Monday, March 12, 2018

நிறம் மாறிய அரபிக்கடல்


நம் பசியாற்ற 
சேற்றில் இறங்கியவர்கள்
வயிறோ எப்போதும் தகிக்கும்
பட்டினித் தீயால்.

உழவு செய்த அம்மக்களுக்கு
விலை வைக்கும் உரிமை 
எப்போதுமே இருந்ததில்லை.

பூச்சிகளை அழிக்க வாங்கிய
மருந்து  குடித்தது என்னமோ
அவர்களின் உயிரைத்தான்.

கார்ப்பரேட்டுகளின் காலடியிலே
மண்டியிட்டுக் கிடந்ததால்
ஆட்சியாளர் கண்களுக்கு
கால்நடையாய் வந்தவர்களின்
 அவலம் தெரிவதே இல்லை.

கொடுத்த வாக்குறுதியை 
மறந்தே போனவர்கள்
எப்படி நிறைவேற்றுவார்கள்?

சில ஆயிரம் பேரோடு
தொடங்கிய நீண்ட பயணம் 
லட்சக்கணக்கானவர்களின் 
லட்சியப் பயணமாய் மாற

பொருளாதார தலை நகரம்
பொருளேதும் இல்லா
எளிய மக்களால் 
நிரம்பி வழிய
அரபிக்கடல் செங்கடலாய்
நிறம் மாற

அம்பானிக்கும் அதானிக்கும்
துடித்துக் கொண்டிருந்த
இதயங்களையும் 
அதிர வைத்தது
உழைத்துக் களைத்த
உழவர்களின் உறுதி.

காலணியாய் மிதித்தவர்களை
காலணி அறுந்தும் நடந்தவர்கள்
காலடியில் வீழ வைத்தார்கள்.

நாசிக்கில் தொடங்கி
மும்பையில் முடிந்த நீண்ட பயணம்
நாளை இந்தியாவின்
மாற்றத்திற்கான பயணத்தின்
துவக்கமும் கூட.

"மனிதர்கள் விழித்த போது"
மராட்டிய மண்ணின் அன்றைய
வீரக் காவியம்.

"மனிதர்கள் நடந்த போது"
இன்று எழுதப்பட்ட
சிவப்புக் காவியம்.











2 comments:

  1. After the Thandi March, this Red march will remains in the memory. silent volcona. before eruption just defused.

    நாளை இந்தியாவின்
    மாற்றத்திற்கான பயணத்தின்
    துவக்கமும் கூட...........................Achha din ...

    ReplyDelete
  2. let the sanghis be wiped out..jai kisaan..

    ReplyDelete