வோடஃபோன் - ஐடியா இணைப்பு நுகர்வோரை எப்படி பாதிக்கப் போகிறது என்று எங்கள் தென் மண்டல துணைத் தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நன்றி - தீக்கதிர் 02.09.2018
வோடஃபோன் - ஐடியா இணைப்பு நுகர்வோருக்கு ஆப்பு
பொருளியல் அரங்கம்-க.சுவாமிநாதன்
உலகமய யுகத்தில் நுகர்வோரே அரசர்; போட்டிகள் உருவாகும்; மக்களுக்கு நிறையத் தெரிவுகள் இருக்கும்; தரமான பொருட்கள், சேவைகள் கிடைக்கும் என்பதெல்லாம் 1990களில் நமது செவிகளில் விழுந்த வார்த்தைகள்.ஆனால் பெரு மூலதனங்கள் கைகோர்ப்பதும், சிறு சிறு நிறுவனங்களை விழுங்குவதும், முற்றுரிமைக்கோ - சிறு குழு முற்றுரிமைக்கோ இட்டுச் செல்வதுமே நிகழும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து நிரூபணம் ஆகி வருகிறது. இதோ இன்றையச் செய்தி. வோடாஃபோனும், ஐடியாவும் இணைகிறது. தொலைத் தொடர்புத்துறை சந்தையின் முதன்மை நிறுவனமாக உருவெடுக்கிறது.
சிறு குழு முற்றுரிமை நோக்கி...
தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NATIONAL COMPANY LAW TRIBUNAL),வோடாஃபோன் - ஐடியா தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்பிற்கான பச்சைக் கொடியை இரண்டு நாட்களுக்கு முன்பாக அசைத்திருக்கிறது.ஐடியா நிறுவனம் ஆதித்ய பிர்லாவினுடையது. வோடஃ போனின் பூர்வீகம் பிரிட்டனுடன் தொடர்புடையது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்ததன் மூலம்15 ஆண்டுகளாகத் தொலைத் தொடர்புச் சந்தையில் முதலிடத்தில் இருந்த பாரதி ஏர்டெல் நிறுவனத்தைஅந்த இடத்திலிருந்து அகற்றியிருக்கின்றன. 44 கோடி வாடிக்கையாளர்கள், 34.7 சதவீதம் சந்தை வருமானப் பங்கு, 60,000 கோடிகளுக்கும் அதிகமான வருமானம், 1.15 லட்சம்கோடிகளுக்கு அதிகமான கடன்என்ற அளவில் விஸ்வரூபத்தை எடுத்துள்ளன. இதன் சேர்மனாக குமார்மங்கலம் பிர்லா இருப்பார். இதன் புதிய பெயராக ‘‘வோடஃபோன் ஐடியா லிமிட்டெட்’’ என்பது இருக்கும்.
இந்தியப் பெரும் தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரம், இலாபம் என்றே பேசமாட்டார்கள்; எல்லாவற்றையுமே தேசம், தேச நலனுக்காக செய்வதாகவே பேசுவார்கள். இரு நிறுவனங்களின் இணைப்பு பற்றி குமார் மங்கலம் பிர்லா பேசுவதைப் பாருங்களேன்!‘‘நாங்கள் இன்று இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்புநிறுவனத்தை உருவாக்கியிருக்கிறோம். இது ஓர் வரலாற்று தருணம்.இது ஓர் பெரிய வணிகம் உருவாகிறது என்பதை விட மேலானதாகும்.இது புது இந்தியாவை நிர்மாணிப்பதும், அதிகாரமளிப்பதும் ஆகும். இந்திய இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றுவதுமாகும். இந்தியப்பிரதமர் விவரிப்பது போல பிரம்மாண்டமான தேச நிர்மாணப் பணியான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதாகும்.’’ கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டுகளை மிஞ்சுகிற நடிகர்களல்லவா இவர்கள்! பஞ்ச் டயலாக்குகளை ரசியுங்கள்!
மியூசிக்கல் சேர்களில் மிஞ்சியவர்கள்
தனியார்களுக்கு கதவு திறப்பு, போட்டி, விழுங்குதல், இணைதல்... என்கிற மியூசிக்கல் சேர்விளையாட்டில் மிஞ்சியிருப்பவர்கள் மூன்று பெரிய நிறுவனங்களே. பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகியனவே. கடைசியாய் நாற்காலியையும் இழந்து கீழேயும் விழுந்து காயப்பட்டு ‘‘ஏர்செல்’’ வெளியேறியதைப் பார்த்தோம்.100 கோடி வாடிக்கையாளர்களுக்கான சுழல் இசை நாற்காலிப் போட்டியில் மூன்று பேர்கள்மட்டுமே எஞ்சி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது 3 ஜியிலிருந்து 4 ஜிக்கு தொலைத் தொடர்புச் சந்தை முன்னேறிக் கொண்டிருக்கிற நேரமும் ஆகும். இதனுடைய விளைவைக் கடைசியில் பார்ப்போம்.‘‘டிஜிட்டல் இந்தியா’’ என்று நம்முடைய தேச பக்தி உணர்வுக்கு விசிறி வீசுகிற குமார் மங்கலம் பிர்லாவுக்கு இந்நிறுவனத்தில் 26 சதவீதம் பங்கு. பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்ட வோடஃபோனுக்கு 45.2 சதவீத பங்கு.
இந்தியாவிற்குள் வருகிற நிறுவனங்களுக்கும், முதலீடுகளுக்கும் “இந்தியா” என்கிற அடைமொழியைச் சேர்த்து விட்டால் இந்திய நிறுவனம் போன்றஃபீல் நமக்கு கிடைத்து விடுமல்லவா. அது போன்றதுதான் இவ்வளவு காலம் இருந்த வோடஃபோன் இந்தியா.இணைகிற இரு நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தக்கடன் 1.09 லட்சம் கோடிகள். ஆரம்ப ரொக்கக் கையிருப்பிற்காக இன்டஸ் டவரில் உள்ள பங்குகளைரூ. 5100 கோடிகளுக்கு காசாக்கப்போகிறார்கள். மொத்த ரொக்கக்கையிருப்பாக ரூ. 19300 கோடிகளைக் கொண்டு தொழிலை நடத்தப்போகிறார்கள். இவ்வளவு டீடெயில்ஸ் நமக்கு எதற்கு? இருந்தாலும் வெற்றிலை பாக்கு, கடலை மிட்டாய் வாங்குவது போன்ற தொகைகள் தான் அவர்களுக்கு இந்த சில ஆயிரம் கோடிகள்.
ஆனாலும் கடன் தொகை நமக்கு “பகீர்” என்று இருக்கிறது. ஏனென்றால் ஏர்செல் வீழ்ந்த போது அதில் சிக்கியதெல்லாம் நமதுவங்கிகளின் பணம்தானே!. நமக்குஇந்த பயம் வருவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எகானமிக் டைம்ஸ் இதழின் ஆகஸ்ட் 31, 2018செய்தியின் கடைசி வரிகளைப் பாருங்கள் !.“இணைப்பை நோக்கிய ஐடியா நிறுவனத்தின் பயணம் நிதிச் சிரமங்களைக் கொண்ட வலி தருவதாகவே அமையுமென கிரெடிட் சூசி ஆய்வு நிறுவனத்தினர் கருதுகிறார்கள் ”.
விலை அதிகாரமே இலக்கு!
கடைசியில் மேட்டருக்கு வருவோம்! இரண்டு நிறுவனங்களும் இணைவதால் வரும் காலங்களில் இந்திய ரூபாய் மதிப்பில் 70000 கோடிகள் வரை ( மோடி புண்ணியத்தில் டாலருக்கு ரூ.70 ஐ தொட்டுள்ளதால்) அவர்கள் சேமிக்க முடியுமாம். ஒருங்கிணைந்த ஆற்றல் வெளிப்படுமாம். பாரதி ஏர்டெல்லுக்கும், ஜியோவுக்கும் வலுவான எதிரியாக முன்னிற்குமாம். எல்லாம் சரி! நுகர்வோருக்குஎன்ன லாபம்? அங்குதான் வைக்கிறார்கள் ஆப்பு. எகானமிக் டைம்சின்அதே செய்திக்கு தரப்பட்டுள்ள உபதலைப்பு “ விலை அதிகாரம் மீண்டும் துறைக்கே திரும்புகிறது”. என்ன அர்த்தம்?
இரண்டு ஆண்டு கால விலைச்சண்டை நிறுவனங்களின் வருமானத்தையும், இலாபத்தையும் “கொடூரமாகப் ” பாதித்து விட்டதாம். தற்போது மூன்று நிறுவனங்களே கோலோச்சுகிற துறையாக நிலை பெற்றுவிட்டதால் விலை அதிகாரம் பிர்லா, அம்பானி, மிட்டல் கைகளுக்கே திரும்புகிறதாம்.நுகர்வோர் பாக்கெட்டுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். கீரி,பாம்புச் சண்டையில் பறிபோவது உங்கள் பர்ஸ்களே!
I don't think Indians will realise the real impact of merging.they can't live without mobiles
ReplyDeleteஇதுதான் நோகாமல் நரம்பு கும்பிடுவதா?
ReplyDeleteநோம்பு என திருத்தி வாசிக்கவும்.
ReplyDelete