பொள்ளாச்சியில்
நடந்த நிகழ்வுகள் அதிர்ச்சியின் உச்சகட்டம். பாலியல் வெறியும் வக்கிரமும் நிறைந்த ஒரு கூட்டம் பெண்களை சீரழிப்பது என்பதையே முழு நேரத் தொழிலாகக்
கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட
ஒரு பெண் “என்னை விட்ருங்கண்ணா” என்று அழுகிற குரல் கேட்ட போது அப்படியே ஆடிப் போய்
விட்டேன்.
“திற” என்றொரு குறும்படம், மண்டோவின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
அதன் கடைசிக் காட்சியைப் பார்த்து பதைத்துப் போகாதவன் மனிதனே கிடையாது.
காணொளியின்
இன்னொரு காட்சியோ “திற” வின் கடைசிக் காட்சியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று சொல்லக் கூடிய அளவிற்கு அதிர்ச்சி தருவதாய்
உள்ளது.
சிக்கியுள்ளவர்கள்
மட்டும்தான் குற்றவாளிகளா?
ஆட்சிப்
பொறுப்பிலும் அதிகார பீடங்களிலும் உள்ளவர்களின் துணை இல்லாமல் இந்த அயோக்கியத்தனம்
நடந்திருக்க வாய்ப்பில்லை. அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பெண்களை எத்தனை பெரிய மனிதர்களுக்கு
இந்த குற்றவாளிகள் இரையாக்கினார்களோ?
காவல்துறை
கைது செய்தவர்களை விட அதிகமான குற்றவாளிகள் யோக்கியமானவர்களாக உலா வந்து கொண்டிருப்பதற்கான
வாய்ப்பு உண்டு.
இந்த
பெரும் குற்றச்செயலில் தொடர்புள்ள அத்தனை பேரும் கடுமையான தண்டனை பெற வேண்டும்.
வேறு
யாருக்கும் தொடர்பில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் வேக வேகமாக சொல்கிற போதே இன்னும்
ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் வருகிறது.
தமிழக
காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லை. சி.பி.சி.ஐ.டி யின் லட்சணமும் நாம் அறிந்ததே.
சி.பி.ஐ என்ன செய்யும்?
மக்களவைத்
தேர்தலில் கூட்டணி வைத்துள்ள அடிமைக் கட்சியின் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க
மத்தியரசு அனுமதிக்குமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.
தமிழகமெங்கும் எதிர்ப்புக்குரல் வலுக்க வேண்டும். பொள்ளாச்சியில் ஒரு மனிதச்சங்கிலி நடத்துவது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்முயற்சியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக நீங்கலான) முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் கோட்டச்சங்கத்தின் சார்பிலும் நாளை அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி தேசிய மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையம் ஆகிய அமைப்புக்கள் தலையிட வேண்டுமென தீர்மானம் அனுப்பவுள்ளோம்.
ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் கரம் கோர்த்து களம் காண வேண்டிய பிரச்சினை இது.
அடுத்த பிரச்சினை வந்ததும் மறந்து போகிற ஒன்றாக இல்லாமல் தொடர் நடவடிக்கை அவசியம் வேண்டும்.
அனைத்துக் குற்றவாளிகளையும் தண்டிக்கும் வரை ஓயக்கூடாது.
பிகு:
பாதிக்கப்பட்ட பெண்கள் எச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கத்திற்கோ, உபதேசத்திற்கோ இது நேரமில்லை. அப்படி உபதேசம் செய்துதான் ஆக வேண்டும் என்று யாருக்காவது ஆசை இருந்தால் "பிள்ளைகளை தறுதலையாக வளர்த்த பெற்றோருக்கு" உபதேசம் செய்யுங்கள்.
இந்த கயவர்களுக்கு துணை நின்ற பெரிய மனிதர்களுக்கும் மூடி மறைக்க நினைக்கும் காவல்துறைக்கும் உபதேசம் செய்யுங்கள்.
No comments:
Post a Comment