Friday, July 10, 2020

கொரோனா காலமாக இருந்தாலும் . . .




வேலூர்காரர்களுக்கு  எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் குரல் ஒலித்த மண் என்பதால் வரும் பெருமிதம் அது.

வேலூர் சிப்பாய்ப் புரட்சி தோற்டிக்கப்பட்டு அதிலே பங்கேற்றவர்கள் மூர்க்கத்தனமாக கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் ராணுவம் ஒன்றும் முறியடிக்கப்பட முடியாத ஒன்றல்ல என்பதை சாதித்துக் காட்டியவர்கள் வேலூர் சிப்பாய்கள்.

வேலூர் கோட்டையில் பறந்து கொண்டிருந்த இங்கிலாந்தின் யூனியன் ஜாக் கொடியை கீழிறக்கி திப்பு சுல்தானின் புலிக் கொடியை பறக்க விட்ட பெருமையும் வேலூர் சிப்பாய்களுக்கே உண்டு.

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மத வேறுபாடு இல்லாமல் ஒன்றிணைந்து போராடி மத நல்லிணக்கத்தின், மத ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்ற பெருமையும் கூட அவர்களுக்கே சொந்தம்.

வேலூர் சிப்பாய்ப் புரட்சி பற்றி இது வரை அறியாதவர்கள் அது பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையில் தோழர்களோடு வேலூர் மக்கான் கார்னரில் உள்ள சிப்பாய் புரட்சி தியாகிகள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தி வருகிறோம்.

இந்த கொரோனா காலத்தில் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. ஐந்து பேருக்கு மேல் கூடக் கூடாது என்று 144 தடைச்சட்டம் அமலில் இருப்பதால் அதை புறக்கணித்து தோழர்களை திரட்டவும் தயக்கமாக இருந்தது. என்னதான் நல்ல விஷயம் என்றாலும் காவல்துறை என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா? அதே நேரம் நம் மண்ணுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தாமல் இருக்கவும் மனமில்லை.

அதனால் ஐந்து சங்கப் பொறுப்பாளர்கள் மட்டும் சென்று நினைவுச் சின்னத்தில் மலர் தூவி விட்டு வரலாம் என்று முடிவு செய்து சென்றோம்.

மாவட்ட நிர்வாகம் கொரோனா காலம் என்பதால் எந்த குறையும் வைக்கவில்லை. நினைவுச் சின்னத்தில் வழக்கமான மலர் அலங்காரம் சிறப்பாகவே இருந்தது.



நினைவுச் சின்னத்தின் உள்ளே செல்ல முடியாத படி வாசலிலேயே தடை ஏற்படுத்தி இருந்தார்கள். ஐவரில் இருவர் முதலில் சென்றவுடன் ஒரு  உதவி ஆய்வாளர் உட்பட மூவர் உடனடியாக வந்து விட்டார்கள். மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி விட்டோம்.




நாங்கள் மட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை.

காவல்துறையும் எங்களை புகைப்படம் எடுத்தது, அவர்கள் பதிவுகளுக்காக.

கொரோனா காலமாக இருந்தாலும் தியாகிகளுக்கு உரிய முறையில் வீர வணக்கம் செய்தோம் என்பது மனதிற்கு நிறைவளித்தது.

1 comment:

  1. நல்ல விடயம். சிறப்பு.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    ReplyDelete