Tuesday, September 11, 2018

எலும்புக்கூடு ‘14411’


எலும்புக்கூடு ‘14411’ சொல்லும் ரகசியம் என்ன?
கீழடி முதல் ராகிகடி வரை நிலத்துக்குள் இருந்து உண்மை மேலெழுகிறது-நீலகிரி நோக்கி நகர்கிறது மனிதகுல வரலாறு




அறிவுத்துறையின் வளர்ச்சி புதுப்புது ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியபடியே இருக்கின்றது. பதினேழாம் நூற்றாண்டில் மேலைக்கல்விச்சுழலில் உருவான மொழியியல் ஆய்வு, அதன் பின் மேலெழுந்து வந்த மானுடவியல்ஆய்வு, தற்காலத்தின் புதிய கண்டுபிடிப்பான மரபணுஆய்வு ஆகியவை மானுட சமூகத்தின் தோற்றத்தை, வளர்ச்சியை, இடப்பெயர்வைப் பற்றி அறிவியல்பூர்வமான புரிதல்களை உருவாக்குகிறது.புதிய கண்டுபிடிப்புகள் பழைய கருத்தாக்கங்களை பொய்யென நிறுவுமேயானால் அதனை ஏற்றுக்கொள்வதே பகுத்தறிவு. ஏற்க மறுக்கும் பழமைவாதிகள் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள கடந்தகாலத்தை இறுகப்பற்றிக்கொண்டு அதனை நவீன சிந்தனைக்கு எதிராக நிறுத்துவர்.இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் முழுநேரத் தொழிலாக அதுவே இருக்கிறது. ‘‘வேதகால நாகரிகம்தான் இந்திய நாகரிகம்; அதன் காலம் தான் பொற்காலம்;அந்நாகரிகத்தின் மொழியான சமஸ்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி’’ என்று இடைவிடாது - அவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்தக் கூற்றை அறிவுத்துறையும் ஆய்வுத்துறையும் தகர்த்தெறிந்து கொண்டே இருக்கிறது.

நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் யார்?

இந்திய நிலப்பரப்பில் ஆரம்ப காலத்தில் இருந்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் யார்? அவர்களை திராவிடர்கள் என்று சொல்லலாமா? சிந்து வெளி நாகரிகம்திராவிட நாகரிகமா? ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இங்குவந்து குடியேறினார்களா? சிந்துவெளி நாகரிகத்துக்கு முந்தியவர்களா? அல்லது சிந்துவெளி நாகரிகம் அழிவுற்றபின் இம்மண்ணுக்குள் நுழைந்தவர்களா? அல்லது அவர்கள்தான் இம் மண்ணில் ஆதியில்இருந்து உருவான நாகரிகத்துக்கு சொந்தக்காரர்களா? - இந்த விவாதம் பலதுறைகளிலும் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றது. கடந்த காலங்களில் மொழியியல் துறையிலும், பண்பாட்டுத்துறையிலும் நடைபெற்ற ஆய்வுகள் இக்கேள்வியை எதிர்கொண்டு சான்றாதாரத்தோடு முன்நகர்ந்துள்ளன.

நான்கு மொழிக் குடும்பங்கள்

மொழியியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்திய நிலப்பரப்பில் நான்கு மொழிக்குடும்பங்கள் உள்ளன. திராவிடம், இந்திய ஆரியம், ஆஸ்திரிய ஆசியம், திபெத்திய பர்மியம். இவற்றில் மிகமுக்கியமாக திராவிடம் - ஆரியம் என்ற பகுப்பாய்வு உள்ளது. திராவிடஇன மக்கள் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசினர். அந்த மொழிகளின் மூல மொழியாக தமிழ் இருக்கிறது என்பதை எல்லீஸ், கால்டுவெல் போன்ற அறிஞர்கள்தங்களின் ஆய்வின் மூலம் நிறுவினர். அதே போல சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகியவை இந்தோ – ஆரிய மொழிக் குடும்பவகையைச் சேர்ந்தவை என்பதைவில்லியம் ஜோன்ஸ் நிறுவினார். அவைகள் கண்டறியப்பட்ட துவக்க காலத்தில், அதாவது பதினெட்டாம் நூற்றாண்டிலே திராவிட மொழிகளின் மூல மொழி சமஸ்கிருதம் என்றும் சமஸ்கிருதத்தின்அடியொற்றியே தமிழ் உள்ளிட்ட மொழிகள் பிறந்தன என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்தோ- ஆரிய மொழிக்குடும்பத்துக்கு எவ்வித சம்பந்தமுமில்லாத தனி மொழிக்குடும்பம் தான் திராவிட மொழிக்குடும்பம் என்பதை அறிவுலகம் பல ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியது.

திராவிட மரபும் ஆரிய மரபும்

மொழியியலைத் தொடர்ந்து வளர்ச்சி பெற்று முன்வந்தது மானுடவியல் துறை. இந்தியாவில், திராவிட மரபுக்கும் ஆரிய மரபுக்கும் உள்ள வேறுபாடுகளைப்பற்றி மானுடவியல் அறிஞர்கள் எண்ணற்ற ஆய்வுகளைசெய்துள்ளனர். அவ்வாய்வு முடிவுகள், இந்திய பண்பாடு பற்றி ஆழமான புரிதலை உருவாக்கின.ஆரிய மரபென்பது வட இந்தியாவில் உள்ள பிராமணர்கள் உள்ளிட்ட பெரும்பாலான உயர் சாதியினரிடம்உள்ள மரபாக உள்ளது. திருமண முறை, பெண்கொடுத்துபெண் எடுத்தல், தொழில் உள்ளிட்ட வகைகளின் அடிப்படையில் இம்மரபுகள் ஆராயப்படுகின்றன. அதேபோலதிராவிட மரபுகள் இவற்றிலிருந்து எப்படி வேறுபட்டுள்ளன என்பதும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.ஆரிய மரபென்பது அடிப்படையில் மேய்ச்சல் வாழ்வைமையமாகக் கொண்ட மரபு. பரந்துபட்ட நிலப்பகுதிக்குவிரிந்துள்ள தன்மை அந்த மரபுக்கு அச்சாணியாகஇருக்கிறது. கோத்திரத்தின் அடிப்படையில் பெண்எடுப்பது, கொடுப்பது உள்ளிட்ட வாழ்வின் அடிப்படையான முறைமைகள் மேய்ச்சல் சமூகத்தின் தன்மையின் மீது கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். திராவிட மரபென்பது அடிப்படையில் வேளாண் வாழ்வுசார்ந்த மரபு. நிலமும், நீரும் இதன் அடிப்படையாக விளங்கக்கூடியது. நிலத்தைவிட்டு வெகுதொலைவுக்கு இடம் பெயரும் திருமண முறைகள் இங்கு இருப்பதில்லை. மாமன் மகள், அத்தை மகள், அக்காள் மகள்என்ற அடிப்படையிலே இங்கு திருமணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. வேளாண் வாழ்வின் அடிப்படை நீரும் நிலமும்என்பதால் இவ்விரண்டுமே வாழ்வின் அச்சாணியாகிறது. பிறந்த குழந்தையின் நாக்கில் நீரினைத் தொட்டு வைக்கும்சடங்கே (சேணைத் தண்ணீர்) முதல் சடங்காக அமைகிறது. மனிதன் இறந்த பொழுது நடக்கும் கடைசிச் சடங்காக நீர்மாலை எடுத்தல் அமைகிறது. அதேபோலஇறந்தவர்களை மண்ணுள் புதைத்தல் என்பது வேளாண்சமூகத்தின் மிகமுக்கியமான குணமாகும். புதைக்கப்பட்ட விதை மீண்டும் முளைப்பதைப்போல அம்மனிதனும் குடும்பத்தில் மீண்டும் முளைத்தெழுவான் என்பது அதன் நம்பிக்கையாகும். தன் நிலம் விட்டகலாத குணம் வேளாண் நாகரிகத்தினுடையது.

நீரும் தீயும்

இடப்பெயர்வும், அப்பரவலாக்கத்தை இணைக்கும் கண்ணிகளும் ஆரிய மரபின் கூறுகளாகின்றன. தீ அதன்அடிப்படையாக அமைகிறது. நீரும் தீயும் இரு வேறுபட்ட பண்பாட்டினைக் கொண்டது. இவை பற்றி மானுடவியல் ஆய்வாளர் பேராசிரியர் பக்தவத்சல பாரதி, “ஆரிய மரபில் “ரக்சாபந்தன் முக்கியமென்றால் திராவிட மரபில் மஞ்சள் நீர் தெளித்தல் முக்கியமாகிறது. ஆரிய மரபில் பெண்ணை தானமாக கொடுப்பதும், வரதட்சணைக் கொடுப்பதும் கட்டாயமென்றால், திராவிட மரபில் நிலத்தில் உழைக்கும் பெண்ணை இழக்கும் குடுப்பத்தாருக்கு பரிசப்பணம் கொடுப்பது கட்டாயமாகும்” என்கிறார். பல்வேறுபட்ட சடங்குகளின் வழியே இருவேறுபட்ட பண்பாட்டுக் கூறுகளைக்கொண்ட மரபாக இவ்விரு மரபும் இருப்பதை மானுடவியல் ஆய்வுகள் எண்ணற்ற தரவுகளுடன் நிறுவுகின்றன. மொழியியல் மற்றும் மானுடவியல் துறையின் ஆய்வுகளைத் தொடர்ந்து புதிய தொழில்நுட்பக் காலமானநம்காலத்தில் மரபணுத்துறை ஆய்வுகள் மேலெழுந்துள்ளன. இவ்வாய்வுகள் இறந்து புதையுண்ட கடந்த கால மனிதர்களின் மரபணுக்களை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்துகிறது. அதேபோல தற்கால மனிதர்களின் மரபணுக்களை எடுத்தும் ஆய்வுசெய்கிறது. கடந்த காலம் மற்றும் தற்கால மரபணுக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், திராவிட- ஆரிய கருத்தாக்கங்களுக்கு தங்களின் பங்களிப்பை செய்யத் துவங்கியுள்ளன.

நேச்சர் இதழின் கட்டுரை

தற்கால மக்களிடம் செய்யப்பட்ட மரபணு சோதனையின் அடிப்படையில், ஹார்வர்டு மருத்துவப் பள்ளியின் மரபணுத்துறை பேராசிரியர் டேவிட் ரெய்க்கின் தலைமையிலான குழு, 2009 ஆம் ஆண்டு‘‘நேச்சர்” இதழில் ‘‘இந்திய மக்கள்தொகை வரலாற்றின் மறுகட்டுமானம்” என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டது. அதில் “வட இந்திய மூதாதையர் மரபணுரீதியாக மத்திய கிழக்கு ஆசிய, மத்திய ஆசிய, ஐரோப்பியர்களுக்கு நெருக்கமானவர்கள் என்றும் தென்னிந்திய மூதாதையர் இந்திய நிலப்பரப்பை சேர்ந்தவர்கள்” என்றும் கூறினர்.“ஆதிகால வடக்கு யுரேஷிய மூதாதையர் 4500 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிலிருந்தும் ஸ்டெப்பியிலிருந்தும் வந்தனர். 2000க்கும் 4000க்கும் இடைப்பட்ட காலத்தில்அவர்கள் இந்தியாவிற்குள் வந்திருக்க வேண்டும். கலப்பு சமுதாயத்தை விவரிப்பதான மிகப் பழைமையான இலக்கியமான ரிக்வேதம் இந்தக்காலத்தைத் தான் பிரதிபலிக்கிறது” என்றும் கூறினர். இது தற்கால மனிதனின்மரபணு சோதனையின் மூலம் நிறுவப்படும் உண்மையாகும்.

ஹரப்பாவை விட பெரிய நகரம் கண்டுபிடிப்பு

இதன் இன்னொரு பரிமாணம் தான் கடந்த கால மனிதனின் மரபணுவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வது. ஹரியானாவில் உள்ள ராகிகடி என்ற இடத்தில், புனே தக்காணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர் ஷிண்டே தலைமையிலான குழுஅகழாய்வு செய்தது. 1997 முதல் 2000 ஆம் ஆண்டுவரைமுதலாம் கட்ட அகழாய்வு செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக 2014-15ல் அகழாய்வு செய்யப்பட்டது. அங்கு சிந்துவெளி காலத்தைச் சேர்ந்த பெரிய நகரமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது ஹரப்பாவைவிட அளவில் பெரிய நகரமாகும். சிந்துவெளி நாகரிகம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு7000 ஆண்டுகளுக்கு முந்தையது. அந்நாகரிக காலத்தைச்சேர்ந்த இந்நகரத்தில் சுமார் 4500 ஆண்டு பழமையான மனித எலும்புக்கூடு ஒன்று கிடைத்துள்ளது. அந்த எலும்புக்கூட்டுக்கு ‘14411’ என்று எண்ணால் ஆன பெயரிட்டுள்ளனர். இவ்வெலும்புக்கூட்டின் மரபணு ஆய்வுசெய்யப்பட்டு அதன் முடிவுகள்தான் தற்போது வெளிவந்துள்ளன. அதன் உண்மை இந்துத்துவவாதிகள் கட்டமைக்க நினைக்கும் இந்திய வரலாற்றுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது.

ஆரிய மரபணு இல்லை

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பாக வெண்கலக் காலத்தில் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட ஸ்டெப்பி புல்வெளிப் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு வந்த மக்களிடம் இருக்கும் ஆரிய மரபணுவின் குறியீடான சு1ய1  என்ற குறியீடு ராகிகடியில் கண்டறியப்பட்ட எலும்புக்கூட்டில் இல்லை. மாறாக அவ்வெலும்புக்கூட்டின் மரபணுவானது தென்னிந்தியாவில் தற்போது அதிகம் இருக்கும் திராவிட மரபணுவைச் சார்ந்ததாக இருக்கிறது என்று ஆய்வு சொல்கிறது.அதாவது சிந்துவெளி நாகரிகத்தை கட்டமைத்தவர்கள் ஆரியர்கள் அல்ல என்பதும் அவர்களின் வருகைக்கு முன்பே இங்கு செழிப்புற்ற நாகரிகம் இருந்தது என்பதையும் இவ்வாய்வு உறுதிப்படுத்துகிறது.

நீலகிரிக்கு நகர்கிறது மனிதகுல வரலாறு

இதில் இன்னும் கூடுதலாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால். கண்டறியப்பட்ட அவ்வெலும்புக்கூட்டின் மரபணு யாரோடு அதிகம் ஒத்துப்போகிறது என்றகேள்விக்கு மரபணு ஆராய்ச்சியாளர் ராய் கூறுகிறார்: ‘‘தற்போதைய நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இருளர்களின் மரபணுவோடு இது கூடுதலாக ஒத்துப்போகிறது. இந்த மனிதர்கள் ஆரம்பகால திராவிட மொழியைப் பேசியிருக்கக்கூடும்.” ராயின் இக்கூற்று இவ்வாராய்ச்சியை மேலும் முக்கியமான இடத்துக்கு நகர்த்துகிறது. உலகின் பழைமையான செவ்வியல் தொகுப்புகளில் ஒன்றான சங்க இலக்கியத்தை ஆய்வு செய்த டாக்டர் எமனோ, ‘‘சங்க அக இலக்கியப் பாடல்களுக்கு முன்னோடி நீலகிரி மலையில்வாழ்ந்துவரும் தொதவர் பழங்குடிகளின் பாடலாகும்” என்கிறார்.“சுட்டிக்காட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்” எனும்சங்க இலக்கிய அகமரபின் தோற்றம், தோதர்களின் (தொதவர்) காதல் பாடல்களில் இருப்பதை ஆய்ந்தறிந்த அறிஞர்கா.சிவத்தம்பி, சங்க இலக்கிய அகப்பாடல்களின் பூர்வீகப்பண்பு அந்நிலத்துக்குரிய நாட்டார் வழக்கென்று நிறுவுகிறார்.எமனோ மற்றும் சிவத்தம்பியின் ஆய்வுகள் முன்வைக்கப்பட்டு சுமார் அரை நூற்றாண்டுகள் ஆகின்றன. மானுடவியல் ஆய்வில் உலகின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக நீலகிரி மலை மக்களின் வாழ்வு, இக்காலத்தில் கூடுதல்கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் பின்னணியில் ராகிகடியின் ஆய்வு முடிவுகள், ஏற்கெனவே நடந்துவரும் மொழியியல்மற்றும் மானுடவியல் ஆய்வுக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளத்தைப் பற்றி ஆய்வு செய்த ஆர்.பாலகிருஷ்ணனின் இடப்பெயர்ஆய்வுக்கும், சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பல பத்தாண்டுகளாக எழுதிவரும் ஆய்வாளர்கள் பலருக்கும் ராகிகடியின் ‘14411’ என்ற எலும்புக்கூட்டின் மரபணு புது ரத்தம் பாய்ச்சியுள்ளது. மானுடவியல் பண்பாட்டு ஆய்வு, மொழியியல் ஆய்வு,தற்கால மரபணு ஆய்வு, கடந்தகால மரபணு ஆய்வு இவைகளெல்லாம் சொல்லும் உண்மை ஒன்று உண்டு. அது இந்துத்துவவாதிகள் சொல்லும் கூற்றுக்கு நேரெதிரான உண்மை. எனவே அவர்கள் இந்த உண்மைகள் வெளிவராமல் மறைக்க அத்தனை முயற்சிகளையும் செய்கின்றனர். கீழடி முதல் ராகிகடி வரை அவர்களின் அதிகாரம்எல்லையில்லா வேகத்தில் பாய்கிறது. அகழாய்வுகள் தடுக்கப்படுகின்றன, வரலாற்று ஆதாரங்கள் சிதைக்கப்படுகின்றன.இந்திய நாகரிகத்தின் பூர்வீக உரிமையை வேதகாலத்துக்கு வழங்குவதற்காக வரலாற்றை ஏவல் நாயாகபயன்படுத்த இந்துத்துவா ஆட்சியாளர்கள் முனைகின்றனர். ஆனால், அவர்கள் தோண்டுகிற இடங்களிலெல்லாம் நிலத்துக்குள் இருந்து உண்மை மேலெழுகிறது. அவ் உண்மை அறிவியலின் பேரொளியால் பிரகாசிக்கிறது.

சு.வெங்கடேசன்
கட்டுரையாளர்: சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்; தமுஎகச மாநிலத்தலைவர்

நன்றி - தீக்கதிர் 08.09.2018

1 comment:

  1. ஒரு சிறு சந்தேகம்

    தோடர் குல பெண்கள் பல கணவர்களை கொண்டிருக்கும் பழக்கத்தை அன்று கொண்டிருந்தனர் . அது எப்படி திராவிட நாகரீகம் ஆகும் ?

    ReplyDelete