முக
நூல் வாயிலாக நல்ல நண்பரான தோழர் முகமது யூசுப் அவர்களின் “மணல் பூத்த காடு” பற்றித்தான்
இந்த பதிவு.
கனவுப்பிரியன்
என்ற புனைப்பெயரில் வெளி வந்த “கூழாங்கற்கள், “சுமையா” இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களுமே மிகவும் பிடித்திருந்தது.
அவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தும் கைவராமல் போய் விட்டது. அது போல
இந்த முறையும் நடந்து விடக் கூடாது என்பதற்காகவே அவரது சொந்தப் பெயரிலேயே எழுதி வெளிவந்த
இந்த நூலைப் படித்து முடித்த கையோடு கணிணி முன்பு அமர்ந்து விட்டேன்.
துபாய்,
ரியாத், அபுதாபி, பஹ்ரைன், குவைத் எல்லாம் ஒரே நாடுதான் என்ற நினைப்பில் இருந்த காலமெல்லாம் உண்டு. சதாம் ஹூசைன் மட்டும் குவைத் மீது படையெடுக்காமல்
இருந்திருந்தால் இந்த குழப்பமெல்லாம் தீர்ந்திருக்காது என்பதை நான் நேர்மையாக ஒப்புக்
கொள்கிறேன்.
இந்த
நாவல் சவுதி அரேபிய மண்ணைப் பற்றியும் அங்கிருக்கும் மனிதர்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும்
வகாபியிசம் என்ற பெயரில் உருவான குழப்பங்களின் தோற்றுவாய் பற்றியும் இந்தியாவிலிருந்து
அங்கே வேலை பார்க்கச் சென்ற ஒரு பயோ மெடிக்கல் இஞ்சினியர் அனீஸ் வாயிலாகப் பேசுகிறது.
கொஞ்சமாய் முதலாளித்துவ குணாம்சம் பற்றியும் கூட.
தூத்துக்குடியிலிருந்து
வாங்கிய கடனை அடைப்பதற்காக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் “அல் அம்சா பலசரக்குக்
கடை (ஆசிரியர் அப்படித்தான் சொல்கிறார்) என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். நிறுவனம்
டெண்டரில் எடுத்து கொள்முதல் செய்யும் இயந்திரங்களை அந்தந்த நிறுவனங்களில் சென்று நிறுவி
விட்டு (Installation) செய்யும் வேலை.
அதற்காக
அவர் சவுதி அரேபியா முழுதும் செல்லும் பயணங்கள்தான் கதையின் களம். செல்கின்ற ஊர்கள்,
அதன் வரலாற்றுப் பின்னணி, அந்த ஊரின் தட்ப வெப்ப நிலை, சமூக பொருளாதார நிலை, சுற்றுலா
முக்கியத்துவம் என்று பலவற்றையும் விவரிக்கிறார். சவுதி அரேபியா ஒரு பாலைவனப் பிரதேசம்
என்ற நினைப்பை தகர்த்து அங்கேயும் ஊட்டி போல, கொடைக்கானல் போல பல இயற்கை எழில் கொஞ்சும்
பிரதேசங்கள் இருக்கிறது என்பதை நமக்கு புரிய வைக்கிறார். அது போல தலை வெட்டும் தண்டனைகள்
எல்லாம் பழங்கால சங்கதிகள்தான். ஆனாலும் தவறான பிரச்சாரம் நடக்கிறது என்று ஆதங்கமும்
படுகிறார்.
அதே
போல நாவலின் இன்னொரு அம்சம், அனீஸைப் போல வேலை பார்ப்பதற்காக சவுதி வந்தவர்கள், குடும்பத்தைப்
பிரிந்து சவுதி வர வேண்டிய சூழல், அவர்கள் சவுதியில் வாழும் முறை, ஒற்றுமை, முரண்பாடுகள்
ஆகியற்றையும் விவரிக்கிறார்.
நாவலின்
முக்கியமானதொரு கதாபாத்திரமாக காயல்பட்டிணம் தோழப்பா என்பவரைச் சொல்வேன். தயவு செய்து
அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். அனீஸின் தந்தையின் நண்பரைப்
போல இருப்பதால் அவரை அழைத்ததைப் போலவே இவரையும் அழைக்கிறார்.
தோழப்பா
பாத்திரம் வழியாகவே பல தகவல்களை அள்ளிக் கொடுக்கிறார் கனவுப்பிரியன். சவுதி அரேபிய அரச பரம்பரையை முன்னர்
இங்கிலாந்து ஏகாதிபத்தியமும் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியமும் வளைத்துப் போட்டது என்ற பின்னணியை விளக்குகிற தோழப்பா,
பல புத்தகங்களையும் படிக்கச் சொல்கிறார். அந்த பட்டியல் வாசகர்களுக்கு கனவுப்பிரியன்
அளிக்கும் பட்டியல்.
வஹாபியிஸத்தின்
தோற்றம், அதற்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செய்த சதிகள், அப்படி வஹாபியிஸத்தை பின்பற்றுபவர்களால்
இஸ்லாமிற்கு உள்ளும் வெளியிலும் நடக்கிற பிரச்சினைகள் ஆகியவற்றை அவர் விரிவாகவே எழுதியுள்ளார்.
அது
போலவே திரைப்பட இயக்குனராகும் கனவில் இருந்து சகலையின் போட்டுக் கொடுத்தலால் சவுதிக்கு
வேலைக்கு வந்த ஷேக் பாயின் வீட்டில் பார்க்கும் படங்களின் பட்டியல்களும் நமக்கான பரிந்துரைதான்.
குடும்பத்தைப் பிரிந்து வாழ்பவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள இந்த நாவல் உதவும்.
இந்த
நாவலின் இன்னொரு முக்கிய பாத்திரம் பாகிஸ்தானிய ஓட்டுனர் ஜலால் சாச்சா. இந்திய அனீஸை
பேட்டா என்று பாசத்தோடு அழைப்பதும் அனீஸ் பயணம் செய்யும் இடங்களில் தங்குவதற்கும் பல
உதவிகள் பெறுவதற்கும் தன் தொடர்புகளை பயன்படுத்துவது, அதிகமான வெப்ப நிலையில் அனீஸின்
கார் பழுதாக, அதற்காக அனீஸின் சம்பளத்தை பிடிக்க மேனேஜரின் கழுத்தைப் பிடித்து சம்பளம்
போடுவது என்று ஒரு நல்ல பாத்திரம்.
இந்தியா,
பாகிஸ்தான் எதிரி நாடுகள் என்ற வெறியூட்டப்படும் காலத்தில் எல்லைகளைக் கடந்து வேறு
நாட்டில் அனைவரும் நேசத்தோடுதான் பழகுகிறார்கள் என்ற உண்மையை நாவலாசிரியர் அங்கங்கே
விதைகளாக தூவிக் கொண்டே போகிறார், அது மக்களின் மனதில் விருட்சமாக வளரும் என்ற நம்பிக்கையோடு.
நீண்ட
தத்துவ விசாரணையும் உண்டு. சுபைதா என்ற குழந்தையோடு
ஒரு ஒட்டகத்தில் செல்கிற போது கொஞ்சம் ஃபேண்டஸியும்
உண்டு. அனீஸ் மெக்காவுக்குச் செல்கையில் முகமது யூசுப் நம்மையும் கை பிடித்து அழைத்துச்
சென்று நம்மையும் அங்கே அவரது உணர்வுகளில் மூழ்க வைக்கிற அளவிற்கு உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார்.
இந்த
நாவலில் எனக்கு பிடித்த ஒரு இடத்தை அப்படியே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஷேக் பாயின் சகலை ஒரு அடிப்படைவாதி. அவரை வெறுப்பேற்ற திருவருள் படத்தை போட்டு பார்க்கிறார்கள்.
அப்போது அவருக்கும் அனீஸிற்கும் இடையேயான உரையாடல்கள் மிகவும் கவனத்தோடு படிக்க வேண்டியது.
அடிப்படைவாதிகளுக்கு மட்டுமானது அல்ல அந்த உரையாடல். இஸ்லாம் மீது தவறான கருத்து உள்ளவர்களுக்குமானதும்
கூட.
ஒரு
நாளைக்கு ஆயிரம், இரண்டாயிரம் கிலோ மீட்டர் கார் பயணம் எல்லாம் எப்படி சாத்தியமென்று தெரியவில்லை.
அங்கே உள்ள சாலைகளின் தன்மை அப்படி என்றால் பொறாமைப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
எல்லா
அலுவலகங்களிலும் இருப்பது போல உள்ளடி வேலைகள், திறமையை அலட்சியப்படுத்துதல், போட்டுக்
கொடுத்தல், கீழே உள்ளவர்களை உதாசீனம் செய்தல் ஆகியவை அனீஸின் அலுவலகத்திலும் உள்ளது.
அதனால்
அவர் துபாய்க்கு ஒரு பயிற்சிக்கு செல்லும் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா திரும்ப முடிவு
செய்கிறார்.
ஆனால்
அவரைச் சுற்றி வரும் கருப்புப் பூனை போல அனீஸும் மீண்டும் சவுதி திரும்புவதற்கான வாய்ப்பு
உண்டு என்பது என் அனுமானம்.
பல
ஊர்கள், பல நினைவுச்சின்னங்கள் பற்றி எழுதுகையில் அவற்றின் புகைப்படங்களையும் போட்டிருந்தால்
இன்னும் கொஞ்சம் நெருக்கமாக உணர்ந்திருக்க முடியும். புகைப்படங்களைப் போட்டால் அது
பயண அனுபவ நூலாக மாறி விடுமோ என்ற அச்சத்தில் தவிர்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.
குறைந்த பட்சம் லக்கி ஹோட்டலையாவது போட்டிருக்கலாம். இதைப் படித்து விட்டு முகநூலில்
போட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
நானூறு
பக்கங்களுக்கு மேல் நூல் இருந்தாலும் கொஞ்சம் கூட அலுப்பே இல்லாமல் தொடர்ச்சியாக படிக்க
முடிந்த நூல் இது.
பாஸ்போர்ட்
இல்லாமல், விசா இல்லாமல், ஏன் விமானக் கட்டணம்
கூட இல்லாமல் சவுதி அரேபியாவை, ரியாத், கசீம், கமீஸ் முஸ்யாத், உயைனா, ஜிசான், ஹாலத் அம்மார், ஹஃபூஃப், புரைதா, உனைசா, பத்ரூ என்ற பல ஊர்களை இலவசமாக அழைத்துச் சென்று
சுற்றிக் காண்பித்த தோழர் முகமது யூசுபிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Nice review
ReplyDeleteNice review
ReplyDeleteஅருமை
ReplyDeleteநூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்