.* இப்போதைய நடப்பு கட்டத்தில், ஏகாதிபத்தியம் அத்தகைய கொடும் தாக்குதலை உலகம் முழுவதிலுமுள்ள மக்களில் பெரும்பான்மையோர் மீது ஏவி விடுகிறது. இதன் தாக்குதலுக்கு வளர்ந்த நாடுகள் மற்றும் மற்றைய நாடுகளின் மக்களும் இரையாகிறார்கள்.
இப்போது உதாரணங்களுக்கு வருவோம்.
இந்தியாவிற்கு *ஃபோர்டு, ஹியூண்டாய், நோக்கியா* போன்ற நிறுவனங்கள் வந்து தொழில் நடத்தி மூலதன குவிப்பை மேற்கொள்வது முதல் வகை. அது போல இந்திய தொழிலதிபர்களும் செயகிறார்கள். அதாவது, விரிவாக்கம் வாயிலான மூலதன குவிப்பு. ஆங்கிலத்தில் *APPROPRIATION-
Accumulation through Expansion.*
அடுத்த வகைக்கு வருவோம்.
முதலாளித்துவ உலகம் முழுவதும், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அரசுத் துறைகள் தனியார் மயமாக்கப்படுவது நடந்தேறுவதை காண்கிறோம். நீண்ட காலம் தொழிலில் நீடித்து லாபகர செயல்பாட்டை உறுதி செய்திருக்கிற அரசு நிறுவனங்களை, அதன் விலை மதிப்புள்ள சொத்துக்களை தனியார்கள் கைப்பற்றுகிறார்கள். அரசு பொது இன்சூரன்ஸ் பங்கு விற்பனை என்றவுடன் அவர்கள் நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களுமே சந்தைப் பங்கில் முதல் 4 அல்லது 5 இடங்களுக்குள் இருந்த போதும் அதிக லாபம், அதிக பிரிமிய வருவாய், அதிக சந்தைப் பங்கை கொண்ட நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தையே பங்கு சந்தைக்கு இழுத்து வந்தார்கள். எல்.ஐ.சி பங்கு விற்பனை இப்போது பேசப்படுகிறது. என்ன தேவை? என்ன நியாயம்? வங்கித் துறையில் தொடர்ந்து தனியார்கள் தோல்வி, திவால் என்ற அனுபவம் இருந்தும் அங்கேயும் தனியார் மயத்தை தொடர நினைக்கிறார்கள் அல்லவா. இவை எல்லாம் *"அபகரிப்பின் மூலம் அரங்கேறும் மூலதனக் குவிப்பு."
(Expropriation- Accumulation through coercion)* என்பதாகும்.
அதுபோல பொது நுகர்வு பண்டங்களான தண்ணீர் வளத்தை குறி வைப்பதும் "அபகரிப்பின் மூலம் அரங்கேறும் மூலதனக் குவிப்பு." (Expropriation- Accumulation through coercion). *தாமிரவருணி வளத்தை கொக்க கோலா கைப்பற்றுவது. கோவை குடிநீர் "சூயஸ்" பன்னாட்டு நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்படுவது* எல்லாம் இதில் அடங்கும். கல்வி, சுகாதாரம் தனியார்களின் வேட்டைக்கு ஆளாவதும் இவ் வகை சார்ந்ததே.
*கனிம வளங்கள்* தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதும் "அபகரிப்பே"
(Expropriation). நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆத்ம நிர்பரில் அறிவித்த *நிலக்கரி படுகை தனியார் மயம்* ஓர் அண்மைய உதாரணம்.
*விவசாயத்தில்* கார்ப்பரேட்டுகளை ஊக்குவிக்கிற நகர்வும் பன்னாட்டு விதை கம்பெனிகளுக்கு திறந்து விடப்படுவதும், *வன வளங்கள்* தனியாரால் சூறையாடப்படுவதும் "அபகரிப்பு" வகையே.
(Expropriation).
மூலதனம் விரிவாக்கம் வாயிலாகவும் குவிப்பை மேற்கொண்டாலும் அது லாபத்தை முதலீடு செய்து உற்பத்தி திறனை மேம்படுத்தினால் வேலை வாய்ப்புகள் உருவாகலாம். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கலாம். அது சந்தை விரிவாக்கத்திற்கு வழி வகுத்து உற்பத்தியையும் தூண்டலாம். ஆனால் *சர்வதேச நிதி மூலதனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி* இதை அனுமதிக்க மறுக்கிறது. கொடூரமான சுரண்டலில் மூலதனத்தை ஈடுபடுத்துகிறது. அதாவது, *அபகரிப்பின் மூலமான மூலதன குவிப்பு* (Accumulation
through encroachment) அதிகமாக நடந்தேறுகிறது.
காரல் மார்க்ஸ் மூலதனம் நூலில் கூறிய வார்த்தைகளை இங்கு நினைவு கூரலாம்.
*மூலதனம், தலையில் இருந்து பாதம் வரை, ஒவ்வொரு உடல் துவாரம் வழியாகவும், ரத்தத்தோடும் அழுக்கோடும் வழிந்து கொண்டே இருக்கிறது.*
இதை எப்படி எதிர்கொள்வது? உழைப்பாளி மக்களின் இயக்கம் பலவீனம் அடைத்தால் இரண்டாம் வகை மூலதனக் குவிப்பு அதிகமாகும். *ஓர் மாற்றை மக்கள் முன் நிறுத்த வேண்டியுள்ளது.* மாற்று, மக்களின் போராட்டங்கள் வாயிலாகவே வலுப் பெறும். இதற்கு ஓர் பரந்த கருத்துருவாக்கமும் தேவை. அணி வகுப்பும் தேவை. அரசின் கொள்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் எல்லோரையும் இணைக்கிற வியூகம் அமைய வேண்டும்.
* பொருளாதாரத்தில் அரசு நிறுவனங்களின் பங்களிப்பு என்ன?
* அந்நிய முதலீடுகள் எங்கு வரலாம்? எங்கு வரக் கூடாது? நிபந்தனைகள் என்ன?
* வருமான மறு பங்கீட்டுக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும்?
* இந்திய மக்களின் வேலை வாய்ப்பு, வாங்கும் சக்தி உயர்வு, சந்தை விரிவாக்கம், சிறு தொழில், விவசாய வளர்ச்சிக்கான கொள்கைகள் என்ன?
* பிரதேச ஏற்றத்தாழ்வுகள் இல்லாத வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்?
* நகர் மயம் எவ்வாறு திட்டமிடப்பட வேண்டும்?
* பாலினம், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பாதை எவ்வாறு இருக்க வேண்டும்?
நவீன தாராளமயத்தை கடக்காமல் இன்று மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. முதலாளித்துவத்தையே கடக்கிற அடுத்த கட்டத்திற்கும் இப் பயணம் தொடர்வதற்கான நமபிக்கையை அது தரும்.
இப்படி ஓர் *பரந்த விவாதம்* வேண்டும். *கள செயல்பாடுகள்* வேண்டும். அப்போதுதான் மூலதனத்தின் மூர்க்கத்தை எதிர்கொள்ள முடியும். இது *அணி வகுப்பின்* பலத்தை பொறுத்தது.
நன்றி *செவ்வானம்*
No comments:
Post a Comment