Wednesday, July 20, 2022

எம்.எஸ்.வி, படித்தேன், பகிர்கிறேன்

 இசை மேதை எம்.எஸ்.வி (மெல்லிசை மன்னர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்பதை கவனிக்கவும்) பற்றி எழுத்தாளரும் எங்கள் மதுரைக் கோட்ட தோழருமான தோழர் ச.சுப்பாராவ் முன்பு எழுதியிருந்ததை இன்று மீண்டும் பகிர்ந்து கொண்டிருந்தார். சுவாரஸ்யமான அந்த பதிவை படித்தேன். உடனடியாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



 தீக்கதிர் வண்ணக் கதிரில்

வெளியான என் கட்டு ரை
நீ ஒரு ரா…ஜா..
ச.சுப்பாராவ்
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். எங்கள் கலைக் குழுவின் பாடகர் தோழர் வின்சென்ட்டிற்கு ஒரு பெரிய இசைமேதையுடன் ஒருநாள் முழுக்க இருக்கும் பேறு கிடைத்தது. அந்த மேதை நம் தோழரோடு சகஜமாகப் பேசிப் பழக, நம் தோழர் சற்று உரிமை எடுத்துக் கொண்டு, ‘ஐயா, தாங்கள் ஒரு வரி பாடவேண்டும் என்றாலும், ஹார்மோனியப் பெட்டி இல்லாமல் பாடுவதில்லையே, ஏன்?’ என்று கேட்க, பல்லாயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கிய அந்த இசைமேதை ‘ஸ்ருதி மாறிவிடுமோ என்ற பயம்தான் காரணம்’, என்றாராம் சீரியஸாக. தோழர் என்னிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். அப்போதே அந்த பெரியவருக்கு எழுபது வயதிற்கு மேலிருக்கும். அவரது இசை அனுபவம் அறுபதாண்டுகள் இருக்கும். அந்தத் தொழில் பக்திதான் அவரை உச்சிக்குக் கொண்டுவந்தது. தமிழக மக்களை அவரைக் கொண்டாட வைத்தது. அந்த இசை மேதை எம்.எஸ், விஸ்வநாதன் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை!

இங்கு நான் உணர்ந்தே மெல்லிசை மன்னர் என்ற அவரது பட்டத்தைத் தவிர்த்து இசை மேதை என்று குறிப்பிட்டுள்ளேன். கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு, புகழ் ஏணியில் ஏறும் காலத்தில் ஏதேனும் பட்டம் வழங்கப்பட்டு விடுகிறது. அது அவர்களது பெயரோடு பெயராக ஒட்டிக் கொண்டு அப்படியே நிலைத்தும் விடுகிறது. இப்போது எம்எஸ்வியின் மரணச் செய்தி கேட்டு கலங்கி நிற்கும்போது, மனதில் அவர் உருவாக்கிய எத்தனை எத்தனையோ பாடல்களில், அந்தக் கணத்தில் தோன்றும் பாடல்களை முணுமுணுக்கும்போது, அவரது மெல்லிசை மன்னர் என்ற பட்டம் சேர்ந்து சேர்ந்து நினைவிற்கு வருகிறது. அவரது இசை மெல்லிசை மட்டும்தானா? அதில் மரபார்ந்த இந்திய சங்கீதத்தின் ஆழமும், கனமும், அழுத்தமும், குடித்து முடித்த பில்டர் காபி ருசி போல, பாடல் முடிந்தபின்னும் மனதில் பரவிக்கொண்டே இருக்கும் சாஸ்திரிய ருசியும் கிடையாதா? என்று யோசிக்கும் போது, பட்டம் ஏதோ மரியாதைக்குத் தரப்பட்டது. அவரது இசை வெறும் மெல்லிசை மட்டுமன்று என்று தோன்றுகிறது.

ஜி.ராமநாதன், சி.ராமச்சந்திரா, ஆதிநாராயண ராவ், ஹேமந்த் குமார் முகர்ஜி போன்ற இசையமைப்பாளரின் இசைகளைக் கேட்க ஒரு சாஸ்திரிய சங்கீத ஞானம் இருப்பது அவசியமாகப் படும். எம்எஸ்வியின் இசைக்கு எதுவும் வேண்டாம். கேட்க இரு காதுகளும், காதுகள் கேட்டதை வாங்கி, பொங்கிப் பொங்கிப் பரவசமடைய ஒரு எளிய ரசிக மனமும் இருந்தால் போதும். ஆனால், அதற்காக அவரது இசை கர்நாடக அல்லது மேற்கத்திய மரபு சார்ந்த இசையன்று என்று நாம் கருதிவிடக்கூடாது. பின்னைக்கும் பின்னையாய், முன்னைக்கும் முன்னையாய், பிறங்கும் பரம் பொருள் போல், விஸ்வநாதனின் வித்வத்வம் – பிராசீனத்திற்கும், பிராசீனமாய், நவீனத்திற்கும் நவீனமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. லலிதாங்கியும் தெரியும், ஆபோகியும் தெரியும். வால்ட்ஸ், ஜாஸ் – அதுவும் தெரியும். வயலின்களில் குரோமாடிக், பிஸ்ஸிகாடோ பாணிகளை இடமறிந்து இடம் பெறச் செய்வார் என்று அவரது இசைமேதமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகும் வாலி, கடைசியில் சொல்வது மிக முக்கியமானது. ஆயினும் அவ்வறிவை அளவோடு பயன்படுத்துவார் என்று சொல்லிவிட்டு தம் பாணியில், சந்தனம் நிறைய இருக்கிறதே என்று புட்டத்தில் பூசிக் கொள்ள மாட்டார் என்கிறார். அதனால்தானோ என்னமோ, எத்தனை எத்தனையோ நுட்பங்களுடன் அவர் இசையமைத்த பாடல்களில் அந்த நுட்பங்கள் கல்யாண வீட்டு வாசலில் லேசாய் தடவிக் கொண்ட சந்தனம் போல் தெரிந்தும் தெரியாமலும் வாசம் மட்டும் வீசுகின்றன.

பொதுவாக ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு பிடித்தமான ராகம் இருக்கும். ஆனால் எனக்குத் தெரிந்தவரை எம்எஸ்விக்கு அப்படி தனிப்பட்ட ஃபேவரைட் ராகம் என்று ஒன்று இல்லை. பாடலின் இசை கோரும் ராகம் அவரையறியாமல் அவரிடமிருந்து வந்தது. பாடலின் இனிமையில், மென்மையில் அது சங்கோஜத்துடன் மறைந்தும் நின்றது. முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம் மத்யமாவதி ராகம் என்று தெரியாதவர்களுக்கு, அதை ரசிப்பதில் எந்தக் குறையும் இல்லை. ( நாம் பாடினால் அடுத்த வரியை நம்மை அறியாமல் தித்திப்பதோ கண்ணம் என்று மூன்று சுழி ணவில்தான் பாடுவோம். டி.எம்எஸ் கடினமான சங்கதிகள் வரும் இடங்களில் கூட இரண்டு சுழி னவை மிக கவனமாக உச்சரிப்பது இந்தப் பாட்டின் மற்றொரு அழகு!). மத்யமாவதியின் சாயலையே கொண்டுள்ள நி1, நி2 இரண்டும் பேசும் பிருந்தாவன சாரங்காவில் பெண் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை பாடலின் பிரிலூடில் வரும் புல்லாங்குழலில் பிருந்தாவன சாரங்காவின் அடையாளமான இரண்டு நிஷாதங்களையும் அடுத்தடுத்து அடுக்கி, பநிநிஸா, நிநிஸா, பாமாரிஸா என்று குழைவாகக் கொண்டுவந்து நிறுத்துவது மிகப் பெரிய சங்கீத மேதைகளால் மட்டுமே முடியும். சங்கீதம் தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரு சேர மயக்கிய எத்தனையோ பாடல்களில் அதுவும் ஒன்று. இன்னும் சொல்லப் போனால், சங்கீதம் தெரியாதவர்களுக்கு இன்னும் சற்று கூடுதலாகப் பிடித்த பாடலாகவும்கூட அது இருக்கக் கூடும்.

ஒரே சாயலுள்ள இரு ராகங்களை எது எங்கு வருகிறது என்று தேர்ந்த ரசிகனும் கண்டுபிடிக்க முடியாத வகையில் கலந்து ரஸவாதம் செய்ய எம்எஸ்வியால் மட்டுமே முடிந்தது. மற்றவர்கள் பெரும்பாலும் இப்படிப்பட்ட விந்தையைச் செய்ததில்லை. நான் சிறுவனாக இருந்தபோது வந்த எம்ஜியாரின் சிரித்து வாழ வேண்டும் படத்தில் வந்த ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’ என்ற பாடல் ஹமீர் கல்யாணியா? சாரங்காவா? என்ற விவாதம் நாற்பதாண்டுகளாக நடக்கிறது. இணையம் வந்தபின் இன்னும் வீச்சோடு நடக்கிறது. எங்கு ஹமீர்கல்யாணி, எங்கு சாரங்கா என்று அவருக்கே தெரியாமல் அவரது கைவிரல்கள் ஹார்மோனியத்தில் பறந்து பறந்து ஏதோ மாயவித்தை செய்துவிட்டன. ஜெமினி கணேசனுக்கு நிலவே என்னிடம் நெருங்காதே என்றும், எம்ஜியாருக்கு நீ என்னென்ன சொன்னாலும் கவிதை என்றும் ஒரே பாகேஸ்ரீ ராகத்தை ஜெமினி வடிவிலும், எம்ஜியார் வடிவிலும் நம் கண்முன் நிறுத்த முடிந்த மாமேதை அவர்.

அவர் எவ்வளவு சிறந்த இசையமைப்பாளரோ அவ்வளவிற்கு சிறந்த பாடகர் என்கிறார் இசை விமர்சகர் ஷாஜி. பொதுவாக இசையமைப்பாளர்கள் நல்ல பாடகர்களாக இருப்பதில்லை. அந்தக் கட்டுரையிலேயே சலீல் செளத்ரி தன் பாடல்களைப் பாடி ஒரு ஆல்பம் போட எத்தனை சிரமப்பட்டார் என்பதைச் சொல்கிறார் ஷாஜி. முத்தான முத்தல்லவோ படத்தில் எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடலை உதாரணம் காட்டும் அவர் எஸ்பிபி குரலில் இருக்கும் தொழில் முறைப் பாடகன் தொனியையும், எம்எஸ்வியின் குரலில் தொழில் முறைப்பாடகன் தொனியை மீறி அந்தப் பாடலை உருவாக்கிய கம்போஸரின் தொனியைச் சேர்த்துப் பார்க்கலாம் என்று கூறுகிறார். அந்தப் பாடலில் ஏழுஸ்வரங்களிலும் சிரித்துக் காட்டியவரல்லவா அவர்! அவர் பாடகராகவும் இருந்ததால்தான் அவரது பாடல்களில் தனி முத்திரை இருந்தது. ஒரு பாடல் எம்எஸ்வியின் பாடலா இல்லையா என்று சந்தேகம் வந்தால், அவர் குரலில் பாடிப்பாருங்கள், சரியாக வந்தால் அவர் பாடல், இல்லாவிட்டால் அது வேறொரு இசையமைப்பாளரின் பாடல் என்று எஸ்பிபி ஒரு பேட்டியில் சொன்னார். வாசகர்கள் முயற்சித்துப் பாருங்கள். அது நூறு சதவிகிதம் உண்மை என்று தெரியும். பாடலைச் சொல்லித் தரும் போது அவர் போடும் சங்கதிகளில் பத்து சதவிகிதம் கூட நாங்கள் பாடியதில்லை என்று டிஎம்எஸ், சுசீலா, வாணி ஜெயராம் என்று பல பாடகர்களும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு முன் அப்படி பாடகர்களுக்குப் பாடிக் காட்டியவர் ஜி.ராமநாதன் மட்டுமே.

இன்றும் கல்யாண வீடுகளில் நடக்கும் ஆர்கெஸ்ட்ராக்களிலும் சரி. நாம் திரையிசை பயில வகுப்பிற்குச் சென்றாலும் சரி. அங்கு வாசிக்கப்படும், அல்லது நமக்குக் கற்றுத்தரப்படும் பாடல்களின் வரிசை ஒன்றே போதும் எம்எஸ்வியின் நிரந்தரப் புகழைப் பறைசாற்ற. முதலில் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே அல்லது ஆயர்பாடி மாளிகையில். பிறகு சாந்தி நிலையத்தின் இறைவன் வருவான். ஒன்று அல்லது இரண்டு புது குத்துப் பாட்டு. பிறகு சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும், பாவாடை தாவணியில் பார்த்த உருவமா, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்று விஸ்வநாதனின் வேறு வேறு இசைக் கோலங்கள் முடிவற்று வந்து கொண்டே இருப்பது நம் எல்லோரின் சொ`ந்த அனுபவம்.

ஒரு உச்சத்தை அடைந்த பிறகு படிப்படியான சரிவு என்பது எந்தக் கலைஞனுக்கும் நேர்வதுதான். அதற்கு எம்எஸ்வியும் விதிவிலக்கல்ல. ஆனால் சரிவு எம்எஸ்வி என்ற இசையமைப்பாளனுக்குத்தான் இருந்தது. எம்எஸ்வி என்ற பாடகனுக்கல்ல. மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் என்ற பாடலில் அவர் பாடக்கூடியதாக வரும் சரணம் மிக எளிமையானது என்றாலும் தன் அசாதாரணக் குரலால் அந்த வரிகளை அசாதாரணமாக்கினார் அவர். அதற்கும் மேலாக, மதராஸப் பட்டினத்தில், மேகமே ஓ மேகமே பாடலுக்கு விக்ரம், நாஸர், நா.முத்துக்குமார், அஜயன் பாலா என்ற பெரிய்ய பெரிய்ய பாடகர்களுக்கு மத்தியில் அந்தப் பாடலுக்கு உயிர் தந்தவர் எண்பதைத் தாண்டிய இந்தக் கிழவர்தான்.
தமிழ் திரையிசை, ஏன் தென்னிந்திய, ஏன் இந்தியத் திரையிசைக்கு எம்எஸ்வியின் பங்களிப்பு பற்றி மிகப் பெரிய நூலே எழுதலாம். மலையாளத்தில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்து, அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் என்றாலும், மலையாளிகள் மத்தியில் தமிழராகவே அவர் அறியப்பட்டார். தமிழ்தாய் வாழ்த்துக்கு அவர் இசையமைத்துக் கொடுத்த சாதனை ஒன்று போதும் – தமிழ் உள்ளவரை அவர் என்றென்றும் நினைக்கப்பட. அவர் பற்றிச் சொல்லும் போதெல்லாம் அவருக்கு விருதுகள் கிடைக்காதது பற்றிய செய்தியும் சேர்த்தே பேசப்படும் ஒன்றாகிவிட்டது. அவருக்கு எதற்கு விருதுகள்?

அவர் காலமான செய்தி கேட்டதிலிருந்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் தம் மனதுக்குப் பிடித்த ஏதோ ஒரு பாடலை ராகமாகவோ, ராகமில்லாமலோ எப்படியோ முணுமுணுத்தபடி மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். உனக்கென்ன குறச்சல்? நீ ஒரு ரா…..ஜா…. என்ற அவர் பாடல்தான் எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment