சமீபத்தில்
சந்தித்த ஒரு அற்புதமான மனிதரைப் பற்றி அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதன்
விளைவே இப்பதிவு.
சர்வதேச
மகளிர் தினத்தை முன்னிட்டு 13.03.2018 அன்று ஒரு சிறப்புக் கூட்டத்தை எங்கள் கோட்ட
அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தோம். மகளிர் உடல் நலன் குறித்த ஒரு விழிப்புணர்வு
உரையும் அக்கூட்டத்தின் ஒரு பகுதியாக அமைத்திருந்தோம்.
அதற்காக
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் மகளிர் கருப்பை புற்றுநோயியல் துறையை (Gynaecological
Oncology) அணுகிய போது அத்துறையின் தலைவர் பேராசிரியர்
ஆப்ரஹாம் பீடிக்கயில் தானே வருவதாக இசைவு தெரிவித்து நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று காலையில்
நினைவு படுத்துங்கள் என்றார். அப்படியே செய்தோம்.
ஐந்தரை
மணி நிகழ்ச்சிக்கு அவரது செயலாளர் மற்றும் ஒரு உதவியாளரோடு முன்னதாகவே வந்து விட்டார்.
நிகழ்ச்சியில்
சங்கத்தின் சார்பான அஜெண்டாவை முடித்த பிறகு அவர் பேசத் தொடங்கினார்.
மிகவும்
எளிய முறையில் மகளிருக்கு வரக்கூடிய புற்று நோய், அவற்றை வரு முன் தவிர்ப்பதற்கான அறிகுறிகள்,
செய்து கொள்ள வேண்டிய சோதனைகள், பழக்க வழக்கங்களில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் ஆகியவற்றை
அருமையாக, மிக முக்கியமாக கொஞ்சம் கூட அச்சுறுத்தாமல் சொன்னார்.
குடும்பத்தில்
மற்றவர்கள் சாப்பிட்ட பிறகே சாப்பிட வேண்டும். மீதமுள்ள உணவு வீணாகக் கூடாது என்று
அதையும் சாப்பிடுவது போன்ற அர்த்தமற்ற மரபுகள் மகளிரின் உடல் நலனை பாதிக்கிறது என்று
அழுத்தமாகச் சொன்னார்.
அதன்
பின்பு பங்கேற்றவர்கள் எழுப்பிய எண்ணற்ற ஐயங்களுக்கும்
சளைக்காமல் பதில் சொன்னார். தேவையில்லாமல்
ஸ்கேன் எடுப்பதோ, அறுவை சிகிச்சை செய்வதோ மருத்துவ நெறிமுறைகள் கிடையாது என்பதையும்
சில மருத்துவர்கள் அவ்வாறு செய்வது வருத்ததிற்குரியது என்பதை ஆணித்தரமாக சொன்னார்.
நேரம்
ஓடிக் கொண்டே இருந்தது. கேள்விகளும் பதில்களும் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில்
இத்தோடு நிறைவு செய்து கொள்ளலாம் என்று நாங்களாகவே நிறைவு செய்தோம்.
அவருக்கு
மட்டுமல்லாது அவரோடு வந்தவர்களுக்கும் சால்வை போட்டு கௌரவித்தோம். அப்போது உற்சாகமாக
கை தட்டிய அவரது முகத்தைப் பார்த்தேன். அவ்வளவு மகிழ்ச்சி. அது மட்டுமல்ல, அவரது செயலாளரை
அறிமுகம் செய்து எங்கள் துறையை இயக்கும் சக்தி என்று வேறு குறிப்பிட்டார். அந்த அணுகுமுறை
மிகவுமே பிடித்திருந்தது.
மகளிரை
இழிவுபடுத்தி ஊடகங்களில் வெளிவருபவைக்கு தக்க எதிர்வினையாற்ற “ஊடக விமர்சனக்குழு”,
பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக “பாலியல் சமத்துவ பாதுகாப்பு
குழு” என இரண்டு குழுக்களை அன்று அமைத்தோம்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சமூகத்தின் முக்கியமான பிரச்சினைகளை கையில்
எடுப்பது பாராட்டுதலுக்குரியது என்றும் குறிப்பிட்டார்.
உலகப்
புகழ் பெற்ற மருத்துவர் அவர் என்பதை பிறகு இணையத்தில் அவரைப்பற்றி அலசிய போது அறிந்து
கொண்டேன். மகளிர் கருப்பை புற்றுநோயியல் துறை மருத்துவர்களுக்கான ஆசிய அளவிலான அமைப்பின்
தலைவர் என்று அறிந்தபோது பிரமித்தே போனேன்.
பந்தா
என்பதே கொஞ்சம் கூட இல்லாமல் எங்களோடு மிகவும் இயல்பாக பழகிய அவரைப் பற்றி ஒரே வார்த்தையில்
சொல்ல வேண்டுமென்றால் “அற்புதமான மனிதர்”.
சில
பழமொழிகள் உண்மைதான்.
நிறை
குடங்கள் ததும்புவதில்லை.
New information n really proud of him. Really it's a good meeting for men also. thank u for arranging.
ReplyDeleteஒரு நல்ல மனிதரை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி்.இதை படிக்கும்போது வேறு ஒரு டாக்டரை ஞாபகம் வந்துள்ளது. ஒரு இதழில் டாக்டர்களின் அனுபவக்குறிப்புகள் பத்தின தொடரில், பல டாக்டர்கள் நோயாளிகளை காப்பாற்றப்பட்ட செய்திகளை பகிவு சைய்திருந்தார்கள்..
ReplyDeleteஆனால் ஒரு டாக்டர் மட்டும் அவருடய ஹௌச் சற்ஜன்சி காலத்தில் , டாக்டர்களின் ச்ட்றைக் (strike) மூலம் எவ்வளவு முயர்ந்தும் தன்னுடைய நோயாளியை காப்பாற்ற முடியாமல் போன வருத்ததை எழுதியிருந்தார்கள். இப்படி மனிதாபிமானம் மிக்க டாக்டர்கள் நம் நாட்டிற்க்கு வரம் தான்...