Monday, March 26, 2018

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக!



ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை பணிகள் துவங்கப்பட்டபோதும், அது இயங்க ஆரம்பித்தபோதும் அதனால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள் குறித்து பல்வேறு இயக்கங்கள் தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் காட்டி வந்துள்ளன. இந்நிலையில் இது சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் விளைவாக அந்த ஆலை 2013ம் ஆண்டில் மூடப்பட்டது. மூடப்படுவதற்கு முன்பாக பல விபத்துக்களும், உயிரிழப்புகளும், ஆலையிலிருந்து வெளியேறிய வாயுக்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறலும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது, மண் வளம் பாதிக்கப்படுவது, வளி மண்டலம் மாசுபடுவது, காற்றுவளி மண்டலத்தில் ஆலை தூசுக்கள் பரவி நிற்பது இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய், வாழ்வாதார பாதிப்பு, கால்நடைகள் இறந்து போவது என இவை அனைத்தும் சேர்ந்தே இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

மன்னார்வளைகுடாவில் உள்ள உயிர்க்கோள பகுதியிலிருந்து 25 கிலோமீட்டருக்கு அப்பால் அமைய வேண்டும் என்பதையோ ஆலையைச் சுற்றிலும் மாசு கட்டுப்பாட்டிற்காக 250 மீட்டர் அளவிற்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதையோ, தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி பெற வேண்டும் என்பதையோ, கழிவுநீரை ஆலைக்கு வெளியே விடக்கூடாது என்பதையோ, ஆலையின் உட்புறம் மூன்றில் ஒரு பகுதி பசுமை வளையம் இருக்க வேண்டும் என்பதையோ அந்த நிறுவனம் பின்பற்றவில்லை. கடுமையான போராட்டங்கள் நீதிமன்ற தலையீடுகள் ஆகியவற்றிற்கு பிறகே சில பணிகளை முடித்தும் சிலவற்றை அரசு நிர்வாகத்தை வளைத்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டும், சுற்றுச்சூழல், மக்கள் வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாமல், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதைத்தவிர ரூ.750 கோடி வரி ஏய்ப்புக்காகவும், பிளாட்டினம் மற்றும் பெல்லாடியம் ஆகிய தங்கத்திலும் விலை உயர்ந்த உலோகங்களை தங்கம் என்று ஏமாற்றி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததற்காகவும், அந்த ஆலையின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

இப்படி அரசின் விதிகளையோ, சுற்றுச்சூழலையோ, நிதி ஒழுங்கையோ கொஞ்சமும் சட்டை செய்யாத நிறுவனமாகவும் விவசாயம், குடிநீர், உப்புத் தொழில் உள்ளிட்ட வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், உடல்நலத்திற்கு தீங்கு அளிப்பதாகவும் இருந்த காரணத்தினால்தான் உயர்நீதிமன்றம் இந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டிருந்தது. 

மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் மூடும் உத்தரவை ரத்து செய்தாலும், அந்த ஆலையின் பல்வேறு அத்துமீறல்களை சுட்டிக்காட்டி ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து அந்த ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய உத்தரவிட்டிருந்தது. இதற்கு பிறகும் அந்த ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கு மோசமான கேடுகளை விளைவிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளதால் தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. காற்று மாசடைந்து மூச்சுத்திணறலால் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் ஆபத்தான ரசாயனக் கழிவுகளால் புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு போன்றவை பரவி வருகின்றன. 

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே சிஐடியு தொழிற்சங்கமும், இதர பல அமைப்புகளும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இந்த ஆலைக்கு எதிரான வழக்குகளை நடத்தி வந்துள்ளன. 2013ம் ஆண்டிலேயே ஆலையை மூட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி வந்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இக்கோரிக்கையினை நிராகரித்து வந்தது மட்டுமின்றி, நீதிமன்ற தீர்ப்புகளையும், சுற்றுச் சூழல் விதிகளையும் அமல்படுத்தாமல் அபாயகரமான ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. இதன் விளைவாகவே இன்று இப்பகுதியில் மக்களின் உடல் நலத்திற்கும், உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, சுற்றுச்சூழல், காற்று, நீர், மாசுபடுதல் மற்றும் மக்களின் நல்வாழ்விற்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த ஆலையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மூட வேண்டுமெனவும், அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தூத்துக்குடியில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும், வியாபாரிகளும் இணைந்து நின்று வெற்றிகரமான இயக்கத்தை நடத்தியிருக்கிறார்கள். இந்த இயக்கத்தில் கலந்து கொண்டவர்களையும், அந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுகிறது. 

இப்போதைய போராட்டம் தூத்துக்குடி மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக மாறி உள்ள சூழலில் மத்திய - மாநில அரசுகள் அலட்சியப்படுத்தாமல் ஆலை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, உயர்நீதிமன்ற தீர்ப்பில் உள்ளவாறு இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கிட வேண்டுமென்றும் மத்திய - மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 

- கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

1 comment:

  1. அரசாங்கம் நாட்ட மாசுபடுத்தலாம். நான்குவழிசாலை அமைக்கிறேன் என்ற பெயரில காஷ்மீர்முதல் கன்யாகுமரிவரை நன்கு வளர்ந்த பழமையான மரங்களை வெட்டலாம். ஆனா நாம வெட்டக்கூடாது. வளர்ச்சி என்ற பெயரில தூத்துக்குடி, கூடங்குளம், கதிராமங்கலம், கல்பாக்கம், தேனி, திருப்பூர் மக்களை கான்சர் நோயாளியாக்கலாம். ஆனால் Euro-I, II, III, IV, V, VI, .....XXX என்ற பெயரில் இல்லாத மாசுக்காக (actually not exist) மக்களை ஏமாற்றி காசுபுடுங்கலாம். ஸ்டார் ரேட்டிங் என்ற பெயரில 5 ஸ்டார் ஏசி, திரீ ஸ்டார் டீவி என தூங்குறவன் தொடையில் கயிறு திரிக்கலாம். சும்மா கம்பேனி முன்னாடி நின்னு கோஷம்போடுவதால எந்த அதிகாரியும் பாக்கமாட்டான், எந்த நீதிபதியும் கேக்கமாட்டான். We are living with third rated political pimps. ப்திலாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சென்னையிலிருந்து கன்யாகுமரிவரை அனைத்துமக்களும் ஒன்றினைந்து கார் மற்றும் பைக் ட்ய்ர்களை கொலுத்த்வேண்டும். இதன்மூலம் உலக அள்வில் கவனத்தை கவரலாம்.

    ReplyDelete