அறுபது
கிராமங்களை அழித்து மூவாயிரம் கோடி ரூபாயில் சீனாவின் உதவியோடு படேல் சிலை அமைக்கப்பட்டது.
அதை
விட அதிகமாக செலவு பிடிக்கும் விஷயமாக புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை அமைக்கும் திருப்பணியை
துவக்கி உள்ளார் மோடி.
இதெல்லாம்
அவசியமா என்று ஆணித்தரமாக கேட்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு
உறுப்பினரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.கே.ரங்கராஜன்.
இந்த
விளம்பரமெல்லாம் உனக்கு தேவையா என்று செந்திலிடம் கவுண்டமணி கேட்பது போலவே இருக்கிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்து விட்டேன். நாடாளுமன்றத்தின் மாண்புகளையும் பாரம்பரியத்தையும் அழித்து விட்டேன். கட்டிடம் என்ன பெரிய சுண்டைக்காய் என்பதே மோடியின் மைண்ட் வாய்ஸாக இருக்கக்கூடும்.
*நாளொரு கேள்வி: 18.07.2020*
இன்று நம்மோடு தோழர் *டி.கே.ரெங்கராஜன்* முன்னாள் எம்.பி (சி.பி.எம்). பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் இருந்து தமிழில் நமக்கு தருகிறார் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆர்.தர்மலிங்கம்)
*கேள்வி:*
பொருளாதார நெருக்கடி,
கொரோனா வைரஸ் உருவாக்கிய நெருக்கடி காரணமாக வேலையின்றி, வருமானம் இன்றி மக்கள் இருக்கும் நிலையில் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவையா?
*தோழர் .டி.கே.ரங்கராஜன்*
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மக்கள் போராடி வருகின்றனர்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலைமை படு மோசமாக உள்ளது. லாக்டவுன் காரணமாக தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.நாட்டின் பொருளாதாரம் சரிவுக்கு உள்ளாகியுள்ளது.
*அரசு அறிவித்துள்ள நிவாரண நடவடிக்கை மக்களின் துன்பங்களை துடைத்திட போதுமானதாக இல்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த நெருக்கடியான சூழலிலும் தேவையற்ற கட்டுமான பணிகளில் இறங்கியுள்ளது என்பது துன்பகரமான நிகழ்வாகும்.*
கொல்கத்தாவை தலைநகராக கொண்டு வெள்ளையர்கள் 1911 வரை ஆட்சி செய்தார்கள்.
அதன்பிறகு புவியியல் ரீதியாக டெல்லி இந்தியாவின் மையப்பகுதியில் இருப்பதால் தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்கள். டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டம் நடத்துவதற்கான கட்டிடத்தை கட்டும் பணி மாண்டேகு தாமஸ் வசம் கொடுக்கப்பட்டது. டெல்லி அலிப்பூர் சாலையில் தற்போது இயங்கிவரும் டெல்லி மாநில சட்டசபை கட்டிடம் 1912 ல் நாடாளுமன்ற கட்டிடமாக கட்டப்பட்டது.1913 ஜனவரி 27 ல் முதல் கூட்டம் இந்த கட்டிடத்தில் நடைபெற்றது. அன்றிலிருந்து 1926 வரை இந்த கட்டிடத்தில் நாடாளுமன்றம் செயல்பட்டது.
1912 முதல் 1926 வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய குழு கூட்டங்கள் இங்கே நடந்தன. பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் முக்கிய சீர்த்திருத்த மசோதாக்கள் குறித்த விவாதம்,முடிவுகள் இங்கே பேசப்பட்டன. *இந்தியக் குடிமக்களின் உரிமைகளை பறிக்கிற ரௌலட் சட்டத்தை எதிர்த்து மூத்த நாடாளுமன்றவாதிகள் காரசாரமாக விவாதித்த போது மேல் மாடத்தில் இருந்து சபையின் நடவடிக்கைகளை காந்தி கவனித்துக் கொண்டிருந்தார் என்பது வரலாறு.*
தற்போது இந்திய பாராளுமன்றம் செயல்படும் கட்டிடம் கட்டிடகலை நிபுணர் எட்வின் லூட்யின் பொறியாளர் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகியோர் தலைமையில் கட்டப்பட்டு ஜனவரி 18,1927 ல் அப்போதைய கவர்னர் ஜெனரல் இர்வின் பிரபு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மூன்றாவது இந்திய நாடாளுமன்ற கூட்டம் ஜனவரி 19,1927 ல் இந்த கட்டிடத்தில் முதன் முறையாக நடந்தது.
*இந்திய சுதந்திர பிரகடனத்தை இந்த கட்டிடத்தில் இருந்துதான் அறிவித்தார் ஜவகர்லால் நேரு.*
1947 ல் அமைந்த முதல் அமைச்சரவையும், அதன்பிறகு அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையும் இங்கிருந்துதான் செயல்பட்டன.
*அரசியல் நிர்ணய சபையின் அங்கத்தினர்களான *டாக்டர் பாலாசாகெப் அம்பேத்கர், டாக்டர். ராஜேந்திர பிரசாத், ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல்* போன்ற மகத்தான தலைவர்களின் பங்களிப்பு, சிறந்த விவாதத்தின் பின்னணியில் இந்திய அரசியலைப்பு சட்டம் இங்கேதான் நிறைவேற்றப்பட்டது.
இந்த கட்டிடத்தை நவீனப்படுத்தி செயல்படுவது அல்லது புதிய கட்டிடம் கட்டுவது என்ற விவாதம் காங்கிரஸ் கூட்டணி அரசில் நடந்தாலும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது *"சென்ட்ரல் விஸ்டா"*
(Central vista) என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்றும் கூறப்படுகிறது.
ரூ 20ஆயிரம் கோடி செலவில் 86 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் கட்ட வரைபடம் தயாராகியுள்ளது. சௌத் பிளாக் பின்புறம் பிரதமர் இல்லமும், நார்த் பிளாக் பின்புறம் துணை ஜனாதிபதி இல்லமும் இருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கை சௌகரியமாக அமைக்கப்படும்.
இத்தகைய வசதிகளை செய்து தர கட்டிட கலை நிபுணர்கள் இத்தாலி, ஜெர்மனி, கியூபா மற்றும் பல உலக நாடுகளில் உள்ள நாடாளுமன்ற கட்டிடங்களை நேரில் போய் பார்த்து வர இருக்கிறார்கள்.
2024 ம் ஆண்டுக்குள் கட்டிட பணி முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது.
*புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான எந்த விவாதமும் நாடாளுமன்றத்தில் இதுவரை நடத்தவில்லை. நாடாளுமன்றமும் இதை அங்கீகரிக்கவில்லை.* புதிய கட்டிடத்தை உருவாக்கும் கட்டிடக்கலை நிபுணர்கள், பொறியாளர்களுக்கு எந்த வழிகாட்டலும் இதுவரை நாடாளுமன்றத்தால் வழங்கப்படவில்லை.
நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது அக்டோபர் 29, 2019 ல் இணைச்செயலாளர் பிரதீப் சதுர்வேதிக்கு கடிதம் எழுதி எனது ஆட்சேபத்தை தெரிவித்தேன்.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 450 லிருந்து 650
ஆக உயர்ந்துவிட்டாலும் புதிய கட்டிடம் கட்டவில்லை.
பிரான்சு நாடாளுமன்ற கட்டிடம் 1722 ல் கட்டப்பட்டது. இத்தாலி நாடாளுமன்ற கட்டிடம் 1871 ல் கட்டப்பட்டது. இன்றும் அந்த நாடுகளில் நாடாளுமன்றம் அங்கேதான் செயல்படுகின்றன.
ஜெர்மனியில் 1894 கட்டப்பட்ட கட்டிடம் இடையில் தீ விபத்தால் பாதிப்படைந்தாலும் அதை சீரமைத்து அதே கட்டிடத்தில் தான் செயல்படுகின்றனர்.
*உலகம் முழுவதும் வரலாற்று, கலாச்சார, பாரம்பரிய கட்டிடங்கள் பராமரிக்கப்பட்டு செயல்பாடுகளும் அங்கேயே நடக்கின்றன. உலக நாடுகளை போலவே இந்திய நாடாளுமன்ற கட்டிடமும் சிறப்பான பாரம்பரியத்தையும், மிகப்பெரிய அரசியல் தலைவர்களின் விவாதங்களையும், பேச்சுக்களையும் கண்ட வரலாற்று சிறப்புமிக்க இடமாகும்.*
இன்றுள்ள பொருளாதார மந்தம், நெருக்கடி மக்களின் வாங்கும் சக்தியை பறித்துள்ளது. *விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி, மூத்த தொழிலதிபர் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் போன்ற தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் மக்களின் கைகளுக்கு வங்கி மூலம் பணம் நேரடியாக போய் சேரக் கூடிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என கேட்கிறார்கள்.*
பொருளாதார நெருக்கடி காரணமாக சாதாரண மக்கள் கடும் பாதிப்பில் இருக்கும் போது ரூ.20 ஆயிரம் கோடியில் கட்டப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவையற்ற செலவாகவும், மக்களின் பணத்தை வீணடிப்பதாகவும் இருக்கிறது.
*"நாடாளுமன்றமே ஜனநாயகத்தின் கோவில்"* என கூறி 2014 ல் நாடாளுமன்ற நுழைவாயிலில் வணங்கிய பின்புதான் நுழைந்தார் நரேந்திர மோடி. *உண்மையில் ஜனநாயகத்தை மக்களே பாதுகாக்கின்றனர். மக்கள் கடும் துயரத்தில் இருக்கும் போது அவர்களின் துயரங்களை துடைக்காமல் புதியதாக "ஜனநாயகத்திற்கு கோவில்"
கட்டுவதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.*
மக்களை பாதுகாப்பது தேசத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பதை மனதில் கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான *"சென்டரல் விஸ்டா" திட்டத்தை கைவிட வேண்டும்.* அனைவரையும் உள்ளடக்கிய பாரம்பரியமிக்க தேசத்தின் வரலாற்று சின்னத்தை பாதுகாத்திட வேண்டும். பாரம்பரிய சின்னத்தை இடிப்பது புதிய இந்தியாவை நிர்மாணித்திட ஒருபோதும் உதவாது.
*செவ்வானம்*
No comments:
Post a Comment