Friday, March 2, 2018

2.92 கோடி ரூபாய் ஊழலும் அம்மையாரின் ஊதிய முடக்க ஆயுதமும்


ஊதியத்தை முடக்கும் ஸ்மிர்தி இராணி அம்மையார்


மனித வளத்துறை அமைச்சராய் இருந்து ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர்களின் உதவித் தொகையை நிறுத்தி ரோஹித் வெமுலாவின் உயிரைக் குடித்த புகழ் பெற்ற ஸ்மிர்தி இராணி அம்மையார், இப்போது தகவல் ஒளிபரப்பு அமைச்சராய் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஊழியர்களின் ஊதியத்தை முடக்கி அவர்களின் வயிற்றில் அடிக்க துவங்கி உள்ளார்.

ஆம். நிஜமாகத்தான்.

தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்டவை பிரச்சார் பாரதி என்ற தன்னாட்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை. பிரச்சார் பாரதியின் தலைவராக உள்ள சூர்ய பிரகாஷ் என்பவர் அம்மையார் சொன்ன கட்டளைகளை மறுத்ததால் இந்த நிலைமை.

பிரச்சார் பாரதியால் கொடுக்க முடியாத அல்லது கட்டுப்படியாகாத உயர் ஊதியம் கொடுத்து இரண்டு செய்தி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற அம்மையாரின் பரிந்துரையை பிரச்சார் பாரதியின் இயக்குனர் குழு ஏற்க மறுத்து விட்டது.

இது ஒரு பிரச்சினை.

காலம் காலமாக கோவாவில் நடைபெறும் சர்வ தேச திரைப்பட விழா நிகழ்வுகளை பதிவு செய்யும் பொறுப்பு தூர்தர்ஷனுடையது. இந்த அம்மையார் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரானதும் அதனை SOL PRODUCTIONS என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார். அந்த நிறுவன முதலாளிகள் ஃபாஸில்லா ஆலானா, காமா நிருலா ஆகிய இரண்டு பெண்மணிகளும் அம்மையாருக்கு அவர் சீரியலில் நடித்த காலம்  தொட்டே நெருக்கமாம். அதனால்தான் இந்த ஏற்பாடு.

திரைப்பட விழாவை பதிவு செய்த வகையில் அந்த நிறுவனம் 2.92 கோடி ரூபாய் தரச் சொல்லி தூர்தர்ஷனிடம் கேட்க, எங்களால் செய்ய முடிகிற ஒரு வேலையை வெளியார் செய்ததற்கு நாங்கள் பணம் தர முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

இந்த பணத்தை தராவிட்டால் நாங்கள் ஊதியத்தை வெட்டுவோம் என்று பிரச்சார் பாரதி இயக்குனர் குழுவில் அம்ம்மையாரின் பிரதிநிதியாக உள்ள மத்தியரசு அதிகாரி அலி ரிஷ்வி என்பவர் மிரட்ட, ஊதியம் ஒன்றும் உன் வீட்டிலிருந்து வரவில்லை, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிற ஊதியத்தை உங்களால் முடக்க முடியாது என்று சூர்ய பிரகாஷூம் திரும்பி எகிறியுள்ளார்.

ஆமாம் 5000 மத்தியரசு ஊழியர்களின் ஊதியம் உட்பட பிரச்சார் பாரதியின் செலவுகளுக்காக 2,800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.  ஊதியத்திற்கான செலவினம் ஒவ்வொரு மாதமும் வெளியிடப் படும்.   

ஆனால் அம்மையாரின் பிரதிநிதியின் மிரட்டல் வெறும் கூச்சலாக நிற்கவில்லை.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான ஊதியத் தொகை பட்ஜெட் ஒதுக்கீடாக இருந்த போதும் அதனை அம்மையார் நிறுத்தி வைத்து விட்டார். பிரச்சார் பாரதியின் அவசர நிதியிலிருந்து எடுத்து இரண்டு மாதங்கள் சமாளித்து விட்டார். அம்மையாரின் பிடிவாதம் தொடர்ந்தால் மார்ச் மாதம் ஊதியம் கொடுக்க முடியாது.

தூர்தர்ஷன், வானொலி நிலைய உயரதிகாரிகள் Indian Information Service என்று அழைக்கப்படும் சிவில் சர்வீஸ் அதிகாரிகள்.  அந்த அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரதமர் அலுவலகத்தில் ஸ்மிர்தி இராணி அம்மையாரைப் பற்றி புகார் செய்ததால் அவரை அம்மையார் இட மாற்றம் செய்து விட்டார்.  

தனக்கு வேண்டாதவர்களை மாற்றலில் பந்தாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அம்மையாரின் மீது ஏற்கனவே கடுப்பில் உள்ள பிரச்சார் பாரதி அதிகாரிகள், இந்த ஊதியப் பிரச்சினைக்குப் பிறகு அவர்கள் கோபம் அதிகரித்துள்ளது.

அது போராட்டமாக வெடித்தால் நல்லது.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்

மோடி ஆட்சியில் ஊழலே கிடையாது என்று சிலர் தம்பட்டம் அடிக்கிறார்கள். தூர்தர்ஷன் செய்ய வேண்டிய பணியை வேண்டப்பட்ட தனியாருக்கு தள்ளி விட்டு அதற்கு 2.92 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கட்டளை போடுவதெல்லாம் ஊழல் கிடையாதா?


No comments:

Post a Comment