இந்தியாவின்
நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது மோடி அல்ல. மோடி வகையறாக்கள் சீரழிக்க முயல்கிற
எல்.ஐ.சி நிறுவனமதான் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை.
எங்கள்
தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி எழுதிய இக்கட்டுரை நேற்றைய
தமிழ் இந்து நாளிதழில் பிரசுரமாகி உள்ளது.
அவசியம் முழுமையாக படியுங்கள்.
எல்ஐசி: தேசத்தின் நம்பிக்கை!
செப்டம்பர் 1. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தொடங்கப்பட்ட நாள். வெற்றிகரமான 62 ஆண்டுகளை நிறைவுசெய்து 63-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது எல்ஐசி. நம்பிக்கைதான் காப்பீட்டுக்கு அடிப்படை. அது ஒரு நிறுவனத்துக்கும், பாலிசிதாரருக்கும் பரஸ்பரம் இருக்க வேண்டும். அந்த வகையில் பாலிசிதாரரின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்று, தொய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது எல்ஐசி. பாலிசிதாரர்களின் பணத்துக்குப் பாதுகாப்பில்லை எனும் அடிப்படையற்ற வாதத்தை முன்வைத்து, எல்ஐசியைத் தனியார்மயமாக்க வேண்டும் எனும் குரல்கள் எழுந்திருக்கும் இன்றைய சூழலில் எல்ஐசியின் மகத்தான செயல்பாடுகளை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் காப்பீட்டைப் பரவலாக்கியதில் எல்ஐசியின் பங்கு மிக முக்கியமானது. இன்றைக்குக் கிளை அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், சிறு அலுவலகங்கள் என நாடு முழுவதும் 4,755 அலுவலகங்களின் மூலம் 29 கோடி தனிநபர் பாலிசிகள், 12 கோடி குழுக் காப்பீட்டு பாலிசிகள் என 40 கோடிக்கும் அதிகமான பாலிசிகளுக்கு சேவை செய்துவருகிறது. 1999-2000-ல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் இந்தத் துறைக்குள் அனுமதிக்கப்பட்டபோது, போட்டியின் காரணமாக எல்ஐசி நிறுவனம் தாக்குப்பிடிக்க முடியாது என்று பேசியவர்கள் உண்டு. ஆனால், 18 ஆண்டுகளுக்குப் பிறகும் காப்பீட்டுச் சந்தையில் 70%ஐ தனது கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் அந்த ஊகங்களுக்கு முடிவுகட்டியது எல்ஐசி. உலகமயச் சூழலுக்கேற்ற மாற்றங்களை மேற்கொண்ட எல்ஐசி, புதிய தொழில்நுட்பங்கள், மாறியுள்ள சூழலுக்கு ஏற்ற புதிய பாலிசித் திட்டங்கள் என்று வணிகம் சார்ந்த வழிமுறைகளின் மூலம் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
தவறவிடாதீர்
பைக், கார் வாங்க போகிறீர்களா? - நாளை முதல் விலை உயருகிறது; புதிய இன்சூரன்ஸ் விதிமுறை அமல்
துணைநிற்கும் எல்ஐசி
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதாகச் சொல்லப்பட்டாலும், அது வேலைவாய்ப்பில் பிரதிபலிக்கவில்லை. உலகில் மிக மோசமான வேலைவாய்ப்பின்மை நிலவுகிற நாடாக இந்தியா விளங்குவதாக ‘லேபர் பீரோ’ அறிக்கை கூறுகிறது. வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்பு இவற்றோடு விலைவாசி ஏற்றம் மக்களின் சேமிப்பை அரித்துக்கொண்டுள்ள சவாலான சூழலில்தான், கடந்த நிதியாண்டில் ரூ. 1,34,551.68 கோடி புதிய பிரிமிய வருவாயை ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது எல்ஐசி. அதன் 11,50,000 முகவர்கள், 1,12,000 ஊழியர்களின் உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.
இந்தச் சாதனைகள் அரசின் இறையாண்மை உத்தரவாதத்தால் மட்டுமே வந்தது அல்ல. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டபோதும் ஒருமுறைகூட அந்த உத்தரவாதத்தை எல்ஐசி பயன்படுத்தவில்லை. அமெரிக்காவில் காத்ரீனா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது உரிமத் தொகையை வழங்க வேண்டும் என்று தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அந்நாட்டு அரசை வலியுறுத்தியதைப் போல் எல்ஐசி ஒருபோதும் செய்ததில்லை.
98% இறப்பு உரிமங்களும், 95.38% முதிர்வு உரிமங்களும் குறித்த காலத்துக்குள் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பது மற்றொரு சாதனை. குஜராத் பூகம்பம், சுனாமி, காஷ்மீர் வெள்ளம், கேரள மாநில வெள்ளம் வரை அதிக அளவிலான இறப்பு உரிமத் தொகையை வழக்கமான நடைமுறை விதிகளுக்கு விலக்கு அளித்து பட்டுவாடா செய்ததும், குறிப்பாக வைக்கம் கிளையில் உரிமத்துக்கான கோரிக்கை வந்து ஒரு மணி நேரத்தில் பட்டுவாடா செய்ததும் எல்ஐசியின் செயல்வேகத்துக்குச் சான்றுகள்.
தனியார்மயம் தீர்வா?
இன்றைக்கு, இந்திய காப்பீட்டுத் துறையில் ஒரு சமமான ஆடுகளத்தை உருவாக்கித் தர வேண்டும் என்றும், தற்போது எல்ஐசிக்கு வழங்கப்படும் அரசின் இறையாண்மை உத்தரவாதம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தனியார்மய ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாடு விடுதலை அடைந்த பிறகு, அதன் உள்கட்டமைப்பைப் பலப்படுத்தியதிலும் தொழில்மயப்படுத்தியதிலும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆற்றிவரும் பங்கைத் தனியார்மயத்தை ஆதரிப்போர் உணர்ந்திருக்கவில்லை. அவை ஏற்படுத்தியுள்ள கட்டமைப்பின் மீதே தனியார் நிறுவனங்கள் லாபமீட்டுகின்றன.
ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்குவது தொடர்பாகத் தற்போது விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு முன்பு ஓஎன்ஜிசி பங்குகளை வாங்கும்போதும் இத்தகைய எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், அந்தப் பங்குகள் எல்ஐசிக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்தன. முதலீட்டாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு குறைந்த விலைக்கு அந்தப் பங்குகளை வாங்கும் முயற்சியை எல்ஐசி முறியடித்ததால் எழுந்துள்ள விமர்சனங்களே அவை. சமீபத்திய ஐஎம்எப் அறிக்கையும்கூட இதற்குத் தூபம் போடுகிறது. இதன் தொடர்ச்சியாக எல்ஐசியின் நிர்வாகச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது குறித்து தனியான விவாதங்கள் தேவை. ஆனால், அதற்குத் தனியார்மயம் தீர்வாகாது.
2017-18 நிதியாண்டில் மொத்த முதலீட்டில் 82% அளவிலான ரூ.20.50 லட்சம் கோடியை அரசின் பங்குப் பத்திரங்களிலும், 18% அளவிலான ரூ.4.59 லட்சம் கோடியைப் பங்குச்சந்தையிலும் முதலீடு செய்துள்ளது எல்ஐசி. பங்குச்சந்தையின் மூலம் 13% லாபம் ஈட்டியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பங்குச்சந்தை மூலம் முதலீட்டாளர்கள் ஈட்டியுள்ள லாபம் 11.3% மட்டுமே. வங்கித் துறையில் கால்பதிக்க எல்ஐசிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஐடிபிஐ வங்கியின் பங்குகளை வாங்குவதன் மூலம் அவ்வங்கியின் 2,000-க்கும் மேற்பட்ட கிளைகளின் மூலமாகவும் எல்ஐசி தனது வணிகத்தைக் கொண்டுசெல்ல வாய்ப்புள்ளது. இது தனியார்மய ஆதரவாளர்களுக்கு உறுத்தலாக இருப்பதில் ஆச்சரியமில்லை!
சமீபகாலமாக, எல்ஐசி எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, தாமதக் கட்டணம் உட்பட காப்பீட்டு பிரிமியம் மீதான சேவை வரி. பிரிமியம் மீதான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அதன் சமூக நோக்கத்துக்கு ஊறுவிளைவிக்கிறது.
பெரும் பணக்காரர்களை மட்டுமே வாடிக்கை யாளர்களாகக் கொண்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல. பணக்காரர்கள் மட்டுமின்றி ஏழை, எளிய, பாமர மக்களுக்கும் காப்பீடு வழங்கும் நிறுவனமாக எல்ஐசி செயல்படும் நிலையில், பிரிமியம் மீதான ஜிஎஸ்டியை விலக்கிக்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும்.
சமீபத்தில் ரயில்வே உள்கட்டமைப்புக்கு ரூ1.5 லட்சம் கோடி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.8,000 கோடி என முதலீடுகள் தொடரும் நிலையில், மின்சாரம், சுகாதாரம், குடிநீர் போன்ற சமூக நலத்திட்டங்களில் மட்டும் ரூ.2.58 லட்சம் கோடியை முதலீடு செய்திருப்பதன் மூலம் தேசத்தின் வளர்ச்சியில் எல்ஐசியின் பங்களிப்பை உணர முடியும்.
தேசம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு. எல்ஐசி கொடுக்கும் நம்பிக்கை பாலிசிதாரர்களுக்கும் மட்டுமல்ல; தேசத்துக்கும்தான்.
- இரா.புண்ணியமூர்த்தி
துணைத் தலைவர், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு.
No comments:
Post a Comment