Tuesday, March 6, 2018

தந்தியை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு




கடந்தாண்டு மறைந்த எங்கள் மகத்தான தலைவர் தோழர் ஆர்.கோவிந்தராஜன் அவர்களின் முதலாண்டு நினைவு தினத்தை ஒட்டி  கடந்த வாரம் ஒரு கருத்தரங்கம் நடத்தினோம்.

இந்த நிகழ்விலே எங்கள் தஞ்சை கோட்டத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக செயல்பட்டவருமான தோழர் என்.சீனிவாசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.



தோழர் ஆர்.ஜி பற்றி அவர் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வு மனதை மிகவும் நெகிழ வைத்தது. அதை அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டது.

“ஒரு மிகப் பெரிய பிரச்சினை தொடர்பாக கோட்ட மேலாளரிடம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். விவாதம் சூடாகப் போய்க் கொண்டிருந்தது. அப்போது தோழர் ஆர்.ஜிக்கு ஒரு தந்தி வந்தது. அதைப் படித்தார். பின்பு அதை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு விவாதத்தை தொடர்ந்தார். அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் விவாதம் தொடர்ந்து தீர்வு ஏற்பட்ட பிறகு வெளியில் வந்தோம்.

தந்தியில் வந்தது என்ன செய்தி என்று கேட்ட போது தந்தியைக் காண்பித்தார் தோழர் ஆர்.ஜி.

அவரது மனைவி பிரசவத்திற்குச் சென்றிருந்தார். அந்த குழந்தை இறந்தே பிறந்திருந்தது என்பது அந்த தந்தி கொண்டு வந்த துயரச் செய்தி.

அந்த துயரத்தை மனதில் அடக்கிக் கொண்டு ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முனைப்பாக இருந்த தலைவர் தோழர் ஆர்.ஜி”

இந்த சம்பவத்தை தோழர் ஆர்.ஜி மறைந்து ஒரு வருடம் ஆன பின்பே அறிய முடிந்தது.

வேர்களின் தியாகம் விழுதுகளுக்கு  தெரிவதே இல்லை.

1 comment: