Friday, May 25, 2018

மரணத்தின் வலி அந்த அன்னைக்கு புரியும் . . .




ரோஹித் வெமுலாவை யாரால் மறக்க முடியும்?

கார்ல் ஸேகன் போன்றதொரு விண்வெளி நிபுணராக வேண்டும் என்ற அந்த இளைஞனின் கனவையும் தூக்குக் கயிற்றில் தொங்க வைத்த அந்த கொடூரத்தை எப்படி மறக்க முடியும்?

மனித வளத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிர்தி இராணி அம்மையாருக்கு ஒரு பொய்க்குற்றச்சாட்டை அனுப்பி ரோஹித் வெமுலாவை பல்கலைக்கழகத்திலிருந்து இடை நீக்கம் செய்ய வைத்து அவருக்கான உதவித்தொகையை நிறுத்தி விடுதியிலிருந்து வெளியேற்ற காரணமாக இருந்தது அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா.

ரோஹித் வெமுலாவின் துயர மரணத்திற்குப் பிறகும் அவரது தந்தை தலித்தா இல்லையா என்று ஜாதி ஆராய்ச்சி செய்து தனது தவறை நியாயப்படுத்த முயன்றவரும் அவர்தான்.

அந்த மனிதரின் மகன், மூன்றாம் வருடம் எம்.பி.பி.எஸ் படிப்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார். ரோஹித் வெமுலாவிற்கு செய்த கொடுமைக்கு  இப்போது பண்டாரு தத்தாத்ரேயா அனுபவிக்கிறார் என்ற ரீதியில் சிலர் பேசத்தொடங்க

ரோஹித் வெமுலாவின் தாய் திருமதி ராதிகா வெமுலா

“திரு தத்தாத்ரேயா எவ்வளவு துயரத்தில் இருப்பார் என்று எனக்கு தெரியும். புத்திர சோகத்தை தாங்குவது எளிதானதல்ல என்பது எனக்குத்தான் தெரியும். மகனை இழந்த அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்”

என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவின் மூலம் உயர்ந்தும் நிற்கிறார்.

ஆம். மரணத்தின் வலியை அனுபவித்தவர் அல்லவோ அந்த அன்னை !!!


No comments:

Post a Comment