Monday, September 10, 2018

இது வெறும் விளையாட்டுச் செய்தி அல்ல . . .

இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான இந்த கட்டுரை மிகவும் முக்கியமானது. இந்திய விளையாட்டுத்துறையின் உண்மையான பலவீனங்கள் என்ன என்பதை அலசும் கட்டுரை. ஆட்சியாளர்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பார்களா என்பதுதான் கேள்விக்குறி . . .



ஆசியப் போட்டிகள்-சாதனையும் சவால்களும்
அ. அன்வர் உசேன்

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1951ம் ஆண்டுக்கு பிறகு 69 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இது பெரிய சாதனை என கூறுவோர் உண்டு. எனினும் சாதனை என்பது ஒப்பீடு அளவில் மதிப்பிடுவதுதான் சரியாக இருக்கும் எனும் வாதமும் புறம்தள்ள முடியாது.ஆசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒவ்வொரு இந்திய வீரரும் நமது வணக்கத்திற்குஉரியவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதில் பங்கேற்று வெற்றியை தவறவிட்டவர்களும் நமது வாழ்த்துக்கு உரியவர்களே! குறிப்பாக சாதாரண குடும்பத்தில் பிறந்து ஏழ்மையை எதிர்த்து போராடிக்கொண்டே பதக்கங்களை வென்றவர்களின் சாதனை சாதாரணமானது அல்ல!

 9ம்வகுப்பு கூட படிக்க வழியில்லாத நீரஜ் சோப்ரா, ரிக்சா தொழி லாளியின் மகள் ஸ்வப்னா பர்மன், ஏழை விவசாயின் மகள் ஹிமா தாஸ், கட்டிட தொழி லாளியின் மகள் விஸ்வாமா, ஏழ்மை குடும்பத்தை சார்ந்த அப்ரீந்தர் சிங் மற்றும் சுதா சிங், திருப்பூர் தருண் அய்யாசாமி ஆகியோர் எளிய குடும்பங்களில் பிறந்து இன்று சாதித்து உள்ளனர். இந்த சாதனை பிரமிக்கத்தக்கது.

69ல் 19 பதக்கங்கள் தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைத்தன. 11 பதக்கங்கள் துப்பாக்கிச் சுடும் பிரிவிலும் 6 குராஷ் மற்றும் வுஷு எனப்படும் சண்டை பிரிவுகளிலும் 5 ஸ்குவாஷ் பிரிவிலும் கிடைத்தன. ஏனையபதக்கங்கள் இறகு பந்து, டேபிள் டென்னிஸ்,மல்யுத்தம், குதிரையேற்றம் போன்ற பிரிவுகளில் கிடைத்தன. பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட மல்யுத்தம், பளு தூக்குதல், ஹாக்கி ஆகியவற்றில் பெரிய ஏமாற்றம் கிடைத்தது. 28 ஆண்டுகளாக கோலோச்சிய கபடியில் தங்கப்பதக்கம் இழந்தது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு ஆகும். ஹாக்கியில் ஆண், பெண் இரு பிரிவுகளிலும் ஜப்பான் வெற்றி சூடியது. 2020ல் ஜப்பானில்தான் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஒலிம்பிக்கில் கடும் பயிற்சி மட்டுமே ஹாக்கியில் பதக்கம் வெல்ல உதவும் எனில் மிகை அல்ல! 



ஒட்டு மொத்தமாக பதக்க வேட்டையில் இந்தியாவுக்கு சில பிரிவுகளில் சாதனைகளும் மற்றவற்றில் பின்னடைவுமாக அமைந்தன.இந்தியாவைவிட வளர்ச்சி குன்றிய பல தேசங்கள் பதக்கங்களை கணிசமாக குவித்துள்ளன என்பதை இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு 1.78 கோடி மக்கள் தொகை கொண்ட கஜகஸ்தான் இந்தியாவுக்கு இணையாக 15 தங்க பதக்கங்கள் பெற்றது மட்டுமல்ல; மொத்த பதக்கங்களில் இந்தியாவைவிட கூடுதலாக பெற்றுள்ளது. வெள்ளி பதக்கங்களை கூடுதலாக பெற்றிருக்காவிடில் இந்தியா 9வதுஇடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும். அமெரிக்காவின் பொருளாதார அரசியல் நெருக்கடியை சந்திக்கும் ஈரான் மற்றும் தைவான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. 

அமெரிக்காவால் தனிமைப்படுத்தப்படும் வடகொரியாவின் சாதனையும் குறிப்பிடத் தக்கது.சீனா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த போட்டியில் பதக்கங்களின் எண்ணிக்கை 5ரூ சீனாவுக்கு சரிந்துள்ளது. எனினும் முதல் இரண்டு இடங்களிடையே உள்ள இடைவெளி சீனாவின் முதல் இடத்திற்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை. தனது பின்னடைவுக்கு என்ன காரணம் என்பதை ஆழமாக பரிசீலனை செய்யப் போவதாக சீன விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆசியப் போட்டிகள் சீனாவில்தான் என்பது நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தோனேசியா சாதனை

கடந்த 4 போட்டிகளாக 2ம் இடத்தை வென்ற தென் கொரியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜப்பான் 2ம் இடத்தை பெற்றுள்ளது. எனினும் ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டுமே தமது பதக்கங்களின் எண்ணிக்கையில் சரிவை சந்தித்துள்ளன. மிகப்பெரிய சாதனை படைத்த நாடு எனில் அது போட்டிகளை நடத்திய இந்தோனேசியாதான்! கடந்த பல போட்டிகளில் கிட்டத்தட்ட 15 முதல் 20வது இடத்தில் இருந்த இந்தோனேசியா மிகப்பெரியபாய்ச்சலாக 4வது இடத்தை வென்றது. பதக்கங்களின் எண்ணிக்கையில் 5ரூ கூடுதலாகபெற்ற இந்த சாதனை சாதாரண வெற்றி அல்ல. 

இந்தியா தனது பதக்கங்களில் 0.5ரூ கூடுதலாக பெற்றது. எனினும் இந்தியா 8வது இடத்தை நிரந்தரமாக முன்பதிவு செய்துள்ளதோ என தோன்றுகிறது. பொருளாதார வளர்ச்சியில் சீனாவை விரை வில் பின்னுக்கு தள்ளிவிடுவோம் என ஆட்சி யாளர்கள் சொல்லாத நாள் கிடையாது. டாலர்பில்லியனர்களின் எண்ணிக்கையில் இந்தியா வின் அசுர வளர்ச்சி அனைவரும் அறிந்த ஒன்று.எனினும் விளையாட்டுத் துறையில் இந்தியா வின் சாதனை ஒப்பீடு அளவில் கவலை தருவதாக உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் நிலைமை இன்னும் மோசம்! கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா ஒரே ஒரு தங்கப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் வென்றுள்ளது.

சாதிக்க என்ன தடைகள்?

விளையாட்டுத் துறையில் இந்தியா பிரகாசிக்க இயலாமைக்கு என்ன காரணம்?இந்திய விளையாட்டுத் துறையில் ஊழல், பாரபட்சம் ஆகியவை சில முக்கிய காரணங்கள். விளையாட்டுக்கு அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாதது இன்னொரு காரணம். சீனா போன்ற சோசலிச நாடுகளில் அரசாங்கம் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து ஏராளமான நிதியை தருகிறது. சிறு வயது முதலே விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். முதலாளித்துவ நாடு களில் பல தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. தாம் செல வழிக்கும் ஒவ்வொரு டால ருக்கும் பத்து டாலர்கள் திரும்பப் பெறு கின்றனர். இதி லும் வணிக நோக்கம் தான் வெளிப் படுகிறது. எனினும் இதன் விளைவாக சில சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகின்றனர். 

உதாரணத்திற்கு 2012 ஒலிம்பிக்கில் இங்கிலாந்து வென்ற ஒவ்வொரு பதக்கத்திற்கும் சராசரியாக 4.5 மில்லியன் பவுண்ட்கள் அதாவது ரூ.41 கோடி செலவு செய்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.1922ம் ஆண்டு முதல் இந்தியா விளை யாட்டுத் துறையில் என்ன சாதித்துள்ளது என்பது பற்றி ரோனோ ஜாய் சென் எனும் பேராசிரியர் ஆழமான ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் நிலவும் சாதிய படிமங்கள் ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில் சாதிப்பதற்கு தடையாக உள்ளது என சென் வாதிடுகிறார். இந்தியாவின் அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பிற்படுத்தப்பட்ட ஒரு பிரிவினர், தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு ஊட்டச்சத்து உணவு கூட குதிரைக் கொம்பாக உள்ளது. மேல் சாதியினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் விளையாட்டுத் துறையில் இவர்களுக்கு கிடைப்பது இல்லை. உதாரணத்திற்கு கிரிக்கெட் அளவுக்கு ஏனைய விளையாட்டுகள் இந்தியாவில் மதிக்கப்படுவது இல்லை. கிரிக்கெட்டில் எந்த சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று! 

இந்திய அணியில் தற்பொழுது உள்ள ஒரு முக்கிய வீரர் தலித் மக்களுக்கு எதிராக டுவிட்டரில் செய்த பதிவு மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. வாய்ப்புகள் இருந்தும் காஷ்மீரை சேர்ந்த ஒரு இளம் வீரரை அணியில் சேர்க்க விராத் கோலி மறுத்த உதாரணமும் உண்டு. இத்தகைய சூழல்கள் இந்தியாவின் சாதனையை பாதிக்கின்றன. 

இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது கடந்த கால சாதனைகளை ஒப்பிடும் பொழுது இந்தியாசற்று முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் ஏனைய தேசங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்தியா செல்ல வேண்டிய தூரம் மிகப் பெரியது.2020ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளும் 2022ல் சீனாவில் ஆசியா போட்டிகளும் உள் ளன. சாதி, மத, இன பாரபட்சம் இல்லாமல் அடித்தட்டு மக்களில் நிறைந்திருக்கும் திறமை உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் சாதிக்க வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த முயற்சியும் கடும் பயிற்சிகள் மட்டும்தான் சாதனையை வசீகரிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு களை உருவாக்கும். இது நடக்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

நன்றி - தீக்கதிர் 10.09.2018 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete