Friday, July 3, 2020

கொரோனா நிச்சயம் முடிவுக்கு வரும்!

 - டாக்டர் இக்பால் பாப்புகுஞ்ஞி


2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் வெளிப்பட்ட கோவிட்-19 உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பறிக்கத் தொடங்கி இப்போது சுமார் ஆறு மாதங்களாகின்றன. அனைவரது நாக்கின் நுனியிலும் இப்போது ஒரு கேள்வியே உள்ளது. கோவிட் என்றாவது முடிவுக்கு வருமா? ஆம் எனில் எப்போது? எப்படி? தடுப்பூசி கண்டுபிடித்து, நோயை கட்டுப்படுத்தி தடுக்க, சிகிச்சைக்கு உகந்த வைரஸ் எதிர்ப்பான்கள் கண்டறிவது போன்றவையே நோய் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகள். ஆனால் கொள்ளைநோய் (Pandemic) உள்ளூர் நோயாக (Endemic) மாறவும் வாய்ப்பு உண்டு. இதற்கு முன்பு மனிதகுலத்தின் முடிவை முன்னறிவித்துவிட்டதாக கூறப்பட்ட கொள்ளை நோய்களில் பலவற்றை முற்றிலுமாக ஒழிக்கவோ சிலவற்றை பகுதி அளவிலேனும் பின்வாங்கச் செய்யவோ முடிந்தது இந்த வழிமுறைகளின் ஊடாகத்தான்.
தடுப்பூசிக்கான ஆராய்ச்சி
தடுப்பூசி வழங்குவதன் மூலம் துல்லியமாக மனித உடலில் வைரசுக்கு எதிரான பிறபொருட்களை (Antibodies) உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. கோவிட்டுக்கு காரணமான மார்ஸ் கொரோனா வைரஸ் 2, ஒரு ஆர் என் ஏ வைரஸாகும். ஆர்.என்.ஏ வைரஸ்கள் தொடர்ந்து மரபணு பிறழ்வுக்கு (Mutation) உட்படுவதால் தடுப்பூசி தயாரிப்பு கடினமாக இருக்கும். அனைத்து வகையான மரபணு கட்டமைப்புகளுக்கும் பொருத்தமான தடுப்பூசி தயாரிப்பது எளிதானது அல்ல. சார்ஸ் கொரோனா வைரஸ் 2 இன் மரபியல் பல்வேறு நாடுகளில் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.
சுமார் 9000 வைரஸ் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை என்பது ஆறுதலளிப்பதாகும். அதனால்தான் விரைவில் தடுப்பூசி தயாரிப்பு சாத்தியமாகும் வாய்ப்புள்ளது. இதனிடையே பல நாடுகளிலும் தடுப்பூசி ஆராய்ச்சி முயற்சிகள் நடந்து வருகின்றன. வைரஸில் உள்ள ஆர் என் ஏ தந்தூ, புரத கவசம் போன்றவற்றின் அடிப்படையிலோ, மரபணு கவசம் போன்றவற்றின் அடிப்படையிலோ, மரபணு தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தியோ தடுப்பூசி தயாரிக்கலாம். தடுப்பூசி மாதிரியை கண்டறிதல், விலங்குகளில் பரிசோதனை, மூன்று கட்டங்களில் மனிதர்களிடம் பரிசோதனை போன்றவற்றுக்கு பிறகுள்ள தயாரிப்பு நிறுவனங்களின் தர பரிசோதனை போன்றவற்றை கடந்த பின்னரே தடுப்பூசியை விற்பனைக்கு கொண்டுவர முடியும்.
தற்போது, மனிதர்களில் பரிசோதனை நடத்த வேண்டிய மருத்துவ முன்னோட்ட சோதனை கட்டத்திற்கு 10 தடுப்பூசிகள் வந்துவிட்டன. 126 தடுப்பூசிகள் அதற்கு முந்தைய நிலையில் உள்ளன. இந்தியாவில் இருந்து மூன்று நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. பூனாவில் உள்ள சீரம் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா செனெகாவு நிறுவனமும் கூட்டாக நடத்தும் தடுப்பூசி, மருத்துவ சோதனை நிலையை எட்டியுள்ளது.
ஐ சி எம் ஆர், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து பரிசோதனை செய்து வருகிறது. இந்தியன் இம்யூனோலாஜிக்கல் நிறுவனத்தின் பரிசோதனையும்  ஆரம்ப நிலையில் உள்ளது. மனிதர்களில் நடத்தப்படும் கிளினிக்கல் பரிசோதனை ஒவ்வொரு நிலையையும் கடக்க மாதங்களோ ஒருவேளை வருடங்களோகூட ஆகலாம். இதனிடையே மேலும் அதிகமான மரபணு பிறழ்வுகளுக்கு வைரஸ் உட்பட்டால் அதுவும் பிரச்சனையாக மாறலாம். எப்படி இருந்தாலும் இதுவரை கிடைத்துள்ள விவரங்களின்படி கோவிட் தடுப்பூசியை 2021 இல் எதிர்பார்த்தால் போதும். நல்வாய்ப்பு அமைந்தால் 2021 ஏப்ரல் மாத வாக்கில் கிடைக்கலாம் என்பது வல்லுநர்களின் கருத்து.
சிகிச்சைக்கான மருந்துகள்
கோவிட்டுக்கு பலனளிக்கும் மருந்தை கண்டறிவதற்கான மற்றொரு வழியாக உலக சுகாதார அமைப்பு சில மருந்துகளை சோதனை முறையில் சாலிடாரிட்டி டிரயல் (Solidarity Traial) என்கிற பெயரில் பரிசீலித்து வருகிறது. கேரளமும் இந்த பரிசீலனையில் பங்கு வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஜிலியாட் என்கிற அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்த ரெம்டெசிவிர் (Remdesivir) என்கிற மருந்தும் எய்ட்ஸ்க்கு பயன்படுத்தி வரும் லோபினவிர்/ரிட்டோனவிர் (Lopinavir/Ritonavir) போன்ற மருந்துகளும், இப்போதும் கேரளத்தில் சோதனை முறையில் பயன்படுத்தி வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினும், எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் என கருதப்படும் இன்டர்பேரோன் பீட்டா என்கிற மருந்தும் சாலிடாரிட்டி டிரயலில் பயன்படுத்தப்படுகிறது.
சாலிடாரிட்டி டிரயல் வெற்றிபெற்றால்கூட மற்றொரு பிரச்சனை முன்னுக்கு வரும். எய்ட்ஸ் நோய் பிரச்சனையில் அது நிகழ்ந்தது. எய்ட்ஸ் சமூக பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களிடம் பரவியிருந்தபோது அதற்கான மருந்துகளை பெரிய நிறுவனங்கள் அதிக விலையில் விற்கத் தொடங்கின. ஆனால் மருந்து மிகவும் அவசரமாக தேவைப்பட்ட ஏழைகளுக்கு அது பயன்படவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவில்
தற்போதுள்ள காப்புரிமை முறையின்படி இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்து குறைந்த விலையில் எய்ட்ஸ் நோய்க்கான மருந்து விற்பனை செய்யப்பட்டதால் ஏழைகளுக்கு அவை கிடைத்தது. அதன் மூலம் எய்ட்ஸ் கட்டுப்பாடுக்கு வந்தது. அப்படித்தான் இந்திய மருத்துவத் துறை ஏழைகளின் மருந்தகம் என்று அழைக்கப்பட்டது.
இப்போது நிலைமை மாறிவிட்டது. உலக வங்கியின் (TRIPS) டிரிப்ஸ் நிபந்தனையின் கீழ் காப்புரிமைச் சட்டம் மாறியதோடு, இந்தியா அல்லது பிற நாடுகளால் காப்புரிமை மருந்துகளின் பொதுவான பதிப்புகளை தயாரிக்க முடியாது. தற்போது பரிசோதனையில் உள்ள மருந்துகளில் கொரோனாவுக்கானது மட்டுமே காப்புரிமை காலாவதியான மருந்து. அதன் காரணமாக சாலிடாரிட்டி டிரயல் வெற்றி பெற்றால்கூட கோவிட் மருந்து சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைத்துவிடும் என கருத முடியாது. இப்போதுகூட ஜிலியாட் நிறுவனம் தற்காலிகமாக ராயல்டி குறைவாக வழங்கினால் போதுமென ஒப்புக்கொண்டதால் மட்டுமே இந்தியாவில் ரெட்டீஸ் லேபரட்டரியும் மற்ற நிறுவனங்களும் ரெம்டெசிவிர் தயாரிக்க முடிவு செய்துள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி
தடுப்பூசி அல்லாத மற்றொரு வகையிலும் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுக்க உதவும் வழிமுறையை மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (Herd Immunity) என்று குறிப்பிடுவர். நோய் வந்து குணமானவர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புக்கான ஆன்டிபாடிகள் (Antibodies) மூலம் நோய் பரவலை தடுக்க முடியும். சமூகத்தில் 60 சதவிகிதம் பேருக்கு இவ்வாறு நோய் வந்து குணமானால் அந்த சமூகம் ஹெர்ட் இம்மியூனிட்டியை பெறும். நோய் பரவல் நின்றுவிடும் என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் ஹெர்ட் இம்மியூனிட்டி (மந்தை நோய் எதிர்ப்பு சக்தி) விவாதிக்கப்படுகிறது. அப்படியென்றால் விழிப்புணர்வுடன்கூடிய சமூக தலையீடுகளின் மூலம் (Social Engineering) ஏன் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுக்க முடியாது என்கிற யோசனையை பலரும் முன்வைத்தனர். இதை நியாயப்படுத்த கோவிட்நோயின் தன்மையும் சுட்டிக்காட்டப்பட்டது.
கோவிட் குறிப்பாக இளைஞர்களை தாக்கும்போது வெறும் சாதாரண நோய் மட்டும்தான். அவர்களிடம் 5 சதவிகிதமே நோய் தீவிரமாகிறது. 2-3 சதவிகிதம் மட்டுமே மரணத்திற்கு காரணமாகிறது. அதிலும்தீவிரமான இதர நோய்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே. அப்படியென்றால் இளைஞர்களை நோய் பாதிப்புக்கு உள்ளாக்கி நோய் அதிகரிக்கச் செய்து மோசமடையும் சாத்தியம் உள்ளவர்களை பாதுகாத்தால் மட்டும் போதாதா என்கிற கருத்தை முன்பு பலரும் முன்வைத்தனர். ஸ்வீடன் இத்தகைய ஒரு திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து,  விவாதங்களுக்குள் சிக்கியது. காரணம் 60 சதவிகிதம் பேருக்கு நோய் தொற்ற அனுமதிக்கவும் மரணத்துக்கான வாய்ப்பு உள்ளவர்களிடம் நோய் பரவாமல் பார்த்துக்கொள்வது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற செயல். இளைஞர்கள், முதியோர், மற்ற நோய்கள் உள்ளவர்கள் இடையே ஒரு சீனப் பெருஞ்சுவர் கட்டுவது எளிதான செயல் அல்ல. இப்படி இரு திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஏராளமானோரின் மரணத்திற்கு காரணமாகிவிடும் என்கிற வலுவான கருத்து மேலோங்கியது. அதைத் தொடர்ந்து இப்போது இந்த திட்டத்தை யாரும் முயற்சிக்கவில்லை.    
உள்ளூர் நோயாக மாற முடியுமா?
பரிணாம வளர்ச்சி மூலம் கோவிட், கொள்ளைநோய் (Pandemic) என்பதிலிருந்து உள்ளூர் நோயாக மாறுவது (Epidemic) என்பதே அடுத்த வாய்ப்பு. கோவிட்டுக்கு காரணமான ஸார்ஸ் கொரோனா வைரஸ்-2 பெரும்பாலும் வவ்வாலின் உடலில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என கருதப்பட்டது. வவ்வாலின் உடலில் உள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் இயைந்து நோய் ஏற்படுத்தாமல் வாழ்ந்து வந்த நோய் கிருமிகள் இவை . ஆனால் இயற்கை- சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளால் இந்த வைரஸ் மற்றொரு உயிரினத்திற்கு சென்றுவிட்டது. மனிதர்களிலும், வைரசின் தனித்தன்மை கொண்ட இதர விருந்தாளியான நடுத்தர உயிரினத்தின் (Intermediate Host) உடலிலும் புகுந்த வைரசின் தீவிரம் (Amplification) அதிகரித்தது. அவை மனிதரில் கடந்து நோய்க் காரணியாக மாறி மனிதர்களில் இருந்து மனிதருக்கு பரவவும் செய்கிறது.
வைரஸ் எந்த உயிரினத்தில் ஊடுருவினாலும் இரண்டு அறிகுறிகள் மட்டுமே காணப்படும். ஒன்று அவற்றின் உயிரணுக்களில் உள்ள கட்டமைப்புகளை பயன்படுத்துவது, இரண்டாவது, பல்கிப் பெருகி மற்ற உயிரினங்களுக்கு பரவுவது (Replication and Transmission). இவை இரண்டு மட்டுமே வைரசின் அறிகுறிகள். வசிக்கும் உயிரினத்தை கொல்வது அவற்றின் நோக்கமல்ல. அப்படி நிகழ்ந்தால் அவற்றின் நீடித்த பயணம் தடைபடும். உடம்பில் வைரஸ் புகுந்துவிட்டால் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் வைரஸுக்கு எதிராக வலுவாக வெளிப்படும்- ஸைட்டோகுயின் ஸ்டார்ம் (Cytokine Storm) என்று அழைக்கப்படும் நிகழ்வு நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற உறுப்புகளுக்கு சேதம் மற்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்களில் புகும் வைரஸ்களின் ஆரம்ப கட்ட தீவிரமும் (Virulence) பரவும் தன்மையும் அதிகமாக இருக்கும். இந்த கட்டத்தில் வைரஸின் விருந்தாளியான மனிதரின் மரண விகிதமும் இயல்பாகவே அதிகரிக்கும். மனிதர்களில் நோய் பரவலை தடுப்பது போன்ற நடவடிக்கைகளும் இப்போது மேற்கொள்ளப்படும். வைரஸ் பரவலுக்கான வாய்ப்பை குறைக்கும் இந்த சூழ்நிலை வைரஸின் தீவிரத்தை குறைப்பதற்கு இட்டுச் செல்லும்.
அதற்கு உதவிகரமான மரபணு பிறழ்வுக்கு (Mutation)  அவை உட்படும். தீவிரத் தன்மை கொண்ட வைரஸின் இருப்புக்கு உதவாத வைரஸின் மரபணு மாற்றங்கள் இயற்கை தேர்வின் மூலம் (Natural Selection) நிராகரிக்கப்படும். தீவிரம் குறைந்தவை மனித உடலுடன் சமரசம் செய்துகொண்டு பாதிப்பு இல்லாமலும் நீடிக்கும். மனிதர்களுடன் ஒருவகை சுற்றுச்சூழல் சமநிலை (Ecological Equilibrium) ஏற்பட்டு தொற்றுநோய் உள்ளூர் நோயாக மாறும். இப்படியொரு நிலைமை ஏற்படுவதை புறக்கணிக்க முடியாது. ஏராளமான மிருக- மனித கொள்ளை நோய்கள் இவ்வாறுதான் முடிவுக்கு வந்த அனுபவம் நம்மிடம் உள்ளது. ஆனால் இப்போது இவற்றில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை கவனிக்க வேண்டும். மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கவும் அல்லது கோவிட் ஒரு உள்ளூர் நோயாகவோ மாறவும் வாய்ப்புள்ளது. அதற்காக காத்திருக்கலாம். ஏதேனும் வகையில் கொள்ளை நோயின் கோர தாண்டவம் முடிவுக்கு வரும் என்பது மட்டும் உறுதி. அறிவியல் முன்னேற்றமும் பரிணாம வளர்ச்சியும் மனிதர்கள் முன்பு உள்ளன.
கட்டுரையாளர்: திருவனந்தபுரம் பல்கலைக்கழக  துணை வேந்தர் மற்றும் கேரள அரசின் திட்டக்குழு  உறுப்பினராவார். நரம்பியல் வல்லுநரான இவர் கேரள  சாஸ்திரிய சாகித்ய பரிஷத்தின்
                                 (கேரள அறிவியல் இயக்கம்)  முன்னாள் தலைவருமாவார்.
 

நன்றி: மாத்ருபூமி மலையாள நாளிதழில் (26.6.2020) 
 

தமிழாக்கம் : சி.முருகேசன்

நன்றி - தீக்கதிர் 03.07.2020

2 comments:

  1. உபையோகமான எளிய அறிவியல் தகவல்கள். நன்றி.

    ReplyDelete