Monday, July 4, 2022

வ வே சு அய்யர், திருக்குர் ஆன். மதச்சார்பின்மை

 பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் மிக முக்கியமான பதிவு. பல மாயைகளை தகர்க்கும் பதிவு. இன்றைய சூழலில் மிகவும் அவசியமாக தேவைப்படும் ஒன்று. கண்டிப்பாக முழுமையாக படியுங்கள்.



வ வே சு அய்யர், திருக்குர் ஆன். மதச்சார்பின்மை: ஒரு முக்கிய குறிப்பு.
<><><><><><>
இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி குறித்துச் சரியாக அறிந்துகொள்ள இக்கட்டுரையை அவசியம் படியுங்கள்.
<><><><><><>
படத்திலுள்ள இக்குறு நூலை எனக்குக் கையொப்பம் இட்டு அன்பளித்துள்ளது வ.வே.சு அய்யரின் மகன் மருத்துவர் வ.வே.சு இராதா கிருஷ்ணன். என்னுடன் கூட இருந்தவர்கள் அப்போது தஞ்சை சரபோஜி கல்லூரியில் உடன் பணியாற்றிய பேராசிரியர்களான கே.என் ராமச்சந்திரன் (அறிவியல் நூல்கள் பல எழுதி விருதுகள் பெற்றவர். எனக்கு ஆசிரியராக இருந்து பின் என்னுடன் நெருங்கிய நண்பராகப் பணியாற்றியவர்.) மற்றும் பேரா. முஸ்தபா (ஒரு மிகச் சிறந்த ஆசிரியர். விரிவாகப் படிக்கக் கூடியவர்). அப்போது நாங்கள் திருச்சி ரீஜனல் எஞ்சினீயரிங் கல்லூரியில் பகுதி நேர M.Phil படித்துக் கொண்டிருந்தோம். இது சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

வ.வே.சு அய்யர் சேரன்மாதேவியில் தொடங்கியிருந்த குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு மட்டும் தனியாக அமர்த்தி உணவு பரிமாரப்பட்ட நிகழ்வு சென்ற நூற்றாண்டுத் தமிழக அரசியலில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஒன்று. பார்ப்பன மாணவர்கள் எல்லோரையும் அப்படித் தனியாக அமர்த்தி உணவு பரிமாறவில்லை எனவும் புகழ்பெற்ற வாவிலா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தெலுங்குப் பார்ப்பனர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டும்தான், அப்படி அவர்கள் வீட்டில் நிபந்தனை விதித்திருந்ததால், தனியாக உணவு பரிமாறப்பட்டது என்பதும் வ.வே.சு தரப்பில் சொல்லப்பட்ட சமாதானம்.

அடுத்த சில ஆண்டுகளில் வ.வே.சு இறந்து போனார். அவரது மகன் திருச்சி திருவானைக்கோவிலில் மருத்துவராக இருந்தார். அந்த நிகழ்ச்சி குறித்த விவரங்களை அறியத்தான் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். அந்த ஒரு குடும்பத்துக் குழந்தைகள் தவிர தாங்கள் உட்பட எலோரும் ஒன்றாக அமர்ந்துதான் உணவு அருந்தியதாக வ.வெ.சு அவர்களின் மகன் இராதாகிருஷ்ணன் கூறினார். நாங்கள் புறப்படும்போது அவர் இந்த நூலைக் கையொப்பமிட்டு எனக்கு அன்பளித்தார்,

நேற்று வேறு ஒரு நூலைத் தேடிக் கொண்டிருந்தபோது இது கண்ணில் பட்டது. இது ஔரங்கசீப்பிற்கு எதிராகப் போராடிய குரு கோவிந்தசிங் குறித்து வ.வே.சு அய்யர் எழுதிய ஒரு குறு நூல். 1925ல் இதன் முதற்பதிப்பு வந்துள்ளது. பின் 1934ல் ‘சுதந்திரச் சங்கு’ சர்பாக ஒரு பதிப்பு வந்துள்ளது. இது அதற்குப் பின் வந்த ஒரு பதிப்பு. வ.வே.சு அவர்களின் 80வது பிறந்த நாளில் (02.04.1961) இது வெளியிடப்பட்டுள்ளது. குரு கோவிந்த சிங். ஔரங்கசீப்பிற்கு எதிராகப் போராடியவர். தனை எதிர்த்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தாலும் குரு கோவிந்தரின் வீரத்தை மெச்சி மொகலாயர்கள் சார்பாக அவர் நட்பு பேண அழைக்கப் பட்டததாகவும், ஆனால் இஸ்லாமாக மாறவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதை கோவிந்தரின் மகன்கள் ஏற்காது போராடி மாண்டதாகவும் இந்நூலில் வ.வே.சு குறிப்பிடுகிறார்.

அதன் பிறகும் ஒளரங்கசீப் கோவிந்தரை சமாதானத்திற்கு அழைத்ததாகவும் மொகலாயர்களுடனான போர்களில் நான்கு மகந்களை இழந்திருந்த அவர் ஒளரங்கசீப்பின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் வ.வே.சு எழுதுகிறார். ஔரங்கசீப் இறந்த பின்னர் அவரது மகன் தேஜ்பகதூரும் கோவிந்தரை மதித்து அவருடன் நட்பு பாராட்ட அழைக்கிறார். போரில் பல இழப்புகளைச் சந்தித்திருந்த குரு கோவிந்தசிங் இப்போது சமாதானத்துக்குத் தயாராகி தேஜ்பகதூர் வேண்டிக் கொண்டபடி கோதாவரிக் கரையிலிருந்த கலகக்காரர்களை அடக்கச் சென்றார். ஆனால் அங்கு விதி வேறு வகையில் விளையாடியது.

இங்கு ஒன்றைக் குறிப்பிடுவது அவசியம். மொகலாயப் படை எடுப்புகளுக்கும் பின் வந்த ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. ஆங்கிலேயர்களைப் போல இங்கு வணிகத்தின் மூலமாகவும், பிற வழிகளிலும் கொள்ளை அடித்தும் அவற்றைத் தம் நாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கம் முகலாயர்களுக்கு இல்லை. அக்பர் அல்லது ஔரங்கசீப் போன்ற மொகலாயர்கள் இங்குள்ள செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டவர்கள் அல்ல. எனவே அவர்கள் கூடியவரை இங்கு அமைதியான ஒரு ஆட்சியை நிலை நிறுத்தவே முனைந்தனர். இங்குள்ள சமூகங்களுடன் சமாதானமாக வாழ்வதே அவர்களுக்குத் தேவையாக இருந்தது. பெரிய அளவில் இந்துக்கள் இவர்களின் அவைகளில் முக்கிய பொறுப்புக்களிலும் பதவிகளிலும் இருந்தனர். இங்குள்ள இந்து ஆலயங்கள் முதலியவற்றை இடிப்பதும் அவர்களின் நோக்கமல்ல. கூடியவரை அமைதியாக ஆட்சியை நடத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

மதமாற்றம் செய்வதும் அவர்களின் நோக்கங்களாக இல்லை. ரிச்சர்ட் ஈட்டன் போன்ற முகலாய கால வரலாற்று அறிஞர்கள் இதை விரிவாக விளக்குகின்றனர். இன்றளவும் இந்தியத் துணைக் கண்டத்தில் அதிக அளவில் முஸ்லிம் மதமாற்றங்கள் நடந்து இன்று முஸ்லிம் நாடுகளாகவே உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றில் எந்நாளும் வலிமையான முஸ்லிம் அரசுகள் இருந்ததில்லை என்பதை நாம் மறந்துவிடல் ஆகாது. பின் எப்படி அங்கு மிகப் பெரிய அளவு மதமாற்றங்கள் நடந்தன? சுஃபி ஞாநிகளின் பங்கு இதில் முதன்மையாக இருந்தது என ஈட்டன் சொல்கிறார். பெரும் நதிகள் இல்லாத இப்பகுதிகளில் கிணற்றுப் பாசனம் முதலானவற்றை பாரசீகம் முதலான நாடுகளில் பயிலப்படும் நீர்ப்பாசன முறை (Persian Wheel) கொண்டு இங்கெல்லாம் விவசாயப் பாசன முறைகளை இவர்கள் உள்ளூர் மக்களுக்கு கற்பித்ததை அவர் விளக்குகிறார். அந்த வகையில் சுஃபிகளின் பங்கு இதில் முக்கிய பங்கு வகித்தது என்கிறார் அவர்.

அப்படியானால் சில இந்து ஆலயங்கள் முகலாயர்களால் இடிக்கப்பட்டதற்கு வரலாற்று ஆதாரங்களும் உள்ளனவே, சில கட்டாய மதமாற்றங்களும் நிகழ்ந்தனவே என்கிற கேள்விகளுக்குச் சில சமீப கால ஆய்வாளர்களான ஆந்த்ரே ட்றூசெக் போன்றோர் விளக்கங்கள் அளிக்கின்றனர்.

இப்படியான சம்பவங்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு. சில குறிப்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தண்டனையாக அவர்கள் வசம் இருந்த ஆலயங்கள் அவ்வாறு தகர்க்கப்பட்டன என அவர்கள் ஆதாரங்களுடன் நிறுவுகின்றனர். ஔரங்கசீப்பின் ஆட்சியில் அவ்வாறு இடிக்கப்பட்ட இந்துக் கோவில்கள் மிக மிகச் சில. அதே ஔரங்கசீப் காலத்தில்தான் நமது குமரகுருபரர் காசியில் மடம் கட்டுவதற்கும் நன்கொடை அளித்தார். இன்றும் காசியில் அந்த மடம் உள்ளதை நாம் அறிவோம்.

இந்த அளவிற்கு விரிவான ஆய்வுகள் எல்லாம் அப்போது
இல்லாவிட்டாலும், கட்டாய மதமாற்றம், இந்து மத அழிப்பு, பசுவதை முதலான சொல்லாடல்கள் மேலோங்கி வந்த ஒரு கால கட்டத்தில் வ.வே.சு அய்யரின் அணுகல்முறை அவ்வழியில் இல்லை என்பது
இங்கே கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.

குருகோவிந்தசிங் படையில் இருந்த இரு பட்டாணியர்கள்தான் அவரது
கோதாவரிப் படைஎடுப்பின்போது அங்கு அவரைக் கொன்றனர் என வ.வேசு எழுதுகிறார். அது ஏன்? ஒரு சமயத்தில் தன்னை அவமதித்த ஒரு பட்டாணியக் குதிரை வியாபாரியை கோவிந்தர் கொன்று விடுகிறார். ஆனால் அந்த வியாபாரிக்கு இரு மகன்கள் இருந்ததை அறிந்து அவர்களைத் தன் மகன்கள் போலவே அவர் வளர்க்கிறார். எனினும் பின்னாளில் உண்மை அறிந்த அவர்களே அந்தப் போரின்போது அவரைக் கொன்றதாகவும் இந்நூலில் வ,வே.சு அவர்கள் குறிப்பிடுகிறார். தன்னால் வளர்க்கப்பட்டவர்கள் ஏன் தன்னைக் கொன்றார்கள் என மரணத் தறுவாயில் கோவிந்தர் கேட்டபோது தந்தையைக் கொன்றதற்குப் பழி வாங்கவே தாங்கள் அவரைக் கொன்றதாகவும், எனினும் சொந்தத் தந்தையைப்போல் தன்னை இதுகாறும் வளர்த்த அவரை இப்படித் தாக்கியதற்காகத் தங்களைக் கொல்லுமாறும் அவர்கள் வேண்டிக் கொண்டதாகவும், குரு கோவிந்தர் அவர்களை மன்னித்து இறந்ததாகவும் வ.வே.சு கோவிந்தரின் வரலாற்றை முடிக்கிறார்.

வ.வே.சு அவர்கள் தன் கதைப் போக்கில் ஔரங்கசீப்பை இந்துத்துவவாதிகள் வழக்கமாகச் சித்திரிப்பதுபோலச் சித்திரிக்கவும் இல்லை. வளர்ந்து கொண்டிருந்த ஒரு பெரும் பேரரசுக்கும் எதிர்த்து நின்ற ஒரு குழுமத்திற்கும் இடையிலான போராகவே அதைக் காட்டுகிறார். மொகலாயர்கள் அவரை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்த ஒரு கட்டத்தில் நேர்ந்தாலும் தொடர்ந்து அப்படியான மதமாற்ற நிபந்தனையின்றி அக்குழுமத்தைத் தன் படை பலத்தால் தங்களின் ஆளுகைக்குள் கொண்டுவந்ததாகவுமே குறிப்பிடும் வ.வே.சு அவர்களின் இந்தச் சித்திரிப்பில் மதவெறுப்பு கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

அது மட்டுமல்ல அவர் இஸ்லாமியத்தை அவதூறு செய்யவும் இல்லை. மிக்க மரியாதையுடனும், அம் மதத்தினரின் நெறிகளுக்கு உட்பட்டும் அதை அறிமுகம் செய்கிறார். மொகலாய ஆட்சியை ஒரு விரிவாக்க 'ஏகாதிபத்தியம்' என்று மட்டுமே குறிப்பிடுகிறார். ‘ஏகாதிபத்தியம்’ என்கிற கருத்தாக்கம் இங்கே மார்க்சீயப் பொருளிலும் சொல்லப்படவில்லை. அந்நிய விரிவாக்கம் என்கிற பொருளிலேயே சொல்லப்படுகிறது. குருவின் இரு மகன்கள் ஒளரங்கசீப்புடனான போரில் கொல்லப்பட்டதைச் சொல்ல வரும்போது, “(அவர்கள்) குருவின் கண்ணெதிரிலேயே ஷஹீதாயினர்” எனக் குறிப்பிட்டுப் பின் “ஷஹீது – தர்மத்துக்காகப் பிராணனைக் கொடுக்கிறவன்’’ என அடிக்குறிப்பில் அதற்கு விளக்கமும் தருகிறார் வ,வேசு அவர்கள்.
ஒரு கட்டத்தில் ஒளரங்கசீப்பிடமிருத்து தப்பி வந்த குரு கோவிந்தசிங் பட்டாணியர்கள் கையில் சிக்குகிறார். ஆனால் அந்தப் பட்டாணிய
ர்கள் அவரது வீரத்தை மெச்சி “உபசாரங்கள் செய்து” போலால்பூர் எனும் ஊரில் கொண்டு சென்று விட்டதாகவும், அங்கேயும் குருகோவிந்தரும் அவரோடு தப்பி வந்த படைகளும், “பீர்முகம்மது என்ற ஒர் முஸ்லிமினாலேயே ரஷிக்கப்பட்டார்கள்” எனவும் வ.வே.சு அய்யர் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல. “குரு கோவிந்தன் குரான் படிக்கும் காலத்தில் இந்தப் பீர்முகம்மது அவனுக்குச் சகபாடியாக இருந்தான். அவன் சிறந்த முஸ்லிமாயும் இருந்தான்” என்கிறார். குரு கோவிந்தர் “முஸ்லிம்கள் சமைத்த அன்னத்தை” உண்டதையும் குறிப்பிட்டுப் பாராட்டுகிறார்.

இறுதியாக முடிக்கும்போது, “..இவ்வாறு தனது ஆத்ம சக்தியனைத்தையும்
தன் சிஷ்யரிடத்தில் வியாபிக்கும்படி செய்த வன்மை சரித்திரத்தில் முகம்மது நபி – ஸல்லாஹூ அலைஹிவஸ்ஸல்லம்- ஒருவருக்குத்தான் நமக்குத் தெரிந்த மட்டில் உண்டு….” என முடிப்பதை வாசித்தபோது நான் மெய்சிலிர்த்தேன்.

இறுதியில் “ஸத் ஸ்ரீ அகால்!” – எனச் சீக்கியர்களின் வழியில் வணக்கம் சொல்லி முடிக்கிறார் வ.வே.சு அய்யரவர்கள்.

வ.வே.சு (1881- 1925) அவர்களின் இறுதிக் காலத்தில் எழுதப்பட்டது இந்நூல். ஒருவேளை இதுவே அவரது இறுதி நூலாகவும் இருக்கக் கூடும். அவர் இறந்த ஆண்டில்தான் இந்நூலும் வெளிவந்துள்ளது. அது காந்தி சகாப்தம் தொடங்கிய காலம். பாரதி, வ.வேசு, வ.உ.சி, சாவர்கர் ஆகியோரெல்லாம் காந்தி சகாப்தம் தொடங்குவதற்கு முன் தமிழகத்தில் பிரிட்டிஷ் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தவர்கள். 1905 வங்கப் பிரிவினையை ஒட்டி எழுந்த அரசியல் எழுச்சியில் வெளிப்போந்த முதல் கட்டத்தினர். வெள்ளை அதிகாரிகளைக் கொன்று கையில் பகவத் கீதையுடன் தூக்கு மேடை ஏறிய மேற்சாதி இளைஞர்களின் காலத்தவர்கள். அரவிந்தர், திலகர் முதலானோரைத் தலைவர்களாக ஏற்றுத் தம் அரசியலைத் துவங்கியவர்கள். வ.வேசு சாவர்கரின் நெருங்கிய நண்பரும் கூட. ஆனால் 1916க்குப் பின் காந்தி சகாப்தம் இங்கு தொடங்குகிறது. அப்போது இந்த எழுச்சி வெகு மக்களை உள்ளடக்கியதாக உருப்பெறுகிறது. காந்தி கிலாஃபத் இயக்கத்தோடு இந்திய அரசியலில் நுழைகிறார்.

பாரதியும் வ.வே.சுவும் முந்தைய வழியிலிருந்து விலகி காந்தியத் தலைமையை ஏற்ற தருணத்தில் மறைய நேரிட்டவர்கள் என நான் முன்னொரு முறை எழுதியது நினைவிருக்கலாம்.

திருக்குர் ஆன் முதல் தமிழ் மொழியாக்கம் வந்தபோது அதைப் படித்து வியந்த வ.வே.சு அவர்கள் அதை வியந்து எழுதியதோடு, “ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல்” என அதைப் பாராட்டி எழுதியது குறித்து மீனா எழுதியுள்ள கட்டுரை ஒன்றும் இங்கே நினைவுக்குரியது.

2 comments:

  1. we need to judge people based on their actions not on their speech. Please check Mohamad nabi's personal life and his wars

    ReplyDelete
    Replies
    1. We may be judge individuals based on what they have done.

      We should judge writings and speeches based on the content.

      Delete