Thursday, July 28, 2022

தீர்ப்பும் - திணிப்பும்

 



தீர்ப்பும் - திணிப்பும்

தோழர் க.கனகராஜ்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)


நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் பாஸ்போர்ட் குறித்தான ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். அந்த தீர்ப்பில் “ஐ.பி.எஸ். அதிகாரி திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையானவர் என நான் சான்றளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுவிட்டு, “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை கையில் எடுத்ததை நான் பாராட்டுகிறேன். அவர் ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகிறார். அவர் இல்லையென்றால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது”என்று அண்ணாமலைக்கு Annamalai ஆஹா, ஓஹோ என்று பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.


இந்த வழக்கை 2021ல் ஒரு வழக்கறிஞர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பலரையும் விசாரித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் இந்த பிரச்சனையில் திரு அண்ணாமலை ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் முழுக்க, முழுக்க திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை குறிவைத்தே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த கடிதத்தின் இரண்டாம் பக்கத்தின் ஏழாவது பாராவில் திரு அண்ணாமலை மிகக் குறிப்பாக, திரு டேவிட்சன் தேவாசீர்வாதத்தை குறிவைத்து கீழ்க்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

“இந்த வழக்கை கவனித்தால் ஒரு கும்பல் சேர்ந்து இதைச் செய்திருப்பதாக தெரிகிறது. இந்த போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்ட காலத்தில் மதுரை காவல்துறை ஆணையாளராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களின் ஈடுபாடு இல்லாமல் கீழ்மட்ட அதிகாரிகள் இந்த குற்றச் செயலை புரிந்திருக்க முடியாது.” என்று நேரடியாக திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை வன்மத்துடன் குறிவைத்திருக்கிறார்.

விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருக்கிறது என்கிற நிலையில் திரு அண்ணாமலையின் முழு கவனமும் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை குறிவைத்தே இருக்கிறது. ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த திரு அண்ணாமலைக்கு நிச்சயமாக பாஸ்போர்ட் சம்பந்தமான விபரங்களில் யாருக்கு தொடர்பிருந்திருக்கும் என்பது தெரிந்திருக்கும். இருந்தும் டேவிட்சன் தேவாசீர்வாதம் என்கிற பெயருக்காகவே திட்டமிட்டு இந்த கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது அண்ணாமலையின் நோக்கமே கெட்ட நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கமாக இருந்திருக்கிறது.

எனவே, இந்த வழக்கில் அண்ணாமலையை குறிப்பிட்டு ஏதாவது கூறவேண்டுமென்றால் அண்ணாமலை திட்டமிட்டு வழக்கை திசை திருப்ப முயற்சித்திருக்கிறார் என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். மாறாக அவர் ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகிறார் என்று நீதியரசர் மாண்புமிகு ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பது நீதிமன்ற நடைமுறைகளிலிருந்து விலகியதாகவும், பாஜக தலைவராக இருப்பதால் அதை பாராட்ட வேணடுமென்கிற நோக்கத்தோடு சொல்லப்பட்டதாகவுமே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வளவு விசாரணை நடைபெற்ற பிறகு திரு. அண்ணாமலை இல்லை என்றால் “இந்த விவகாரம் வெளிச்சத்திற்கே வந்திருக்காது” என்று எல்லா புகழையும் அண்ணாமலைக்கு நீதியரசர் வழங்கியிருக்கிறார். ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்து வருகிறார் (இந்து தமிழ் திசை) என்பது இந்த வழக்கில் மட்டுமின்றி பொதுவாகவும் அவரைப்பற்றி சொல்வதாகவே அமைந்திருக்கிறது.

கடந்த காலத்திலும் பாஜகவோடு தொடர்புடைய மாரிதாஸ் மீதான வழக்கை அதிவிரைவில் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் ரத்து செய்ததை வழக்கத்திற்கு மாறான வேகம் காட்டப்பட்டதாக விமர்சனம் எழுந்ததை புறந்தள்ளி விட முடியவில்லை. இதேபோன்று மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கையும் மின்னல் வேகத்தில் சிபிஐக்கு மாற்றிய பிரச்சனையும் விமர்சனத்திற்கு உள்ளானது. இவற்றையெல்லாம் பார்க்கிற பொழுது நீதியரசர் மாண்புமிகு ஜி.ஆர். சாமிநாதன் அவர்கள் தனது தனிப்பட்ட பாஜக பாசத்தை நீதிவழங்கும் முறையிலும் கலந்திருக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த நேரத்தில் கே.எம். ஜோசப் என்கிற உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் ஏகமனதாக பரிந்துரைத்ததையும், அதை பாஜக ஒன்றிய அரசு மறுதலித்ததையும் கொலிஜியம் மீண்டும் வலியுறுத்திய பிறகு பணி மூப்பை பின்னுக்குத் தள்ளி நியமனம் செய்ததையும் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. பெயர்களின் காரணமாக உள்நோக்கத்தோடு ஒரு அதிகாரியின் மீது சம்பந்தமே இல்லாமல் குற்றம் சுமத்துவதும், ஒரு நீதிபதியை காரணமே இல்லாமல் நிராகரிப்பதும் பாஜகவின் வழக்கமாக இருக்கிறது. நீதிமன்றங்கள் இதற்கு துணை போகக் கூடாது.

No comments:

Post a Comment