உ.பி யில் எட்டு போலீஸ்காரர்களை கொன்ற விகாஸ் துபேயை போலி எண்கவுண்டரில் போட்டுத் தள்ளி விட்டார்கள். விகாஸ் துபே இறக்க வேண்டிய மனிதன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது, ஆனால் அது நீதிமன்றம் மூலமாகத்தான் நிகழ்ந்திருக்க வேண்டுமே தவிர போலி எண்கவுண்டர் போன்ற குறுக்கு வழி மூலமாக அல்ல.
எட்டு போலீஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை படித்த உடனேயே விகாஸ் துபேயை நிச்சயமாக கைது செய்து நீதிமன்றம் முன்பு நிறுத்த மாட்டார்கள், அவனை கைது செய்ய முயன்ற போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் செத்து விட்டான் என்றுதான் முடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் பாவம் உபி காவல்துறைக்கு கற்பனை வளம் குறைவு போல. கைது செய்து அழைத்து வரும் போது ஜீப் கவிழ்ந்ததாகவும் அப்போது அவன் தப்பிக்கையில் ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை கைப்பற்றி சுட முயற்சிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஒரு பலவீனமான கதையை கட்டியுள்ளார்கள்.
இந்த போலி எண்கவுண்டரில் இறந்து போனது விகாஸ் துபே மட்டுமல்ல.
அவனை வளர்த்து விட்ட காவல்துறை அதிகாரிகள்?
அவனுக்கு அரணாக இருந்த அரசியல் தலைவர்கள்?
அவனுடைய நிழலுக தொடர்புகள் யார்?
யாரோடெல்லாம் இப்போது அவனுக்கு வணிகத் தொடர்பு உள்ளது?
அவன் யாருக்கு பினாமி?
அவனுக்கு யார் பினாமி?
இப்படி ஏராளமான கேள்விகளுக்கான விடைகளும் அவனின் மரணத்தோடு சேர்ந்து புதைந்து விட்டது.
இப்போது அவன் தொடர்புடைய அத்தனை பேரும் நிம்மதியாக இருப்பார்கள்.
மீண்டும் ஒரு முறை அழுத்தமாக சொல்கிறேன்.
சட்டப்படியான தண்டனை வாங்கித் தர துப்பற்ற, கையாலாகாதவர்களின் ஆயுதமே போலி எண்கவுண்டர்.
No comments:
Post a Comment