வைரமுத்து
சர்ச்சையில் ஜெமோ மூன்று முகம் காண்பித்துள்ளார். கவிஞர் பெருந்தேவியின் பதிவை பகிர்ந்து
கொண்டு “நாயும் நாணும்” என்று ஆக்ரோஷமாக எழுதினார்.
“வைரமுத்துவின்
ஆளுமைச் சித்திரம்” எழுதியது நீ தானே என்ற கண்டனம் வந்ததும் பார்ட்டி பல்டி அடித்து
விட்டது.
மீண்டும்
வைரமுத்துவைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி அவர் குண நலன்களைப் பாராட்டி சர்ச்சைகள்
சமயத்தில் தன்னைக் கண்டிக்காத அவர் இயல்பை தூக்கி வைத்து அவர் கவிதையின் அழகியலில்தான்
தனக்கு பிரச்சினை என்று முடித்து விட்டார்.
இங்கே
ஜெமோ சொல்வதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் “ஒரு படைப்பாளியின்
தனிப்பட்ட குணாதிசியத்துக்கும் செயல்பாடுகளுக்கும் அவன் படைப்புக்கும் எந்த சம்பந்தம் கிடையாது. அவன்
ஒழுக்கத்தை வைத்து அவன் படைப்பை மதிப்பீடு செய்யக் கூடாது” இது அவர் சுற்றி வளைத்து சொல்வது.
பிறகு
நேரடியாகவே
’வைரமுத்து மீதான இக்குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றால் வன்மையாக கண்டிக்கத்தக்கவை’ என்ற வெளிப்படையான கண்டனத்துடன் மேற்கொண்டு அவருடைய படைப்புலகைப் பற்றிப் பேசுவதே நாம் செய்யக்கூடுவது.”
என்று சொல்லி விடுகிறார்.
இதுதான் நீர் சொல்லும் புடலங்காய்
அறமா என்று ஜெமோவைப் பார்த்து கோபமாக கேட்கத் தோன்றுகிறது. கவிஞர் பெருந்தேவியின் ஆட்சேபனை என்பதே
“பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள வைரமுத்துவுக்கு இத்தனை முக்கியத்துவம்
தேவையா?” என்ற அடிப்படையில் எழுந்ததுதான். அது உமக்கு பொருட்டே இல்லையென்றால் என்ன
எச்.ராசாவுக்கு அதை பகிர்ந்து கொண்டீர்?
ஒரு மனிதனின் மோசமான குற்றச் செயல்களை
ஒதுக்கி வைத்து விட்டு படைப்புதான் முக்கியம் என்ற பார்வை மோசமானது. வைரமுத்து
விஷயத்தில் ஆஜானின் நிலை நீர்த்துப் போனதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.
திரைத்துறையில் வைரமுத்து நிச்சயம்
ஜெயமோகனை விட செல்வாக்கு அதிகம் உள்ள ஆள்தான். அவரோடு மோதி சில்லறைக்கு பாதிப்பு
வரக்கூடாது என்பதைத் தவிர ஆஜான் வெள்ளைக் கொடி காண்பித்ததற்கு வேறு காரணமில்லை.
எங்கே தான் ஆசைப்படும் ஞானபீடத்தை
தனக்கு முன்பாக தட்டிக் கொண்டு போய் விடுவாரோ என்ற பதற்றத்தில் “நாயும் நாணும்”
என்று எழுதி விட்டார்.
கல்லா மூடப்படும் என்ற அச்சத்தில்
வைரமுத்துவிற்கு புகழாரம் சூட்டி விட்டார். “நாயும் நாணும்” என்று தான் கண்டித்தது “தமிழ்
இந்து”வைத்தான், வைரமுத்துவை அல்ல என்று விளக்கமளித்து விட்டார்.
மேலும் மேலும் அம்பலப்படுவோமோ என்ற
அச்சத்தில் கடைசியாக “ஸ்லீப் மோடுக்கு போகிறேன்” என்று சொல்லி எஸ்கேப் ஆகி
விட்டார்.
ஜெமோவின் மூன்று முகங்களையும் நீங்களே
பார்க்க அவரது பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன்.
என்னைப் போல நீங்களும் நேரத்தை விரயம்
செய்ய தயாராக இருந்து பொறுமையும் இருந்தால் பாருங்கள்.
பிகு: சந்தடி சாக்கில் இறந்து போன
எழுத்தாளர் ஜி.நாகராஜனையும் முழு சங்கி மாலனையும் ஜெமோ போட்டுத் தாக்குவதை நீங்கள்
அறிய வேண்டுமென்றால் வேறு வழியில்லை. கீழே உள்ளதை படித்தாக வேண்டும்.
முதலில் கண்டனம்
பெருந்தேவி இக்குறிப்பை எழுதியிருக்கிறார். சமீபத்தில் வைரமுத்து பற்றி தமிழ் ஹிந்து வெளியிட்ட மூன்று முழுப்பக்கக் கட்டுரைகள் பற்றி.
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் சென்று நான் சுட்டிக்காட்ட விரும்புவது ஒன்று உண்டு. தமிழ் இந்து தமிழிலக்கியத்தின் தலைமகன் என இந்த மிகைச்சொற்கூட்டியை முன்வைக்கிறது என்றால் நவீனத் தமிழிலக்கியம் பற்றிய அதன் புரிதல் என்ன? அது முன்வைக்கும் மதிப்பீடு என்ன? வேறெந்த படைப்பாளியைப் பற்றி இவ்வண்ணம் ஒரு கட்டுரை இவ்விதழால் வெளியிடப்பட்டுள்ளது?
சரி, தமிழில் எவர் கவிஞர் என்று சொல்லத்தகுதி கொண்டவர்களா ஆசை, செல்வப்புவியரசன், சங்கர ராமசுப்ரமணியன் என்னும் இந்த மூன்று மொண்ணைகளும்? சங்கர ராமசுப்ரமணியன் தவிர பிற இருவருக்கும் இலக்கியமென்றால் கோழிமுட்டை போல ஏதோ ஒன்று. சங்கர ராமசுப்ரமணியன் இங்கே வெற்றுப்பிழைப்புச் சூழ்ச்சியாக இதை எழுதியிருக்கிறார். இதழில் எழுதும் நிலையில் உள்ளமையாலேயே அரைவேக்காடுகள் இலக்கிய மதிப்பீடுகளை உருவாக்குவார்கள் என்றால் இலக்கியச் செயல்பாடுகளுக்கு என்னதான் அர்த்தம்?
இக்கட்டுரை ஏன் எழுதப்பட்டது என புரிய பெரிய அறிவுப்புலமேதும் தேவையில்லை. ஒன்று, இது இன்று வைரமுத்து சற்றும் மனம்தளராமல் செய்துகொண்டிருக்கும் ஞானபீட முயற்சிக்கான படிகளில் ஒன்று.
பிறகு
சமரசம்
நானறிந்த வைரமுத்து குறித்து சில சொல்ல விரும்புகிறேன்.
ஒருவரை விமர்சிக்க அவரை அடிமுடி வெறுக்கவேண்டியதில்லை.
என்
கணிப்பில் தமிழில் தலைசிறந்த பாடலாசிரியர் அவரே. கண்ணதாசனை விடவும் முக்கியமானவர். கண்ணதாசனைப் போலன்றி மிகச்சிக்கலான சந்தங்கள் உருவான காலத்திலும் எழுதியவர். நவீனக் கவிதையின் சொல்லாட்சிகளை பாடலுக்குக் கொண்டு சென்றவர். இந்திய அளவிலேயே திரைப்பாடலாசிரியராக
அவருடைய இடம் முக்கியமானது.
திரைச்சூழலில் அவர் பொதுவாக ஒரு கனவானுக்குரிய ஆளுமை கொண்டவர். அவர் எந்நிலையிலும் புறம்கூறுவதில்லை. ஒருவர் குறித்து இன்னொருவரிடம் பேசுவதில்லை. அவரை புறக்கணித்தவர்கள், இகழ்ந்தவர்கள் குறித்துக்கூட எதிர்மறையாக எப்போதும் பேசுவதில்லை. எவரிடமும் அவர் குழைவதும் தணிவதும் இல்லை. அனைத்துக்கும் மேலாக அவருடைய விமர்சகர்களைக் கூட அவர் எதிர்த்து ஏதும் சொல்வதில்லை.
அவர்
தன்னை ஓர் எழுத்தாளராக, கவிஞராகவே முன்வைப்பவர். எந்நிலையிலும் அந்த தகுதிநிலையில் இருந்து இறங்குவதில்லை. ஆகவே இன்னொரு எழுத்தாளருக்கு எதிரான அரசியலைச் செய்வதே இல்லை.
இரு
உதாரணங்கள் சொல்கிறேன், என் அனுபவங்கள்.
ஒன்று,
2008ல் எம்.ஜி.ஆர். சிவாஜி குறித்து நான் எழுதியதை ஒட்டி சிக்கல்கள் எழுந்தபோது சிவாஜிக்கு மிக அணுக்கமானவராக இருந்த அவரிடம் ஒரு கண்டனம் பெற முயன்றனர். எழுத்தாளனுக்கு எதிரான கண்டனத்தை சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
நான்
2003ல் மு.கருணாநிதி அவர்களின் இலக்கியத் தகுதியைப் பற்றிய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தபோது மு.கருணாநிதி அவர்கள் கடுமையான எதிர்வினையை ஆற்றினார். அவருடைய நன்மதிப்பை பெறும்பொருட்டு அன்று திமுக ஊடகங்களிலும் சூழலிலும் இருந்தவர்கள் மேலும் கடுமையாக தாக்குதல் தொடுத்தனர். [உதாரணம், அன்று சன் டிவியில் பணியாற்றிய மாலன்]
ஆனால்
வைரமுத்து அதற்கு மறுத்துவிட்டார். அம்மறுப்பை மு.கருணாநிதி அவர்களிடமும் தெரிவித்தார் என அறிந்தேன். அவர் கவிஞர் என்ற நிலையில் அந்நிலைபாட்டை மு.கருணாநிதி அவர்களும் ஏற்றுக்கொண்டார்.
அவருடைய பாலியல் அத்துமீறல்கள் குறித்து வந்திருக்கும் புகார்கள் மட்டுமே அதிர்ச்சி அளிப்பவை. திரையுலகம் மட்டுமல்ல வணிகம், அரசியல், ஊடகம் என எல்லா துறைகளிலும் நானறிந்தவரை ‘ஆல்ஃபா மேல்’ எனப்படும் முதல்நிரை ஆண்களில் பெரும்பாலானவர்கள் பெண்களை வெல்வதை வெற்றி என நினைப்பவர்களே. இலக்கியத்திலும் அவ்வாறுதான். நம் வழிபாட்டு நாயகர்களிடம் அதையெல்லாம் சென்ற தலைமுறை வரை நாம் கொண்டாடியிருக்கிறோம்.
இன்று பெண்களின் குரல் எழும்போதே நமக்கு அதன் மேல் விமர்சனங்கள் எழுகின்றன.
அதற்கப்பால் பெண்களை மிரட்டுதல், தொடர்ந்து வேட்டையாடுதல், துன்புறுத்துதல்
என சிலவற்றை வைரமுத்து செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது தீவிரமானது, கடுமையான கண்டனத்திற்கு உரியது. ஆனால் இவை நீதிமன்றக் குற்றச்சாட்டுக்கள்
அல்ல. நிரூபிக்கமுடியாதவை.
இக்குற்றச்சாட்டுகளின் நோக்கம் இவ்வாறு நிகழ்கிறதென்று
கவனப்படுத்துதல் மட்டுமே.
அப்போது நாம் செய்யவேண்டியது என்ன? ஒரு குற்றச்சாட்டு வந்ததுமே ஒருவரை முற்றாக ஒதுக்கிவிடவேண்டுமா? அது நாளை எந்தப்பெண்ணுக்கும்
கொலை ஆயுதத்தை கையில் கொடுத்ததாக ஆகிவிடாதா என்ன?
இந்தக் குற்றச்சாட்டுகளின்
வழியாக வரும் சிறுமை என்பதே ஒரு தண்டனை. அதோடு இத்தகைய நடத்தையை நாம் ஏற்கவில்லை, கண்டிக்கிறோம் என சூழல் குற்றம் சாட்டப்பட்டவரிடம்
சொல்லவேண்டும். பொதுச்சூழலில் இந்தவகையான செயல்பாடு ஏற்கப்படாது என்னும் எண்ணம் பொதுவாக உருவாகவேண்டும். அதுவே நாளை பொதுத்தளத்திற்கு
வரும் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் ஒரு விழுமியமாக வளரும். அதாவது ஒரு சமூகக் கண்காணிப்புக்கான கோரிக்கையையே பெண்கள் முன்வைக்கிறார்கள்.
வைரமுத்து விஷயத்தில் அது நிகழவில்லை என்பதே பெண்களின் வருத்தமாக இருக்கிறது. குற்றம் சாட்டியவரை அவமானப்படுத்தவே ஊடகங்கள் முயன்றன. குற்றச்சாட்டை பொருட்படுத்தாமல் கடந்துசென்றன. அக் குற்றச்சாட்டுக்களை மேலும் புகழ்பாடல்கள் வழியாக மறைக்கமுடியும் என நம்புகின்றன. இந்து நாளிதழின் இந்தக் கட்டுரைகளின் முதன்மை இலக்கு அதுவாக இருக்கிறது.
’வைரமுத்து மீதான இக்குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றால் வன்மையாக கண்டிக்கத்தக்கவை’ என்ற வெளிப்படையான கண்டனத்துடன் மேற்கொண்டு அவருடைய படைப்புலகைப் பற்றிப் பேசுவதே நாம் செய்யக்கூடுவது. ‘வைரமுத்து தன் குற்றமின்மையை பொதுவெளியில் அறிவிக்கவேண்டும்’ என்றுமட்டுமே நாம் அதிகபட்சம் கோரமுடியும். அதுகூட நடக்கவில்லை என்பதே சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வகையிலேயே பெருந்தேவியின் கண்டனம் மதிப்பு கொண்டது.
என்னைப் பொறுத்தவரை வைரமுத்து மீதான அக்கண்டனத்துடன் மேலே செல்கிறேன். ஆனால் வைரமுத்து பற்றிய என் மதிப்பீடு அதன் அடிப்படையிலானது
அல்ல. அதைவைத்து அவரை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதும் என் நோக்கம் அல்ல. வைரமுத்துவின் படைப்புக்கள் ஆளுமை குறித்த என் மதிப்பீட்டை முன்னரே விரிவாக முன்வைத்துவிட்டேன்.
அவருடைய அப்பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படும்
என்றால் மிக வன்மையாக அதைக் கண்டிப்பேன். ஆனால் அப்போதுகூட அக்கண்டனத்துடன்
அவருடைய படைப்புக்களை இணைத்துக்கொள்ள மாட்டேன். அவற்றை தனியாகவே அணுகுவேன். ஜி.நாகராஜன் பற்றி நான் அறிந்தவை இன்னும் கொடிய உண்மைகள்.
நான்
வைரமுத்துவின் எழுத்தின் தரம் பற்றிய இலக்கிய விமர்சனக் கருத்தையே தொடர்ச்சியாக முன்வைக்க விழைகிறேன். திரைப்பாடல்களுக்கு வெளியே அவருடைய இலக்கியப்படைப்புகள்,
நாவல் கவிதை இரண்டுமே மிகப்பலவீனமானவை.
கலையமைதியற்ற சொல்முழக்கமும்
செயற்கையான உணர்வுப்பெருக்கமும்
கொண்டவை.
ஆனால்
அவை முற்றிலும் தரமற்றவை என்று சொல்லமாட்டேன். அவை பொழுதுபோக்கு எழுத்திற்கு ஒருபடிமேலாக, இலக்கிய எழுத்தின் தொடக்கநிலையில்
நிலைகொள்பவை. ஆகவேதான் அவற்றுக்கு வெகுஜன மதிப்பு உருவாகிறது. அந்த அழகியலுக்கு மாற்றாக இன்னொரு அழகியலை உருவாக்கவே நாம் முயல்கிறோம்- ஒரு வாழ்நாள் பணியாக எந்த நலனையும் எதிர்பாராமல் அதைச் செய்கிறோம். விமர்சனம் அந்நிலைபாட்டில்
இருந்தே.
அந்நிலையில் உள்ள ஒருவரை நவீனத் தமிழிலக்கியத்தின் தலை ஆளுமையாக முன்வைப்பது ஆபத்தானது. அது ஓர் தவறான ஆளுமையை முன்னிறுத்துதல்
அல்ல, தவறான விழுமியத்தை முன்னிறுத்துவது.
அது இலக்கியத்தின் அடிப்படையையே அழிக்கும் செயல். அதை கடுமையாக கண்டிப்பது என்பது நாம் நம்பி முன்வைக்கும் கலைவிழுமியங்களின் அடிப்படையிலேயே.
எவ்வகையிலும் தனிப்பட்ட முறையில் அல்ல.
நான்
அளித்த தலைப்பை ஒட்டி சில நண்பர்களின் வருத்தங்கள் வந்தன. என் கண்டனம் வைரமுத்துவுக்கு
அல்ல, அவர் தன் விழைவை நோக்கிச் செல்கிறார். என் முதன்மைக் கண்டனம் தமிழ் இந்து நாளிதழ் மீதுதான். நான் சுட்டியதும் அதைத்தான். அது ஓர் இலக்கிய மதிப்பீட்டை உருவாக்குவதாக பாவலா காட்டுகிறது. நவீன இலக்கியவாதிகளைப் பற்றி
வெளியிடுகிறது. ஆனால் அதன் உச்சியில் வைரமுத்துவை தூக்கி வைக்கிறது. அதன் வழியாக உருவாக்கிய இலக்கிய மதிப்பீட்டை அழிக்கிறது. நாம் கண்டிப்பது அந்தக் கீழ்மையைத்தான்.
நான்
ஓர் இலக்கிய விழுமியத்தை மட்டுமே முன்வைக்க விரும்புகிறேன்.
இது நான் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்வைப்பது, என் தரப்பு இங்கே என்றுமுள்ள இலக்கிய அழகியலின் குரல்.
கடைசியில் எஸ்கேப்
ஒரு பாலியல் குற்றச்சாட்டை வைத்து நான் வைரமுத்துவை நிராகரிப்பதாகக் காட்ட முயல்கிறார்கள் சிலர். அவருடைய இலக்கிய இடம் பற்றிய மறுப்பு என்பது முழுக்க
முழுக்க இலக்கிய அழகியல் சார்ந்தது. அவருடைய எல்லா திரைப்பாடல் வெற்றிகளையும், கருத்தில் கொண்ட பின்னரே இதைச் சொல்கிறேன்.-
எல்லாவகையான கருத்தாடல்களில் இருந்தும் விலகிக்கொள்ள விழைகிறேன். குவியவேண்டியிருக்கிறது, உள்ளே இருந்து ஏதாவது எழுந்து வரவேண்டியிருக்கிறது. கொஞ்சநாள் ‘ஸ்லீப் மோட்’
வைமுவிற்கு
ஜெமோவின் காதல் கடிதம் – அடுத்த பதிவு
No comments:
Post a Comment