Tuesday, March 5, 2019

மீண்டும் அதிர்வுகளை உருவாக்கிய


மீண்டும் ஒரு அற்புதப்படைப்பு



நூல் அறிமுகம்            : சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை
ஆசிரியர்                       : அ.கரீம்
வெளியீடு                      : பாரதி புத்தகாலயம்
                                             சென்னை – 18
விலை                              : ரூபாய் 90.00

“தாழிடப்பட்ட கதவுகள்”  என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலமாக கோவைக் கலவரத்தின் மறைக்கப்பட்ட பல பக்கங்களை தன் உணர்ச்சி பூர்வமான சிறுகதைகள் மூலம் வெளிக் கொணர்ந்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்ற தோழர் அ.கரீம் அவர்களின் இரண்டாவது நூல் “சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை”

இம்முறை ஒரே ஒரு கதையைத் தவிர மற்ற கதைகளின் களங்கள்  வேறு. ஆனால் அதே கூர்மையான எழுத்து.

கோவையில் குண்டு வெடித்த நாளில் ஊருக்கு போக வழியின்றி பெண்களுக்கே உரிய பிரத்யேக உடல் உபாதை வதைக்கும் வேளையில் பூட்டப்பட்ட வீட்டின் திண்ணையில் பதுங்கி உயிரையும் மானத்தையும் சமூகத்தின் அவச்சொல்லுக்கு ஆளாகாமல் பாதுகாக்க துடிக்கிற ஒரு இளம் பெண்ணின் கதை “இருள்” அவளுக்கு அடைக்கலம் கொடுத்தது முந்தைய கலவரத்தின் மகனைப் பறி கொடுத்த பெற்றோர் என்பது மனிதத்தின் உச்சம்.

ஒதுங்க நிழல் இன்றி மரங்கள் வெட்டப்பட்ட சாலையில் ஆளுனர் கடந்து செல்வதற்காக பந்தோபஸ்து வேலையில் இருக்கிற பெண் காவலர் படும் சிரமங்களை ‘வெக்கை” பேசுகிறது. காவல் துறையின் செயல்பாடுகள் குறித்த விமர்சனமாகவும் உள்ளது.

ஒரு மரணம் நிம்மதியையும் எதிர்பார்ப்பையும் அளிக்க முடியுமா? அநியாய வட்டி வாங்கி ஆதிக்க செலுத்தி வந்த “சுருட்டு நாணி” யின் மரணம் முடியும் என்கிறது. கலகலப்பான கதை கடைசியில் என்னமோ சோகத்தில் முடிகிறது.

நூலின் தலைப்பான “சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை” மனதை பாதிக்கிறது. ஒரு குதிரை தன்னுடன் பிரியமாக இருந்த சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரத்தை விவரிப்பதாக அமைந்துள்ளது. பெயர்கள் மாற்றப்பட்டிருந்தாலும் ஆசிஃபாவை நம்மால் மறக்க முடியுமா?

பூமயில் –இதுவும் பாலியல் வெறி கொண்டு மழலையைச் சிதைக்கிற ஒரு கயவனைப் பற்றிய கதைதான். ஆனால் இங்கே அந்த வெறியன் சொந்த தாத்தா என்பதுதான் உச்சகட்ட அதிர்ச்சி. அவனை அவன் மனைவி போட்டு மிதித்து அறைகிற போது நமக்கும் அப்படி செய்ய வேண்டுமென்ற உந்துதலை அளிக்கிறது தோழர் கரீமின் எழுத்து.

இவற்றைத் தவிரவும் இன்னமும் நான்கு கதைகள் உள்ளது. அவற்றைப் பற்றியும் எழுதி வாசகர்களின் சுவாரஸ்யத்தை கெடுக்கக் கூடாது என்பதால் நிறுத்திக் கொள்கிறேன். இயக்குனர் ராஜூ முருகனின் முன்னுரையும் அருமை.

அதிர்வுகளை உருவாக்கும் ஒரு அற்புதப்படைப்பை மீண்டும் அளித்த தோழர் அ.கரீமிற்கு வாழ்த்துக்கள்.

தோழர் சம்சுதீன் ஹீரா, உங்க அடுத்த படைப்பு எங்கே?

No comments:

Post a Comment