Tuesday, July 19, 2022

யார் சிறந்த பெண் ????

 ஒரு சிறந்த பெண் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? - பிருந்தாகாரத்



குடும்ப வன்முறையை எதிர்த்த பிரச்சாரத்திற்கும், சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கும் வாழ்த்துகள். ஏனென்றால், இப்படி ஒரு திரட்டலை ஒரு பொது நிகழ்வாக நடத்துவது பாராட்டிற்குரியது. குடும்ப வன்முறை என்பது, ஒன்று, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்தது அல்லது பெண்கள் தொடர்பானது, பெண்களுக்கான அமைப்புகள் சார்ந்தது என்பதாக ஒரு பழங்கட்டுக்கதையும் தவறான புரிதலும் உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதில் இந்த நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அதில் இருந்து தப்பிக்கும் ஏற்பாடு தான். மேலே குறிப்பிட்ட பழங்கதையாடல். அதனால் தான் இதனை பொது விவாதத்திற்கு உட்படுத்தியுள்ள அனைவருக்கும் முதலில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக அதிகமான குற்றம்

ஏனென்றால் இன்றைக்கு ஓர் அரசியல் கட்சி இப்படி ஒரு தவறான பழங்கதையாடலை முன்வைத்து பொது மக்களை திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் குடும்பத்தில் வன்முறைகளை, அத்துமீறல் கொடுமைகளை பெண்கள் மிக அதிகமாக சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் பெண்களுக்கெதிரான குற்றங்களில், மிக அதிகமாக பதிவாகியுள்ள ஒரு குற்றம் குடும்ப வன்முறையே. ஒவ்வொரு ஆண்டும் 3.5 லட்சம் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு - கிட்டத்தட்ட 1.2 லட்சத்திற்கும் அதிகமான குற்றங்கள் குடும்ப வன்முறை குற்றங்களாகும். இது ஏதோ அவ்வப்போது நிகழும் பிறழ்வுகள் என்று கொள்ள முடியாது. உண்மையைச் சொன்னால், இந்தியாவில் இந்த குடும்ப வன்முறை என்பது பல லட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால், நாம் பதிவாகியுள்ள குற்றங்களைப் பற்றித் தான் – அவற்றின் எண்ணிக்கையை பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

பாதுகாப்பாக வாழும் உரிமை

எனவே நாம் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது குறித்து பேசும்போது, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது குறித்து பேசும்போது, பாதுகாப்பான அமைதியான சூழலில் வாழும் உரிமையானது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி நபரின் உரிமையும் ஆகும் என்பதும் அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் தான் அதனுடைய மைய அம்சமாக இருக்க வேண்டும். ஒரு வேளை மிகப் பெரும் எண்ணிக்கையிலான இந்திய பெண்கள் அவர்களுடைய வாழிடமான வீடுகளில் - குடும்பங்களில் கொடுமைகளையும் வன்முறைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது என்றால், மனித உரிமைப் பாதுகாவலர்கள் பிரச்சாரம் செய்வது போல், இது ஏதோ வெறும் மனித உரிமை மீறல் பிரச்சனைகள் மட்டும் அல்ல. குடும்ப வன்முறை என்பது நிச்சயம் மனித உரிமைகளின் அத்துமீறல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் அதையும் தாண்டிய ஒரு விஷயமும் இதில் உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் சமத்துவத்தினை உத்தரவாதப்படுத்தியிருந்தாலும், அதனால் படுக்கையறைக்குள் நடக்கும் அத்துமீறல்களையோ அல்லது வீட்டிற்குள் நடக்கும் கொடுமைகளையோ வன்முறைகளையோ தடுக்க முடியவில்லை. ஏனென்றால் அந்தரங்க உரிமை என்பது தனி நபர்களின் தனியுரிமை என்று சொல்லிக் கொள்வதும் - அது பொது வெளிக்குரியதல்ல என்றும், பொது வெளியில் நடக்கும் போது மட்டும் தான் அரசு தலையிட முடியும் என்பதுமான கருத்தியல் ரீதியான புரிதலை ஏற்படுத்துவது குடும்ப வன்முறையை நியாயப்படுத்துவதற்கு ஒரு வசதியான ஏற்பாடாகும். இதுமுற்றிலும் தவறானது ஆகும். இது அரசியலமைப்புச் சட்டத்தினை - அது உத்தரவாதப் படுத்தியுள்ள சமத்துவத்தினை நீர்த்துப் போகச் செய்யும் ஏற்பாடாகும்.

இரண்டாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு இந்தியப் பிரஜையின் சமத்துவத்திற்கான உரிமை என்பது குடும்ப எல்லைக்குள் மட்டும் நிற்பதல்ல; குடும்பத்திற்குள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது மட்டுமல்ல; இந்திய பிரஜைகள் ஒவ்வொருவருக்குமான சமத்துவத்திற்கான உரிமை குடும்ப உறவுகளிலும், மனித உறவுகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும், அதற்கான சூழல் இருத்தலையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கங்களுக்கும், இந்த சமூகத்திற்கும் உள்ளது என்பதுதான்.

பெண்ணே பெண்ணுக்கு எதிரியா? 

 மூன்றாவதாக, பெரும்பகுதி வழக்குகள் பெண்களுக்கெதிரானவையாக, புதிதாக திருமணமான பெண்களை அவர்களது கணவன்மார்கள் துன்புறுத்துவதாக இருக்கும்போது, நிச்சயம் அவை பெரும்பாலும் மனித உறவுகள் குறித்தவையாக உள்ளன. சில நேரங்களில் பெண்ணுக்கு எதிராக பெண் இருப்பது மாதிரியாக, அதாவது மாமியார் - மருமகள் கொடுமையாக, வரதட்சணைக் கொடுமையாக இருக்கிறது. பெண்களே பெண்களை தாக்குவது மாதிரியான செய்திகள் வரும்போது, ஆண்கள் எங்கே இந்த குடும்ப வன்முறைக்குள் வருகிறோம், பெண்களே தான் பெண்களுக்கு எதிராக நிற்கின்றனர் என்பது மாதிரியாக சொல்லப்படுகிறது. இதுவும் ஒரு பழங்கட்டுக்கதை தான். ஏனென்றால் இது ஒரு ஆணாதிக்க சமூகம். 

இரண்டாம்பட்சமாக இருப்பதால்...

இந்த ஆணாதிக்க சமூகத்தில், ஒரு ஜனநாயகமற்ற குடும்பக் கட்டமைப்பிற்குள், ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களிடையேயும் உள்ள உறவு முறையில், மனைவியோ அல்லது மருமகளோ யாராக இருந்தாலும், இரண்டாம்பட்ச அந்தஸ்தையே சந்திக்கும் நிலை உள்ளது. பெண்களின் இரண்டாம்பட்ச அந்தஸ்து என்பதை குடும்ப கட்டமைப்பின் உள்ளார்ந்த அம்சமாக மாற்றுவது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. மிகவும் தவறானது. இப்படி குடும்பங்களில் பெண்கள் இரண்டாம்பட்சமாக தள்ளப்படுவதால், லட்சம் பேர்களிடம் சர்வே எடுத்ததில் 40 சதமான பெண்களும், 38 சதமான ஆண்களும், பெண்கள் சமையல் செய்யாவிடில், அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குடும்ப பொறுப்புகளை சரிவர செய்யாவிடில், அனுமதியின்றி வெளியில் சென்றால், அல்லது ஆண் விருப்பப்படும் போது பாலியல் உறவுக்கு உட்படாவிட்டால், பெண்களை அடிப்பதில் தவறில்லை என்று கூறியதாக தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த சர்வே அறிக்கை தெரிவிக்கிறது. பெண்களே கூட இப்படி நினைக்கின்றனர். 2022ம் ஆண்டில் இருக்கிறோம். இப்படிப்பட்ட பழமைவாத கருத்துக்கள் இன்றைக்கு பலவீனப்பட்டாலும் அல்லது எதிர்க்கப்பட்டாலும், துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு ஆட்சியில் உள்ள தத்துவார்த்த கருத்தியல் கோட்பாட்டின் நடைமுறை கருவிகளாக உள்ள முக்கியமான அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு நிர்வாகத்தில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள், நீதித்துறையை சார்ந்தவர்கள் இந்த ஆணாதிக்க சிந்தனையை - ஆணாதிக்க சித்தாந்தத்தை ஊக்குவிக்கின்றனர், வளர்த்தெடுக்கின்றனர்.

“சிறந்த பெண்மணி” என்பவள் ஒரு அற்புதமான வீட்டை உருவாக்குபவள், அவளுடைய முழு வாழ்க்கையையும் அவளுடைய வீட்டின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே கொண்டிருப்பவள், மேலும் அவள் குழந்தைகளை பெற்றெடுப்பவளாக அதிலும் மகன்களை பெற்றெடுப்பவளாக இருப்பவள் என்று சித்தரிக்கப்படுகிறது. அதிலும் “நூறு மகன்களின் தாயாக இருக்கட்டும்” என்பது நமது பாரம்பரிய இலக்கியத்தில் பெண்ணிற்கான வரம் என்று சொல்லப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். எனவே பெண்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், என்னவாக இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்வது என்பது இந்த சமூகத்தில் உள்ள சமத்துவமற்ற உறவுகளின் ஒரு பகுதியாகும். அதுவே வீட்டிற்குள்பிரதிபலிக்கிறது.  எனவே, பெண் தாழ்ந்தவள் என்ற இந்த மனுவாத சித்தாந்தங்கள் ஒரு பெரிய அரசியல் பிரச்சனையாக உள்ளது. இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அத்தகைய சித்தாந்தங்களை ஊக்குவிக்கின்றனர். உதாரணமாக, பெண் குழந்தையை காப்பாற்றுங்கள், ‘பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுங்கள்’ என்று சொல்பவர்கள் ஒரு வேளை அவர்களது மகள் ஒரு சுய விருப்பத் திருமணத்தை முடிவு செய்தால், குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்தால் அல்லது அவள் திருமணமே செய்து கொள்ள விரும்பவில்லை என்று முடிவு செய்தால், அவள் ஆணாதிக்க சிந்தனையின் கோர முகத்தை மட்டுமல்ல, பொதுவாக சமூகத்தில் ஒரு ஆழமான பிரச்சனையை சந்திக்க வேண்டியவளாக ஆகிறாள்.  எனவே குடும்ப வன்முறை பிரச்சினை என்பது குடும்ப உறவுகளை ஜனநாயகமயமாக்குதல் என்பதுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது. 

ஒரே அரசியல் கட்சி

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் 1964- ல் அதனுடைய கட்சித் திட்டம் எழுதப்பட்டு 2000-ல் தற்காலப்படுத்தப்பட்டது தொடங்கி, மிக நீண்டகாலமாக, சந்தேகத்திற்கு இடமின்றி, குடும்ப உறவுகளை ஜனநாயகப்படுத்துவது என்பது, சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்களின் சம உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான காரணி என்பதை சுட்டிக்காட்டியதோடு பாடுபட்டும் வருகிறது.  எனவே 2022 இல் நடைபெறும் குடும்ப வன்முறைக்கு எதிரான இந்த பிரச்சாரம் மனுவாத புரிதலுடன் உள்ள அதிகாரத்தில் இருப்பவர்களால் முன்வைக்கப்படும் நடைமுறையில் உள்ள சித்தாந்தங்களை எதிர்த்த முக்கியமான சவால்களை விடுக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது. 

உண்மையில் ஒரு சிறந்த பெண் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? ஒரு சிறந்த பெண், சுய அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமும், சட்டங்களும் உத்தரவாதம் செய்துள்ள அத்தனை உரிமைகளையும் பயன்படுத்தும் அதிகாரத்தை பெற்றவராக இருக்க வேண்டும். அதேபோல, எந்தவொரு நாகரீக சமூகத்திலும் சமுக சமத்துவ விதிகளின்படி வாழும் உரிமைகளைப் பயன்படுத்தும் அதிகாரத்தை பெற்றவராக இருக்க வேண்டும்.  வரதட்சணைக்கு எதிராகப் போராட வேண்டும், திருமணம் என்ற பெயரில் திருமண பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான சட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் மசோதாவாக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான வாழ்நிலையைச் சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும்; அனைத்துப் பெண்களுக்கும் குடும்ப வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவதற்கும், வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை இந்த பிரச்சாரத்தில் முன்னெடுத்து வென்றெடுப்போம்.

பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல், குடும்ப வன்முறைகளை எதிர்த்து ஜூலை 19 (இன்று) சிபிஎம் சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள சிறப்பு மாநாட்டையொட்டி கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத், காணொலி வாயிலாக விடுதிதுள்ள வாழ்த்துரை.
தமிழில் - ஆர்.எஸ்.செண்பகம்

நன்றி - தீக்கதிர் 19.07.2022
 

 


No comments:

Post a Comment