Friday, May 25, 2018

யானையின் தாக்குதல் – ஒரு அனுபவம், ஒரு கேள்வி





கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு  திகில் பொழுதை இன்றைய சமயபுர துயரம் கிளறி விட்டது. 

கல்லூரி இறுதி  ஆண்டு முடித்து விட்டு திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக எம்.பி.ஏ  தேர்வை எழுத புதுக்கோட்டையில் உள்ள எனது அக்கா வீட்டிற்கு வந்திருந்தேன்.

ஏதோ ஒரு திருவிழாவிற்காக எந்த ஊரிலிருந்தோ வந்திருந்த ஒரு கோயில் யானை புதுக்கோட்டை வீதிகளில் வலம் வந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு வீட்டு முன்பும் நின்று யானைப்பாகன் கல்லா கட்டிக் கொண்டிருந்தார்.  பல வீடுகளில் வெல்லம், வாழைப்பழம் என்று யானைக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

என் அக்கா கணவரின் அக்காவும் பழங்களையும்  வெல்லத்தையும் ஒரு தட்டில் வைத்து வெளியே நின்று கொண்டிருந்தார். என் அக்காவின் பெண் குழந்தை ( இப்போது திருமணமாகி குழந்தையும் உள்ளது)  அவரது இடுப்பில் இருந்தது. குழந்தை யானையைப் பார்த்து அழுததும் அவர் வேறு யாரிடமோ குழந்தையைக் கொடுத்து விட்டார்.

நான் அப்போது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென பயங்கரக் கூச்சல். வீதிக்கு சென்று பார்த்தால் யானை அந்த பெண்மணியை தன் துதிக்கையில் தூக்கி இருந்தது. சில நிமிடங்கள் வரை ஏதோ பந்து விளையாடுவது போல துதிக்கைக்கும் கால்களுக்கும் மாற்றிக் கொண்டே இருந்தது.

யாராலும் கிட்டே நெருங்க முடியவில்லை. நெருங்குவதற்கு அச்சமும் கூட. அந்த யானைப்பாகன் டீ சாப்பிடப் போயிருக்க உதவிப் பாகனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு அதற்கு போரடித்ததோ என்னவோ தூக்கிப் போட்டு விட்டது.

பார்த்துக் கொண்டிருந்த யாருக்கும் அவர் உயிரோடு இருப்பார் என்ற எதிர்பார்ப்பும் இல்லை. மயங்கி விழுந்திருந்த அவரை என் அக்கா கணவர், அப்போது அங்கே இருந்த ஒரு மினி லாரியில் ஏற்றி  அவரே ஓட்டிக் கொண்டு உடனே ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னாலேயே நாங்கள் எல்லாம் சைக்கிளில் விரைந்தோம்.

நல்ல வேளையாக சில சிராய்ப்புக்களைத் தவிர வேறு பெரிய காயமோ, எலும்பு முறிவோ இல்லை. சில நிமிடங்களில் அவருக்கு நினைவு திரும்பி அன்று மாலையே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜூம் ஆகி விட்டார். இப்போதும் நலமாக உள்ளார்.

சமயபுரம் பாகனும் அப்படி சொற்ப காயங்களோடு தப்பியிருக்கலாம்.

இரண்டாண்டுகள் முன்பாக தேக்கடி சென்ற போது "யானைச்சவாரி போகலாமா?" என்று எங்கள் வாகன ஓட்டுனர் கேட்க, இந்த சம்பவம் நினைக்கு வந்து "வேண்டாம் சேட்டா" என்று சொல்லி விட்டேன்.

 இப்போது கேள்வி

காட்டில் வாழ வேண்டிய யானையை இப்படி கோயில்களில் அடைத்து வைக்கிறார்களே, இதற்கு எதிராக மேனகா காந்தியோ அல்லது பீட்டாவின் ராதா ராஜன் அம்மையாரோ எப்போதாவது குரல் கொடுத்துள்ளார்களா?


2 comments:

  1. கிழிச்சாங்க.

    ReplyDelete
  2. யானை மக்களை தாக்கி, யானைக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்,அதற்கு எதிராக மேனகா காந்தி குரல் கொடுப்பார்.
    காட்டில் வாழ வேண்டிய யானையை கோயில்களில் அடைத்து வைப்பதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்தால், மதத்தின் மீதான இந்திய அரசின் மோசமான தாக்குதல் என்று இந்திய மதநல்லிணக்கவாதிகள் கடுமையாக எதிர்ப்பார்கள்.
    இதற்கு தீர்வு
    மாட்டை துரத்தி சண்டை போட்டு தங்கள் வீரத்தை காட்ட வேண்டும் என்று உயிரை கொடுத்தாவது ஜல்லிக்கட்டுவை காப்போம் என்று போராடிய தமிழ் வீரர்கள், இப்படியான யானைகளுடன் போரிட்டு தமிழர்களை காப்பாற்றி தங்களது வீரத்தை காண்பிக்க வேண்டும்.

    ReplyDelete