Sunday, March 17, 2019

மொட்டைச் சாமியாரின் ஜீபூம்பா


அள்ளி விடுவது அல்ல புள்ளி விபரம்..




பொருளியல் அரங்கம்-க.சுவாமிநாதன்


2018-19க்கான பங்கு விற்பனை இலக்கு ரூ.80,000 கோடிகள். மார்ச் 15, 2019 வரை கஜானாவுக்கு வந்திருப்பது ரூ.56473 கோடிகள். இன்னும் 23,500 கோடிகள் இலக்கை விட குறைவாக உள்ளன. இன்னும் 15 நாட்களே உள்ளன.ஆனாலும் 80,000 கோடிகளைத் தொட்டு விடுவோம் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

மனம் புழுங்காதவர்கள் யாருமே இந்த ஆட்சியில் இல்லை என்று சொல்லலாம். லேட்டஸ்டாக பொருளாதார நிபுணர்கள் தங்களின் குமுறல்களைக் கொட்டித் தீர்த்துள்ளார்கள்.இவர்கள் உலகம் முழுவதிலுமுள்ள 108 பொருளாதார நிபுணர்களும், சமூக ஆய்வாளர்களும் ஆவர். இவர்கள் பிரபல பல்கலைக்கழகங்களான மாஸாசூசெட்ஸ் இன்ஸ்ட்டியுட் ஆப் டெக்னாலஜி (கலிஃபோர்னியா) பெர்க்லி பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்லைக்கழகம் போன்ற வெளிநாட்டு கல்வி நிலையங்களையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், இந்திய புள்ளியியல் நிறுவனம் ஆகிய உள்நாட்டு கல்வி நிலையங்களையும் சேர்ந்தவர்கள். இவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளைப் பாருங்கள்.

* இந்திய புள்ளியியல் இயந்திரம் வெளியிடுகிற பொருளாதார, சமூக மதிப்பீடுகள் நம்பகத்தன்மை மிக்கவையாக இருந்து வந்துள்ளன. அவற்றில் தரம் கூட விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கலாம். ஆனால் அரசியல் தலையீடுகள் அவற்றின் செயல்பாட்டை வழி நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் இருந்ததில்லை. ஆனால் அண்மைக் காலங்களில் சந்தேக மேகங்கள் அவற்றை சூழ்கின்றன. அரசியல் நோக்கங்களால் கட்டுப்படுத்தப்படுவதான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

* பொருளாதார புள்ளி விவரங்கள் “பொது நன்மைக்கானவை” என்பது நிபுணர்கள் கருத்து. ஏனெனில் அவை கொள்கை முடிவுகளுக்கு வழிவகுப்பவை. ஜனநாயக அமைப்பில் பொது விவாதத்திற்கான அடிப்படையை உருவாக்கி அரசின் செயல்பாடுகள் மீது கடிவாளமாகத் திகழ்பவை.

* அவர்களின் குமுறலுக்கு அவர்கள் சுட்டிக்காட்டுகிற உதாரணம் அரசின் “மொத்த உள்நாட்டு உற்பத்தி”(G.D.P) கணக்கீடுகள். 2011-12 புது அடிப்படை ஆண்டாக மாற்றி 2015ல் வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடுகள் “அதற்கு தேவையான பரந்த மதிப்பீடுகளை ஆதாரமாகக் கொண்டவை அல்ல” என்கிறார்கள். அதற்கு பின்னர் வெளி வருகிற மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒவ்வொரு ஆண்டு கணக்கீடுமே இது போன்ற பிரச்சனைகளை உள்ளடக்கியவைதான் என்றும் கூறியுள்ளார்கள். குறிப்பாக பணமதிப்பு நீக்க ஆண்டான 2016­-17ன் திருத்திய மதிப்பீடுகள் 1.1 சதவீத உயர்வோடு மொ.உ.உ. (GDP)யை 8.2 சதவீதமாகக் காட்டியது.

* நிதி ஆயோக்கின் தலையீடுகள் தன்னாட்சி பெற்ற புள்ளியியல் நிறுவனங்களின் “நிறுவன மரியாதையையே” கேள்விக்கு ஆளாக்கிவிட்டது என்கிற அவர்கள் அண்மையில் வேலை வாய்ப்பு குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது ஆபத்தான புழுக்கம்...
ஜீ பூம்பா...

புள்ளி விவரங்களை குப்பையில் போடுங்கள் என்று சொல்கிற மத்திய ஆட்சியாளர்கள் குப்பைகளையே புள்ளி விவரமாகவும் ஆக்குகிறார்கள்.

25 மாநிலங்களில் மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லையாம். மத்திய அரசின் அறிவிப்பு எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதற்கு இந்துஸ்தான் டைம்ஸ் (லக்னோ பதிப்பு - 21-08-2018) தரும் தகவலைப் பாருங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் மொத்த இல்லங்கள் 3,76,55,707 அக்டோபர் 10,2017 வரை மின் இணைப்பு தரப்பட்டிருந்த இல்லங்கள் 2,24,87,787. அதாவது மின் இணைப்பு இல்லாத இல்லங்கள் 1,51,67,920. அப்போதுதான் சௌபாக்யா திட்டத்தை அம்மாநிலத்தின் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அறிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அக்டோபர் 10, 2017 அன்று மின் இணைப்பு இல்லாத இல்லங்கள் 40 சதவீதம். அக்டோபர் 2017லிருந்து ஆகஸ்ட் 2018 வரை 24,22,266 இல்லங்களுக்கு மின் இணைப்பு தரப்பட்டதாக அதே செய்தி கூறுகிறது. 2018 இறுதிக்குள்ளாக முழு மின்மயம் ஆகிவிட்டதாக மத்திய மின்சார அமைச்சகம் கூறுகிறது.

என்ன அர்த்தம்: மீதமுள்ள 1,27,45,654 இல்லங்களும் நான்கு மாதங்களில் (செப்-டிசம்பர் 2018) மின் இணைப்பு பெற்றவையாக மாறிவிட்டன. ஒரு நாளைக்கு 1,04,423 இல்லங்கள் மின் இணைப்பு பெற்றுள்ளன.

எப்படி சாத்தியம்!

யோகி ஆதித்யநாத்தின் ஜீ பூம்பா இது...

கடைசி சொட்டு ரத்தம்...

பொதுத்துறைக்கு போதாத காலம்தான் இது.. 1993 லிருந்து 21 ஆண்டுகளில் விற்கப்பட்ட பொதுத்துறை பங்குகள் 1,50,000 கோடிகள் என்றால், கடந்த நான்கரை ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு மட்டும் விற்றிருப்பது 2,10,000 கோடிகள். இந்த புள்ளி விவரம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஏற்கெனவே வலம் வந்துவிட்டது. ஆனால் அத்தோடு வேட்டை நின்றுவிடவில்லை. இரத்த வாடை ராசியில் படப்பட வெறி ஏறும் போலிருக்கிறது.

2018-19க்கான பங்கு விற்பனை இலக்கு ரூ.80,000 கோடிகள். மார்ச் 15, 2019 வரை கஜானாவுக்கு வந்திருப்பது ரூ.56473 கோடிகள். இன்னும் 23,500 கோடிகள் இலக்கை விட குறைவாக உள்ளன. இன்னும் 15 நாட்களே உள்ளன.

ஆனாலும் 80,000 கோடிகளைத் தொட்டு விடுவோம் என்கிறார்கள் ஆட்சியாளர்கள். கிராம மின்மயக் கழகத்தை (RURAL ELECTRIFICATION CORPORATION) எரிசக்தி நிதி கழகம் (Power Finance corporation) கையகப்படுத்துவது விரைவில் நடக்கும் என்கிறார்கள். எப்.எஸ்.டி.சி (METAL SCRAP TRADING CORPORATION) என்கிற மினி ரத்னா நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம் ரூ.1000 கோடி கிடைக்கும் என்கிறார்கள். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாக அரசிடம் இருந்து வராது. சத்தமில்லாமல் இந்த வியாபாரம் நடந்தேறும் என்று அர்த்தம்.

பிப்ரவரி மாதத்தில் அமோகமாக விற்பனை இருந்துள்ளது. பாரத் 22 - இடிஎப் பங்கு விற்பனை வாயிலாக ரூ.10,000 கோடி, ஆக்சிஸ் வங்கியில் இருந்த யுடிஐ துணை நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ.5,379 கோடிகள். கடந்த ஒரு மாதத்திலேயே வந்துள்ளன. 2017-18ல் இவர்களின் இலக்கு 72000 கோடி எட்டியதோ 1,00,057 கோடிகள். 2018-19 ல் 80,000 கோடியைத் தொட்டு விட்டால் அடுத்தாண்டு 90,000 கோடி இலக்கையும் எட்டுவோம் என்கிறார்கள் அதிகாரிகள்.

குத்து விளக்கை குடும்பங்கள் அடகு வைக்கக்கூடாது என்பார்கள் கிராமங்களில்... நேரு போற்றிய “திருக்கோவில்களையே” கூவிக் கூவி விற்கிறார்கள் இவர்கள்...

கடைசி சொட்டு ரத்தத்தைக்கூட கடைசி நிமிடம் வரை வீணாக்காமல்....

நன்றி - தீக்கதிர் 17.03.2019

3 comments:

  1. நேரு போற்றிய “திருக்கோவில்களையே”

    puriyala sir?

    ReplyDelete
    Replies
    1. பொதுத்துறை நிறுவங்கள்தான் இந்திய தேசத்தின் திருக்கோயில்கள் என்று நேரு போற்றியுள்ளார்

      Delete
  2. கேரளா கம்யூனிச அரசை கலைச்ச புண்ணியவான் நேரு மாமா

    ReplyDelete