Wednesday, April 2, 2014

சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா இருவரும் நம்மை முட்டாளாக்குகிறார்கள்




இந்நாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இருவரும் ஒருவரைப் பார்த்து மற்றவர் காரசாரமாக திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். யஷ்வந்த் சின்ஹா சிதம்பரத்தைப் பார்த்து நீ ஒரு Crony Capitalist என்று திட்ட உடனே சிதம்பரம் இல்லையில்லை நீதான் Crony Capitalist, மோடிதான் Crony Capitalist என்று திருப்பி திட்டியுள்ளார்.

Crony Capitalist என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன என்று எனக்கு தெரியாததால் எங்கள் மூத்த தோழர் மதுரை இ.எம்.ஜோசப் அவர்களிடம் கேட்டேன். சலுகை சார் முதலாளித்துவம் என்று அவர் விளக்கமளித்தார்.

முதலாளிகளுக்கு யார் அதிகம் சலுகை வழங்கியது என்பதில்தான் இப்போது பிரச்சினை. இதிலே சுவாரஸ்யம் என்னவென்றால் அடுத்தவர்தான் முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்தார் என்று குற்றம் சுமத்துவதுதான்.

தாங்கள் ஏதோ ஏழைப்பங்காளராக இருப்பது போலவும் அடுத்தவர்தான் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போலவும் மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.]

முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் இருக்கிறது. முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறது. முக்கியமான மசோதாக்களில் முதலாளிகளுக்கு உதவ கைகோர்த்து கூட்டுக் களவாணிகளாகவே இருந்துள்ளது.

இதிலே யார் யோக்கியன் என்று இருவரும் நாடகமாடி நம்மை முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள்.

நிதித்துறை, தொழில் துறை, தொழிலாளர் உரிமை, சேவைத்துறை, வரிகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதைத்தான் நாங்கள் அமலாக்குவோம் என்று தைரியம் இருந்தால் இவர்கள் சொல்லட்டும்.

அப்போது முதலாளிகள் இவர்களுக்கு கொடுப்பார்கள் தர்ம அடி.

முட்டாள்கள் தினம் அன்று இவர்களுக்குள் நடந்த விவாதம் நம்மை முட்டாளாக்கவே. தேர்தலில் நாம் அளிக்கும் வாக்கின் மூலம் இருவரையும் முட்டாளாக்குவோம்.

No comments:

Post a Comment