இன்று உலக நாடக தினம்
நாடகத்தோடு தொடர்புடைய பலரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். நமக்கு அந்த அளவு அனுபவங்கள் கிடையாது என்றாலும் இரண்டு நாடகங்களை எழுதியுள்ளதால் அவற்றைப் பற்றி எழுதி நாமும் ஜோதியில் ஐக்கியமாகி விடலாம் என்பதால் இந்த பதிவு.
2012- 2013 ல் எங்கள் கோட்டத்தின் வெள்ளி விழா ஆண்டில் நடத்திய முக்கியமான ஒரு நிகழ்வு "கலை விழா'. அனைத்து கிளைகளும் ஒரு கலை நிகழ்ச்சியை வழங்கிய திருவண்ணாமலையில் நடைபெற்ற அந்த விழா என்றென்றும் மனதில் நிற்கும் ஒரு விழா.
நாங்கள் பணி புரியும் கோட்ட அலுவலகக் கிளை சார்பாக என்ன விழா நடத்துவது என்று ஒரு விவாதம் ஒரு வாகனத்தில் நடைபெற்றது. திருவண்ணாமலையில் ஒரு திருமணத்திற்கு போய் விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். முன்னே சென்ற இன்னொரு வாகனத்தில் இருந்த மூத்த தோழர் வி.ஆர்.ஆர் அவர்களின் தலையில் எங்கள் வாகனத்தின் ஒளி பட்டு எதிரொலிக்க அவருக்கு தொலை பேசி செய்து வம்பிழுத்துக் கொண்டிருந்தார்கள். அதை அவரும் மிகவும் ரசிப்பார்.
அப்போதுதான் எங்கள் பொருளாளர் தோழர் எஸ்.குணாளன் சொன்னார்.
'பேசாம வி.ஆர்.ஆரை நடுவில் உட்கார வைத்து வழக்கம் போல அவரை ஓட்டினாலே அதுவே சூப்பராக இருக்கும்"
அவரது அந்த கமெண்டே ஒரு நாடகத்திற்கான கருப் பொருளாக அமைந்தது. வி.ஆர்.ஆர் என்பதை மன்மோகன்சிங் என்று மாற்றினால் என்ன என்று ஒரு சிந்தனை எழுந்தது. அதை அப்படியே நூல் பிடித்து ஒரு நாடகமாக தயார் செய்ய முடிந்தது. அது கீழே உள்ளது. அவசியம் படியுங்கள்.
நாடகம் தயாரானதும் பாத்திரங்களுக்குப் பொருத்தமான தோழர்களை முடிவு செய்து ஒத்திகை பார்த்து வெற்றிகரமாக அரங்கேற்றினாலும் சில சொதப்பல்களும் இல்லாமல் இல்லை. சில அராஜகங்களையும் செய்தோம்.
மகாத்மா காந்தி வேடத்தில் நடித்த தோழர் வஜ்ஜிரவேலுவை மொட்டையடிக்க வைத்தோம். அவரும் முழுமனதோடு அதை ஒப்புக் கொண்டார்.
மன்மோகன்சிங் பாத்திரத்தில் நடித்த தோழர் ரங்கராஜனுக்கு அப்போதுதான் திருமணம் நிச்சயமாகி இருந்தது. கலை விழா முடியும் வரை தாடி வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி விட்டோம். நரைத்த தாடி வேண்டும் என்பதால் அதிலே சாக்பீஸ் பௌடரைத் தூவ அது போக ரொம்ப நேரம் ஆனது.
விவசாயி பாத்திரத்தில் நடித்த தோழர் ஸ்ரீதர் பொருத்தமான உடையில் வந்தார். நொடித்துப் போன வியாபாரி வேடத்தில் நடித்த தோழர் பாஸ்கர்தான் கடைசி நிமிடத்தில் கசங்கிப் போன சட்டைக்குப் பதிலாக பளபளப்பான ஒரு சட்டை, சால்வையோடு வந்து பிறகு எல்லோரிடமும் பாட்டு வாங்கிக் கொண்டார்.
கடைசிக் காட்சியில் காந்தி வேறு வசனத்தை மறந்து விட்டார். இருப்பினும் நன்றாகவே அமைந்த நாடகம் அது.
இந்த பதிவிற்காக பழைய புகைப்படங்களை பார்த்த போது ஒரு துயரமும் இணைந்தே வந்தது.
பண்ருட்டி கிளை நடத்திய நாடகத்தில் ( அன்றைய விழாவின் டாப் ஒன் நிகழ்வு அதுதான்) அரசியல்வாதியாக அசத்திய
தோழர் பி.மணிமொழி.
அன்றைய நிகழ்வை தொகுத்து வழங்கி, ஒரு கிராமியப் பாடலையும் பாடி சிறப்பித்த
தோழர் சி.வெங்கடேசன்
திருவண்ணாமலையில் நடந்த கலை விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தது மட்டுமல்லாமல் தானும் நடமாடி, நிகழ்வின் இறுதியில் விழாவில் கலந்து கொண்டிருந்த குழந்தைகளின் கையில் கொடியை அளித்து ஒரு திடீர் நடனத்தை ஏற்பாடு செய்து கலக்கிய
தோழர் ஃப்ளாரன்ஸ் லிடியா சாந்திபாய்
ஆகிய மூவரும் இப்போது நினைவில்தான் வாழ்கிறார்கள் என்ற துயரம் மனதை கனக்க வைக்கிறது.
சரி இப்போது நாடகத்தை படியுங்கள்.
என்ன பதில்?
காந்தி சிலையாக நிற்கிறார்.
கீழே உள்ள நாற்காலியில் பிரதமர் வந்து உட்கார்கிறார்
பிரதமர்
அம்மாடி, இந்த நாடாளுமன்றம் முடிஞ்சதோ, நான் பிழைச்சேனோ,
யப்பப்பா என்ன சத்தம்? என்ன குழப்பம்?
வந்தோமோ, படிக்காசை வாங்கினோமா, காண்டீன்ல போய் டீ குடிச்சோமானு இல்லாம இதைப்பண்ணாத, அதைப் பண்ணாத னு போட்டு உயிர எடுக்கிறாங்க,
இன்னும் இரண்டு மாசம் நிம்மதி,
எங்கயாவது பாரீன் போக வேண்டியதுதான்.
எங்க போகலாம்?
ஸ்விஸ் போவோமா, மாதாஜி அங்க போட்ட பணமெல்லாம் பத்திரமா இருக்கானு கூட பாத்திட்டு வந்துடலாம்.
(பிண்ணனியில் “ போவோமா ஊர்கோலம் “ பாடல் ஒலிக்கிறது.
வியாபாரி உள்ளே நுழைகிறார்;
வியாபாரி : ஜீ இப்டி செஞ்சுட்டீங்களே, என் பொழைப்புக்கு என்ன வழி?
பிரதமர் : என்னாச்சு?
என் பெண்டாட்டி தாலியை சேட்டுகிட்ட அடமானம் வைச்சு மளிகைக் கடை வைச்சேன். நீ பாட்டுக்கு வால்மார்ட்டை திறந்து விட்டுவிட்டு என் கடைய மூட வைச்சுட்டியே, என் பிழைப்புக்கு என்ன செய்ய? என் பெண்டாட்டி தாலிக்கு என்ன பதில்?
பிரதமர்: எனக்கு தெரியாது.
விவசாயி உள்ளே நுழைகிறார்.
விவசாயி : ஐயா மவராசா, எனக்கு என்ன வேலை? எனக்கு என்ன வேலை?
பிரதமர் : என்னாச்சு?
விவசாயி: கஷ்டமோ, நஷ்டமோ, உயிரைக் கொடுத்து விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கோம். விதை விலை ஏறிப்போச்சு, உரம் விலை ஏறிப் போச்சு, காவிரியை நினைச்சா கண்ணீர்தான் வரும், மோட்டார் போடலாம்னா கரெண்டே கிடையாது. தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிச்ச நேரத்துலதான் ஐயா, வேற வேலைக்கு போகச்சொன்னீங்க, சொல்லுங்க, எனக்கு என்ன வேலை? எனக்கு என்ன வேலை?
பிரதமர் : எனக்கு தெரியாது.
விவசாயி.: தெரியாதா, அப்ப எதுக்கு வேற வேலைக்கு போகச்சொன்னே? என்னமோ பெரிசா வேலையெல்லாம் கொட்டிக் கிடக்கற மாதிரி! சரி நாங்க விவசாயத்த விட்டுட்டா நீ என்ன சாப்பிடுவே?
பிரதமர் : எனக்கு தெரியாது
குடும்பப்பெண்மணி உள்ளே நுழைகிறார்?
குடும்பப்பெண்மணி : ஒரு வேளை கஞ்சி கூட கிடைக்காம பண்ணிட்டியே படுபாவி,
பிரதமர் : என்னாச்சு?
குடும்பப்பெண்மணி : ஏதோ ரேஷன் கடையில் இருபது கிலோ அரிசி கிடைச்சது. பூச்சியோ, புழுவோ சுத்தம் பண்ணி ஒரு வேளை கஞ்சி நானும் என் குழந்தையும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம். டைரக்டா பாங்கில பணம் போட்டே, அந்த பாவி மனுஷன் அதை அப்டியே எடுத்துக்கிட்டு டாஸ்மாக் போயிட்டான். இப்போ நாங்க பட்டினி. நாங்க வாழவா? சாகவா?
பிரதமர் : எனக்கு தெரியாது
மாணவி உள்ளே நுழைகிறாள்
மாணவி காந்தி சிலையைப் பாத்து : நடுராத்திரியில நகை போட்டுகிட்டு தனியா நாங்க பத்திரமா போனாதான் சுதந்திரம்னு சொன்னீங்க, வயசான பாட்டிங்களே வெறுங்கழுத்தோட கூட பத்திரமா போக முடியல. இந்த மனுசனுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கானு பாரேன்.
பிரதமர் : என்னாச்சு?
மாணவி : என்னாச்சா? நாட்டில் என்ன நடக்குதேனு தெரியாதா? சுத்தம்.. நாங்க எல்லாம் தைரியமா நடமாட முடியுமா? முடியாதா?
பிரதமர் : எனக்கு தெரியாது
எல்.ஐ.சி ஊழியர் வருகிறார் :
எல்.ஐ.சி ஊழியர் : மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், நீங்க செய்யறது நியாயமா?
பிரதமர் : என்னாச்சு? நீ யாரு?
எல்.ஐ.சி ஊழியர் : நானா? எல்.ஐ.சி
அவர் முடிப்பதற்கு முன்பாகவே மன்மோகன்சிங் புலம்புகிறார்.
பிரதமர் : வந்துட்டானுங்கய்யா, ஆ, ஊ னா கையில சிவப்பு கொடிய எடுத்துக்கிட்டு பிரச்சாரம், பிரசுரம், பேரணினு. இவங்க எங்க மனு கொடுக்க வந்திருவாங்களோனு பயந்து கிட்டே பாதி எம்.பிங்க தொகுதிக்கே போகறதில்லை.
எல்.ஐ.சி ஊழியர்: எல்.ஐ.சி, ஜி.ஐசி, பொதுத்துறை எல்லாம் நல்லாதான போயிட்டிருக்கு, அப்புறம் எதுக்கு விக்கப் பாக்கிறீங்க, நாங்களும் இல்லாம போனா, அப்புறம் பணம் வேணும்னா எங்க போவீங்க, நீங்களெல்லாம் படிச்சுதான டாக்டர் பட்டம் வாங்கினீங்க? இல்ல
அதற்குள் உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
என்ற ரிங் டோனோடு தொலை பேசி அடிக்கிறது:
பிரதமர் வாயில் விரலை வைத்து
பிரதமர்: உஷ் . யாரும் பேசாதீங்க, பாஸ் லைனில வராரு
தொலைபேசியில் ஒபாமா (தூரத்தில் அமர்ந்த படி)
ஒபாமா : யாரு இந்தியப் பிரதமரா?
பிரதமர் : பாஸ் குட் மார்னிங், இல்லையில்லை குட் ஈவினிங்
இல்லை குட் ஆப்டர்னூன்.
ஒபாமா: என்னயா தடுமாறிக் கிட்டே இருக்க?
பிரதமர் : இல்லை பாஸ், துரையோட குரல கேட்டாலே சும்மா அதிருது.
ஒபாமா? சரி சரி சொன்ன பேச்ச கேட்கவே மாட்டியா?
பிரதமர் : என்ன பாஸ் அப்டி சொல்லிட்டீங்க? அணு ஒப்பந்தம் ஓகே, வால் மார்ட் ஓகே, பென்ஷன் ஒகே, ஈரான் ஓகே, இன்னும் என்ன பாஸ் இருக்கு?
ஒபாமா? இன்னும் இன்சூரன்ஸ் இருக்கே, நீ செய்யறியா இல்லை நான் வேட்டி கட்டின யாரையாவது பி.எம் ஆக்கவா? இங்க பாரு, நான் எப்ப கூப்பிடுவேனு சாமியாருங்க வேற காத்துக்கிட்டே இருக்காங்க,
பிரதமர் : பாஸ், பாஸ் அப்படியெல்லாம் அவசரப்பட்டு எதுவும் செஞ்சிடாதீங்க, நானே என் கையால உங்களுக்கு மணக்க, மணக்க, எல்.ஐ.சி யையும் விருந்து வைக்கிறேன்.
எல்லோரும் சேர்ந்து : அடப்பாவி, நீ இந்தியாவுக்குத்தான் பிரதம மந்திரியா?
பிரதமர் : எனக்கு தெரியாது.
சிலையாய் இருக்கும் காந்தி கீழே இறங்குகிறார்.
வெள்ளைக்காரன விட மோசமா இருக்கியே, உங்க கூட்டத்தையே துரத்தினாதான் இந்தியா உருப்படும் என்றபடியே கைத்தடியை ஓங்குகிறார்.
அப்படியே எல்லாரும் உறைந்து நிற்கிறார்கள்.
No comments:
Post a Comment