Wednesday, April 23, 2014

பொய்யருவி மணியனின் பித்தலாட்டம்

நம்ம தரகுப்புயல் பற்றி இன்றைய தீக்கதிர் நாளிதழில் வந்த
அருமையான கட்டுரை. இப்படிப்பட்ட பிழைப்பு இந்த 
மனிதனுக்கு அவசியமா? மார்க்சிஸ்ட் கட்சி கேரளாவில் நடத்திய
நிகழ்ச்சியின் புகைப்படத்தை குஜராத்தில் நிலைமை சரியாகி
விட்டது என்று எழுத கூசவில்லையா.

இந்த லட்சணத்தில் இவரே தன்னை நேர்மையானவர் என்று
சொல்லிக் கொள்கிறார். பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்
பட்ட விஷயங்களுக்கு என்னய்யா பதில் என்றால் வாயே 
திறக்கவில்லை.

கொழுக்கட்டை வைத்துள்ளார் போலும்.

இனி கட்டுரையை படியுங்கள்.

 பொய்யருவியின் பித்தலாட்டம்
 

தமிழகத்தில் பாஜகவிற்கு பல்லக்கு தூக்குவதில் வைகோவையே வந்து பார் என சவால் விடும் சவடால்காரர், தமிழருவி மணியன் ‘ரௌத்திரம்’ என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்துகிறார்.

அந்த ஏட்டில் (ஏப்ரல் 2014) குஜராத் கலவரத்திலேயே குளிர் காய்ந்துவிடலாம் என்று இடதுசாரிகள் கணக்குப் போட்டு காரியத்தில் இறங்கியுள்ளனர் என ஏகடியம் பேசியுள்ளார். மதவெறி நெருப்பில் தேசத் தைத் தள்ள தளராமல் இவர் ஓடி ஓடிக் கூவினாலும் மக்கள் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். அதே பத்திரிகையின் 65ம் பக்கத்தில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

2002 குஜராத் கலவரத்தில் மோடியின் கொலைவெறிக் கும்பலால் சாவின் விளிம்பிலிருந்து தப்பிப் பிழைத்த குத்புதீன், மத நம்பிக்கையின் வழியே மதவெறி ஏற்றப்பட்டு கொலை வெறியனாக்கப்பட்ட கூலித் தொழிலாளி அசோக்மோச்சி; இந்த இருவரும் இணைந்து கைகோர்க்கும் படத்தை ‘படமே பேசும்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். 

கொலைவெறித் தாண்டவமாடிய குஜராத் இப்போது அமைதி தவழ்கிறது என்று கூற வருகிறாராம். அதற்கு அடுத்த பக்கத்தில் தமிழருவி ‘லட்சியம் வெல்லட்டும்’ என பாஜக கூட்டணிக்கு வெட்க மில்லாமல் வாக்குக் கேட்டிருக்கிறார். பிதற்றலின் பிம்பமாக மாறி அங்குமிங்கும் அல்லாடுவதை அந்த இதழ் முழுவதும் காண முடிகிறது.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதவெறியின் இரத்த சாட்சியான குத்புதீன் மற்றும் அசோக்மோச்சியை ஒரே மேடையில் அழைத்து வந்து நிறுத்தியது. மோதிக் கொண்டோர் உயிர் இழந்து, உடைமை இழந்து கண்ட மிச்ச சொச்சம் என்ன? அதில் குத்புதீன், மோச்சி இரு வரும் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். 

மோதிக் கொண்டு ரத்தப்பலியான நாங்கள் இன்றும் நடுத்தெருவில்தான் நிற்கிறோம். எங்களை மோதவிட்ட முதல்வர் மோடியை பிரதமராக்கி குளிர்காய ஆர்எஸ்எஸ்சும், கார்ப்பரேட்களும் வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கு தான் இழைத்த கொடுமைகளை எண்ணி மனம்மாறிய மோச்சி பின்னாளில் மன்னிப்புக் கேட்டார். ஆனால் மோடிஜி இன்றுவரை மன்னிப்பு கேட்கவில்லை. 

மோச்சி அன்றும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்தார். இன்றும் அப்படித்தான் இருக்கிறார். ஆனால், குஜராத்தில் முதலாளிகள் மேலும் வசதியாகியிருக்கிறார்கள். இதைத்தான் பாஜக வளர்ச்சி என்கிறது. நான் அதனை வளர்ச்சியாக பார்க்கவில்லை என கூறுகிறார் குத்புதீன். உண்மை இப்படியிருக்க, தமிழருவி குறுக்குச்சால் அடித்து பாஜகவிற்கு காவடி தூக்கி முந்தி நிற்க ஆசைப்பட்டு, கடைசியில் முச்சந்தியில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
மக்களின் உண்மையான எண்ணம், மனஓட்டம், விருப்பம் ஆகியவற்றை துல்லியமாகப் படம் பிடித்துள்ளதாம், ரௌத்திரம் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பு. அதில் பாஜக அணிக்குத்தான் முதலிடம். அதுவும் 40 தொகுதிகளிலும் பாஜகவின் ஓட்டு பிளாஸ்திரி கூட்டணிக்கே கிட்டுமாம் என்று பகல் கனவு காண்கிறார்.

அதற்கடுத்த பக்கத்திலேயே விஜயகாந்தும் ராமதாசும் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர். இவர்கள் இருவரும் அரசியல் வாய்ச்சண்டைக்காரர்கள், அறிவார்ந்த சாணக்கியர்கள் இல்லை. தமிழகத்தில் மாற்று அணியால் மாற்று அரசியல் மலர வாய்ப்பில்லை என தமிழருவி புலம்பியிருக்கிறார். 

பாவம், காற்றில் வெண்ணெய் எடுக்க முயன்று மண்ணைக் கவ்வியிருக்கிறார் தமிழருவியார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.ஒரு வேளை தமிழருவி, காவியருவியில் கலந்ததில், பொய்யருவியாக உருமாறி தற்போது ஞாபக மறதியால் அவதியுற லாம். 

கீழ்க்கண்ட வாக்கியங்களைப் படிக்கும்போதாவது அவருக்கு நினைவு திரும்புகிறதா என பார்க்கலாம்...“வெள்ளாட்டுடன் நட்புக் கொள்வதால் வேங்கை வள்ள லாருக்கு வாரிசாகுமா? படமெடுக்கும் பாம்புக்குப் பால் வார்த்து, நேசத்துடன் நெஞ்சில் வைத்துக் கொஞ்சினால் கொல்லும் விஷத்தை அடியோடு விலக்கி விட்டு அன் றாடம் அது அகிம்சையைப் போதிக்குமா? கோடி லிட்டர் பாலைக் கொட்டி குடமுழுக்குச் செய்தாலும் பாரதிய ஜனதாஎன்னும் கரித்துண்டின் கறுப்பு நிறத்தை மாற்றி விட முடியாது. சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே பாரதிய ஜனதாவின் அணுகுமுறை இருந்தாக வேண்டும் என்பது அதன்பிறப்பிலேயே அழுத்தமாக எழுதப்பட்ட அரசியல் விதி”(இன்று புதிதாய் பிறப்போம் என்ற நூலில் தமிழருவி மணியன்)

- எம். கண்ணன்

நன்றி - தீக்கதிர் 23.04.2014

1 comment:

  1. Dear Mr.Raman

    why your comrates waited for admk alliance still amma announced all the 40 seats for admk

    ReplyDelete