Tuesday, March 12, 2019

ஒரு ஸ்ட்ராங் காபிக்காக 60 ஆண்டுகள்



இளைப்பில்லை காண்... கும்மியடி!
பொருளியல் அரங்கம்--க.சுவாமிநாதன்

இந்தியன் காபி ஹவுஸ்

இந்தியன் காபி ஹவுஸ் பெண் ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதென்ற முடிவை எடுத்துள்ளது. 1958ல் துவக்கப்பட்டஇக்கூட்டுறவு நிறுவனத்தில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முதலாக பெண்கள் அடியெடுத்து வைத்துள்ளனர். 1958ல் கேரள மாநிலத்தில் இருந்த காபி வாரியம் பல ஓட்டல்களை மூடுவதென்று முடிவை எடுத்தபோது கம்யூனிச இயக்கத் தலைவர் ஏ.கே. கோபாலன் தொழிலாளர்களே கூட்டுறவு அமைப்புகளைத் துவக்குவதற்காக வழிகாட்டல்களை வழங்கினார். அப்படித் துவங்கப்பட்டதே இந்தியன் காபி ஹவுஸ்.கண்ணூரைத் தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம் 28 ஓட்டல்கள் மற்றும் சிறு கடைகளை வட கேரளத்தின் 6 மாவட்டங்களில் வைத்துள்ளது. மாநில தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜனின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

திருச்சூரைச் சேர்ந்த இன்னொரு கூட்டுறவு நிறுவனமும் கண்ணூர் முன்னுதாரணத்தைப் பின்பற்றப் போகிறதாம். இந்நிறுவனம் தென் கேரளாவில் 56 கடைகளை வைத்திருக்கிறது. ஓணம் விழாக் காலத்திற்கு முன்பாக இது நடந்தேறுமாம்.பெண்களுக்கான 8 மணி நேர ஷிப்ட் காலை 8 மணிக்கு துவங்கும். மாலை 4 மணிக்குஅவர்களின் பணி முடிந்து இல்லங்களுக்கு திரும்புவார்கள். பெண்கள் உடை மாற்றும் அறை, தனிக் கழிப்பறை ஆகியனவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு ஸ்ட்ராங் காபிக்காக 60 ஆண்டுகள் பெண்கள் காத்திருக்கிறார்கள்.

ஏர் இந்தியா

மார்ச் 8 அன்று இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா 52 வழிகளில் அனைத்து பெண் பணியாளர்களை கொண்ட விமானங்களை இயக்கியுள்ளது. இதில் 12 வழிகள் சர்வதேசப் பயணங்களுக்கானவை. அவற்றில் நீண்ட தொலைவு பயணங்களும் அடங்கும். 40 வழிகள் உள்நாட்டு பயணங்களாகும்.பெண் பைலட்டுகளும், கேபிள் பணியாளர்களும் சிறகு விரிந்து பறந்த வழித்தடங்களில் புதுதில்லியிலிருந்து சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், சிக்காகோ, வாஷிங்டன், லண்டன்,பாரீஸ், சிட்னி, ரோம் ஆகியன உண்டு. மும்பையிலிருந்தும் லண்டன், ஷாங்காய் நோக்கிப் பறந்துள்ளனர்.மற்ற விமான நிறுவனங்களும் மகளிர் தினத்தைக் கொண்டாடியுள்ளன. கே.ஏர். ஸ்பைஸ் ஜெட். இண்டிகோ ஆகியன கட்டண சலுகை உட்பட பல்வேறு வகைகளில் இந்நாளை அனுசரித்துள்ளன என்றும் அவையெல்லாம் வணிக தந்திரங்களே. ஏர் இந்தியாவின் இம் முன்முயற்சி பாராட்டுதலுக்குரியது. “வீட்டிற்குள் பெண்ணை பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்ற பாரதியின் மகிழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளன.“விந்தை மனிதர் கழுத்து வலிக்கு தலை நிமிர்ந்தார்” என ஆகாயத்தைப் பார்க்க வைத்துவிட்டது ஏர் இந்தியா!

80 லட்சம் பேர்

இந்தியாவில் 80 லட்சம் பெண் தொழில் முனைவோர் உள்ளனர். மொத்த தொழில் முனைவோரில் 14 சதவீதம் பெண்கள்.அதாவது மொத்த தொழில் முனைவோரின் எண்ணிக்கை 5 கோடியே 85 லட்சம். இது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வு விவரங்கள் ஆகும். புதிதாக வளர்ந்துள்ள மின்னணு வர்த்தகம் (ந-ஊடிஅ) பெண்களுக்கான வாசல்களைத் திறந்து விட்டுள்ளதாகஸ்டேட்ஸ்மேன் (08.03.2019) செய்தி தெரிவிக்கிறது.

ஊதியமற்ற உழைப்பு

ஜனவரி 2019ல் இந்து நாளிதழில் வெளியான செய்தி ஒன்று பெண்களின் ஊதியமற்ற உழைப்பு பற்றிய தகவல்களை வெளியிட்டது. ஆக்ஸ்பாம் (டிஒகடிசஅ) ஆய்வின் அடிப்படையிலான செய்தியாகும் அது.உலகம் முழுவதும் உள்ள ஊதியமற்ற உழைப்பின் மதிப்பு 10 டிரில்லியன் டாலர்களாகும் (ரூபாய் மதிப்பில் சொல்வதானால் ஆறரை கோடியே கோடி) உலகத்தின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்று “ஆப்பிள்”. அதன் விற்பனைத் தொகையை விட 43 மடங்குகள் பெண்களின் ஊதியமற்ற உழைப்பாகஉள்ளது. ஆய்வறிக்கையின் ஒரு வார்த்தைமுக்கியமானது. “இந்தியாவில் சமத்துவமின்மை பெண் முகத்தைக் கொண்டதாக உள்ளது.”இந்தியாவில் பெண்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிற நேரத்தின் பொருளாதார மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1 சதவீதம்அதாவது நகரங்களில் ஒரு நாளைக்கு 312 நிமிடங்களும், கிராமங்களில் 291 நிமிடங்களும்குழந்தைகளைக் கவனிக்க செலவிடுகிறார்கள். இது ஓர் ஊதியமற்ற உழைப்பு. ஆண்கள் குழந்தைகளைக் கவனிக்கவில்லையா? என்றுகேட்கலாம். அதற்கும் கணக்கு உள்ளது. நகரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 29 நிமிடங்களும் கிராமங்களில் 32 நிமிடங்களும் சராசரியாக குழந்தைகளை ஆண்கள் கவனித்துக் கொள்கிறார்கள் எவ்வளவு பெரிய வித்தியாசம்!

ஊதியத்திலும் கீழே...

பாலின இடைவெளிக் குறியீடு என்பார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்குமான இடைவெளி இது. ஆக்ஸ்பாம் அறிக்கை ஊதிய இடைவெளி 34 சதவீதமாக இந்தியாவில் உள்ளது என்கிறது. 2018ல் பாலின இடைவெளிக் குறியீட்டில் உலக நாடுகளில் இந்தியா 108 வது இடத்தில் உள்ளது. 12 ஆண்டுகளுக்குமுன்பு கூட 2006ல் இந்தியா 98 வது இடத்தில் இருந்தது. 10 ரேங்க் கீழே விழுந்துள்ளது. நம்மைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனா ரேங்கில் முந்தியிருக்கிறது. பக்கத்தில் உள்ளபங்களாதேசும் நம்மை விட மேலே உள்ளது.எம். எஸ்.ஐ (MONSTER SACARY INDEX) என்கிற குறியீட்டை சோனாலி பிம்புட்கர், “ப்ரீ ப்ரங் ஜோனல்” இதழில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி இந்திய ஆண் தொழிலாளர்களின் சராசரி மணி நேர ஊதியம் ரூ.242.49 பெண் தொழிலாளர்களின் சராசரி மணி நேர ஊதியம் ரூ.196.30.இது ஏதோ அமைப்புசாரா பெண்களின் நிலைமைகளால் சராசரியில் ஏற்பட்டுள்ள சரிவு அல்ல. நவீன தகவல் தொழில்நுட்ப துறையிலேயே ((IT/ITES)) ஊதிய இடைவெளி 26 சதவீதம் பெண்களுக்கு எதிராக உள்ளது. தொழில் துறையில் 24 சதவீதம். உடல் நலம்,உணவு துறைகளில் 21 சதவீதம்.மணி கண்ட்ரோல் டாட் காம் இதழின்ஆய்வுப்படி 61 சதவீதம் பெண் தொழிலாளர்கள்பாரபட்சத்திற்கு ஆளாவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பயணங்கள் முடிவதில்லை

பாரபட்சங்கள் பெண்களை எல்லா நேரங்களிலும் துரத்துகின்றன. “ஓலாமொபிலிடி இன்ஸ்டிடியூட்” ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.11 நகரங்களில் 9935 பெண் பயணிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 35 சதவீதம் பஸ் பயணிகள். 35 சதவீதம் பேர் மெட்ரோ ரயில் பயணிகள். 40-45 சதவீதம் பேர்ரிக் ஷா, ஆட்டோ பயணிகள், இந்த ஆய்வின்அதிர்ச்சியான தகவல் என்ன தெரியுமா? 91சதவீதமான பயணிகள் பொதுப் போக்குவரத்திலேயே பாதுகாப்பின்மையை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.ஆனாலும் பொதுப் போக்குவரத்தை ஏழை, நடுத்தர வருமானம் கொண்டவர்கள் நம்பிஇருக்க வேண்டியுள்ளது. ரூ.15,000க்கு குறைவான மாத வருமானமுள்ள பெண்களில் 50 சதவீதம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். மாதம் 1 லட்சத்திற்குஅதிகமான வருமானம் உள்ள பெண்களில்2 சதவீதம் பேரே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். பாதுகாப்பற்ற பயணங்கள் கூட பாவப்பட்ட ஏழைகளுக்குத்தான்.

நன்றி - தீக்கதிர் 10.03.2019 

No comments:

Post a Comment