Thursday, March 29, 2018

மறக்க முடியாத கதாநாயகர்கள்

கய்யூர் கதாநாயகர்கள்


பி.சி.ஜோஷி
இன்று கய்யூர் தியாகிகள் 75ம் ஆண்டு நினைவு தினம்

மலபார் பகுதியில் மிகவும் செல்வாக்கு கொண்டது நமது கட்சி. நகரங்களில் மட்டுமல்ல; நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் அங்கு செங்கொடி பட்டொளி வீசி பறக்கிறது.

நமது கட்சியின் 3000 உறுப்பினர்களில் மிகப்பெரும்பான்மையோர் விவசாயிகளின் புதல்வர்கள் ஆவர். அவர்களில் 16 பேர் ஆயுட்கைதிகளாக சிறைகளில் உள்ளனர். 4 பேர் தூக்குதண்டனை பெற்று காத்திருக்கின்றனர்.

கட்சி மையம் என்னைமலபார் மாநில மாநாட்டுக்கு மையத்தின் பிரதிநிதியாக கலந்துகொள்ள அனுப்பிய பொழுது கிராமங்களில் கம்யூனிசம் செயல்முறையில் உள்ளதை நேரில் காணும் எனது நீண்டநாள் கனவு நனவானது.

கட்சி மையம் (தூக்கு தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருக்கும்) கய்யூர் தியாகிகளை சந்தித்துகடைசி வாழ்த்துக்களை தெரிவிக்குமாறும் பின்னர் அவர்களின் குடும்பங்களை கய்யூர் சென்று நேரில் சந்திக்குமாறும் என்னை பணித்தது. இதைவிட வேறு என்ன பெரிய பாக்கியம்எனக்கு இருக்க முடியும்?

கள்ளிக்கோட்டையில் கட்சி மாநாடு நிறைவு பெற்றதும் நாங்கள் கண்ணணூர் விரைந்தோம். அந்த நண்பகல் வெயிலிலும் 6000 பேர் கொண்ட பேரணியுடன் நாங்கள் மத்திய சிறைக்கு சென்றோம். வழியெங்கும் “கய்யூர் தோழர்கள் வாழ்க” எனும் முழக்கம் விண்ணதிர முழங்கியது.

நமது மலபார்செயலாளர் தோழர் கிருஷ்ணபிள்ளை நாங்கள் சிறைக்குள் செல்ல போகிறோம் என அறிவித்தார்.நாங்கள் சிறை வாயிலை அடைந்தோம்.

மற்ற சிறைகளைபோலவே அந்த சிறையும் இருந்தது. குனிந்து உள்ளே சென்றோம். அங்குள்ள பதிவேட்டில் கையொப்பம் இட்டோம்.பின்னர் சிறை அதிகாரி எங்களை அழைத்து சென்றார்.சரளை கற்கள் நிறைந்த அந்த பாதையில் பல சுற்றுகள்நடந்தோம். பின்னர் இன்னொரு சிறிய வாயிலை அடைந்தோம்.அதனுள் நுழைந்தோம்.

அதற்குள்தான் தனிமை கொட்டடி சிறையின் அறைகள் இருந்தன. ஒரு கொட்டடி அறை என்பது மிகச்சிறிய ஒன்று! ஒரு அறையில் ஒருவர்தான் தனிமையில் சிறைவைக்கப்படுவார். முதல் நான்கு தனிமை அறைகளில் நமது தோழர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.

நால்வரும் மிக சாதாரணமாக எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தனர். முஷ்டிகளை உயர்த்தி “செவ்வணக்கம்” என எழுச்சியுடன் கூறினர். அந்த நால்வரின் முன்பும் நானும் செவ்வணக்கம் கூறியவாறு நடந்து சென்று பின்னர் நான்கு அறைகளின் மையமான இடத்திற்கு வந்து நின்றேன். அவர்களை ஏறிட்டு பார்த்தேன்.அவர்கள் மிகவும் இளமையாகவும் சுத்தமாகவும் இருந்தனர். தனிமைச் சிறை காரணமாக சிறிது உடல் மெலிந்திருந்தனர்.

எனினும் அவர்களது முகத்தில் தைரியமும் கண்களில் ஒளியும் தெளிவாக தெரிந்தன. அவர்களை பார்த்தமுதல் பார்வையிலேயே இந்த இளம் போராளிகள் மனதில் உறுதியுடனும் உதடுகளில் “கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க” எனும்முழக்கத்துடனும் தூக்குக் கயிறை முத்தமிடுவார்கள் என எனக்கு தெரிந்துவிட்டது.

நமது தேசத்தின் பரந்த பகுதிகளிலிருந்து பல மொழிகளில் எழுதிய வாழ்த்து கடிதங்கள் அடங்கிய பெரிய பெட்டியைநாங்கள் கொண்டு சென்றிருந்தோம். அந்த கடிதங்கள் அனைத்தும் அந்த இளம் போராளிகளுக்கு நமது தொழிலாளர்களால், விவசாயிகளால், மாணவர்களால் வாழ்த்துக்களை தெரிவித்து எழுதப்பட்டவை! அனைத்து வயதை சார்ந்த ஆண்களும் பெண்களும் அந்த வாழ்த்துக் கடிதங்களை எழுதியிருந்தனர்.

அக்கடிதங்களை கண்டவுடன் அவர்கள் முகம் மலர்ந்து புன்னகைத்தனர். இக்கடிதங்களை கண்ட சிறை அதிகாரி இவற்றை எப்படி மொழிபெயர்ப்பது எனவும் எப்படி தணிக்கை செய்வது எனவும் கவலை கொண்டார்.

ஒவ்வொரு கடிதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அவருக்கு சொன்னோம். அதற்கு பிறகுதான் நிம்மதி பெரு மூச்சு விட்டார்.

அந்த இளம் போராளிகள் ஆங்கிலம் அல்லது இந்துஸ்தானி மொழியை புரிந்துகொள்ள இயலவில்லை. என்னால் மலையாளம் பேச முடியவில்லை. எனவே சிறை அதிகாரியின் அனுமதியுடன் தோழர் கிருஷ்ணபிள்ளை அவர்கள்ஒவ்வொரு வாக்கியத்தையும் மொழிபெயர்த்தார். அவர்களைகண்டவுடன் எனது கண்களிலிருந்து கண்ணீர் பொங்கியது. வார்த்தைகள் வெளியே வரமறுத்தன. என்னை ஏதோ ஒன்று அழுத்தி வேதனை விளைவித்தது போல இருந்தது. உணர்ச்சி மிகுதியால் ஒரு கட்டத்தில் நான் மயக்கம் அடையும் நிலைக்கு சென்றுவிட்டேன்.
கட்சியின் தலைமை சார்பாக அவர்களிடம் நான் கூறியதின் சுருக்கத்தை கீழே தருகிறேன்.“கட்சி தனது வேறு எந்த உறுப்பினரைவிட உங்கள் நான்கு பேர் குறித்து மிகவும் பெருமைப்படுகிறது.
நாங்கள்நூறுகளாக இருந்தபொழுது எங்களிடம் நீங்கள் வந்தீர்கள். ஆனால் இன்று 9000 நிரந்தர உறுப்பினர்களும் 8000 பரீட்சார்த்த உறுப்பினர்களும் கட்சியில் உள்ளனர். அனைத்து17,000 கட்சி உறுப்பினர்களும் நீங்கள் உயர்த்திப்பிடித்த பதாகையை முன்னெடுத்து செல்வோம் எனவும் நீங்கள் மிகுந்த தைரியத்துடனும் வீரத்துடனும் நடத்திய போராட்டத்தை நாங்கள் தொடர்வோம் எனவும் உறுதி கூறுகிறோம்.”“
நீங்கள் நமது தேசம் மற்றும் இந்த உலகத்தின் விடுதலைக்காகவும் நலனுக்காகவும் ஒரு சாகாவரம் பெற்ற உயர்ந்தஇலட்சியத்திற்காக உயிர்த் தியாகம் செய்யப் போகிறீர்கள்.
நமது இலட்சியம் நியாயமானது; அது வெல்ல வேண்டும்; அந்த இலட்சியம் வெல்ல வேண்டும் என்பதற்காக உங்கள்உயிரை தியாகம் செய்ய உள்ளீர்கள். நீங்கள் மரணம் அடையப்போவது இல்லை; உங்களது கனவை நிறைவேற்ற உள்ளீர்கள்”“
நீங்கள் எங்களின் இதயக்கூட்டுக்குள் வீற்றிருக்கிறீர்கள். உங்களை கட்சி இழக்கப் போகிறது. ஆனால் உங்களைப் போன்றவர்களின் மகத்தான பணியும் தியாகமும்தான் கட்சி இன்றுள்ள உன்னத நிலைக்கு காரணம் ஆகும்.
நீங்கள்கட்சியில் இணைந்த பொழுது மலபாரில் நமது இயக்கம்இளம் தேசபக்த போராளிகளை கொண்ட ஒரு குழுவாகமட்டுமே இருந்தது. இன்று நாம் உங்கள் பகுதியில் ஒரு மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளோம். தேசம் முழுதும் மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து கொள்கின்ற தலை சிறந்த புதல்வர்களும் புதல்விகளும் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

எங்கெல்லாம் கட்சி உள்ளதோ அங்கெல்லாம் உங்கள் பெயர்கள் பாசத்துடனும் நேசத்துடனும் மிகுந்த மரியாதையுடனும் உச்சரிக்கப்படுகின்றன. தேசப்பற்று மிகுந்த இளம் ஆண்களும் பெண்களும் கட்சியில் இணைவதை பெரிய பாக்கியமாக கருதுகின்றனர்.

ஏனெனில் உங்களை போன்ற தியாகிகளை கட்சி ஜனித்தது.”“
கட்சி உங்களை இழக்கவில்லை. ஆனால் நான்கு தியாகிகளை பெறுகிறது. அவர்கள் உங்களை தூக்கு மேடைக்கு அனுப்பட்டும்; அதனை நம்மால் இன்று தடுக்க இயலாது.
ஆனால் உங்களின் தியாகத்தால் உத்வேகம் பெற்ற 400 அல்லது 4000 புதிய கட்சி உறுப்பினர்களை நாம் வென்றெடுப்போம். இதனை நமது எதிரிகள் தடுக்க முடியாது. அதற்காகநாம் கடுமையாக உழைப்போம்.

தைரியமாக இருங்கள் தோழர்களே! நாம் நிச்சயமாக வெல்வோம். நமது இலட்சியம் சாகாவரம் பெற்றது. அந்த இலட்சியத்தை அடையவழிவகுக்கும் அமைப்பான நமது கட்சியும் சாகாவரம் பெற்றது. அரசியல் அடக்குமுறைகள் நம்மை பலவீனப்படுத்தாது; மாறாக அவை நம்மை மேலும் வலுவாக்கும்.
உங்களது தியாகம் பெருமையை மட்டுமல்ல; கட்சிக்கு வலிமையையும் தருகிறது. எந்த ஒரு கம்யூனிஸ்ட்டும் இதனைவிட சிறந்த முடிவை விரும்ப முடியாது.”“

உங்கள் குடும்பங்கள் உங்களை இழக்கின்றன. நீங்கள்கட்சியில் சேரும் பொழுது மக்கள்தான் உங்கள் பெற்றோர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என நாங்கள்அறிவோம்.

இந்தியாவின் எந்த ஒரு தந்தையும் அல்லது தாயும் உங்களின் சொந்த பெற்றோர்கள் போல துன்பப்படக்கூடாது என நீங்கள் உழைத்தீர்கள். உங்களுக்கு ஒரு வலுவான உறுதிமொழியை தருகிறோம் தோழர்களே!

எங்களில்17,000 பேரும் உங்களின் குடும்பத்தினரை எங்களின் சொந்தகுடும்பத்தினரை போல பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறோம். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் தங்களின் புதல்வன் எனவும் உங்கள் குடும்பத்தினர் உணரும் வகையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்”“
உங்களை சந்திப்பதற்கு எனக்கு கிடைத்த இந்த வாய்ப்புஎன் வாழ்க்கையின் மிகப்பெரிய பேறு என நான் எண்ணுகிறேன். உங்களின் உயிரைவிட மேலாக நீங்கள் நேசிக்கும் கட்சியிடமிருந்து நான் வாழ்த்துக்களை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன்.
இங்கிருந்து நேராக உங்களின் கிராமமான கய்யூருக்குதான் செல்கிறேன். உங்களின் குடும்பங்களை நான் சந்திக்க செல்கிறேன். அவர்களுக்கு உங்களிடமிருந்து ஏதாவது செய்தி உள்ளதா?”
அவர்களை கவலைப்பட வேண்டாம் எனவும் தைரியமாக இருக்கும்படியும் கூறுங்கள் என அனைவரும் ஒருமித்தகுரலில் கூறினர்.வேறு ஏதாவது கூற வேண்டியுள்ளதா என நான் கேட்டேன்.

“எங்களின் மனதில் என்ன இருந்ததோ அனைத்தையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்” என அவர்களில் ஒரு தோழர் கூறினார்.“
இல்லை! இல்லை! இந்த நேர்காணலில் எவ்வளவு நேரம் உள்ளதோ அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் வெளியில் உள்ள தோழர்களிடம் கூற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் என்னை கிழித்துவிடுவார்கள்.

எனக்கு கூர்மையான நினைவாற்றல் உண்டு. எனவே உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்களிடம் நான் கொண்டுசெல்வேன்” என நான் சிரித்து கொண்டே கூறினேன்.
சிறை அதிகாரி கடிகாரத்தை பார்த்தார். நான் தோழர்களை விரைவாக பேசுமாறு கூறினேன்.

முதல் அறையில் இருந்த தோழர் குஞ்ஞாம்பு பேசினார்.“மக்களுக்கு நான் என்ன செய்தேனோ அதனை செய்யஎன்னை ஆளாக்கியது கட்சிதான்! எனது கடமையை நான்சரியாக செய்து முடித்தேன் என கட்சி மதிப்பிட்டால் அது ஒன்றுதான் என் வாழ்வின் ஒரே விருப்பமாக இருக்க முடியும்!”
தோழர் அப்பு கூறினார்:“கட்சி வளர்ந்து கொண்டுள்ளது எனும் மகத்தான செய்தியை நீங்கள் கொண்டு வந்துள்ளீர்கள். இப்பொழுது கூடுதல் மன உறுதியுடன் நாங்கள் தூக்கு மேடை ஏறுவோம்.இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடவும் உயிரை அர்ப்பணிக்கவும்தான் நாங்கள் கட்சியில் இணைந்தோம்.”
தோழர் சிறுகண்டன் கூறினார்:“நாங்கள் வெறும் நான்கு விவசாயிகள்தான்! ஆனால்இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். எங்களை அவர்கள் தூக்கு மேடைக்கு அனுப்பலாம். ஆனால்ஏனைய விவசாயிகளை அவர்கள் அழிக்க இயலாது. இந்தஉறுதிதான் எங்களின் மன வலிமையை நீடிக்க செய்துள்ளது.இத்தகைய தேசத்தின் மக்களுக்காக பணியாற்றிட வாழ முடியாமல் போகிறதே எனும் வருத்தம்தான் தேசத்தின் அனைத்துபகுதிகளிலிருந்து வந்துள்ள இந்த கடிதங்களை பார்க்கும்போது உருவாகிறது.

எங்களுக்கு வேறு எந்த ஒரு வருத்தமும்இல்லை. எங்களுக்கு பல பிறவிகள் இருந்தால் மீண்டும் மீண்டும்நமது இலட்சியத்திற்காக நாங்கள் உயிரை விடுவோம்”தோழர் சிறுகண்டன் இரண்டு பெரிய விவசாய போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.

இறுதியாக தோழர் அபுபக்கர் கூறினார்:“நமது தியாகிகளின் வாழ்விலிருந்துதான் நாங்கள் உத்வேகம் பெற்றோம். நாங்களும் அந்த பெருமையின் ஒருஅங்கமாக இருப்போம் என கனவில் கூட நாங்கள் நினைக்கவில்லை. எந்த பயமும் இல்லாமல் நாங்கள் தூக்குமேடை ஏறுவோம் என தோழர்களிடம் கூறுங்கள். எனது தாயார் வயதானவர். அவரை தைரியமாக இருக்க சொல்லுங்கள். எனது சகோதரர்கள் மிகவும் இளையவர்கள். அவர்களை கட்சிப் பணிக்காக கல்வி புகட்டுங்கள். நான்தான் குடும்பத்தின் மூத்தபிள்ளை. அவர்களை பார்த்துக்கொள்ள வேறு எவரும் இல்லை.”
அபுபக்கர் தனது இறுதி வார்த்தையை கூறுவதற்கும் சிறை அதிகாரி நேரம் முடிந்துவிட்டது என கூறுவதற்கும் சரியாக இருந்தது. அந்த தியாகிகளுடன் கை குலுக்க நான்சிறை அதிகாரியிடம் அனுமதி கேட்டேன். அவர் அனுமதித்தார்.
சிறை அறையின் இரும்பு வாயில் மட்டுமல்ல; நீண்ட வராந்தாவும் எங்களை பிரித்து இருந்தது. இவை சிறையின்விதிகள்.அவர்களின் அருகில் சென்றதும் அவர்களின் கைகளை குலுக்கியதும் எனக்கு ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது.
கைகுலுக்கியவுடன் அவர்கள் முஷ்டிகளை உயர்த்தி செவ்வணக்கம் கூறினர். இது மிக அனிச்சையாக அவர்களுக்கு வந்தது.
ஏனெனில் அவர்கள் நமது கட்சியின் தொண்டர்கள்.தோழர் அப்பு எனது கைகளை சில நொடிகள் கூடுதலாக பற்றிக்கொண்டார்.

அவர் மெதுவாக “தோழர்” என கூறினார். ஆனால் வேறு எந்த வார்த்தையும் அவரிடமிருந்து வரவில்லை.நான் அவரது கண்களை பார்த்தேன். அவை பனித்திருந்தன.
நான் வராந்தாவை பார்த்தேன். அங்கு மலர்களை படுக்கைபோல விரித்து வைத்திருந்தனர். எவ்வித திட்டமிட்ட சிந்தனையும் இல்லாமல் என் உள்ளே இருந்து வாக்கியம் தானாக உருவாகி வெளியே வந்தது;“
அந்த மலர்கள் அழிந்துவிடும். ஆனால் தோழர்களே நீங்கள் மனிதத்தின் மலர்கள். உங்களுக்கு அழிவு என்பதேஇல்லை.”கிருஷ்ணப்பிள்ளை அதனை அப்படியே மொழிபெயர்ப்பு செய்தார்.

இளம் அப்புவின் கன்னம் பெருமையாலும் வெட்கத்தாலும் சிவந்தது.தோழர் அபுபக்கரிடம் வந்த பொழுது அவரது கைகளைவிடுவதற்கு எனக்கு மனமே இல்லை.
கடந்த காலத்தில் நடைபெற்ற மகத்தான மாப்பிளைமார் கலகம் எனது நினைவுக்கு வந்தது. முஸ்லிம் சகோதரர்களின் தேசபக்தியை சந்தேகப்படும் இந்து தேசபக்தர்கள் உண்டு.
ஆனால் நான்கில் ஒருதியாகியை இஸ்லாமிய சமூகம் தந்துள்ளது. நான் அபுபக்கரிடமிருந்து நகர தாமதமான அந்த சில நொடிகளில் “செவ்வணக்கம் தோழரே” என அபுபக்கர் கூறிக்கொண்டே இருந்தார்.
அந்த தோழரின் முகம் கனகச்சிதமாக செதுக்கியது போலஇருந்தது. அபுபக்கரின் கண்களில் உண்மையான தேசபக்திஒளிவிட்டு மின்னியது

.நான் கை குலுக்கலை முடித்த பின்னர் அவர்களும் செவ்வணக்கம் கூறினர். நாங்களும் செவ்வணக்கம் கூறினோம். சிறைக்குள் வந்த பொழுது எங்களின் மனம் கனத்து இருந்தது.நாங்கள் திரும்பி வெளியே வந்த பொழுது மனம் இலேசாகியிருப்பதை உணர்ந்தோம்.

இத்தகைய தோழர்களை பெற்றிருப்பதில் எங்களுக்குள் பெருமை பொங்கியது.நானும் சுந்தரய்யாவும் தனியாக இருந்த பொழுது அதுவரைமவுனம் காத்த சுந்தரய்யா ஆழ்ந்த சிந்தனையுடன் கூறினார்:“
அவர்களுக்கு தைரியம் சொல்லத்தான் நீங்கள் வந்தீர்கள்.ஆனால் அவர்கள் உங்களுக்கு தைரியத்தை தந்துள்ளனர்” என்றார்.

நான் கூறினேன்: “அவர்கள் நமது தியாகிகள். அவர்களுக்குதைரியம் தேவை இல்லை. அவர்கள் தூக்கிலிடப்பட்டால் அவர்களின் தோழனாகிய நான்தான் தனிமைப்படுவேன். எனவே தைரியம் எனக்கு தேவையாக இருந்தது; அதனைநான் பெற்றேன்” இந்த பதிலைதான் நான் சுந்தரய்யாவுக்கு தர முடிந்தது.

எங்களது கார் இரயில்வே நிலையத்திற்கு விரைந்தது. அங்கிருந்து சர்வாட்டூருக்கு சென்று பின்னர் படகு சவாரிமூலம் கய்யூர் செல்ல வேண்டும். தியாகிகளின் குடும்பத்தினர் நாங்கள் அன்று மாலையே வருவோம் என எதிர்பார்த்துஇருப்பர். கய்யூர் சென்றது குறித்து அடுத்த வாரம் நான் எழுதுகிறேன்.
நான் எனது மலபார் பயணத்தை (மார்ச்) 26ஆம் தேதி பூர்த்திசெய்தேன். கள்ளிக்கோட்டைக்கு நான் வந்தபொழுது மெட்றாஸ் செயலாளர் மோகனின் தந்தி எனக்காக காத்திருந்தது. அதில் கூறப்பட்டிருந்தது:“

பிரிட்டிஷ் ஆட்சியின் மேலிடம் ஒயிட் ஹால் தலையிட மறுக்கிறது. தூக்குக்கான தேதி விரைவில் இறுதி செய்யப்படும்”இதனை நான் எழுதிக்கொண்டிருக்கும் பொழுது மலபாரிலிருந்து ஒரு தோழர் 29ஆம் தேதி காலையில் நமது தோழர்கள்நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் எனும் செய்தியை கொண்டுவந்தார்.
அதற்கு முந்தைய இரவுதான் அடுத்த நாள் காலையில்அவர்கள் தூக்கு மேடை ஏற வேண்டும் எனும் தகவலை அளித்தனர். அந்த இரவு முழுதும் நான்கு தியாகிகளும் ஒரே குரலில் தேசபக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். “

கம்யூனிஸ்டு கட்சி ஜிந்தாபாத்” எனும் முழக்கங்களை அடிக்கடி விண்ணதிர எழுப்பினர். கண்ணனூர் மத்திய சிறையில் இருந்த ஒரு கைதி கூட, அவர் அரசியல் கைதி அல்லதுஏனைய கைதியாக இருந்தாலும், அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை.அன்று காலையில் சுமார் 3000 பேர் சிறைவாயிலில் திரண்டனர். தியாகிகளின் உடல்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரினர்.

ஆனால் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவர்களை காவல்துறையினர் கலைத்தனர்.
மலபார் விவசாயிகள் கய்யூர் தியாகிகளை போல சாகாவரம்பெற்ற புதல்வர்களை உருவாக்கினர். உயிர்த் தியாகத்தை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்ளும் தேசபக்தர்களை நமதுகட்சி பாதுகாக்கிறது.
கய்யூர் தியாகிகளின் மகத்தான அர்ப்பணிப்புக்காக நமது செம்பதாகையை தாழ்த்துகிறோம்.
(விவரங்கள் மூலம்: பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் Labour Monthly எனும் ஆவணங்கள்)
கட்டுரையாளர்: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர், முதல் பொதுச் செயலாளர்(கய்யூர் தியாகிகள் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான பி.சி.ஜோஷி நேரில் சந்தித்தபோது எழுந்த உணர்வுகளை, பின்னர் 1943 ஆகஸ்ட்டில் லேபர் மன்த்லி ஏட்டில் எழுதினார். அக்கட்டுரையே இது.
தமிழில்: அ.அன்வர் உசேன்

நன்றி - தீக்கதிர் 29.03.2018

3 comments:

  1. கம்யூனிச கம்னாட்டிகளை போட்டு தள்ளிய வெள்ளை அரசு வாழ்க

    அதியமான்

    ReplyDelete
    Replies
    1. உன்னை போட்டுத் தள்ளனும்

      Delete
  2. அணில் விஜய்March 30, 2018 at 2:15 PM

    செவ்வணக்கம்

    ReplyDelete