Sunday, April 20, 2014

கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களின் செலக்டிவ் அம்னீஷியா

 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்
இணைந்து தனி அணியாக போட்டியிடுவது கம்யூனிஸ்ட் கட்சிகளின்
எதிர்ப்பாளர்களுக்கு மிகவும் சிக்கலாகிப் போய் விட்டது.

நீங்கள் ஏன் தனியாக நிற்கக் கூடாது என்று இத்தனை நாள் கேள்வி
கேட்டுக் கொண்டிருந்த அறிவிஜீவிகள் பலர் இப்போது தனியாக
நிற்பதையும் நையாண்டி செய்வதன் மூலம் அவர்கள் இத்தனை நாள்
கம்யூனிஸ்டுகள் மீது காட்டிய கரிசனம் போலித்தனமானது என்பதை
நிரூபித்து தாங்களும் போலித்தனமானவர்களே என்பதையும்
அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதோ இத்தனை நாட்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த இயக்கமும்
போராட்டமும் நடத்தாமல் உறங்கிக் கொண்டிருந்தது போலவும்
இப்போது திடிரென களத்திற்கு வந்தது போலவும் சில அரசியல்
மேதைகள் எழுதுகிறார்கள்.

பரிதாபத்திற்குரிய அந்த ஜீவன்கள் இப்போதுதான் தங்கள்
கும்பகர்ண உறக்கத்தைக் கலைத்துள்ளார்கள் போலும். இல்லை
யாருமற்ற தனித்தீவில் இத்தனை காலம் வாழ்ந்து விட்டு 
இப்போதுதான் வீடு திரும்பியிருக்கிறார்கள் போலும். 
இல்லையென்றால் அவர்களுக்கு செல்க்டிவ் அம்னீஷியா வியாதி
இருக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி, கல்வி வணிகமயமாக்கல், அண்ணா நூலக இட
மாற்றம் போன்ற கல்வித்துறைப் பிரச்சினைகள், மின் வெட்டு,
தொழில்கள் பாதிப்பு போன்ற பிரச்சினைகள், பரமகுடி துப்பாக்கிச்
சூடு, தர்மபுரி கலவரம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகள்,
திருக்கோயிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன் கொடுமை,
சென்னை அமில வீச்சு போன்ற மாதர் பிரச்சினைகள், வறட்சி
நிவாரணம் கேட்ட முற்றுகைப் போராட்டம் என்று மாநிலம் 
தழுவிய இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியிருக்கிறது.
இதெல்லாம் ஜெயலலிதா அரசுக்கு எதிராக நடந்தவை.

இவற்றைத் தவிர  மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக
நடைபெற்ற போராட்டங்கள் எண்ணிலடங்கா. மாவட்ட அளவிலும்
ஒன்றிய அளவிலும் மார்க்சிஸ்ட் கட்சியும் மற்ர வெகு ஜன அமைப்புக்களும்
நடத்திய போராட்டங்களின் எண்ணிக்கையை அளவிடுவது சிரமம்.

தேர்தலுக்காக மட்டும் களத்திற்கு வரும் அமைப்பு மார்க்சிஸ்ட் 
கட்சியல்ல. திமுகவின் ஆட்சிக்காலத்திலும் சரி, அதிமுகவின்
ஆட்சிக்காலத்திலும் சரி உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள்
பிரச்சினைகளுக்காக போராடியது, இனியும் போராடப் போவது
மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே.

இது அந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களுக்கும் தெரியும்.

ஆனால் ஒப்புக் கொள்ள மனம் வராது.

ஏனென்றால் அவர்களுக்கு  செல்க்டிவ் அம்னீஷியா வியாதி
என்று சொல்ல மாட்டேன்.

மனசாட்சியற்ற, இன்னும் சொல்லப் போனால் இதயமே 
இல்லாதவர்கள் அவர்கள். வீட்டில் அமர்ந்து சொகுசாக 
வலைப்பக்கங்களிலும் முகநூலிலும் வெட்டியாக பின்னூட்டம்
போடுவதைத் தவிர வேறு எதுவும் அறியாதவர்கள்.

அடுத்தவர் பிரச்சினைக்காக அரை மணி நேரம் கூட செலவழிக்க
முடியாத வாய்ச்சொல் வீரர்கள் அவ்வளவுதான்.

1 comment:

  1. அந்த அறிவுஜீவிகளை பட்டியலிட்டால் மற்றவர்களும் தெரிந்து கொள்ள உதவுமே!!

    ReplyDelete