Wednesday, March 14, 2018

பேனா வியாபாரிக்கு ஒரு சவுக்கடி

இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளிவந்துள்ள சூடான கட்டுரையை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

சேகர் குப்தா எனும் பேனா வியாபாரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் கொடுத்த சவுக்கடி இக்கட்டுரை. 




அட அற்ப பதரே...

க.கனகராஜ்

இதோ இந்த சேகர் குப்தாவின் “லெனின் இன்னும் வாழ்கிறார்” என்ற ஒரு கட்டுரையை தி இந்து தமிழ் நாளிதழ் (மார்ச் 13 அன்று) பிரசுரித்துள்ளது.

ஆளும் வர்க்கத்திற்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பிலும் ‘பத்திரிகையாளர்’ என்கிற தனது அங்கீகாரத்தை அடகு வைத்து மேற்படி நபர் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதை இந்த கட்டுரை பறைசாற்றி இருக்கிறது.

“லெனின் இன்னும் வாழ்கிறார்” என்று தலைப்பிட்டுவிட்டு லெனின் ஒரு கொடுங்கோலன் என்று இந்த கட்டுரையை முடித்திருக்கிறார். அவர்கள் இதுவரையிலும் மார்க்ஸ் கொடுங்கோலன் என்று மட்டும்தான் சொல்லவில்லை. மாவோவைத் திட்டினார்கள்; ஸ்டாலினின் உண்மையான பங்களிப்பை சிதைப்பதற்காக - ஹிட்லர் உட்பட உலகை ஆதிக்கம் செய்ய துடித்துக் கொண்டிருந்த அச்சு நாடுகளை முறியடித்த அந்த மாபெரும் வீரரை பெரும் கொடுங்கோலன் என்று சித்தரித்து, படித்த பகுதியினர் மத்தியில் முற்றிலும் அவதூறான ஒரு சித்திரத்தை கட்டி அமைத்தனர். மாவோவையும், ஸ்டாலினையும் தூற்றும்போது அவர்களையெல்லாம் லெனின் என்கிற மாமனிதனோடு ஒப்பிட்டு, அவர் போன்று இவர் இல்லை என்று கபடத்தனமாக பேசித் திரிந்தார்கள். இப்போது லெனினே கொடுங்கோலன் என்று சேகர் குப்தா கருத்து விற்க ஆரம்பித்திருக்கிறார்.

எந்த ஒரு தலைவரின் மீதும் எத்தனை கடுமையான விமர்சனத்தை வைப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் கொடுங்கோலன் என்று ஒருவரை சித்தரிப்பதற்கு குறைந்தபட்சம் அது குறித்து தகவல்களையாவது தரவேண்டிய அவசியம் உள்ளதென்று மிக ஆரம்ப நிலையில் உள்ள ஒரு பத்திரிகையாளருக்குக் கூட தெரியும். ஆனால் சேகர் குப்தாக்கள் அவதூறு விற்றுப் பிழைப்பது என்று வந்துவிட்ட பிறகு வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசித் திரிகிறார்கள். இடதுசாரிகளின் பொருளாதாரக் கொள்கைகள், சமூக அரசியல் கொள்கைகள் போலித்தனமானவையாம். தனிநபர் சுதந்திரத்தை மறுக்கும் அதிகாரத் தலைமையாம். ‘வெளிநாடுகளில் படித்தவர்களும், இந்தியாவில் பெருமை வாய்ந்த கல்லூரிகளில் படித்த உயர் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்’ கட்சித் தலைமைகள் சமத்துவம் குறித்தும் பேச முடியாதாம்.

எது போலிக் கொள்கை?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது திட்டத்தில் இந்தியாவில் வர்க்கச் சுரண்டலற்ற சமூக ஒடுக்குமுறைகளற்ற சோசலிச சமூகத்தை படைப்பதற்கு உறுதி பூண்டுள்ளதாக பிரகடனம் செய்துள்ளது. பொருளாதார சமத்துவம் போலிக் கொள்கையா? இதை பகிரங்கமாக எந்த இடத்திலாவது ‘‘ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வுகள் நியாயமானது; ஏழைகள் வாழ்விழந்து சாகட்டும்” என்று சேகர் குப்தா சொல்லத் தயாரா?

சமூக அரசியல் போலித்தனம் என்கிறார். இந்தியாவில் தீண்டாமைக்கு எதிராக, உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராக, குழந்தைகள் திருமணத்திற்கு எதிராக, விதவைகள் மறுமணத்திற்காக என சமூக சீர்த்திருத்தத்திற்காக போராடிய ஒரு கட்சி; அதை அமல்படுத்துகிற ஒரு கட்சி; தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிற கட்சி உண்டு என்றால் அது கம்யூனிஸ்ட்கள் தவிர வேறு ஒருவரையாவது சேகர் குப்தாவால் காட்ட முடியுமா?

தனிநபர் சுதந்திரத்தை மறுக்கும் அதிகாரத் தலைமை என்று எழுதி இருக்கிறார். இந்தியாவில் கிளை முதல் அகில இந்தியத் தலைமை வரை தேர்தல்கள் மூலமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடைவெளியின்றி தேர்ந்தெடுக்கும் நடைமுறை உள்ள கட்சி,எங்களை தவிர வேறு ஏதேனும் இந்தியாவில் இருக்கிறதா? கட்சியினுடைய பொதுச் செயலாளர் சொல்லும் கருத்துக்கு மாற்றுக் கருத்தை முன்வைத்து அது இறுதி முடிவாவதும் அந்த முடிவு வந்தபிறகு அதையும் ஏற்றுக் கொண்டு அந்த பொதுச் செயலாளரும் மீண்டும் பணியாற்றுவதும் தனிநபர்கள் சுதந்திரத்தில் அடங்காதென நினைக்கும் தறுதலைத்தனம், அரசியல் நேர்மை என்று பீற்றிக் கொள்வதற்கு சேகர் குப்தா போன்றவர்களின் மூளை அழுகி இருந்தால் மட்டுமே சாத்தியம்.

இந்தியாவில் பெருமை வாய்ந்த கல்லூரிகளில் படித்தாலோ வெளிநாடுகளில் படித்தாலோ அவர்களுக்கு சமத்துவம் குறித்தும் ஏழைகள் குறித்தும் பேச முடியாது என்று அனுபவத்திற்கும் அறிவுக்கும் சம்மந்தமற்ற முறையில் சேகர் குப்தா பேசித் திரிகிறார். இந்தியாவில் சுதந்திரப் போராட்டமாக இருக்கட்டும் உலகம் முழுவதும் நடைபெற்ற சமத்துவத்திற்கான போராட்டங்கள் ஆகட்டும் ,அனைத்திலும் அவர்களுக்கும் பங்குண்டு . அரிசிப் பஞ்சம் வந்த காலத்தில் வெளிநாட்டில் படித்து வந்த தோழர் ஜோதிபாசு அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடங்களிலெல்லாம் மக்களை திரட்டி அவற்றை அரிசியின்றி தவித்த மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார். தோழர் இ.எம்.எஸ்சும், கிருஷ்ணபிள்ளையும், ஏ.கே.கோபாலனும் கேரளத்தில் நிலவிய ‘கண்டால் தீட்டு’ என்கிற கொடுமைக்கெதிராக போராடியவர்கள் என்பதை சேகர் குப்தாக்கள் கள்ளத்தனமாக மறைத்துக் கொள்கிறார்கள்.
‘உயர் சாதியில்’ பிறந்த - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் தோழர் பி.சுந்தரய்யா, உழைப்பவனுக்கு நிலம் சொந்தம் என்கிற கட்சியின் உன்னதமான நோக்கத்தை செயல்படுத்தும் நோக்கத்தில், அவரது குடும்பச் சொத்தில் அவருக்கு கிடைத்த நிலம் முழுவதையும் அந்த நிலத்தை பயிர் செய்து வந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கொடுத்தது அரசியல் போலித்தனமா? பொருளாதார போலித்தனமா?

வெளிநாட்டில் படித்தவனுக்கு ஏழைகளின் துயரம் தெரியாதென்றால் ஒரு நிலப்பிரபுவுக்கு நிலமற்றவர்களின் துயரம் தெரியாமல் தானே இருந்திருக்க வேண்டும்.

இதேபோன்று தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் உள்ளிட்ட தலைவர்களும் தங்கள் நிலங்களை பயிரிட்டு கொண்டிருந்தவர்களுக்கும் இதர சொத்துக்களை கட்சிக்கும் கொடுத்துவிட்டு கட்சியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்கள். இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கும் குறைந்தபட்ச நேர்மை, வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத அரசியல் இவையெல்லாம் சாத்தியம் என்பதை சேகர் குப்தாக்கள் கற்றறிய வேண்டும்.

இந்தியாவில் கே.ஆர்.நாராயணனோ,ராம்நாத் கோவிந்தோ குடியரசுத் தலைவராக ஆகிவிட முடியும்; ஆனால் பாப்பாபட்டி , கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் என்று பல பஞ்சாயத்துகளில் தலித்துகள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கூட தலைவர்களாக வருவதற்கு உயிரிழப்புகளும் தியாகங்களும் போராட்டங்களும் தேவைப்பட்டதென்று சேகர் குப்தாக்கள் அறியாமல் இருக்க முடியாது. ஆனால், தலித் சமூகத்தைச் சேர்ந்த தோழர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களாக பல நிலைகளில் இயல்பான தலைவர்களாக - மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும் தலைமையாக, பல நூற்றுக்கணக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், உருவாகி இருக்கிறார்கள்.

பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்யும் தார்மீக தைரியம் கொண்ட கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை சேகர் குப்தாக்களுக்கு யாரேனும் செவிட்டில் அறைந்து சொல்ல வேண்டும்.

எங்களது நிரஞ்சனைத் தெரியுமா உமக்கு?

பஞ்சாப்பில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியபோது எதிர்த்துப் போராடி உயிர்த்தியாகம் செய்தது கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் என்று பாராட்டுவது போன்று சொல்லிவிட்டு, ஆனால் அதைத்தவிர பெருமையாக சொல்வதற்கு அவர்களுக்கு ஏதும் இல்லை என்று எகத்தாளமாய் எழுதியிருக்கிறார். 1970களில் அமெரிக்காவின் உதவியோடு “ஆப்ரேஷன் பிரம்மபுத்திரா” செயல்படுத்தப்பட்டதும், அப்போது “இந்திய நாய்களே வெளியேறுங்கள்” என்று கொக்கரித்ததும், அதற்கெல்லாம் அனைத்து அசாம் மாணவர் சங்கம் தலைமை தாங்கியதும், அது பின்னால் அசாம் கணபரிஷத்தாக மாறியதும், அவர்களோடு இன்றைக்கு பாஜக கூட்டணி வைத்திருப்பதும் மேற்படி அழுகிப்போன மூளையின் கண்ணில்படாது.

70களில் பத்திரிகைத்துறைக்கு வந்த சேகர் குப்தாவிற்கு நிரஞ்சன் தாலுக்தார் கொல்லப்பட்டதும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. நிரஞ்சன் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர். மாணவர் சங்கத்தின் தலைவர். அவனது உடலை 26 கூறுகளாக வெட்டிப் போடுவதாய் தீவிரவாதிகள் அச்சுறுத்தினர். அதையும் மீறி தீவிரவாதிகளுக்கு எதிராக அந்த இளங்கன்று தீரத்தோடு போராடிக் கொண்டிருந்தது. 26 கூறுகளாக தீவிரவாதிகள் வெட்டிச் சிதைத்தனர். அவனது இறுதி ஊர்வலத்தில் தந்தை உரையாற்றினார். “என் மகனை 26 துண்டுகளாக வெட்டிவிட்டார்கள். ஆனால் இந்தியா என்கிற இந்த மிகப்பெரும் நாட்டில் 26 பெருமைமிகு மாநிலங்களில் எந்தவொரு துண்டையும் பெயர்த்தெடுக்க அனுமதிக்கமாட்டோம். அதற்காக இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் பலி கொடுக்கத் தயங்க மாட்டோம்” என்று சூளுரைத்தார்.

கூர்க்காலாந்து போராட்டத்தின்போது, ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாதம் தலைத்தூக்கும் இடங்களிலெல்லாம் தேசத்தைக் காக்க இன்னுயிர் நீத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் பட்டியல் நீண்டது.

2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு தோல்வியுற்றதை தோழர் ஏ.பி.பரதன் கேலியாக விமர்சித்ததைக் கேட்டு சேகர் குப்தா கொதித்து விட்டாராம். மதவாதக் கட்சி என ஒதுக்கி வைத்த பாஜகவோடு கைகோத்துக் கொண்டு மன்மோகன்சிங்கின் அணு ஆயுதக் கொள்கையை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்தார்களாம். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது நாங்கள் தான். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்; தாங்கள் பதவிக்கு வந்துவிடலாம் என்பதற்காக மட்டும் எதிர்த்து வாக்களித்தது பாஜக. பிரச்சனை என்னவென்றால், அதே பாஜக பதவிக்கு வந்த பின்னர் அணு சக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த முயற்சித்தது என்பதில் இவருக்கு விமர்சனம் கிடையாது. அந்த அணு சக்தி ஒப்பந்தத்தால் ஒரு யூனிட் மின்சாரம் கூட தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்பது குறித்து காங்கிரஸ் மீதும் இவருக்கு விமர்சனம் இல்லை. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள் என்பதால் உள்ளும் புறமும் எரிகிறது.

புவி ஈர்ப்பு விசை

சோவித் யூனியன் தகர்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிக ஆழமாகவும் விரிவாகவும் விவாதித்து, அது சோசலிசத் தத்துவத்திற்கு ஏற்பட்ட பின்னடைவல்ல; சோசலிச தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறு என்கிற முடிவிற்கு வந்தது. புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த பிறகு பலபேர் விண்ணில் பறக்க முயற்சித்தார்கள். பல உயிர்கள் பலியாகின. அதற்காக புவி ஈர்ப்பு விசை என்று ஒன்று இல்லை என்று முட்டாள் தனமான முடிவிற்கு சேகர் குப்தா போன்றவர்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால் அதை முயற்சித்து வெற்றி கண்ட ரைட் சகோதரர்கள் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறார்கள். ஒரு அறிவியல் உண்மையை தொழில்நுட்பமாக மாற்றும்போது இடைக்காலத்தில் ஏற்படும் தோல்விகளை ஒரு அறிவியல் உண்மையின் தோல்வியாக கொண்டாடுவதின் மூலம் தங்கள் வயிற்றுப் பிழைப்பும், சொகுசு வாழ்க்கையும் நிலைத்திருக்கும் என்று ஒருவர் பீற்றிக் கொள்வதில் நமக்கேதும் ஆட்சேபணை இல்லை. எங்களது மார்க்சியமும் சோசலிசமும் அறிவியல் உண்மைகள். இது சேகர் குப்தா போன்ற அற்பப் பதர்களுக்குப் புரியாது.

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியே இல்லை என சேகர் குப்தா பெருமைப்பட்டுக் கொள்ளட்டும். ஆனால் இந்தியாவில் 7வது இடத்தில் இருந்த உணவு உற்பத்தியை இடதுசாரிகள் தான் முதலிடத்திற்கு கொண்டு வந்தவர்கள். நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் உபரி நிலங்களை கையகப்படுத்தி இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட 44 லட்சம் ஏக்கரில் 14 லட்சம் ஏக்கர் மேற்கு வங்கத்தில் மட்டும் என்பதையும் இன்றைக்கு 73 மற்றும் 74வது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி இந்தியா முழுவதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் பஞ்சாயத்துராஜ் மற்றும் நகர் பாலிகா சட்டங்கள் மேற்கு வங்கத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தீட்டப்பட்டது என ராஜீவ்காந்தி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். 75ம் ஆண்டிலிருந்து பத்திரிகையாளராக வாழ்ந்ததாக பீற்றித்திரியும் சேகர் குப்தாவிற்கு இதை சமர்ப்பிக்க விரும்புகிறோம்.

தற்போதைய சூழலில் வறுமை ஒழிப்பையும், சமூக பொருளாதாரத்தையும் பாஜக ஏற்றுக் கொண்டுவிட்டதாம். அதனால் தான் இடதுசாரிகள் இடம் தெரியாமல் போய்விட்டார்களாம். அதனால்தான் இடதுசாரி தலைவர்கள் ஜேசிபியால் இடித்து தள்ளப்படுகிறார்களாம்.

சங் பரிவார அமைப்பை சார்ந்த கோட்சே என்கிற கொலைகாரன் மகாத்மாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை “மகாத்மா இந்திய மக்களால் வெறுக்கப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்; ஏனெனில் மகாத்மா ஒரு கொடுங்கோலன்” என்று கூட சேகர் குப்தா நாளை வரலாற்றை மாற்றி எழுதக்கூடும்.

சோசலிசம் போலியான அரசியல் பொருளாதாரம் என்று அவர் கொக்கரிக்கிறார். இடதுசாரிகள் சில தோல்விகளைச் சந்திப்பதால்,சேகர் குப்தாக்கள் இடதுசாரிகளுக்கு இறுதி சாசனம் எழுதப்பட்டுவிட்டதாக எக்காளமிட்டு தாங்களே முட்டாளாகிக் கொள்கிறார்கள்.

நீயும் ஒரு நாள்...

இதோ நேற்று முடிவடைந்த விவசாயிகள் நெடும்பயணம். 180 கிலோ மீட்டர், 6 நாட்கள், தலையில் சிவப்புக் குல்லா, கையில் செங்கொடி என ஒரு செங்கடல், சாலைகள் தோறும் ஊர்ந்து வந்ததைப் பார்த்த பிறகுமா இப்படி போகிறார்கள்? அவர்கள் விவசாயிகள் தான். உங்கள் அகராதியில் அவர்களுக்கு நாகரீகம் தெரியாதுதான். அவர்கள் கால்கள் செருப்பைக் கண்டிராதவை. எல்லா தூசுகள் மீதும், அசிங்கங்கள் மீதும் நடந்து சென்றார்கள். ஆனால் அந்த எளிய மனிதர்கள் செங்குல்லாவையும், செங்கொடியையும் கையில் ஏந்திய பிறகும் “நாம்தான் படிக்கவில்லை, ஆனால் படிக்கிற பிள்ளைகள் தேர்வெழுதப் போகும்போது அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது” என்ற நோக்கதில் ஊர் உறங்குகிற நேரத்தில் மும்பை நகர வீதிகளில் நடந்தே சென்றடைந்தார்கள். உரத்த குரல்களில் பேசுகிற அந்த மனிதர்கள்தான் இரவு நேரத்தில் நடந்தாலும் “தேர்வு எழுதப் போகிற மாணவர்கள் தூங்கிவிட்டு செல்லட்டும்; நாம் முழக்கம் எழுப்பாமல் செல்வோம்” என அமைதியாய் கடந்து சென்றார்கள். தலையில் ஒரு செங்குல்லாவும், கையில் ஒரு செங்கொடியும் கிடைத்த உடனேயே இத்தனை உன்னதம் ஒரு மனிதனைப் பற்றிக்கொள்ளும் என்றால் அதே செங்கொடி பிரதிநிதித்துவப்படுத்தும் தத்துவத்தை மனதில் ஏந்தி தன் உதிரத்தோடும், உயிரோடும் இரண்டறக் கலக்க வைத்து அதை தவமாய் பேணுகிற தலைவர்கள், அவர்களது அரசியல் பொருளாதார, சமூக கொள்கைகள் எப்படி போலியாகிவிட முடியும்?

இதோ அந்த செங்கொடி கையில் ஏந்திய விவசாயிகள் ஊருக்குள் நுழைகிறபோது அவர்கள் பாதங்களுக்கு காலணிகளையும், தாகத்திற்கு தண்ணீரையும், பசிக்கு உணவையும் ஏந்திக் கொண்டு மும்பை நகர மக்கள் வரவேற்றார்களே; எந்த கொடி ஏந்தினால் என்ன கோரிக்கை நியாயமானது என ஆளுங்கட்சி தவிர அத்தனை கட்சிகளும் வரவேற்க வந்தனவே; விவசயாயிகள் தானே, தடியடிகள் நடத்தி கலைத்து விடமுடியும், துப்பாக்கி சூடு நடத்தி கலைத்து விட முடியும் என்றெல்லாம் அசட்டுத் தனமாய் முயற்சிக்கத் திராணியற்று, அவர்களை அழைத்துப் பேசி அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டதாக எழுத்துப்பூர்வமாக உங்களது பாஜக அரசின் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளாரே; இந்திய தேசம் முழுவதும் இப்படி ஒரு சூழல் வரும். எல்லோரும் செங்கொடியை எதிர்பார்த்து வரிசையில் நிற்பார்கள்... 

ஒன்று மட்டும் நிச்சயம், அப்போது சேகர் குப்தாக்கள் எப்படியும் முந்தியடித்துக் கொண்டு முதல் வரிசையில் நின்று கொண்டு ‘செங்கொடிக்கு ஜிந்தாபாத்’ என்று முழங்குவார்கள்.

No comments:

Post a Comment