Friday, April 25, 2014

இரு முதல்வர்களின் சொத்து விபரம் – முதிர்ச்சியற்ற ஒரு ஒப்பீடு



நாற்பத்தி ஒன்பது நாள் முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலை விட மூன்று முறை முதல்வராக இருந்த மோடியின் சொத்து மதிப்பு குறைவு. அப்படியென்றால் யார் நல்ல அரசியல்வாதி என்ற ஒரு கேள்வி இன்று முகநூலில் எழுப்பப்பட்டிருந்தது.

எப்படியாவது மோடிக்கு நல்ல பெயர் வாங்கித்தந்து விட வேண்டும் என்ற வேகத்திலும் மோகத்திலும் தாங்கள் சொல்வது என்னவென்றே தெரியாமல் ஏதோதோ சொல்கிறார்கள்.

நாற்பத்தி ஒன்பது நாள் ஆட்சியிலேயே கேஜ்ரிவால் இவ்வளவு சொத்து சேர்த்து விட்டார். ஆனால் மோடி மூன்று முறை முதல்வராக இருந்தும் இவ்வளவு சொத்து சேர்க்கவில்லை பாருங்கள் என்பதுதான் அவர்கள் சமூகத்திற்கு சொல்ல நினைக்கும் செய்தி.

நாற்பத்தி ஒன்பது நாள் ஆட்சியில் அரவிந்த் கேஜ்ரிவால் சொத்து சேர்த்தாரா என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருந்தால் அது சரியாக இருக்கும். இல்லை யாராவது முதலாளிக்கு ஆதாயம் செய்தாரா என்று சொல்லி இருந்தால் கூட சரியாக இருக்கும். ஏனென்றால் பதிமூன்று நாள் ஆட்சிக் காலத்திலேயே எண்ரான் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்து மகாராஷ்டிர மின் வாரியத்தையும் இந்திய வங்கிகளையும் நஷ்டத்திற்கு கொண்டு வந்த பெருமை வாஜ்பாய் அரசாங்கத்திற்கு உள்ளதல்லவா?

யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை விட அது எப்படி சேர்ந்தது? வருமானத்திற்கு பொருத்தமானதா அல்லது வருமானத்தை விட அதிகமானதா என்பதுதான் முக்கியம்.

அடுத்தது அப்படி சொத்து சேர்த்ததோ அல்லது வருமானம் வந்ததோ நேர்மையான வழியிலா அல்லது அவர்கள் வருமானம் சேர்ப்பதற்காக அரசாங்கக் கொள்கைகள் மாற்றப்பட்டதா அல்லது வளைக்கப்பட்டதா என்பதும் முக்கியம்.

தன் பெயரில் நேரடியாக சொத்து சேர்த்துள்ளாரா? மற்றவர்களின் சொத்துக்களை அதிகரிக்க உதவியுள்ளாரா? என்பதும் முக்கியமான கேள்வி.

வெறும் மஞ்சள் பையோடு திருட்டு ரயிலேறி வந்ததாக சொல்லும் கலைஞரின் குடும்பத்திற்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என்ற கேள்வி போலவே டீக்கடை வைத்திருந்த ஒருவருக்கு அன்றாடம் தனி விமானத்தில் பறக்கும் அளவிற்கு எப்படி வசதி வந்தது? அதற்கு விமானம் தரும் அதோனி நிறுவனம் மோடியால் பெற்ற ஆதாயம் என்ன?

இத்தனை கேள்விகள் வரும் என்பது தெரியாமல் ஆர்வக் கோளாறில் எழுதியுள்ளது அரசியல் முதிர்ச்சியின்மையா இல்லை மோடி மோகமா?

1 comment:

  1. not tea kadai. just selling tea in railway station.. atleast karunanidhi earned in cinema by writing lyrics, screenplay, stories..

    ReplyDelete