Thursday, March 1, 2018

அவர் அன்று சொன்னது . . .




அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை ஒரு மகத்தான சங்கமாக உருவாக்கிய மாபெரும் தலைவரான தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களின் பிறந்த நாள் இன்று.

எங்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட அந்த ஒப்பற்ற தலைவருக்கு செவ்வணக்கம் கூறி 

ஆளும் வர்க்கத்தின் குணாம்சம் குறித்து தோழர் சரோஜ் 1963 ல் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஆளும் வர்க்கம் தன் நிலையை இன்னும் கெட்டிப்படுத்தியுள்ள சூழலில் உழைக்கும் வர்க்கத்தின் பணி சவால்கள் நிறைந்ததாய் மாறியுள்ளது.

அந்த சவால்களை சந்திக்கும் உறுதியை தோழர் சரோஜ் அவர்களின் வாழ்வும் அவரது எழுத்துக்களும் அளித்திடும். 

சுமைகளை பகிர்ந்து கொள்ளல்

தோழர் சரோஜ் சவுத்ரி
இன்சூரன்ஸ் வொர்க்கர் ஜூலை 1963



நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் வாசகர்களுக்கு தீனி போடக் கூடிய அனைத்து ஊடகங்களும் தங்களின் ஒவ்வொரு புதிய இதழிலும் ஒரு கோஷத்தை தங்களின் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு பிரபலப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தேசம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளதாகச் சொல்லி வாசகர்களுக்கு அவர்களின் கடமைகளையும் பொறுப்புக்களை நினைவு படுத்தி அவர்களின் தேச பக்தியை உசுப்பேற்றி தியாக உணர்வை தூண்டுகிற கோஷம் அது. அன்றொரு நாள் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு ஆங்கில நாளிதழில் முக்கியமான செய்திகளை படித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க நிகழ்வு, சோவியத் நிகழ்வு என்று தாவி இங்கிலாந்து பற்றிய செய்தியை படித்துக் கொண்டிருக்கையில் கொட்டை எழுத்தில் மிகுந்த முக்கியத்துவத்தோடு அன்று வெளியிடப்பட்ட “ சுமைகளை புன்னகையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்” என்ற கோஷத்தின் மீது என் கண்கள் நிலை கொண்டது.

சுமையை புன்னகையோடு பகிர்ந்து கொள்ள நான் இல்லையில்லை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோமா? நாம் நிஜமாகவே சுமையை பகிர்ந்து கொண்டிருக்கிறோமா? கட்டாய வைப்பு நிதிக்கு ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்ய எனது நிறுவனத்திற்கு அதிகாரம் அளிக்கும் படிவத்தை நேற்றுதான் பூர்த்தி செய்து கொடுத்தேன். இதன் மூலம் என் ஊதியத்திலிருந்து எனது குடும்பத்தின் செலவுகளுக்கான தொகையில் பெருமளவு தொகை வெட்டப் படுகிறது. என் சகாக்களைக் கேட்ட போது அவர்களும் அதையே செய்ததாகச் சொன்னார்கள். ஏற்கனவே பற்றாக்குறையில் தவிக்கும் குடும்ப பட்ஜெட்டில் மிகப் பெரிய நெருக்கடியை இது உருவாக்கியுள்ளது. குடும்பப் பொருளாதாரத்தில் எந்த செலவை வெட்ட முடியும்? கைக்குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்க முடியுமா அல்லது குழந்தைகளின் கல்விக்கு செலவழிக்காமல் இருக்க முடியுமா? நிச்சயமாக இது சாத்தியமில்லை. கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அதன் மூலம் எதிர்காலம் அடமானம் வைக்கப்படுகிறது.

கட்டாய வைப்பு நிதி மூலம் அறுபதிலிருந்து எழுபது கோடி ரூபாய் வரை அரசு வசூலிக்க முயல்கிறது. தேசத்தின் வருமானத்தில் பெரும் பகுதியை அபகரித்துள்ள அந்த கனவான்களிடமிருந்து அப்பணத்தை பெற முடியாதா? பொருட்களை பதுக்கி வைத்து லாபம் பார்க்கும் பேர்வழிகளிடமிருந்து பெற முடியாதா?

இந்தியாவில் நேரடி வரிகளை விட மறைமுக வரிகளே அதிகம். அன்றாட வாழ்வை நடத்த தேவைப்படும் பொருட்களை வாங்குவதனால் பெரும்பான்மை மக்களால் மறைமுக வரிகளிலிருந்து தப்ப முடிவதே இல்லை. ஆனால் நேரடி வரி செலுத்துபவர்களோ சலுகைகள் பெறுகிறார்கள், வழக்குகள் மூலம் சமரச உடன்பாடுகளை பெறுகிறார்கள். குறைத்து மதிப்பிட்டு தப்பிக்கிறார்கள்.

நூறு கோடி ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்தாமல் இந்தியாவில் ஏய்க்கப்படுவதாக பேராசிரியர் கல்டோர் சொல்கிறார். நமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நாம் அழைத்த அந்த கற்றறிந்த பேராசிரியர் ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடி ரூபாய் அளவில் வருமான வரி ஏய்க்க்ப் படுவதாகச் சொல்லி நீண்ட காலமாகி விட்டது. அரசின் கஜானாவுக்கு வராமல் உள்ள பணம் ஒன்றும் குறைவான தொகை அல்ல. அரசு வசூலிக்க வேண்டிய வரி பாக்கி 137.90 கோடியை தள்ளுபடி செய்து விட்டதாக நிதியமைச்சகம் கூறி உள்ளது. வருமான வரி பாக்கியாக ரூபாய் 181 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டி உள்ளதாக கடந்தாண்டு நாடாளுமன்றத்திலேயே சொல்லப்பட்டது. இத்தொகை வேகமாக வசூலிக்கப்படுமானால்?

வருமான வரி பற்றிய புள்ளிவிபரங்களை ஆராய்கிற போது வருமான வரி செலுத்துவோரின் சராசரி வருமானம் 1953 ல் 10,940 என்று இருந்தது 1959 ல் ரூபாய்10,583 ஆக குறைந்துள்ளது. அதிகமான ஊதியம் வாங்குபவர்கள் மீது கவனத்தை குவிப்பதற்குப் பதிலாக குறைவான ஊதியம் உள்ளவர்களை வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வந்ததன் மூலம் இது நிகழ்ந்துள்ளது. இங்கே நாம் சுமையை பகிர்ந்து கொள்ளவில்லையா?

தங்கக் கட்டுப்பாட்டு சட்டத்திற்கு என்ன ஆனது? நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இந்நாட்டில் இருந்த போதிலும் கூட, அரசு சொல்லும் நல்ல எண்ணங்கள் இருந்த போதிலும் கூடுதல் கால அவகாசத்தை நீட்டித்த போதும் அரசால் எட்டு கோடி மதிப்பிலான தங்கத்தையே பெற முடிந்தது. ஒரு ஆய்வின் படி1955-56 ல் உள்ள இந்திய மக்கட்தொகையில் 25 % பேரின் மாத வருமானம் ரூபாய் பத்திற்கும் குறைவாக உள்ளதென்றும் இந்தியாவின் தேச வருமானத்தில் அவர்கள் பங்கு வெறும் 9 % மே. அதே சமயம் 0.3 % உள்ளவர்களோ தேச வருமானத்தில் 5.8%ஐ கைப்பற்றுகிறார்கள்.

இன்னொரு சமீபத்திய ஆய்வு 1960 ல் நகர்ப்புறங்களில் உள்ள 85 % குடும்பங்களின் ஆண்டு வருமானம் 3000 ரூபாயாக உள்ளது என்றும் தேச வருமானத்தில் அவர்களின் பங்கு 52 % என்றும் சொல்கிறது. இந்திய பொருளாதார முறையை ஆய்வு செய்ய மத்தியரசால் அமைக்கப்பட்ட மஹாலானோபிஸ் குழுவின் முதற்கட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வளவு சுமையை பகிர்ந்து கொண்டுள்ளனர்?

இதே மஹாலானோபிஸ் குழு இந்தியாவின் சொத்து மதிப்பு 1949-50 ல் 10,635 கோடி ரூபாய் என்றும் அவற்றில் 75 % தனியாரின் கைகளில் உள்ளதென்றும் சொல்லியுள்ளது. 25 % மதிப்பிலான சொத்துக்கள் நிறுவனங்களில் கைகளில் உள்ளது. தனியார் கைகளில் உள்ள சொத்துக்களில் 40 % வீடுகள் போன்று இருப்பதாகவும் அவ்வறிக்கை சொல்கிறது.

இவர்கள் எல்லாம் தங்களின் சக்திகளுக்கு ஏற்றார் போல சுமையை பகிர்ந்து கொள்கின்றனரா? கடந்த பத்தாண்டுகளில் செல்வத்தின் குவியலும் உற்பத்திச் சாதனங்களும் பெருமளவில் கொஞ்சம் கொஞ்சமாக சிலருடைய கைகளில் வந்தடைந்துள்ளது. தேசத்தின் பொருளாதாரத்திற்கே ஊறு விளைகிற வண்ணம் இந்த பொருந்தா நிகழ்வு அரங்கேறியுள்ளது. சமூகத்தின் பெரும் பகுதியினருக்கு வளர்ச்சியின் பலன் மறுக்கப்படும் நிலைக்கே இது இட்டுச் சென்றுள்ளது. இந்தியாவின் செல்வாக்கு படைத்த 1 % பேர்வழிகளின் கட்டுப்பாட்டில்தான் இந்தியாவின் செல்வத்தில் பெரும் பகுதி உள்ளது என்று அக்குழு நிறைவு செய்கிறது.

எந்த ஒரு நிறுவனத்தையோ, வணிகத்தையோ போதுமான இழப்பீடு தராமல் அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது. அது போலவே இழப்பீடும் அளிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீடு தேசியமயமாக்கப் பட்டதனால் பழைய தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு 31.12.1961 வரிய நான்கு கோடியே 76 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. சமீபத்தில் வங்கித் துறையை தேசியமயமாக்கியபோது பர்மா (தற்போதைய மியன்மார்) அரசாங்கம் பர்மாவில் செயல்பட்ட ஒவ்வொரு அன்னிய வங்கியும் தங்களின் க்யாட் மூலதனத்திற்கு 20க்யாட் லாபம் ( க்யாட் – பர்மா நாட்டு நாணயம். அன்று க்யாட்டின் மதிப்பு ரூபாய்) சம்பாதித்ததாக சொன்னது.

மறுக்க முடியாத ஏராளமான நியாயமான வாதங்களும் விரிவான கோரிக்கைகளும் இருந்த போதிலும் கூட இங்கே இன்னும் வங்கித்துறை தேசியமயமாக்கப்படவில்லை. பொதுக்காப்பீட்டுத்துறையை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஊழியர்களாலும் பொது மக்களாலும் முன்வைக்கப் பட்டபோதிலும் அது கண்டுகொள்ளப்படவில்லை. அங்கே மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. பிர்லாக்களால் நடத்தப்படும் ரூபி ஜெனரல் மற்றும் நியூ ஏசியாட்டிக் நிறுவனங்களின் கறுப்பான ஊழல் பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்தது பெரும்பாலான பொதுக்காப்பீட்டுக் கம்பெனிகளின் அவல நிலையை உணர்த்துகிறது. இத்துறையை தேசியமயமாக்கினால் மட்டுமே அரசுக்கு 85 கோடி ரூபாய் கிடைக்கும். கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் பெரு முதலாளிகள் லாபத்தை சுருட்டிக் கொண்டே இருக்க, சாதாரண மனிதனின் துயரங்களோ அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

மார்ச் 1963 லிருந்து ஜூன் 1963 க்கிடையிலான காலகட்டத்தில் மட்டும் விலைவாசிக் குறியீட்டு எண் 8.8 %  உயர்ந்துள்ளதாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மத்திய தொழிலாளர் அமைச்சர் கூறுகிறார். அதிலே 7 % வரை உணவுப் பொருட்களால் உருவானது. உணவு தானிய வணிகம் என்பது இந்தியப் பொருளாதாரத்தில் நிரந்தரமாகவே ஊழலாகவே மாறி விட்டது. உணவுப் பொருட்களை அரசு ஏன் கொள்முதல் செய்து ஏழை விவசாயிகளையும் மக்களையும் பேராசை பிடித்த பதுக்கல்காரர்களிடமிருந்து பாதுகாக்கக் கூடாது? நம்முடைய ஒரே விடி வெள்ளியாக இருக்கிற ஏற்றுமதிகளில் நடைபெறுகிற ஏராளமான முறைகேடுகளை தடுக்க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

விலைகளை நிர்ணயிப்பதில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஏகபோக முதலாளிகள் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். இந்தியா மிகப் பெரிய ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் விலைகள் மட்டும் உலகிலேயே மிகவும் அதிகமாக இருக்கும் நாடாக இருக்கிறது என்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுசீலா நய்யார் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அவசர நிலைக் காலத்திலும் கூட சர்க்கரை ஆலை அதிபர்கள் சந்தையில் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை தடுக்க அரசால் முடியவில்லை. எப்போதுமே தொழிலாளர்களுக்கு எதிரான கல்கத்தாவின் ‘ஸ்டேட்ஸ்மேன்” பத்திரிக்கை, கடந்த இருபதாண்டுகளில் அரிசியின் விலை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை எனச் சொல்கிறது. அன்னியப் படையெடுப்பின் காரணமாக நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து நினைவூட்டப் படுகிறோம். தேசத்திற்காக தியாகம் செய்ய நாம் தயாராக உள்ளோம். தேசப் பாதுகாப்பு நிதிக்கு 50 கோடி ரூபாய் நாம்தான் அளித்தோம் என்பது உலகிற்கே தெரியும்.

தேசத்தின் பாதுகாப்பிற்கு சமூக நீதி அத்தியாவசியமானது என்று பிரதமர் மிகவும் சரியாகவே சொன்னார். ஆனால் எங்கே இருக்கிறது சமூக நீதி? பொருட்களின் விலைகளை உயர்த்திக் கொண்டே போவதன் மூலம் முதலாளிகளும் பதுக்கல் பேர்வழிகளும் நமது ரத்தத்தை உறிஞ்சி நம்மை எதுவுமே இல்லாதவர்களாக மாற்றுகிறார்கள். பழமொழியில் சொல்வதைப் போல ஒட்டகத்தின் முதுகை ஒடிக்கும் கடைசி சுமையாக கட்டாய வைப்பு நிதி வந்து சேர்ந்துள்ளது.

உண்மையான பகிர்தலாக இருக்கும் பட்சத்தில்  நாடு இன்றிருக்கும் சூழலில் சுமையை பகிர்ந்து கொள்வதில் யாருக்குமே எதிர்ப்பு இருக்க முடியாது.  பதட்டமான நிலைமைகள் நிலவிய கடந்தாண்டு நவம்பர், டிசம்பரில் ஒரு பிச்சைக்காரர் தன்னுடைய ஒரு நாளைய ஒட்டு மொத்த வருமானத்தையும் தேசப் பாதுகாப்பு நிதிக்கு அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அத்தொகை எவ்வளவு இருக்கும்? எழுபது பைசாவோ, எண்பது பைசாவோ இருக்கலாம். பொருளாதார அடிப்படையில் பார்க்காவிட்டால் அதுதான் ஒரு மனிதன் தேசத்திற்காக தியாகம் செய்யக்கூடிய, சுமையை பகிர்ந்து கொள்ளக் கூடிய அதிகபட்ச அளவாக இருக்க முடியும். 

இந்தியாவின் பெரும் வணிக நிறுவனங்கள் தங்களது சக்திக்கு ஏற்றார்போல சுமைகளை பகிர்ந்து கொள்கின்றனரா? பிரம்மாண்டமான வருமான வரி பாக்கியை தள்ளுபடி செய்திடுமாறு அரசை தூண்டுகின்றனர். ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் நூறு கோடி ரூபாய் அளவிற்காவது வருமான வரி கட்டாமல் ஏய்க்கிறார்கள். ஆனால் இந்த அரசோ தொழிலாளர்கள், மத்தியதர ஊழியர்கள், ஏழை, நடுத்தர விவசாயிகள், சிறு வணிகர்கள் ஆகியோரிடமிருந்து அற்பதிலிருந்து எழுபது கோடி ரூபாய் வரை கட்டாய வைப்பு நிதியாக வசூலிக்கிறது.

“சுமையை பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று சொல்வதற்குப் பதிலாக நாளிதழ்கள் “சுமையை புன்னகையோடு சுமந்து செல்லுங்கள்” என்று கோஷத்தை மாற்றி விடலாம்.

ஆனால் நம்மால் மட்டும் சுமக்கக் கூடியதா இது? வலுவற்ற, நொறுங்கக் கூடிய நமது தோள்களால் பாரம் அதிகமுள்ள இச்சுமையை தாங்க முடியுமா?

1 comment:

  1. Red salute com.Saroj n long live.situations not changed since 1963.it is once again time to think about the principles which will protect all kind of people as often reminded by left parties of India.

    ReplyDelete